‘மறவோம்’ எனும் சொல்- செல்வேந்திரன்

அன்புள்ள ஆசிரியருக்கு,

அருமைநாயகம் சட்டம்பிள்ளை தமிழ் விக்கி பதிவு ஒரு நாவலைப் போலிருந்தது. பரவசத்துடன் நண்பர்களிடம் உரலியைப் பகிர்ந்து வாசிக்கச் சொன்னேன். இந்தக் குறிப்பை எழுதிய கரங்கள் போற்றுதலுக்குரியவை.

என்னுடைய மைனி ஒருவர் மூக்குப்பீறியைச் சேர்ந்தவர். ஏசு ரட்சகர் ஆலயங்களின் வழியாகப் பலமுறை சைக்கிள் மிதித்திருக்கிறேன். குறிப்பில் இடம்பிடித்திருக்கும் நாசரேத் துவங்கி சாயர்புரம் இடையிலான அத்தனைக் கிராமங்களிலும் என் காலடி உண்டு. ஆயினும் சட்டம்பிள்ளை வரலாற்றை அறிந்திருக்கவில்லை

இப்போது, ராமச்சந்திர வைத்தியநாத் எழுதியசென்னப்பட்டணம் வாழ்வும் வழியும்எனும் நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முன்நின்று கல்நின்றவர்களாக, சென்னையின் தெருக்களின் பெயர்களாக மாறிய மனிதர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட புத்தகம். ஒவ்வொரு தெருப்பெயரின் பின்னாலும் இருப்பது ஒரு நாவல் அல்லது ஒரு சினிமா அல்லது குறைந்த பட்சம் ஒரு சிறுகதை

நூலில் ராமச்சந்திர வைத்தியநாத் தெருக்களின் பெயர்களை மாற்றுவதற்கு எதிராக மீண்டும் மீண்டும் தனது மறுப்பை வலியுறுத்துகிறார். பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களைப் போல தெருக்களின் பெயர்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிறார். தெருவின் பெயர் மாற்றப்படும்போது அதுநாள் வரையிலான அதன் வரலாறும் மறைக்கப்பட்டு விடுகிறது. மவுண்ட் ரோட்டின் பெயர் அண்ணா சாலை என மாற்றப்பட்டதுதான் இந்தப் போக்கின் துவக்கப்புள்ளி என்கிறார்

சென்னையின் மகத்தான மனிதர்கள் பலரை வரலாற்றுப் போதமற்ற தமிழ்ப் பண்பாடு அவமானப்படுத்தி வந்திருக்கிறது. தக்கர் பாபா, ஜான் டிமோண்டி ஆகிய பெயர்களை உடனடியாகச் சொல்லலாம். இம்மனிதர்களைப் பற்றிய அரைப்பக்கக் குறிப்பை வாசித்திருந்தால் கூட அவர்களை இழிவு செய்யும் எண்ணம் வராது

இம்மாதிரியான சூழலில், பண்பாட்டுப் பங்களிப்பாற்றிய முன்னோடிகளை நாங்கள்மறவோம்என்கிறது தமிழ் விக்கிப் படை. அத்தனை வேலைகளுக்கும், வாழ்க்கைப் பாடுகளுக்கும் மத்தியில் தங்களது பெயர் கூட வெளிவராது எனத் தெரிந்தும் இருளில் உழைக்கும் இந்தக் கரங்களை தமிழன்னை மானசீகமாக முத்தமிடுகிறாள்.

மிக்க அன்புடன்,

செல்வேந்திரன்

முந்தைய கட்டுரைபாபுராயன்பேட்டை, ஆமருவி தேவநாதன், கடிதம்
அடுத்த கட்டுரைவியாச தரிசனம்-3