அன்புள்ள ஆசிரியர் ஜெ அவர்களுக்கு,
உங்களுடைய ‘தொழிலெனும் தியானம்‘ உரை காணொளியை பார்த்தேன்.
தலைப்பே ஒரு கொக்கி போல் என்னை உள்ளிழுத்து மானசீகமாக அரங்கில் அமரச் செய்தது. உங்களுடைய பல உரைகளை கேட்டு வியந்திருக்கிறேன். ஆனால் இந்த உரை, ஏனோ என்னை உணர்ச்சிவசப்படச் செய்து , ஆனந்தக் கண்ணீர் வடிக்க வைத்தது.
உங்கள் உரையை, மார்க்சியத்தில் தொடங்கி காந்தியத்தில் முடித்து, இவ்விரு சிந்தனை முறைகளையும் நீங்கள் ராட்டையால் இணைத்து கட்டிய விதம் வெகு அற்புதம்.
“ஒரு தத்துவ கட்டுரை எழுத முடியாமல் தவித்தால் சிறிது நேரம் பாத்திரம் கழுவுவேன். தெளிவு வந்துவிடும்” என்று நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. என் கழிவறையைப் பலமுறை குனிந்து நிமிர்ந்து சுத்தம் செய்த போது நீங்கள் குறிப்பிட்ட அந்த ‘அக விடுதலையை‘ , ‘மனக்குவிப்பை‘ நானும் அடைந்திருக்கிறேன். இத்தகைய சிறு சிறு செயல்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்னும் எண்ணம் உங்களால் வலுப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முக்கியமான புரிதல்.
‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்‘ என்ற நாமக்கல் கவிஞரின் பாடல் வரிகளுக்கு உங்கள் உரை ஒரு புதிய விளக்கத்தை தந்திருக்கிறது. தற்காலச் சூழலில் வைத்து பார்க்கும் போது , ‘கவலை‘ என்ற சொல் பய உணர்வையும் ‘கைத்தொழில்‘ என்ற சொல் ஜெய உணர்வையும் தருகின்றன.
எண்ணற்ற கேளிக்கை போதைகளுக்கு அடிமையாகி, சமூக வலைத்தளங்களில் சலிப்புற்று, அழுத்தங்களுடன் பணமெத்தையில் கண் வளரும் இன்றைய தலைமுறையை நோக்கி நீங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் காலத்தால் இன்றியமையாத ஒன்று. உங்களுடன் நானும் இதில் துணை நிற்கிறேன் ஜெ.
நன்றி .
அன்புடன்,
நிரஞ்சன் பாரதி