சாமுவேல் காட்சன் அவர்கள் மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை சாலையில் இருக்கும் பனை மரங்களைப் பற்றியும் அதன் தொடர்புடைய மக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் விரிவாகவும் ஆழமாகவும் தன்னுடைய பனைமரச் சாலை என்ற பயண நூலில் எழுதி இருப்பார். உண்மையில் அந்த புத்தகத்தை படிக்கும் பொழுது ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு நாவலை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி அந்த புத்தகத்தை வடிவமைத்து இருப்பது போல சுவாரசியமாக இருக்கும். ஒரு பனைமரம் இப்படியெல்லாம் ஒரு மனிதனின் வாழ்வில் உயிர் துடிப்பாக இருக்க முடியுமா என்று அந்த புத்தகத்தை படிக்கும் பொழுது யோசித்தது உண்டு.
அப்படி சமீபத்தில் பனை மரத்தைப் பற்றி படித்து வியப்பில் ஆழ்த்திய புத்தகம் பேரறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய “பனை உறை தெய்வம்“. சாமுவேல் காட்சன் மக்களின் வாழ்வியலோடு பனை எப்படி தொடர்பு கொண்டது என்று அவரது புத்தகத்தில் காட்டினார் என்றால் இவர் ஆன்மீகம் சார்ந்து கோவிலில் பனை எப்படி இருந்தது என்று விரிவாக எடுத்துச் சொல்லி விவரிக்கிறார்.
இறைவன் மணிவாசகருக்கு குருந்தமான நிழலில் காட்சியளித்தார். ஞானமே வடிவாகிய தக்ஷிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார். சுந்தரருக்கு இறைவன் மகிழ மரத்தின் கீழ் இருந்தவாறு சத்தியம் செய்ய பணிந்தார். இப்படி இறைவன், பல்வேறு மரங்களோடு தொடர்புடையதாக இருக்கிறார் என்று அவர் எடுத்துச் சொல்லி, அப்படி
பனை மரத்தை எடுத்துக்கொண்டு கோவில்களில் பனை எவ்வாறு எல்லாம் இருந்திருக்கிறது என்றும் புராணங்களோடு தொடர்புடையதாக எப்படி உருமாறி வந்திருக்கிறது என்று விரிவாக எடுத்துரைக்கிறார்.
குறிப்பாக பனைமரம், தொண்டை மண்டலத்திலும், நடு நாட்டிலும் சோழமண்டலத்திலும் பல கோவில்களில் எப்படி பனையை புனிதமாக போற்றுகிறார்கள் இன்று விவரித்து, திருப்போரூர் முருகன் ஆலயத்தில் பனை மரத்தின் அடிப்பாகம் தெய்வம் உறையும் புனிதம் உடையதாக போற்றப்படுகிறது என்றும், திருப்பத்தூர் எனப்படும் செய்யாறு ஆலயத்தில் ஞானசம்பந்தர் ஆண் பனையை பெண் பனையாக்கி குலை இனச் செய்யும் அற்புதத்தை நிகழ்த்தியதால் அங்கு கோயில் வளாகத்திலேயே பனைமரச் சிற்பமும், உயிர் மரமும் உள்ளன என்றும்,
மயூர மன்னர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் மத்திய பகுதியில் வடிக்கப்பட்ட இரண்டு அரிய சிற்பங்கள் குவாலியர் அருங்காட்சியத்திலும் போபால் அருங்காட்சியத்திலும் இடம் பெற்றுள்ளன என்றும், குவாலியர் அருங்காட்சியக சிற்பத்தில் ஒரு பனை மரமே சிவனாக வடிக்கப்பட்டுள்ளது ,அந்த பனை மரத்தின் நான்கு புறமும் உள்ள விரிந்த மட்டைகளும் முறையே தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம் என்றும் உச்சி மட்டை ஈசானமாகவும் இருக்க, கீழ் மட்டையில் இடபம் (ரிஷப வாகனம்) உள்ளது என்று விவரிக்கிறார். கோபாலில் உள்ள சிற்பத்தில் பனைமட்டைகள் நான்கு புறமும் திகழ உச்சி குறுத்து ஈசானம் காட்டி நிற்கின்றது . இந்த அறிய சிற்பங்கள் இரண்டும் பனைமரமே சதாசிவம் என்பதை காட்டும் வடிவங்களாகும் . சதுர்முகலிங்க வடிவமும் இந்த பனைமரச் சிற்பங்களும் ஒத்த தன்மையை கொண்டவைகள் ஆகும் என்றும் பனைமரத்தை தமிழ்நாட்டில் சிவமாக போற்றும் மரபு தொன்று தொட்டு இருக்கிறது என்கிறார்
மேலும் நமக்குத் தெரியும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை திருநாளில் கோவில்களில் சொக்கப்பனை என்று பனைமரத்தை நட்டி அதை எரிப்பார்கள். அதன் பெயர் சொக்கப்பனை இல்லையாம். சொக்கன் பனை என்பதாம் . திருமாலும் பிரம்மனும் தங்கள் அகங்காரத்தின் பொருட்டு சிவபெருமானின் அடிமுடி காண பிரம்மன் அன்னவடிவமெடுத்து முடியை தேடி போகிறார். விஷ்ணு, வராக உருவெடுத்து பூமியை அகழ்ந்து கீழே செல்கிறார்.இரண்டு பேருமே தோல்வியுற்று சிவனின் முன்னால் நிற்கிறார்கள். அப்போது சிவன் தீ பிழம்பாக காட்சி தருகிறார். அதன் எச்சமாகவே இன்று கார்த்திகை திருநாளில் அனைத்து சிவாலயங்களிலும் சொக்கன் பனை நிகழ்வு நடைபெறுகிறது என்று அதன் தொன்மத்தை சொல்லும் போது மனதில் சட்டென தீ சுட்டது போல இருந்தது.
இந்த புத்தகத்தில் பனை மரத்தைப் பற்றி மட்டுமே சொல்லவில்லை. இதைத்தாண்டி பல கட்டுரைகள் இருக்கின்றன. ஒரு கட்டுரையில் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில் பற்றியது. இன்று நாம் அதை சாரங்கபாணி என்றே அழைத்து வருகிறோம். ஆனால் உண்மையில் அதன் பெயர் சாரங்கபாணி அல்ல என்றும் சார்ங்கபாணி என்கிறார். சாரங்கபாணி என்றால் மான் என்பதாவும், சார்ங்கன் என்றால் வில் என்பதாவுமாம். அங்கே இறைவன் உற்சவ மூர்த்தியாக ராமனாக வில்லேந்தி நிற்கிறார், எனவே சார்ங்பாணி என்று அதனுடைய பெயர் என்று விவரிக்கிறார். ஒரே ஒரு எழுத்து மாறும்போது அதனுடைய பொருளே மாறு விடுகிறது என்று இந்த கட்டுரை படிக்கும் போது தோன்றியது.
மேலும் அந்த சார்ங்கபாணி கோவில் கோபுரம் 90 அடி நீளமும் 51 அடி அகலமும் கொண்டது என்றும் அதை சாளுவ மன்னன் திப்பதேவராயன் என்பவன் எடுத்துத்தான் என்கிறார். இதில் என்ன ஒரு விசித்திரம் என்றால் அந்த மன்னன் இசையிலும் நடனத்திலும் மிகுந்த ஈடுபாடு உடையவனாம். அவன் சமஸ்கிருதத்தில் இசையையும் நாட்டியத்தையும் பற்றி விரிவாக “தாள தீபிகா” என்ற நூலையே எழுதியுள்ளானாம். அவ்வாறு எழுதியதோடு மட்டுமல்லாமல், அந்த கோவிலில் உள்ள தான் எழுப்பிய கோபுரத்திற்கு, பக்கத்தில் உள்ள இடிக்கப்பட்ட சிவாலயத்தில் இருந்து 96 நாட்டிய கரண சிற்பங்களை இந்த கோவில் கோபுரத்தில் பதிக்கப்பட்டிருக்கிறான். அந்த 96 நாட்டிய கரண சிற்பங்களில் பெரும்பாலும் முருகனுடைய நாட்டியங்களே இடம் பெற்று இருக்கிறன என்கிறார், முருகனுக்கு இப்படி வேறு எங்குமே நடன சிற்பங்கள் இல்லை என்றும், சில சிற்பங்கள் சிவன் கணபதி உமை நாட்டிய கரண சிற்பங்கள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்.
இப்படி பலவாறாக இந்த கோவிலை பற்றி சொல்லி விவரித்துச் சென்று முடிக்கும் பொழுது மன வருத்தத்தோடு முடிக்கிறார்.கோவில் கோபுரத்தை செப்பனிட்ட அறநிலைத்துறையினர் 96 நாட்டிய கரணச் சிற்பங்களின் கீழ் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும் சிமென்ட் போட்டு பூசி அழித்துவிட்டார்கள் என்று முடிக்கிறார். மனதில் நானும் நினைத்துக் கொண்டேன் அது கோவிலை நிர்வாகம் செய்கிற அறநிலைத்துறை இல்லை, அழிக்கின்ற துறை என்று.
இப்படி இந்த புத்தகத்தில் 20க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இருக்கின்றன. பெரும்பாலும் சோழ நாட்டைப் பற்றியும் தொண்டை நாட்டை பற்றியும் அங்குள்ள கோவில்களை பற்றியும் எழுதி இருக்கிறார். சில ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன
சாமுவேல் காட்சன் ஒரு கட்டுரையில், கடற்கரையில் மூன்று பனை மரங்களை வெகு நேரம் பார்க்கிறார், அந்த பனை மரங்களால் ஈர்க்கப்பட்டு அந்த பனை மரங்களுக்கு பெயர் சூட்டுகிறார் லோகமா தேவியும் அவர்களது சகோதரிகளும் என்று. எனக்கு அந்த கட்டுரையை படித்தபோது மிகுந்த மன எழுச்சி ஏற்பட்டது. உடனே லோகமாதேவி மேடமிடம் சொன்னேன், நீங்கள் என்றும் சாஸ்வதமானவர்கள் என்று.
நான் சாலையில் கடந்து செல்லும் போது ஒரு பனைமரம் இருக்கும். தினமும் அதை பார்ப்பேன். இந்த புத்தகத்தை படித்துவிட்டு அதை பார்க்கும் போது என் பார்வையே மாறிவிட்டது.அதில் உறைந்து இருப்பது தழலாக எரியும் இறைவனா , அல்லது சாமுவேல் காட்சனா இல்லை லோகமாதேவியா!!!!….
தமிழில் “ஒரு ” என்கின்ற சொல்லுக்கு ஒன்று என்ற அர்த்தமும் உள்ளது, ஒப்பற்ற என்ற அர்த்தமும் உள்ளது .நான் நினைத்துக் கொண்டேன் பனைமரம் ஒரு மரம் அல்ல ஒப்பற்ற மரம் …..
உ.முத்துமாணிக்கம்