(இரா.முருகன் கட்டுரைப்போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை)
அழியுமுடற் கூண்டினிலே ஐம்பொறியாம் கிளிகள்
ஐம்புலனாம் கனிகொத்தி அழிநடனம் ஆடும்!
அழிநடஞ்செய் அஞ்சுகத்தை அறிவொளியால் வென்றே
அருட்சோதி வடிவுடனே திகழ்ந்திடுதல் வேண்டும்.
( ஆத்ம உபதேச சதகம் )
இந்த புலன்களெல்லாம் கிளிகள் , கிளிகளின் பார்வையெல்லாம் எப்போதும் பழத்தின் மீதுதான். இங்கு சப்தம் ஸ்பரிசம் என பழங்கள். அவற்றை தேடி மாறிமாறி பறந்தபடி இருக்கின்றன கிளிகள். புலன்களாகிய கிளிகள் நம் உடலையன்றோ சார்ந்திருக்கின்றன? . நம் சுய ரூபமாகிய பிரகாசத்தை காண இவற்றை விவேகத்தால் அல்லவா வெல்ல வேண்டும்.
பெரும்பாலான உபநிடத நூல்கள், பேசும் ஆத்ம தரிசனம் அல்லது மெய்மை நிலை. போன்ற நிலைகளெல்லாம் முதலில் உடலிலிருந்தே தொடங்குகிறது. நேரடியாக மெய்மை அல்லது முழுமை நிலை பற்றி பேசுவதில்லை . முதலில் உடலின் எல்லைகள் , அதன் போதாமைகள் , மூவகை துயர்கள், ஐவகை துயர்கள், என ஒரு பெரிய திரையில் அனைத்தும் வரையப்பட்டு நம்முன் வந்து நிற்கிறது,
ஒரு சிலருக்கே ஒற்றை வார்த்தையில் , ஒரே ஒரு அனுபவத்தில் ‘அனுபூதி‘ எனும் நிலை வாய்த்து விடுகிறது. மீதி இருக்கும் மனித குலம் முழுமைக்கும் உடலில் இருந்து ஊசலாட்டம் தொடங்கி மரணம் அதற்கு பின்னரும் தொடரும் கர்ம வினைத்தொடர் ,மறுபிறவி, என விரிந்துகொண்டே செல்கிறது. அதை விதவிதமாக எழுதியும் பேசியும் முடித்த பின்னரும், கூட இன்னும் எழுத ஏராளமான வாழ்க்கை சித்திரங்கள் எழுத சாத்தியமாகிறது.
அப்படி ஒரு பெரிய திரையில் வரையப்பட்ட மிகப்பெரிய சித்திரம் தான் விஸ்வரூபம்.
மனிதஉயிரின் அகம் மற்றும் புறத்தின் பரிதவிப்பு தான் மொத்த நாவலின் பிண்ணனி. இங்கே உயிருள்ளவரும் , உயிரை விட்டவரும் அடையும் பயம், துக்கம், பதட்டம் அசூயை, காபந்து , பற்று வெறுப்பு எனும் ஒவ்வொரு பொழுதும் அடையும் ‘மரணப்பெருவாழ்வு‘ மஹாம்ருத்யூ– அது.
‘சப்த ஜாலம் மஹா ஆரண்யம் ‘- ( சொல்லெனும் மாய வனம் ) என சங்கரர் நம்மை எச்சரித்தாலும்
நமக்கு சொற்கள் தேவையாக உள்ளது. ஏதேனும் கேள்வி நமக்கு எழும்போது, அந்த கேள்விக்கு சொற்கள் வடிவில் பதிலாக கிடைத்தால் நாம் அடையும் ஆசுவாசம் அளப்பரியது.
இறப்பிற்கு பின் என்ன நிகழ்கிறது? என்ற கேள்விக்கு வேதாந்த , தத்துவார்த்த ,சித்தாந்த பதில்களை எத்தனை சொல்லி புரிய வைத்தாலும், இறுதிச்சடங்கு , பத்தாம் நாள் காரியம் , மாதாந்திர திதி , வருஷாப்தி, போன்ற சம்பிரதாயங்கள் நமக்கு அணுக்கமாக இருக்கிறது.
இதை அணுக முடிந்தவருக்கு இந்த நாவல் நல்ல வாசிப்பு அனுபவமாக இருக்கும்.
இந்த நாவலின் ஆகச்சிறந்த அம்சம் அதன் ஐந்து வகை மொழிநடை. 1890ன் தமிழில் தொடங்கி சுதந்திர காலம் வரையான ஒருவகை நடை, பாலக்காட்டு தமிழ் போன்ற கேரள நடை கூடியது மற்றொன்று , சென்னையின் மற்றும் குமாஸ்தா மொழிநடை, என மேலும் இரண்டு. பிரேத ரூபமாய் அலையும் உடலற்ற உயிரின் தமிழ் நடை என ஒரு மிகப்பெரிய முயற்சியை செய்து பார்த்து வெற்றியும் அடைந்திருக்கிறார் இரா .முருகன் அவர்கள்.
மேலும், கதை சொல்லும் யுக்தி முக்கியமாக அதன் தொடர் நிகழ்வுகளில் எந்த இடத்தில் தொய்வேயில்லாமல், ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை நகைச்சுவை மற்றும் பல்வேறு குணாதிசயங்களில் மூலம் கோர்த்துக்கட்டிய விதத்தில், மற்ற இரண்டு நாவல்களான அரசூர் வம்சம் , ராமோஜியம் ஆகியவற்றை விட இது அபாரமானது.
காசியில் சென்று கங்கையில் கரைக்கும் வரை தன் தாயின் அஸ்தியை ஒரு சொம்பில் வைத்து அதன் மேலே மூடி, தான் போகும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச்செல்லும் ஒரு குடும்பஸ்தன். சூட்சும ரூபத்தில் சதா பேசிக்கொண்டும், அறிவுரையும் , நல்வழியும் காட்டியபடி உடன்வரும் அந்த தாயின் இரண்டு எலும்புத்துண்டுகள்.
கிருஸ்தவ வேதத்திற்கு மதம் மாறிய குடும்பமும் அதன் தொடர்ச்சியாக, கன்னியாஸ்திரியாக மாறி கிறிஸ்துவை பரப்ப உலகம் முழுவதும் அலையும் கேரள பிராமண பெண்ணான தெரிசா.
காமம் மட்டுமே வாழ்வின் ஒரே குறிக்கோளாக கொண்ட மகாலிங்க ஐயர் , வரதராஜ ரெட்டி , என பலவாறாக தன் வாழ்வை தானே சீரழித்துக்கொண்ட, கைதி.
கதையின் மையம் இந்த மூவரின் வாழ்வின் வழியாக ஊடுருவிச்சென்று, இறுதியில் அஸ்தி கங்கையில் கரைவதை இலக்காக கொண்டது.
இங்கிருக்கும் அனைத்திலும் நிறைந்திருக்கும் ப்ரக்ருதி ,மாயை , முக்குணம் என பலவடிவங்கள் கொண்ட ‘ அது ‘ காலம் என்றும் தன்னை மங்கள – அமங்களமாக வெளிக்காட்டிக்கொள்ளும் பேராற்றல் கொண்டது. ‘ காலம் ‘ எனும் அது கதையை தன் போக்கிற்கு கலைத்தும் அடுக்கியும் விளையாடுகிறது.
முதலில், அனைத்து விதத்திலும் சாமானியத்தன்மையும் , நேர்மைறை அம்சமும் கொண்ட, ஒரு சொம்புக்குள் அஸ்தி என இரு எலும்புத்துண்டுகளாக மிஞ்சிய ஒரு பெண்ணின் வாழ்வு. மிக நேர்கோட்டில் அமைந்த அவருடைய வாழ்வில் இறந்த பின் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும் என்பதை கனவாக, ஆசையாக, சுமந்த ஒரு மூதாட்டி, இறந்து மேலும் நாற்பது வருடங்களுக்கு இவரை ஒரு ரங்கராட்டின பயணம் கொண்டு செல்ல ‘ காலம் ‘ முடிவு செய்கிறது. அவ்வாறே ஆகிறது. பிரேத ரூபமாய் ஒவ்வொரு இடமாக அலையவைக்கிறது, வீட்டுப்பரணில் சில வருடம் , கோர்ட் தஸ்தாவேஜுகளுக்கு மத்தியில் சில காலம் , கப்பலில் , மாட்டுவண்டியில் , மலையடிவாரத்தில் என இலக்கற்ற பயணமாக சுழற்றி அடக்கிறது ‘காலம். ஆனாலும் சிலர் பிறப்பால் வளர்ப்பால் , குணத்தால், பிறருக்கு நன்மை செய்தவண்ணமே இருப்பர், இவளும் சொம்புக்குள்ளிருந்து சூட்சும ரூபமாக பலருக்கு வழிகாட்டியபடியே இருக்கிறாள். அவரவர்க்கு வழி காட்டியபடியே , தன்னையும் கங்கையில் கரைக்க இரைஞ்சுகிறாள்.
தெரிசா எனும் கிருஸ்தவ வேதத்தில் ஏறிய பெண் அம்பலப்புழை கிருஷ்ணனையும் மறவாதவள், ஆகவே துவேஷம் ஏதுமின்றி தனக்கு இடப்பட்ட பணியில் முழுமையாக திளைப்பவள். தி.ஜா வின் கதாநாயகிகளை நகலெடுத்து பாத்திரம் தெரிசா. அம்பலப்புழை மண்ணுடன் தன்னை பிணைத்துக்கொள்வதாலேயே, அங்கே இறந்து பிரேதமாக, நற்கதி அடையாத தன் குடும்பத்தில் மூத்த இரண்டு பெண்களை தொடர்பு கொள்ள நேர்கிறது. இந்த மூவரையும் இணைத்து ‘காலம்‘ வேறுவகை விளையாட்டை நிகழ்த்துகிறது. ஆண்டு அனுபவிக்கும் அனைத்தும் இழப்பவளாக , மீண்டும் ஓரே வாரத்தில் மீள்வதாக என கண்கட்டி வித்தை காட்டுகிறது.
இதில் மகாலிங்கன் தான் ஒரு வாழ்வின் எதிர்மறை அம்சங்கள் அனைத்தையும் நம் கண் முன் காட்டிச்செல்பவன். ஒழுக்கமும் சீலமும் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, தன் தமையனில் இருந்து வேறுபட்டு, காமம் எனும் ஒற்றை சரடால் பின்னப்பட்டு உலகம் சுற்றி ஓய்ந்து, நொடித்து , சுகவீனப்பட்டு , மறையும் ஒரு அவல வாழ்க்கை.
நம் ஆசைகளும் நிராசைகளும் காலத்தின் கையில் கொடுக்கப்பட்டு அது இழுத்துச்செல்லும் வழியில் நாம் செல்கிறோம், ஆகவே தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கு சாட்சியாக, காமத்தை நோக்கமாக கொண்டவருக்கு, காலம் இன்பத்தை வழங்கி நிம்மதியை எடுத்துக்கொள்கிறது. இந்த கதாபாத்திரம் நாவலின் முதல் அத்யாயம் முதல் முடிவு வரை தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறது. தன் வாழ்வு மொத்தத்தையும், தானே எழுதி சொல்லிக்கொண்டே செல்கிறது.
இப்படி மூன்று அடுக்குகளும்ஒன்றை ஒன்று பின்னி நாற்பது வருட வாழ்க்கை சித்திரமாக முடிகிறது.
ராமோஜியம் – நாவலில் இருக்கும் ஒருவித ‘குமாஸ்தா தனமான வழவழவென பேசும் தன்மை இந்த நாவலில் இல்லாததற்கு முக்கிய காரணம் பல்வேறு மொழிநடை. எனினும் இந்த நாவலின் தரத்திலிருந்து கீழிறக்கூடிய அம்சங்கள் சிலவற்றை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக காமம்.
தி.ஜா, சாண்டில்யன் , எழுதாத காமமா? அவை ஒருபோதும் முகம் சுளிக்கவோ , எரிச்சலடையவோ செய்ததில்லை, ஒருவகையில் அந்த காமங்களை படிக்கையில் நம் அமிலங்கள் கொண்டாட்டமாக மாறுவதை உணர்வோம். மரப்பசுவின் ‘ அம்மணி ‘ தூண்டாத காமமா?
இந்த நாவலின் பிரச்சனை, மூன்று பக்கத்திற்கு ஒருமுறை அங்க அவயங்களின் வர்ணனையோ , காட்சியோ சொல்லப்படுகிறது. எட்டுநூறு பக்க நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக கட்டிலுக்கு அடியில் ஒரு மரப்பெட்டி இருக்கிறது, இருளில் அதை எடுக்கவேண்டும், அதை எடுப்பவன் ‘ நடுசாமத்தில, தூக்கத்துல இருக்கறவள சம்போகத்துக்கு பிடிச்சு இழுக்கற மாதிரி லாவகமா இழுத்த அந்த பெட்டி வெளிய வந்துடும் ‘ என்று தனக்கே சொல்லிக்கொள்கிறான். ஒருத்தன்.
கன்னியாஸ்திரியாக ஊழியம் செய்ய போன பெண் மனதில் காமமே வழிகிறது.
ரிடையர்டு ஆன குமாஸ்தா மனதில் சதா வீட்டு சாப்பாடும் ,சம்போகமும் தான் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஹோட்டல் நடத்தும் இருவருக்கும் ஓரினசேர்க்கை முக்கியமான உறவாக சொல்லப்படுகிறது. இப்படி பெரும்பாலான கதாபாத்திரங்கள், பேசிப்பேசி காமத்தை பெருகிக்கொள்கின்றார். வாசிக்கும் ஒருவருக்கு எந்த வகையிலும் முக்கியமில்லாத கதைகள். கதையின் ஓட்டத்திற்கும் எந்த வகையிலும் உதவாத வர்ணனைகள்.
நாவலின் சிறந்த இன்னொரு விஷயம். சுதந்திரத்திற்கு முந்தய இந்திய மற்றும் பிரிட்டனின் சித்திரம், மற்றும் வாழ்வியல் முறை. மிக துல்லியமாக ஒரு வரலாற்று ஆவணம் படிப்பது போல, பருவம் , மனிதர்களின் போக்கு , அந்தந்த காலத்தின் வளர்ச்சி , போக்குவரத்து , நகரம் கிராமம் என அனைத்தும் நாவலுக்கு மாபெரும் உதவி செய்திருக்கிறது.
முன்னுரையில்.
1860 ல் தொடங்கி , 1940 வரையான மைக்ரோ ஹிஸ்டரியை (நுண்வரலாறு ?) முழுவதுமாக சொல்ல முடியாவிட்டாலும் தொட்டுக்காட்ட முடிந்த திருப்தி உண்டு. – என்கிறார் நாவலாசிரியர்.
அந்தவகையில் மிக அற்புதமாகவே சொல்லிவிட்டார். என்கிற திருப்தி வாகசனுக்கும் உண்டு.
சௌந்தர்