கல்வி நம்மை எல்லா ஒடுக்குமுறைகளில் இருந்தும் விடுவிக்கும் என்று யாராவது என்னிடம் சொன்னால் நான் சற்று அவநம்பிக்கையுடன் அவரைப் பார்ப்பேன். கல்வியால் அதிகபட்சம் சாதிக்க முடிந்தது பொருளாதார சுதந்திரமாகவே இருக்கிறது. அரிதாக ஒருசிலர்தான் கல்வியால் சிந்தனையையும் சுதந்திரமானதாக மாற்றிக் கொள்ள முடிகிறது. உண்மையை நோக்கித் தீவிரமாகப் பயணிக்கும் குணம், எதற்கும் விசுவாசமோ நன்றியோ பாராட்டாமல் கல்வியால் விளைந்த ஆய்வுநோக்குடன் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை இணைத்து விஷயங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலுடன் வாழ்நாள் முழுக்கப் பயணிப்பவர்கள் மிகச் சிலரே. ராஜ் கௌதமன் அத்தகையவர். அவருடைய சுயசரிதைத் தன்மையுடைய நாவலான ‘காலச்சுமை’ என்ற படைப்பைத்தான் நான் முதலில் வாசித்தேன். காலச்சுமை வழியாக நாம் அறிந்து கொள்ளும் சிலுவைராஜ் என்ற கல்லூரிப் பேராசிரியர் ஆகிவந்த கதையை காலச்சுமைக்கு முன்பு வந்த நாவலான சிலுவைராஜ் சரித்திரம் பேசியது. ராஜ் கௌதமனுக்கு புனைவெழுத்தாளராக இப்படி ஒரு முகம் இருக்கிறது. ஆனால் ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், தமிழ்ச்சமூகமும் ஆரம்பகட்ட முதலாளியமும், கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக, புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ் போன்ற நூல்களை எழுதிய ராஜ் கௌதமன் வேறொருவர். இருவருக்கும் இடையிலான இணைப்பை புரிந்து கொள்வதன் வழியாகவே ராஜ் கௌதமனின் ஆகிருதியை புரிந்து கொள்ள முடியும்.
சிலுவைராஜ் சரித்திரம் நாவலை வாசித்த ஒரு நண்பர் – எண்பதுகளில் பிறந்தவர் – இப்படிச் சொன்னார். ‘ஏறத்தாழ இது என் வாழ்க்கையும்தான்’. அவர் தலித் அல்ல. ஆனால் இரண்டாயிரத்துக்கு முன்புவரை பெரும் பணக்காரர்கள் தவிர பிறருடைய வாழ்க்கைமுறை ஒன்றாகவே இருந்திருக்கும். சிலுவைராஜுடைய வாழ்வுடன் அவருக்கு நாற்பது வருடம் கழித்துப் பிறந்த என்னாலும் ஒற்றுமைகளைக் காண முடிந்திருக்கிறது. அப்படியெனில் ராஜ்கௌதமனின் நாவல்களை வயதடைதல் வகைமையிலும் தன்வரலாற்றுப்புனைவு என்ற வகையிலும் வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடலாமா? இயலாது என்பதுதான் ராஜ் கௌதமனை முக்கியமான புனைவெழுத்தாளராக மாற்றுகிறது. பொதுவான பால்ய அனுபவங்களை ஊடறுத்துச் செல்லும் ‘தலித்’ அனுபவங்கள் ராஜ் கௌதமனின் நாவல்களில் இடம்பெறுகின்றன. ஒரே மாதிரியாக வாழ்க்கையை வாழும் இரண்டு சிறுவர்கள். ஒரேயொரு வேறுபாடு. அதில் ஒருவனுக்கு மட்டும் தினமும் ஐந்து சாட்டையடி கிடைக்கும். இந்த நுணுக்கத்தைத்தான் ராஜ் கௌதமனின் நாவல்கள் முன்வைக்கின்றன. பெரும்போக்காகப் பார்த்தால் தன்னுடைய சொந்தக் கதையை பகடியுடன் ராஜ் கௌதமன் முன்வைக்கிறார் என்றே தோன்றும். அது பகடி அல்ல. விலகல். இதே விலகலைத்தான் ராஜ் கௌதமனின் ஆய்வு நூல்களிலும் நாம் வேறொரு வகையில் பார்க்கிறோம். இராமலிங்க வள்ளலாரை பற்றிய நூலில் தலைப்பில் அவரை சி.இராமலிங்கம் என்று குறிப்பிடுகிறார். அயோத்திதாசர் மாபெரும் தலித் அடையாளமாக முன்னெடுக்கப்பட்ட காலத்தில் க.அயோத்திதாசர் ஆய்வுகள் என்று தன் நூலுக்குத் தலைப்பினை வைத்து அயோத்திதாசரை கறாராக மதிப்பிட முனைகிறார். தமிழ் இலக்கியத்தில் செயல்பட்ட ஒரு தீவிரமான ‘தலித் தன்னிலை’ என்று ராஜ் கௌதமனை சொல்லலாம். ஒரு முன்னுதாரணமான தன்னிலை என்றும். தலித் நோக்கு என்பது இந்திய சமூகத்தின் மீது அன்போ வெறுப்போ கொள்ளத் தேவையில்லை. அறிவின் தரப்பில் நிற்கும் யாருக்கும் இந்திய சமூகத்தை விலகிநின்று மதிப்பிடும் சரியான பார்வை கிடைத்துவிடும். அம்பேத்கர் அப்படித்தான் இந்தியாவை மதிப்பிட்டார். ராஜ் கௌதமன் அப்படித்தான் தமிழ்ச் சமூகத்தை மதிப்பிட்டார். ராஜ் கௌதமனை எண்ணும்போது என் முதல் வரியை மாற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. ஆம் கல்வி நம்மை விடுவிக்கும். அறிவாளுமைக்கு என் அஞ்சலி.
சுரேஷ் பிரதீப்