கொல்லையை சுற்றிவந்தபடி தினமும் செய்யும் வேலையைத்தான் பாயக்கா அன்றும் மேற்கொண்டாள். முதிர்ந்த முந்திரிக்கொட்டைகளைப் பறித்தாள்; பிடிமானமின்றித் துவளும் முல்லைக்கொடியை நீவிக் கொடிப்பந்தலில் படரவிட்டாள்; மண்ணில் உதிர்ந்த நாவற்பழங்களைப் பொறுக்கினாள்; வெந்நீர் அடுப்புக்காய் மரப்பட்டைகளை செத்திக் கட்டினாள். வீட்டுக்குள் நுழையும் முன்பு வேலியைஒட்டி சற்று நின்றாள். ரெண்டு வீடு தள்ளி வித்தியாசமான ஆடையணிந்த ஒரு கிழவி வராண்டாவில் அமர்ந்திருப்பதாய் பாயக்காவுக்குப் பட்டது.அது சங்கரனின் அம்மா கமலக்காவாக இருக்குமோ? ஆனால் ஏனிப்படி எதையோ அணிந்திருக்கிறாள்?
அந்தவழியே வந்து கொண்டிருந்தவனைப் பாயக்கா அழைத்தாள் “வெங்கா! நீ வெங்கா தானே? அந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பது யாரு?”
“யாருன்னு நிச்சயமா தெரியலை! கமலக்கா போலத்தான் இருக்கு”
இந்த மூத்தக்கிழவிக்கு என்னதான் ஆயிற்று என்று வியந்தபடியே திரும்பி வீட்டுக்குள் நடந்தாள். பார்த்ததை நினைக்கநினைக்க அவளுக்கு ஆவல் கழுத்தை நெட்டித் தள்ளியது. அதைத் தெரிந்து கொள்ளாமல் தலையே வெடித்துவிடும் போல இருந்தது. கதவை இழுத்து மூடியபடி சங்கரன் வீட்டை நோக்கி விரைந்தாள்.
அது கமலக்கா தான். கண்ணைக் குத்தும் பெரிய பூக்கள் தெறித்த நைட்டியை அணிந்திருந்தாள். இதை லலிதா அணிந்திருந்ததை முன்பே பாயக்கா பார்த்திருந்தாள். பாயக்காவிடமிருந்து சிரிப்பு வெடித்துக் கிளம்பியது. அந்த சிரிப்பு வார்த்தைகளாய்க் கரைந்து ‘இது என்ன கூத்து?’என்று கேள்வியானது. ‘இது என் தலைவிதி’ என்பதுபோல் கமலாக்கா தலையில் அடித்துக் கொண்டாள். பாயக்காவுக்கு மேலே பேச வார்த்தையின்றித் தொண்டை அடைத்தது. அவர்கள் பேச்சை மோப்பம் பிடித்ததுபோல் லலிதா வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.
“இதென்னடி உன் மாமியாருக்கு மாட்டிவிட்டிருக்கே? மாறுவேடப் போட்டியா?” வாயிற்படிகளில் ஏறியபடி பாயக்கா கேட்டாள்.
“இல்லக்கா! புடவையை சுத்திவிட்டா தடுக்கி விழுறாங்க. பக்கத்துலயே நானிருந்து அதைக் கட்டிவிட வேண்டியிருக்கு. பாத்ரூம் போனாங்கன்னா புடவையெல்லாம் ஈரமாக்கிடுறாங்க. அதான் அவங்களுக்கு இந்த நைட்டி சௌகரியமா இருக்கும்னு.…..”
“எனக்குப் புடவை ஒண்ணும் பிரச்னையாயில்லை. இந்தக் கூத்தெல்லாம் என்னை அவமானப்படுத்தத்தான். சாகறதுக்குள்ளே இதுமாதிரி இன்னும் என்னென்னவெல்லாம் நான் அனுபவிக்கணுமோ?”என்றாள் கமலக்கா.
“அவளுக்கு பிடிக்காததை ஏன் அவள்மேல் திணிக்கிறே? அவளுக்குப் புடவை கட்டிவிடறது உனக்குக் கஷ்டமா இருந்தா என் கிட்ட கொண்டு வா. நான் கட்டி விடுறேன்” என்றாள் பாயக்கா.
பாயக்கா சொன்னது கொஞ்சம் கூட லலிதாவிற்குப் பிடிக்கவில்லை. ”அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. இதுலே நீங்க ஒண்ணும் மூக்கை நுழைக்க வேண்டாம்.அவங்கவங்க வேலையைப் பார்த்துக்கட்டும்”. லலிதாவின் குரல் உயர்ந்தது.
வீட்டுக்குத் திரும்பிய பாயக்காவிற்கு மனம் சோர்ந்து வருத்தம் மேலிட்டது. குளிப்பதற்கு அடுப்புமூட்டி வெந்நீர் சுடவைக்கும் போதும் லலிதாவின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டன. கமலக்கா மீது இரக்கம் பொங்கியது.. பாவம் கமலக்கா! முன்பு அவள் தனியாக இருந்தபோது பிள்ளை குறித்த ஆவலும்,பேச்சுமாய் சந்தோஷமாய்த்தான் இருந்தாள். பணிஓய்வு பெற்று சங்கரன் தன் அம்மாவைப் பார்த்துக் கொள்வதாய்த் தன் மனைவியுடன் இங்கு வந்த பிறகுதான் கமலக்காவிற்குப் போதாதகாலம் ஆரம்பித்தது.
இந்த லலிதாதான் எப்படி மாமியார்க்கிழவியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாள்?அவளுக்குத் தலைக்கனம் அதிகம் என்று பாயக்கா நினைத்தாள். மற்றவர்களும் அப்படித்தான் சொன்னார்கள். அதையே பாயக்கா சொன்னபோது அவர்கள் கண்டனம் செய்தார்கள். அந்த கிராமத்து விவகாரங்களில் அவள் தலையிடக் கூடாது என்றார்கள். ஆனால் பாயக்காவுக்கோ தன்மீது எந்தத் தவறும் இருப்பதாய்த் தோன்றவில்லை.பிறர் தப்பு செய்தால் அதை எடுத்து சொல்லக்கூடாதா என்ன? வீண்வம்பு பேசிப் பிறர் குடிகெடுப்பவள் அல்ல பாயக்கா. ஆனால் இப்போதெல்லாம் தனக்கு யார்யாரோ புத்திமதி சொல்கிறார்கள் என்று தேங்காய்நாரை வெந்நீர் அடுப்பில் இட்டபடி பெருமூச்செறிந்தாள். அந்த ஹெராவதி கிராமத்தில் ஒரு புது வகையான வாழ்க்கைமுறை உருவாகி வருவதாயும்,அதில் தன் பங்கு ஏதும் இல்லாதது போலும் ஒரு இனம்புரியா உணர்வு பாயக்காவுக்கு ஏற்பட்டது.
பள்ளிக்கூட வாத்தியார் வெங்கடேசனுக்கு மனைவியாய் அவள் இந்த ஹெராவதியில் கால் பதித்தபோது அவளுக்கு பதினைந்து வயது இருக்குமா? வெங்கடேசன் பாயக்காவை விட பன்னிரண்டு வயது மூத்தவன். அவள் வாழவந்த வீட்டில் அவளுடைய மாமனார், மாமியார், இளமையிலேயே விதவையாகிவிட்ட மாமனாரின் சகோதரி பிரயாகி ஆகியோரும் இருந்தனர். சடங்குகள், ஸம்ப்ரதாயங்கள், சாளக்ராமங்கள்,பூஜை, மடி ஆசாரம் என்று இருந்த அந்த குடும்பத்திற்கு ஈடுகொடுத்துப் பாயக்காவும் வளைய வந்தாள்.
வெங்கடேசனோ கொள்கைப் பிடிப்புள்ளவன். தூய கதராடையை எப்போதும் அணிந்தே இருப்பவன். ஹெராவதியின் ஜனங்கள் அவன் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள். அவன் வார்த்தை அவர்களுக்கு வேதவாக்கு..
வெங்கடேசன் பாயக்காவிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தான். மணமான மூன்றாம் வருடம் அவர்களுக்கு ஸ்ரீபதி பிறந்தான்.. அந்தக் குழந்தையின் மழலையைக் கேட்கும் முன்னரே பாயக்காவின் மாமியார் இறந்து போனாள். பிரயாகியும் பின்னோடே போய்ச் சேர்ந்தாள். பூஜை,மடி என்றிருந்த அவள் மாமனாரோ மூப்பெய்தி, ஹோட்டலிலெல்லாம் சாப்பிட்டபடி வீதிகளில் மனம் போன போக்கில் திரிய ஆரம்பித்தார். வெங்கடேசன் தன் தந்தையை அவர்போக்கிலே விட்டான்.பாயக்காவையும் அவ்வாறே செய்யச் சொன்னான். ஒரு நாள் அவள் மாமனார் கோவில் அருகிலேயே உயிரையும் விட்டார்.
தனக்கேயான குடும்பம் துவங்குகிறது என்று பாயக்கா நினைக்கத் துவங்குமுன்னரே திடீரென அந்த நினைப்பில் மண் விழுந்தது. அப்போது ஸ்ரீபதிக்குப் பத்து வயதிருக்கும். ஒரு நாள்கூட நோய்நொடி என்று படுக்காத வெங்கடேசன், பாயக்காவின் இதயம் நொறுக்கி இறந்து போனான். வாழ்க்கைச்சக்கரம் வெகுவேகமாய் சுழல ஆரம்பித்து விட்டதாய்ப் பாயக்கா உணர ஆரம்பித்தாள்.
விதியின் விளயாட்டை ஏற்றுக் கொண்ட பாயக்காவின் எண்ணமெல்லாம் ஸ்ரீபதி பற்றியும், அவன் எதிர்காலம் குறித்தும் மட்டுமே சுற்றிவந்தது. அவளின் மாமனார் எப்போதும் சொல்லிவந்த குடும்பகௌரவத்தைக் காக்கும் பெரும் பொறுப்பு அவள் தோள்களில் விழுந்ததாய் உணர்ந்து வாழ ஆரம்பித்தாள்.
அவளுடைய தகப்பனார் குழந்தையும் அவளும் தன்னோடு வந்துவிடும்படி அழைத்தபோது, விதவையாகி அண்ணன் வீடுவந்து வாழ்ந்த பிரயாகியின் சோகம் நினைவில் ஆடியது.நல்லதோ கெட்டதோ, இங்கேயே இருந்து விடுகிறேன் என்று தங்கிவிட்டாள்.
தன் மகனோடு ஒரு அவுட் ஹவுசுக்குக் குடிபெயர்ந்தாள். பென்ஷன் கிடைத்ததால் வயிற்றுப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. போதாததிற்கு, தென்னை மரங்களும், காய்கறி பயிரிட கையளவு நிலமும் இருந்தது. மரணம் அவளை ஸ்ரீபதியிடமிருந்து பிரித்து விடும் என்று உணர்ந்ததைப் போல் ஸ்ரீபதி மேல் அதிக அன்பைப் பொழிந்து அவனை இறுக்காமல் வாழத் தலைப்பட்டாள். அவன்மேல் காட்டும் பாசம் அவன் சுதந்திரத்திற்குத் தடையாய் இருக்கலாகாது என்று கவனமாய் இருந்தாள்.
ஸ்ரீபதி அப்படியே அவன் தகப்பனைக் கொண்டு இருந்தான். அவன் வளர்ந்து வருகிறான் என்றுகூட பாயக்கா உணர்ந்தாளில்லை. தான் ஏதோ அந்த இடத்தைச் சார்ந்தவன் அல்ல என்பது போலேதான் ஸ்ரீபதியும் வளர்ந்தான். கஷ்டப்பட்டுப் படித்தான். சைக்கிளில் கும்ட்டா வரைசென்று கல்லூரியிலும் படித்தான்.அத்தனை தேர்வுகளிலும் வெற்றிபெற்று, பம்பாய் போய்ச் சேர்ந்தான்.
ஹெராவதியில் பாயக்கா தனித்துப் போனாள். மணப்பெண்ணாய் வாழ்க்கைப் பட்டு இத்தனை நாள் வாழ்ந்தபிறகு, அவளுக்குத் தன் வாழ்க்கை வேறு, மற்றவர்கள் வாழ்க்கை வேறு என்று பாகுபாடே இல்லாமல்தான் போயிற்று. அவள் கவனத்துக்கு வராமல் எதுவும் அங்கிருந்த குடும்பங்களில் நிகழ்ந்தது இல்லை.
ஏதோ ஒரு வகையில் எல்லோருக்குமே அவள் உதவியாக இருந்தாள். பால்கார ரங்கப்பாவை எந்த முகாந்திரமும் இல்லாமல் போலீஸ் பிடித்துச் சென்றபோது, பாயக்கா பெருமுயற்சி செய்து அவனை மீட்டு வந்தாள். அந்த முயற்சியில் அவளுடன் கோர்ட்டுக்கு வர மறுத்த வக்கீல் ரமேஷைப் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள், “பணம் ஒன்று தானா நீ படித்த சட்டத்தின் குறிக்கோள்? இங்கே அநியாயமாகக் கைது செய்யப்பட்ட ஒருவனுக்காக உதவாமல் இங்கேயே வக்கீல் தொழில் செய்ய உனக்கு வெட்கமாக இல்லை?” என்று பொரிந்தாள். ரமேஷ் அவளுடன் கோர்ட்டுக்குச் சென்றான். பாயக்காவின் ஜாமீனுடன் ரங்கப்பா விடுவிக்கப்பட்டான். போலீசுக்கு அவன் நிரபராதி என்று தெரிந்தவுடன் அந்த கேஸ் ஒருவாறாக மூடப்பட்டது. உள்ளூர் விவகாரங்களில் மூக்கை நுழைத்தாலும், பாயக்கா இல்லாவிட்டால் ரங்கப்பா வெளியே வந்திருக்க முடியாதுதான் என்று அரைமனத்தோடு உள்ளூர்வாசிகள் ஒப்புக் கொண்டார்கள். யார் வீட்டில் அப்பளம் இட்டாலும் அங்கு உதவ பாயக்கா தானாகப் போவாள். இந்த கிராமத்தில் எது நடந்தாலும் முழு மனதோடு தன்னை ஈடுபடுத்திக் கொள்வாள். பாயக்கா மட்டும் இல்லாவிட்டால், ஹெராவதியின் சாலைகள் எப்போது கடைசியாய் தார்பூச்சைப் பார்த்தன என்று யாரும் சொல்லியிருக்க முடியாது. அவள் திடசித்தத்தைக் கண்டு அனைவருக்கும் ஆச்சரியம் மேலிடும்.
ஹெராவதி கிராமம், கும்த்தா நகராட்சியின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டு, அங்கு தேர்தல் நடக்கும் என்று தெரிந்தவுடன் நாலைந்து பேர் வேட்பாளர்களாய் அறிவித்துக் கொண்டார்கள். அனைவரின் ஆதரவோடு பாலப்பாதான் வேட்பாளராய்த் தேர்வு செய்யப்பட்டான். ஆனால் அதற்கு முன்பு, ஹெராவதிக்கு இணைப்பு சாலை போடுவது பற்றியும்,தெருவிளக்குகள் போடுவது பற்றியும் பாலப்பா உறுதி அளிக்க வேண்டும் என்றே பாயக்கா விடாமல் நிர்ப்பந்தித்தாள். தேர்வுபெறும் ஆவலில், பாலப்பாவும் பூலோகத்தையே வாக்குறுதியாய் அளிக்கவும் செய்தான். எல்லாவற்றையும் பார்க்கும்போது பாலக்காவே தேர்தலில் நின்றிருக்கலாம் என்று அனைவரும் அவளைக் கேலியும் செய்தனர்.
ஆறுமாதங்களாயிற்று… புது ரோடு பற்றிய சத்தத்தையே காணோம். ஹெராவதி முனிசிபாலிட்டியில் சேர்ந்தபின்னும் ஒரு துரும்புகூடக் கிள்ளிப் போடப்படவில்லை. பாயக்கா இதுபற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள். எல்லோருமாய்ச் சேர்ந்து ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று நினைத்தாள்.
“ஓ! பாயக்கா! அதது நடக்கும் போது நடக்கட்டுமே? எதற்கு ரோடு ரோடு என்று அடித்துக் கொள்கிறாய்? அதைப் போட்டால் எங்கு போகப் போகிறாய்.?” என்றார்கள்.
ஆனால் பாயக்கா லேசில் விட்டுவிடுவாளா என்ன? ஒரு நாள் வழியில் பாலப்பாவைப் பிடித்துக் கொண்டு சண்டைக்கே போய்விட்டாள்.
“நான் என்ன செய்யட்டும் பாயக்கா? என்று இறைஞ்சினான்.” நான் ஒரு தனி மனுஷன். எதைச் செய்ய முடியும்?”
“ஏன்? நாங்களெல்லாம் உன்கூட இல்லையா?”தொடர்ந்தாள்.” நாங்க என்ன செய்யணும் சொல்லு? நாங்களெல்லாம் ஊர்வலமாய் வந்து உண்ணாவிரதம் இருக்கவா? உன்னால் ஏதும் செய்ய முடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டியது தானே? உன்னைத் தேர்ந்தெடுத்தபோது பெரிசாக நீ வாய்ப்பந்தல் போடவில்லை?”
பாவம் பாலப்பா! முனிசிபாலிட்டி சேர்மனிடம் சென்று ஒப்பாரி வைப்பது தவிர்த்து அத்தனையும் செய்தான். பாயக்கா அவனைக் கிடுக்கிப்பிடி பிடித்த போது இன்னொன்றும் சொல்லியிருந்தாள்.”உங்கள் அலுவகத்தில் இருந்து யாரும் இங்கே காலை வைத்தால் கொதிக்கிற நீரைத் தலையில் ஊற்றுவேன் ஞாபகம் வச்சிக்கோ”. அது வெறும் பூச்சாண்டிக்காகத்தானா அல்லது அதுபோல் ஏதும் திட்டமும் பாயக்கா வைத்திருந்தாளா என்று யாருக்கும் தெரியாது. விரைவிலேயே வரிவசூலுக்கு ஹெராவதிக்கு யாரும் சென்றால், அவர்கள் மேல் கொதிநீரை ஊற்றப் போகிறார்கள் என்ற வதந்தியும் தீயாய்ப் பரவிவிட்டது. முனிசிபாலிட்டி சேர்மன் சில ஊர்ப்பெரியவர்களுடன் கலந்தாலோசித்தார். அதன்பின் அவர்கள் பாயக்காவைப் பார்க்க வந்தார்கள்..
அவளிடம், “கூடிய விரைவில் ரோடு போடப்படும். அவர்களின் அரசியலில் வீணாகப் போய் மாட்டிக் கொள்ளாதே பாயக்கா!” என்றார்கள்.
பாயக்காவின் கோபம் மேற்கூரையைத் தொட்டது.
“இது அரசியல் என்றால் எனக்கொன்றும் கவலை இல்லை. சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாவிட்டால் அவன் வெளியேறட்டுமே? நான் இன்னும் போவதற்கு ஒரேஒரு இடம் தான் இருக்கிறது. அங்கு போவதற்கு எனக்கு இந்த ரோடு தேவையில்லை. பாலப்பாவினால் ஏதும் இயலாவிட்டால் அவன் பொதுவில் வந்து மன்னிப்புக் கேட்கட்டும். இதை அரசியல் என்று நீங்களெல்லாம் சொன்னீர்களானால்… நானும் அதில் இருக்கிறேன். ஆனால்.. சொல்லுங்க.. உங்களில் ஒருத்தர் கூட அவன் செய்தது தப்பு என்று யோசிக்க வில்லையா?”
பாயக்காவுக்கு புத்திசொல்ல வந்தவர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பினார்கள். விரைவிலேயே அனைவரும் பாலா அவர்களையெல்லாம் பொய்வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றி விட்டதாய்ப் பேச ஆரம்பித்தார்கள். ஒருவாறாக ஹெராவதிக்கு அந்தத் தார்சாலையும் வந்தே விட்டது.ஆனாலும் பாயக்காவின் நடைமுறைகளில் ஏதொரு மாற்றமும் இல்லை.
இரண்டே இரண்டு தருணங்களில் மட்டுமே பாயக்கா ஹேமாவதியிலிருந்து வெளியே சென்றிருக்கிறாள். முதல்முறை சென்றது ஊர்க்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த காசியாத்திரையின் போது. காசிக்குச் செல்பவர்கள் இறைவனுக்குக் காணிக்கையாகத் தனக்குப் பிடித்தமான ஒன்றை விட்டுவிட வேண்டும் என அவளுக்கு சொன்னபோது,பாகற்காயை இனி உயிருள்ளவரை தொடமாட்டேன் என்று அதை விட்டாள்.பாகற்காய்பொடி என்றால் அவளுக்கு உயிர். அடுத்து கமலக்காவின் முறைவந்தபோது அவள் விட்டதோ கத்தரிக்காய் என்றபோது அனைவரும் பெரிதாய் சிரித்தார்கள். கமலக்காவிற்கு கத்தரிக்காய் சுத்தமாய்ப் பிடிக்காது என்பது ஊரறிந்த ரகசியம்!
“இந்த யாத்திரைக்கு அர்த்தம் என்ன தெரியுமா உனக்கு?” எப்போதும் போல் தலையில் அடித்தாற்போல் கேட்டாள் பாயக்கா. “ஆசைகளின் அந்திமம்”
பாயக்கா சொன்னபின் கமலாக்கா கூடுதலாய்ப் பாகற்காயையும் விட்டாள். இதுபற்றி மறுபடியும் பேசவில்லை பாயக்கா. கமலக்காவோ பாகல் வளர்த்துப் பிறர்க்கு அதைத் தந்தாலும், வேறெதையாவது விட்டிருக்கலாம் என்று அவ்வப்போது நினைத்து மருகுவதும் உண்டு.
இரண்டாம்முறை பாயக்கா ஊரைவிட்டுப் போனது பம்பாய்க்கு.அதுவும் ஸ்ரீபதிக்குத் திருமணமாகிப் பத்தாண்டுகள் கழித்து.
அவன் கல்யாணத்தில் கொஞ்சமா பிரசிச்சினைகள்? ஸ்ரீபதி பம்பாயிலேயே வேலைபார்க்கும் பெண்தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றான். பாயக்காவும் விடாமல் யார்யாருக்கோ கடிதங்களாய் எழுதி ஒரு பெண்ணையும் பிடித்து விட்டாள். ஸ்ரீபதிக்கு மனைவியாய் வாய்த்த சவிதா ஒரு ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள். வீட்டில் எந்தவொரு நல்ல காரியமும் நடக்கவில்லை என்பதால் அவன் திருமணம் ஹெராவதியில்தான் நடக்கவேண்டும் என்று பிடிவாதமாய் அதை அங்கு நடத்தினாள்.
மகனின் திருமணத்திற்குப் பிறகு பாயக்காவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல்தான் இருந்தது. அவள் ஆசையாய் வளர்த்த இரண்டு பசுக்களுமே ஏதோநோய் வந்து செத்துப்போனபின்னர்தான், அவளையும் அந்த வீட்டையும் பிணைத்திருந்த சூட்சமமான கொடி அறுந்தாற்போல் அவளுக்குப் பட்டது. மகனோடு கொஞ்ச நாள் இருந்துவர முடிவெடுத்தாள். ஸ்ரீபதி பம்பாயிலிருதே அங்குவந்து அவளை அழைத்துச் சென்றான்.
ஆனால் பம்பாயிலிருந்த இரண்டு மாதங்களும் தன் கைகால்கள் கட்டப் பட்டிருப்பதாய்ப் பாயக்கா உணர்ந்தாள்.ஸ்ரீபதியின் ஏழுவயது மகள் ராஷ்மி இருந்தும் கூட அவளுக்குப் பொழுதுபோகாமல் சலிப்பாய் இருந்தது. ஒரு பத்து மாடிக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் இருந்தது ஸ்ரீபதியின் மூன்றுரூம் பிளாட். அங்கு எல்லாமே மூடிய கதவுகளுக்கு உள்ளேயே நிகழ்ந்தன. யாரேனும் உள்ளே வருவதற்கோ அல்லது வெளியே போவதற்கோ மட்டுமே அங்கு கதவுகள் திறக்கப்பட்டன. அவள் மருமகளோ காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து,உடுத்தி,டிபன்பாக்ஸ் கட்டிக் கொண்டு, அரைத்தூக்கத்திலிருக்கும் ராஷ்மியை எழுப்பி,குளிப்பாட்டி அவளையும் இழுத்துக் கொண்டு ஏழுமணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி விடுவாள்.மாலையில் பள்ளிக்கு அருகிலேயே இருந்த நண்பரின் வீட்டில் ராஷ்மி காத்திருப்பதும்,ஸ்ரீபதி அலுவலகம் விட்டு வரும்போது குழந்தையைக் கூட்டி வருவதும் வாடிக்கையாயிற்று. காலையில் பிடிக்கத் தவறிய மின்சார ரயில் பற்றியோ, பஸ்ஸில் நெரியும் கூட்டம் பற்றியோ முறையீடுகளும் புலம்பல்களும் அவர்களுடனே வீட்டுக்குள் நுழைவதும் சகஜமாயிற்று. ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரத்தின் முட்களில் அல்லவா வாழ்க்கை இங்கே கட்டுண்டு கிடக்கிறது? பகல்,மாலை என்று அளந்தபடி நகரும் வாழ்க்கை; நாளின்அலுவல்களை மணிகளின், நிமிடங்களின் கணக்காய், அரை நிமிடத்தில் தவறவிட்ட ரயில்பஸ் பட்டியலாய் இயந்திரகதியாய் மாறி வினாடி முள்ளாகப் படபடத்து நகர்கிறதே!
பாயக்காவுக்கு பம்பாய் வாழ்க்கை மந்தமாய் இருந்தது.. எப்போதோ அத்திபூத்தாற்போல் அக்கம்பக்கம் வசிப்பவரின் சிறு புன்னகை,ஓரிரு வார்தைகள் தவிர உலகத்தோடு அவளுக்கு தொடர்பற்றுப் போனதுபோல் இருந்தது. ஒருமுறை பாயக்கா வெளியில் வந்தபோது, அவர்களின் தளத்தில் இருந்த ஐந்து பிளாட்டுகளில் மூன்றில் பூட்டுகள் தொங்கிக் கொண்டிருந்தன. எதிரிலிருந்த பிளாட்டின் கதவு அப்போது திறக்க, எதிர்பார்ப்புடன் பாயக்கா திரும்பினாள். அவள் வாயைத் திறப்பதற்கு முன், வெளிப்பட்ட பெண்மணி மீண்டும் உள்சென்று சடாரென்று கதவை மூடிக்கொண்டாள்.
பம்பாய் போன புதிதில் எதிர்வீட்டுக் குழந்தைகள், பூட்டிய கதவின் வெளியில் காத்திருப்பதைக் கண்ணுற்றாள்.அவர்களை உள்ளே அழைத்துத் தின்பதற்கு சிற்றுண்டியும் கொடுத்தாள். அவர்கள் ஏதோ விளையாட்டில் மூழ்கிப் போனார்கள். அவர்களின் பெற்றோர்கள் வீடுதிரும்பியவுடன் குழந்தைகளைத் தேடி திமிலோகப்பட்டது. ஸ்ரீபதி வந்தபிறகுதான் குழந்தைகள் அங்கிருப்பது தெரியவந்து அவர்களை இழுத்துக் கொண்டு போனார்கள்.அந்தப் பெற்றோர்களுக்கும் ஸ்ரீபதிக்கும் என்ன விவாதம் நடந்ததோ தெரிய வில்லை, ஸ்ரீபதி பாயக்காவைப் பார்த்துக் கத்த ஆரம்பித்து விட்டான்.
“நீ யாரம்மா அவர்கள் வீட்டு விஷயத்தில் தலையிட? அந்தக் குழந்தைகள் வாசலில் காத்திருந்தால் உனக்கென்ன,இல்லை ரோடில் நின்றால் உனக்கென்ன? இந்த பம்பாயில் யாரும் யாருடைய உதவியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை தெரிஞ்சுக்கோ. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்.”
பாயக்காவுக்கு ராஷ்மியுடன் அமர்ந்து பேசக்கூட இயலவில்லை. வீட்டுக்கு அவள் திரும்பியவுடனே வீட்டுப்பாடம் முடிக்கவேண்டியிருந்தது. சாப்பிட்டவுடன் அவள் படுத்தால்தான் காலையில் நேரத்துக்கு எழுந்திருக்க முடியும். மிஞ்சுவது ஞாயிற்றுக்கிழமை ஒன்றுதான். அன்றும் யார் வீட்டுக்காவது செல்வது வழக்கமாய் இருந்தது. தாங்கள் செல்லும் முன் அவர்கள் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்வதில் ஸ்ரீபதி உறுதியாய் இருந்தான். நாம் போகும் சமயம் அவர்கள் வேறேங்காவது போய் விட்டால்? அந்த சந்திப்பெல்லாம் உப்புப் பெறாத சந்திப்புகளே. ஆனால் அதற்காக அவன் மெனக்கெடுவது அதிகம்தான். பாயக்காவிற்கு வெறுத்துப் போயிற்று. ஹெராவதிக்காக ஏங்க ஆரம்பித்தாள். தன் குடும்பம், தன் பிள்ளைகள், அவர்களின் வீட்டுப் பாடம், ஞாயிற்றுக்கிழமை பொழுதைக் கழிப்பது தவிர இந்த பம்பாய் வாசிகளுக்கு வேறொன்றிலும் நாட்டமில்லை.
இனி என்றும் ஹேராவதியை விட்டு வெளியே போவதில்லை என்ற முடிவுடனே பாயக்கா ஊர் திரும்பினாள்.கடைசி காலத்தில் மகனுடன் வாழ வேண்டும் என்ற கனவை இனியும் அவள் காண்பதாய் இல்லை. புதிதாய் இரண்டு பசுமாடுகள் வாங்கினாள். தன் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினாள்.
ஆனால் ஹெராவதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மெல்ல வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தன.டாக்டர் கோபாலின் மூத்தமகன் தன் பங்கை விற்க முற்பட்ட போதுதான், அவர் வீட்டில் நடந்த பாகப்பிரிவினை பற்றிய சங்கதி வெளிப்பட்டது. இன்னுமொரு உயர்ந்த குடும்பம் கலைந்து போனது பாயக்காவுக்கு மிகுந்த வேதனை அளித்தது. டாக்டரின் குடும்பமும், அவளின் குடும்பமும்தான் எவ்வளவு அன்னியோன்னியமாக இருந்தன? அந்த கிராமத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் புரிந்து கொள்வதோ, ஈடுகொடுப்பதோ அவளுக்கு வேதனையான விஷயமாய் இருந்தது.ஒரே குடும்பமாய் எண்ணியும் வாழ்ந்தும் வந்த ஹைராவதி தானா இது? இனி அது இல்லை. அவளுக்குச் சொந்தமாய் இருந்த அந்த மண்ணே அன்னியமாய்த் தோன்ற ஆரம்பித்தது.
பகல் உணவு முடித்து வெளியே வந்தவள், கமலக்காவை சங்கரன் வீட்டு வராண்டாவில் பார்த்தாள்.பாயக்காவை வருமாறு அவள் கையசைத்துக் கூப்பிட்டாள். கமலக்கா ஏதோ உதவிக்காகக் கூப்பிடுகிறாள் என்றே புரிந்து கொண்ட பாயக்கா, முன்னம் நடந்த சம்பவம் நினைவிலாட சற்று தயங்கியே சென்றாள். கமலக்கா குமட்டலுடன் ஒக்களிக்க ஆரம்பித்தாள். சங்கரனும் லலிதாவும் ஏதோ கலியாணத்திற்காக கும்ட்டாவுக்குப் போயிருந்தார்கள்.
பாயக்கா கமலக்காவை உள்ளே கூட்டிச் சென்றாள்.
“பாயக்கா!” தேம்பத் தொடங்கினாள்.” எனக்குக் கத்தரிக்காய் ஆகாது என்று தெரிந்தும், கத்தரிக்காய் சாம்பாரை எனக்குப் போட்டுவிட்டுப் போனாள். வேறு ஏதும் இல்லை என்பதால் நானும் கொஞ்சம் சாப்பிட்டுத் தொலைத்தேன். வாந்தியெடுத்தே செத்துப்போய் விடுவேன் போலிருக்கிறது. இந்த வாழ்க்கை போதும் போதும் என்றாகி விட்டது எனக்கு. நேற்றிலிருந்து மீண்டும் இந்த நைட்டி வேஷம். இதை உடுத்திக் கொண்டு நடமாடவே அவமானமாய் இருக்கிறது. நாளெல்லாம் உள்ளேயே உட்கார்ந்து வெறுத்துப் போனதால் இன்று வெளியே வந்தேன். போவோர் வருவோர் எல்லோரும் என்னைப் பார்த்துக் கெக்கலி கொட்டி சிரிப்பது போலவே இருக்கிறது.” இந்த வேதனையை அவள் வெளிப்படுத்தியபோது அவள் கண்கள் குளம் கட்டியிருந்தன.
லலிதா ஒரு ராட்சசி தான். ஆனால் இந்த சங்கரனுக்கு என்ன கேடு வந்தது? பாயக்கா ஒரு கணம் யோசித்தாள். “கமலக்கா என்னோடு என் வீட்டுக்குக் கிளம்பு. உன்னை இனி நான் பார்த்துக் கொள்கிறேன்.”
கமலக்கா இதற்காகக் காத்திருந்ததுபோல், “சரி! என் இரண்டு பெட்டியையும் உள்ளேயிருந்து எடுத்து வா” என்றபடி எழுந்தாள்.கமலக்காவின் துணிகளை எடுத்துக்கொண்டு பாயக்கா தன் வீட்டுக்குத் திரும்பினாள். கமலக்கா போட்டிருந்த நைட்டியைக் களைந்து புடவையைக் கட்டிவிட்டாள். கமலக்கா வீட்டுக்கு மீண்டும் சென்று அவளின் பொக்கிஷமான இரண்டு கனத்த பெட்டிகளையும் சுமந்து வந்தாள். பக்கத்து வீட்டு ரமேஷை சங்கரன் திரும்பும் வரையில் காவலுக்கு ஏற்பாடு செய்தாள்.
சங்கரனும் லலிதாவும் திரும்பிவந்து ரமேஷ் காவலுக்கு இருப்பதைப் பார்த்தவுடன், கமலக்காவிற்கு ஏதோ சுகவீனம் ஏற்பட்டு பாயக்கா கூட்டிப் போயிருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தார்கள். உடனே பாயக்கா வீட்டுக்கு விரைந்தவர்களை ‘இன்னமும் உயிரோடுதான் இருக்கிறாள்’ என்ற பாயக்காவின் குரல் நிறுத்தியது. பாயக்கா சங்கரனை ஒரு வார்த்தை பேச விடவில்லை. “உன்னால் உன்னுடைய அம்மாவை சரியாய்ப் பார்த்துக் கொள்ள முடியாவிட்டால் அதற்கு நாங்கள் இருக்கிறோம். அவளுக்குக் கத்தரிக்காய் ஆகாது என்று இந்த ஊருக்கே தெரியும். உன் பெண்டாட்டி ஒருத்திக்குத்தான் அது தெரியாது போலிருக்கிறது. அதுதான் கத்தரிக்காயை அவள் தொண்டையில் அடைத்து வாயிலெடுக்க வைக்கிறாள். சொல்லு. நீ ஒரு பிள்ளையா இல்லை ராட்சசனா? போதாதிற்கு இந்த வயதுக்கு மேல் அவளுக்கு நைட்டியும் கைட்டியும் வேறு மாட்டி விடுகிறீர்கள்.அவளை ஒரு பொம்மை என்று நினைத்தீர்களா?இதற்குப் பேசாமல் அவள் கழுத்தை இறுக்கிக் கொன்று விடலாமே?”
சங்கரன் பதில் சொல்லத் தடுமாறினான். லலிதாவோ பிரச்னையெல்லாம் கமலக்காவால் தான் என்று ஏதோ முனகினாள்.
பாயக்கா அவள் சொன்னது எதையும் ஏற்கவில்லை. கமலக்கா ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நடப்பதைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.
சங்கரனுக்குப் பெற்றவளுடைய மௌனம் மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது. விஷயம் இவ்வளவு தூரத்திற்கு வந்து விடும் என்று அவன் நினைக்கவில்லை. ‘உடனே தன்னுடன் வராவிட்டால்,இனி என்றும் அவளை ஏற்க மாட்டேன்’ என்று கமலாக்காவை மிரட்டத் தொடங்கினான். ஆனாலும் அவள் மௌனமாய் இருந்தாள்.
கடுகடுப்பாக வீட்டிற்குத் திரும்பினான்.
ஏதோ சொல்ல வாயெடுத்த கமலக்காவின் கண்கள் கண்ணீரால் குளம் கட்டின.
பாயக்கா உடனே அவள் வாயை அடைத்தாள்.” இப்போது ஏதும் நீ சொல்ல வேண்டாம். நான் சொல்வது நடக்கும் பாரு. உன் புத்திர ரத்தினம் திரும்பவும் வருவான் பாரேன்.”
அவள் சொன்னது போலவே சங்கரன் திரும்பவும் வந்தான், இன்னும் சில பெரியவர்களையும் கூட்டிக் கொண்டு. ஹெராவதியில் செய்தி பரவ ரொம்ப நேரம் ஆகாது. சிலபேர் நடப்பதை வேடிக்கை பார்ப்பதற்கு வந்தனர்.
“உங்களுடைய பிள்ளைகள் இவ்வாறு நடந்து கொண்டால் நீங்களெல்லாம் என்னய்யா செய்வீர்கள்” என்று வந்தவர்களை பாயக்கா கேட்டபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள். பாயக்கா விடுவதாய் இல்லை.
போலீசைக் கூட்டி வருவதாய் சங்கரன் மிரட்டினான்.
“போ! போய்க் கூட்டி வா! கேஸ் முடியும் வரை கமலக்கா உயிருடன் இருந்தால் நீ அவளைக் கூட்டிப் போகலாம்.” என்று பாயக்கா வெடித்தாள்.
“நீ எதற்குக் கவலைப் படவேண்டும்? நீ எதற்கு என் அம்மாவை உன்னுடன் கூட்டி வந்தாய் என்று எனக்குத்தெரியும். அது அவளிடம் இருக்கும் தங்கத்துக்காகத்தான். அவள்மேல் உனக்கிருக்கும் பிரியம் எனக்குத் தெரியாதா என்ன?” என்றபடி பாயக்காவை சங்கரன் நிந்தித்தான்.
பாயக்காவின் கோபம் உச்சியை அடைந்தது. “இவளுக்காக நான் எதற்குக் கவலைப்படுறேன்னு உனக்குத் தெரியணும்.. அவ்வளவு தானே? அது ஏன்னா,உனக்குப் பெத்தவளை ஒழுங்காய்ப் பார்த்துக்கத் தெரியலே… தங்கத்தைப் பற்றி சொல்றே. நாளை சாக இருக்கிறவங்களுக்கு தங்கத்தைப் பற்றி என்ன ஆசை இருக்க முடியும்? அவள் அதைக் கொடுப்பதாயிருந்தால், அத்தனையையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போ.அவளை இங்கே என்னுடன் இருக்கச் சொல்லி நானொண்ணும் கட்டாயப்படுத்தலே. விருப்பமிருந்தா அவளையே கேட்டுக்கோ. வந்தாளென்றால் தாராளமாய்க் கூட்டிப் போ!”
உள்ளே கமலக்கா தேம்பிக் கொண்டிருந்தாள்.
“அவன் சொன்னதைக் கேட்டாயில்லையா? உனக்குப் போக விருப்பமில்லை என்று சொல்லி விடு. நானாச்சு உன்னைப் பார்த்துக்கொள்ள. அவனுக்கு உன்னை விட உன் தங்கத்தின் மேல்தான் குறி. உனக்கு விருப்பமிருந்தா அவற்றையெல்லாம் அவனிடம் கழற்றிக்கொடுத்து விடு. எதைப் பார்த்து உனக்கு பயம்? சாப்பாட்டுக்காக அவனை நீ எதிர்பார்க்க வேண்டாம். அதை அவன் புரிந்து கொள்ளட்டும். பெற்றோரைப் பார்த்துக் கொள்ளாவிட்டால் என்னாகும் என்று மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும். அவர்கள் மாறா விட்டால், அவர்களை வீட்டைவிட்டு வெளியே தள்ளு. வீடு உன்பேரில்தானே இருக்கிறது? எதற்காக இப்படி உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாய்?”
வீட்டுக்கு வெளியில் நின்ற கூட்டம், மகனின் கோபம், பாயக்காவின் நிர்பந்தம் எல்லாம் சேர்ந்து கமலக்காவைக் குழப்பமான உணர்ச்சிக்குத் தள்ளியது. சற்று முன் அவள் காட்டிய தைரியம் மெல்லக் கரைந்து விட்டது. கண்ணையும் மூக்கையும் துடைத்தவாறே கமலக்கா தேம்பினாள். “இல்லை பாயக்கா! இதையெல்லாம் என்னால் தாங்க முடியவில்லை.என்னைத் தனியே விடு பாயக்கா….கடைசியில் பார்க்கப் போனால் அவன் என் ரத்தமும் சதையும் தானே? அவர்கள் என்னைக் கொடுமைப்படுத்தினால் படுத்திவிட்டுப் போகட்டும்… அவர்கள் ஊற்றும் கஞ்சியைக் குடித்து வாழ்ந்துவிட்டுப் போகிறேன்… என்னை விட்டுவிடு பாயக்கா.”
வெளியே இருந்தவர்கள் கமலக்கா வெளியே வருவதற்குக் காத்திருந்தார்கள்.
(நம்ம படிகே நாவு .. கன்னட சிறுகதை.
தமிழாக்கம்: மோகன்ஜி, ஹைதராபாத் ([email protected])