ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் ” தன் மீட்சி ” நூலினை வாசிக்கும் நல்லூழ் அமைந்தது.
தன்மீட்சி என்ற தலைப்பே என்னை சிந்திக்க வைத்தது. “தன்னில் இருந்து மீட்சி” . ஆசிரியர் சொல்வது போல ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தெழுதலும் மீட்சியே. ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு புதுப்பிறப்பே. எண்ணிலடங்கா சாத்தியங்களை நம்மில் கொண்டு தினமும் மீள்கிறோம் என்னும் எண்ணமே பெரும் திறப்பாக இருந்தது.
ஆசிரியர் தான் மீண்ட தருணத்தில் அடைந்த உணர்வை இவ்வாறு சொல்கிறார் : “வாழ்க்கை மிக மிக அரிதானது என்றும் ஒரு நாளை ஒரு கணத்தைக் கூட வீணாக்க எனக்கு உரிமை இல்லை என்றும் உணர்ந்தேன். “
வாழ்க்கையின் மகத்துவம் வெளிப்படும் வரிகள் இவை. ஒவ்வொரு முறை நான் சோர்வுறும் போதும் இந்த வரி என்னை மீட்கும்.
பதின்பருவத்தில் வரும் அதீத நம்பிக்கை மற்றும் அதீத சோர்வு குறித்த கடிதங்கள் , உலகியல் செயல்களில் மட்டும் அதீத தீவிரத்தோடு ஈடுபடும் போது ஏற்படும் வெறுமை உணர்வை அணுகி அறிய உதவுபவை. என்னை பல முறை இந்த உணர்வு சூழ்ந்து கொள்ளும். நான் அப்படியான செயல்களில் ஈடுபடும் போது ஒரு சிறு தூறலாய் வந்து பின் காட்டு வெள்ளம் போல மனதை எங்கோ ஈட்டுச் சென்று பல மணி நேரங்களை நான் தவிர்த்து வந்த விரும்பாத செயல்களில் ஈடுபட வைத்து விடும். அதன் பின் ஒரு வித வெறுமை சூழ்ந்து கொள்ளும். அந்த வெறுமை உணர்வு போல வேறெந்த உணர்வும் நம்மை அவ்வளவு பாதிக்காது. அந்த வெறுமையை கடக்க ஆசிரியர் கூறும் வழி நம் உள்ளுணர்வு நிறைவு படும்படியான செயலை செய்தல். செயல்புரிக என்பதே மருந்து.
” செயலின்மையின் இனிய மது” செயல் புரிவதின் தேவையை புரிய வைக்கிறது. செயல் வழியாகவே நாம் நம் தடைகளை அறிகிறோம் மற்றும் அவற்றை உடைக்கிறோம். நாம் எத்துறையில் இருந்தாலும் நம் தன்னறத்தை செயல் மூலம் மட்டுமே கண்டைய முடியும்.நம்மை முழுமைப்படுத்திக் கொள்ள நாம் செயலாற்ற வேண்டும்.
“தேர்வு செய்யப்பட்ட சிலர் ” கட்டுரை , நமக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட வாய்ப்பை புறந்தள்ள நமக்கு உரிமையில்லை என்கிறது. ” ஒரு நூலை வாசிக்கத் தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானு கோடிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அபூர்வமான பிறவி ” நம் இருப்பின் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் சொல்கிறது.
“விதி சமைப்பவர்கள் ” கட்டுரை இந்த உலகின் ஆன்மாவை கட்டமைக்கிறவர்கள் பற்றி பேசுகிறது. சராசரி குமஸ்தா வாழ்க்கையின் அவலங்கள் குறித்த சொற்கள் நம் சமூகம் மீதான விமர்சனம். இந்த சராசரி மனநிலையை கடப்பதே ஒருவன் தன் அறத்தை கண்டைய முதல் வழி. இந்த மாபெரும் பெருக்கின் ஒரு துளி ஆவதற்கான முதல் படி.விதி சமைப்பவன் தன் சூழலின் எல்லா எதிர்மறை குரல்களையும் அவமதிப்புகளையும் தாண்டி தான் செயலாற்ற வேண்டும் .தன்னை சராசரிக்கும் மேலானவன் என்று நினைப்பதால் வரும் தன்னம்பிக்கையே நம்மை வலிமையாக்கும். நம்மை செயலாற்ற வைக்கும். அதன் நிறைவு மட்டுமே நமக்கானது . விளைவு சராசரிக்கானதே.
நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு சில ஆண்டுகளாக அவ்வப்போது எழும் வினா : படித்து வேலைக்குச் சென்று சம்பாதித்து ஓய்வு பெறுவதே வாழ்க்கையா என? இந்த கேள்வி என்னை அச்சுறுத்தும் . அப்போது நான் எனக்கே சொல்லிக் கொள்வது: இந்த வாழ்க்கையை இவ் வாறு மட்டும் வாழவே கூடாதென . இக்கட்டுரை பதில்களை என் கேள்விக்கான பதில்களாக காண்கிறேன்.
இத்தொகுப்பில் எனக்கு மிகவும் அணுக்கமானதாக ” நான்கு வேடங்கள் ” கட்டுரையை உணர்ந்தேன். கல்லூரி பாடங்களை படிக்கும் போது ” இதனால் என்ன பயன் ? வேலைக்குச் செல்ல மட்டுமே ! அதன் பின் இதன் பயன் யாது?” என்னும் எண்ணம் சூழ்ந்து என்னால் முழுமையாக நான் நிறைவுறும் படி கற்க முடியால் போகும். ஆனால் இதன் கனி அருகே இருப்பதனால் நான் உள்ளுற விரும்பும் செயல்களிலும் ஈடுபடாமல் தவிர்த்திருக்கிறேன்.
ஒரு முறை பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பகுதியை நானே படித்து புரிந்து கொண்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இன்றும் நினைவிருக்கிறது. அன்று நான் கண்டு கொண்டது , அறிதலின் இன்பம்.
பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் முதன் முதலில் நூலகம் சென்றது , அந்த ஐந்து மாதத்தில் நான் வாசித்த நூல்கள் என் மனதில் இனிய சரடாக நீள்கிறது.
இக்கட்டுரை மூலம் நமக்கான வீடுபேற்றை – தன்னறத்தை அடைய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். நாம் சமநிலையோடு வாழ நான்கு வேடங்களை நாம் பூண வேண்டும். ஒவ்வொன்றிலும் முழுமையாக ஈடுபட வேண்டும் என்னும் தெளிவு கிடைத்தது.
சமூக வலைதளங்கள் நம்மை ஒரு வலையில் சிக்க வைத்து அதிலிலேயே சுழல வைத்து விடும். நேரம் போவதே தெரியாது. உதிரி உதிரியான கருத்துகள் நம்மை சூழ்ந்து ஒன்றும் நிகழ்த்தாமல் மறையும். முதலில் என்ன பார்த்தோம் என்பதே சில நிமிடங்களில் மறந்து விடும். கடைசியில் சோம்பல் அல்லது வெறுமையே மிஞ்சும். சோம்பலை கடக்க நமக்கான செயலை கண்டடைந்தாலே போதுமானது.
முழு முற்றான சுறுசுறுப்பும் பிரச்சனை. நாம் ஓடிக்கொண்டே இருந்தால் எங்கே தொகுத்து கொள்வது?
“எழுதலின் வழிகள் ” கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் செயலூக்கம் பெறுவதற்கான வழிகள் முக்கியமானவை.
எனினும் அவரவர்கான வழியை அவரவரே கண்டைய வேண்டும்.
உலகியலில் மட்டுமே ஈடுபடுபவர்களிடம் நாம் நம் கனவுகளை வெளிகாட்ட முற்படுவது ஆற்றல் வீண் என்கிறார் ஆசிரியர். நான்கு வேடங்களோடு இரண்டு முகங்களையும் கொள்ள வேண்டியது தான். நமது உலகியல் பிடியை பலமாக வைத்திருப்பதும் முக்கியமாகும். அதுவே நம் கனவுக்கான ஏணிப்படி.
தன்மீட்சி கட்டுரை தங்கள் தன்னறத்தை கண்டுகொண்டு அதில் ஈடுபவர்களை பற்றியது. அவர்களை எண்ணுந்தோறும் வியக்கிறேன்.
இந்நூல் எனக்கான பாதையை நானே கண்டு கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தியது.
எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. பல இடங்களில் என்னை நானே மதிப்பிட உதவியது. என் அகங்காரத்தை தட்டியது. என் சிறுமைகளை உணரச் செய்தது. செயல் என்னும் யோகத்தை அறிய செய்தது. இந்நூலை படித்தவுடன் நான் முழு முற்றாக மாறிவிடவில்லை. மாறாக ஒரு தெளிவான பாதை புலப்படுகிறது. செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. செயல் ஈட்டுச் செல்லும்.
ஆசிரியர் ஜெயமோகனுக்கும் தன்னறம் பதிப்பகத்திற்கும் நன்றி.
கோகுலாஷ் எம்.எஸ்