என்னிடம் வேலை பார்ப்பவர்களிடம்,அலுவலக சம்பந்தமான சம்பிரதாயமான கேள்விகளுக்கு அப்பால், அவர்களின் அக ஆளுமையை அறிந்துகொள்ள ஒரு சக நண்பனாக உரையாடலை இட்டுச்செல்வேன். அந்த வகையில் நேற்று அந்த அலுவலகத்தோழியிடம் என்ன வாசித்துக்கொண்டு உள்ளீர்கள் என்றேன். Lord of the Rings-ஐ நான் ஒரு பக்கம் , என் கணவர் ஒரு பக்கம் என ஒரு அத்தியாயம் வாசிப்போம். பிறகு இருவரும் அதை பற்றி விவாதிப்போம் என்றார். எத்தனை முறை Lord of The Rings வாசித்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தன்னால் சொல்லமுடியாத அளவுக்கு வாசித்துள்ளேன். Tolkien-ஐ வாசிப்பதற்கு எதற்கு யோசனை செய்யவேண்டும் என்றார்.
வரலாற்று நாவல்கள் பிடிக்கும். இந்த நாட்டின் தேசிய பூங்காக்களை உருவாக்கியவர் என்பதால், Theodore Roosevelt-ஐ பிடிக்கும் ஆதலால் அவரது சரித்திரத்தையும் இப்பொழுது வாசித்துக்கொண்டிருப்பதாக சொன்னார்.
மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, வாசிப்பின் அவசியம் பற்றி சொல்ல, பொதுச்சேவை செய்வதையும், குழந்தைகளுக்கு எந்த துறை பிடிக்கிறதோ, அதற்கு தக்க புத்தகங்களை உடன் வாசிப்பேன் என்றார். ஒரு குழந்தைக்கு சமையல் பிடிக்கும் என்பதால், விதவிதமான cooking receipe புத்தகங்களை பக்கம் பக்கமாக அவருடன் சேர்ந்து வாசிப்பதிலும் சலிப்புறமாட்டேன் என்றார்.
சிறு வயதில் தான் கொஞ்சம் நோஞ்சனாக நோயுற்ற பெண்ணாக வெளியே விளையாட முடியாமல் இருந்தபொழுது, தனக்குக் கைகொடுத்தது வாசிப்பே என்றார். ஆனால் நன்றாக உடல் தேறியபிறகு, மரத்தில் ஏறி அமர்ந்து புத்தகம் வாசிக்கும் சிறுமியாக இருந்தேன். வாசிக்காமல் ஒருவர் வாழ்க்கையில் இருப்பார் என்பது என்னால் எப்பொழுதுமே புரியாத புதிர் என்றார். உங்கள் மகன் வாசிப்பாரா என்றேன். ஆமாம், பாருங்கள், நேற்று வந்தவன், என்னிடம் கேட்காமல், எனது புத்தக அலமாரியிலிருந்து, என் கண் முன்னர் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு சென்றான். பாவிப்பயல், என்னிடம் சொல்லிவிட்டு எடுத்துச் செல்லலாம் அல்லவா? நான் , அப்புறம் அந்தப் புத்தகத்தை மீள்வாசிப்பு செய்யத் தேடினால், நான்தான் எங்கேயோ வைத்துவிட்டேன் எனத் தேட வேண்டியதாக இருக்கும் என்றார்.
ஒரு சம்பிரதாயமான இறுக்கமான உரையாடல் இலகுவாக சிரிப்புடன் முடிந்தது.
ஆஸ்டின் சௌந்தரராஜன்