தமிழ் எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான பேரா.ராஜ் கௌதமன் இன்று (13 நவம்பர் 2024) காலை காலமானார்.
ராஜ் கௌதமன் 1987 ல் எனக்கு நேரடி அறிமுகம், சுந்தர ராமசாமி இல்லத்தில். அவர் அவ்வாண்டு பாவண்ணனின் முள் என்னும் சிறுகதைத் தொகுதி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு நான் அவருக்கு ஒரு கடிதம் போட்டிருந்தேன். சுந்தர ராமசாமி இல்லத்தில் அவரைச் சந்தித்தபோது அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம். அதன்பின் அவர் தீவிரமாக நிறப்பிரிகை சார்ந்து செயல்பட்டு பின்நவீனத்துவ – கலகக் கருத்துக்களை எழுதலானார். அவை இலக்கியநோக்கில் பொருத்தமற்றவை என நான் எழுதினேன். ஒரு விவாதம் கடிதங்களிலும் அச்சிலும் நிகழ்ந்தது.
மீண்டும் அவருடனான தொடர்பு சிலுவைராஜ் சரித்திரம் வெளியானபோது நிகழ்ந்தது. தமிழினி வெளியிட்ட அந்நாவல் தமிழின் நல்ல தன்வரலாற்றுப் படைப்புகளில் ஒன்று என்பது என் எண்ணம். அதைப்பற்றி எழுதினேன். அவருக்குக் கடிதமும் எழுதியிருந்தேன்.
2013ல் என் வெள்ளை யானை நாவலை அலெக்ஸ் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பின் பிழைகளைக் களைந்து செப்பனிட்டு அளித்தார் ராஜ்கௌதமன்.
2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ராஜ் கௌதமனுக்கு வழங்கப்பட்டது. அவரைப் பற்றி கே.பி. வினோத் இயக்கிய பாட்டும் தொகையும் என்னும் ஆவணப்படமும், பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல் என்னும் நூலும் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து உரையாடலில் இருந்தோம். சிலகாலமாக உடல்நலம் நலிந்திருந்தார்
அஞ்சலி