நாலைந்து நண்பர்கள் உற்சாகமாக வாழ்த்து அனுப்பியிருந்தார்கள்- ஷார்ஜா பயணத்துக்கு. உலகம் சுற்றும் வாலிபனாக இருக்கிறேன் என்று ஒருவர் சொன்னார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு என் வயதுதான் இருக்கும் என நினைக்கிறேன். ஆகவே பரவாயில்லை.
வரவர அருண்மொழி இல்லாமல் பயணம் செய்வது கண்களை கட்டிக்கொண்டு பயணம் செய்வதுபோல் இருக்கிறது.பயணத்தின் எல்லா இன்பங்களையும் பதற்றம் எடுத்துக்கொள்கிறது. இந்தப் பயணத்தில் அவளுக்கும் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எல்லாம் போடச்சித்தமாக இருந்தார்கள். ஆனால் அவள் அடுத்த பயண மனநிலையில் இருந்தாள். 18 நவம்பரில் எகிப்து கிளம்புகிறோம். ஆகவே வரமுடியாது என மறுத்துவிட்டாள்.
எனக்கு பலவகை சிக்கல்கள். ஏற்கனவே மலையாள மனோரமாவின் இலக்கிய விழாவுக்குச் செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து டிக்கெட் போட்டிருந்தேன். சும்மா பஸ்ஸில் போய்ப்பார்ப்போமே என பஸ்ஸில் ஏறினேன். திருவனந்தபுரம் 60 கிமீ தொலைவு. அதிகபட்சம் இரண்டரை மணிநேரம். நான் நான்கரை மணி ரயிலுக்கு ஒன்றரை மணிக்கு பஸ்ஸில் ஏறினேன். நாலேமுக்காலுக்கு கொண்டு விட்டார்கள். மழைவேறு. மனோரமா நிறுவனத்தைக் கூப்பிட்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தேன். மழையில் திரும்ப வந்தேன். திருவனந்தபுரத்தில் ஒரு பழம்பொரி- டீ சாப்பிட்டேன். அதுதான் அன்றைய நாளின் பயன்.
ஆகவே இம்முறை முன்னரே காரில் கிளம்பினேன். மிக முன்னரே சென்றுவிட்டேன். பிஸினஸ் கிளாஸுக்கு லௌஞ்ச் உண்டு. என் மாஸ்டர்கார்டுக்கும் லௌஞ்ச் உண்டு. ஆனால் மண்டையில் உறைக்கவில்லை. ஆகவே பொது இடத்தில் காத்திருந்தேன். சென்று சேர்ந்தது பதினொரு மணிக்கு. விமானம் விடியற்காலை நான்கு மணிக்கு. அதுவரை இரண்டு காபிகளின் துணையுடன் வைசேஷிகசூத்ரங்களை வாசித்தேன். மண்டைக்குள் ஸ்க்ரூ டிரைவரை போட்டு குடாய்வதுபோன்ற அனுபவம்.
விமானத்தில் ஏறியதுமே இருக்கையை படுக்கையாக்கி நீட்டி தூங்கிவிட்டேன். எதுவும் சாப்பிடவில்லை. பணிப்பெண்ணுக்கு திகைப்பு. ‘கட்டாயமாக ஒன்றும் வேண்டாமா?’ என்று இரண்டுமுறை கேட்டாள். மூன்றாம் முறை அவள் கேட்பதற்குள் நான் தூங்கி துபாயில்தான் விழித்துக்கொண்டேன்.
துபாயில் என் அறை மிகப்பெரியது. எனக்கு வெந்நீர்த்தொட்டிக் குளியல் பிடிக்கும். ஆகவே தத்துவத்தால் சிடுக்கான மண்டையை வெந்நீர்க்குளியலால் இதமாக்கிக்கொண்டேன். பெரும்பாலான பொழுதுகளில் நானே எனக்குள் பேசிக்கொண்டே இருந்தேன். அருண்மொழி கூட இல்லை என்பதை உள்மனம் ஏற்கவில்லை. ஆகவே லிப்டில் ஏறி பொத்தானை அமுக்காமல் யோசித்துக்கொண்டு நின்றிருந்தேன். என் 14 ஆவது மாடியை தவறாக அழுத்தி லிப்டிலேயே மேலும் கீழும் வந்துகொண்டிருந்தேன். சாப்பிடுவதற்கு மறந்து நள்ளிரவில் பசியை உணர்ந்து பழங்களை கேட்டேன். அங்கே இருந்த பழம் ஆப்பிள் மட்டும். ஆனால் நல்ல பேரீச்சம் பழம் தந்தார்கள்.
என்னுடன் பாலைவனத்துக்கு வந்த ஜ்யோர்ஜி கோஸ்படினோவ் (Georgi Gospodinov) மணலை அள்ளி அள்ளி போட்டு வீடியோ எடுக்கும்படி என்னிடம் கோரினார். மனைவி பாலைநில மண்ணை பார்த்ததில்லை என்றார். அவரும் முதல்முறையாகப் பார்க்கிறார் என்றார். மனைவியை ஏன் கூட்டிவரவில்லை என்றேன். அவளுக்குச் சலித்துவிட்டது என்றார்- புக்கர் பரிசு பெற்றபின் அவருக்கு ஏராளமான பயணங்கள். எங்கும் ஒரே நிலைமைதான். அவரும் சற்று சுழற்றிவிடப்பட்டவர்போலத்தான் தெரிந்தார்.
பதினொன்றாம்தேதி நான்குமணிக்கே கிளம்பி விமானநிலையம் வந்துவிட்டேன். அங்கும் லௌஞ்ச் உண்டு என்பது மண்டையில் ஏறவில்லை. என் விமானம் ஒன்பதரைக்கு. பிஸினெஸ் கிளாஸ் என்பதனால் இருபது நிமிடத்தில் கேட் வரை வந்துவிட்டேன். ஆகவே தீவிரமாகத் தத்துவத்துக்குள் நுழைந்தேன். நியாயகுசுமாஞ்சலி என்னும் நூல். அண்மையில் துப்பறியும் நாவல்போல அத்தனை உற்சாகமாக படித்த தத்துவ நூல் அது.
விமானம் அறிவிக்கப்பட்டது. பிஸினெஸ் கிளாஸ் பயணிகளை கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். அதன்பின் பிறர் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களிலும் பாதிப்பேர் ஆனபின் பணிப்பெண் என்னிடம் நான் அந்த விமானத்தில்தான் செல்லவேண்டுமா என்று கேட்டார். ஆமாம் என்றேன். அருண்மொழி உடனில்லை என்பது அப்போதுதான் உறைக்க பாய்ந்து உள்ளே நுழைந்தேன்.
லேப்டாப் வைத்திருந்த பையை மேலே போடும்போது கவனித்தேன், உள்ளே என் செல்பேசி இல்லை. பணிப்பெண்ணிடம் சொன்னேன். செல்பேசியை எடுக்க வெளியே செல்லவேண்டும் என்றேன். வெளியே செல்ல அனுமதி இல்லை, செல்பேசி அடையாளம் சொல்லுங்கள் என்றாள். அவளே வெளியே சென்று கொண்டுவந்து தந்தாள்.
நிம்மதி. அவள் எனக்கு முந்திரிப்பருப்பு, மெல்வதற்கான மிட்டாய், ஆரஞ்சு சாறு என ஏதேதோ தந்துகொண்டே இருந்தாள். நான் மது அருந்துவதில்லை என்பதை சிலமுறை உறுதி செய்துகொண்டாள். ஒருமணி நேரம் அவள் என்னை உபசரிக்க ஒத்துக்கொண்டேன். அதன்பின் தூங்கிவிட்டேன்.
திருவனந்தபுரம் வந்து நானே சுயமுயற்சியால் டாக்ஸி பதிவுசெய்து அரைத்தூக்கத்தில் நாகர்கோயில் வந்தேன். காலை ஐந்தரை மணி. அருண்மொழி லேப்டாப் பையை சோதனையிட்டபோதுதான் தெரிந்தது, என் பழைய பாஸ்போர்ட்டுகள் மூன்றை தேவைப்படலாம் என்று ஒரு சிறு பையில் போட்டு அதில் வைத்திருந்தாள். அந்த பையை காணவில்லை. எங்கோ விழுந்துவிட்டிருக்கிறது!
என்ன செய்வதென்று தெரியவில்லை. அருண்மொழி “இப்படி இருப்பாங்களா மனுஷங்க!” என்று திட்டினாள். நான் மையமாக புன்னகைபுரிந்தேன். காரில் திரும்ப திருவனந்தபுரம் சென்றேன். அங்கே விமானநிலைய அதிகாரியைச் சந்தித்து புகார் செய்தேன். அங்கே எவரும் ஒப்படைக்கவில்லை. இரண்டு எண்களை அளித்தார். தேவையென்றால் பிறகு இன்னொரு முறை அழைக்கும்படிச் சொன்னார்.
ஒருவேளை புல்மான் ஷார்ஜா விடுதியில் விட்டிருப்பேனோ? அங்கே டிசி புக்ஸ் ஜேக்கப்பை கூப்பிட்டு தேடச்சொன்னாள் அருண்மொழி. அங்கே இல்லை. இனி துபாய் விமானநிலையத்தில் கிடைத்தால்தான் உண்டு. புதிய பாஸ்போர்ட் இருக்கிறது, ஆனால் பழையது ஓர் ஆவணம், அது தேவை.
பாஸ்போர்ட் தொலைந்தால், பழையதே ஆனாலும் போலீஸில் புகார் செய்யவேண்டும். நான் காவல்நிலையம் சென்று புகார் செய்தேன். அங்கே ஓரு பெண் காவலர் அதை இணையம் வழியாக புகார் செய்யவேண்டும் என அனுப்பிவிட்டார். சைதன்யா என் பொருட்டு புகாரை பதிவுசெய்தார்.
செய்யவேண்டியதை எல்லாம் செய்துவிட்டேன். ஆகவே நிம்மதி. இனி அந்த பாஸ்போர்ட் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி. நல்லவிஷயம்தானே என அருண்மொழியிடம் சொன்னேன். “எதையாவது எடுத்து மண்டையில் போட்டிருவேன்” என்றாள்.
அப்போதெல்லாம் நான் ஒரு புன்னகையை மலரவிடுவேன். முப்பதாண்டுகளாக அதற்கு பயிற்சி எடுத்து வருகிறேன்.