அனல் காற்று (குறுநாவல்) : 14

நான் சந்திராவைப் புரட்டினேன். அவள் கழுத்திலும் தோள்களிலும் ரத்தம் ஈரமாக இருந்தாலும் காயம் ஏதும் இருக்கவில்லை. அவள் கையைப் பிடித்த போதுதான் இடது மணிக்கட்டு வெட்டுப் பட்டிருப்பதைக் கண்டேன். காயத்திலிருந்து ரத்தம் மெல்லிய குமிழிகளாக வெளிவந்து கொண்டிருந்தது. அதன் மெல்லிய வெம்மை தலையணையையும் மெத்தையையும் பச்சைச் சதைத்துண்டுகள் போல ஆக்கியது.

சந்திராவின் மயக்கம் ரத்த இழப்பினால் அல்ல என்று தெரிந்தது. அவள் இதயம் நன்றாகவே துடிப்பது கழுத்தசைவில் தெரிந்தது. நான் அவள் காயத்தைக் கையால் இறுகப்பற்றியபடி சுற்று முற்றும் பார்த்தேன். மேஜைமேல் கூந்தலைக் கட்டும் எலாஸ்டிக் நாடா இருந்தது. அதை எடுத்து காயத்தை இறுக்கிக் கட்டினேன். என் கையெல்லாம் ரத்தம் கொழகொழத்தது.

அவள் ஏதாவது மாத்திரை சாப்பிட்டிருப்பாள் என்று தோன்றியது. உலர்ந்த உதடுகள் சற்றே திறந்து வெண்பற்கள் தெரிந்தன. வாயை முகர்ந்து பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. அவளை அப்படியே தூக்கி தோளிலிட்டு பாத்ரூமுக்குக் கொண்டு சென்றேன். பாத்ரூம் முழுக்க ரத்தம். அதிர்ந்து திரும்பிப் பார்த்தபின் என் கால்களைப் பார்த்தேன். என் கால்களில் இருந்து ரத்தம் வழிந்தது. கண்ணாடிச் சில்லுகளில் அறுத்துக் கொண்டிருக்கிறேன்.

அவளை பாத்ரூம் தரையில் படுக்கச் செய்தேன். அவள் குழைந்து கிடந்தாள். டாய்லட் அருகே கழுவிக் கொள்ளும் குழாய் இருந்தது. அதை எடுத்து உதறி அதன் முகப்பை உடைத்துவிட்டு அந்தக்குழாயை அவள் வாய்க்குள் விட்டேன். உதடுகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தண்ணீர் உள்ளே பீய்ச்சிடச் செய்தேன். அவள் திமிறி குழைந்தாள். நீர் அவளுக்குள் பீரிட்டு செல்ல அவள் அதை குரல்வளை அசைய மடக் மடக் என்று குடித்தாள்

அவள் வயிறு உப்பியதும் அவளை படுக்கச் செய்து வயிற்றை வேகமாக அழுத்தினேன். குபுக் என்று வாந்தியாக குடித்த தண்ணீர் வெளிவந்தது. அதில் மாத்திரைகள் கலந்திருந்தன. பல்வேரு மாத்திரைகளை சேர்த்து தின்றிருக்கிறாள். மீண்டும் குழாயை அவள் வாய்க்குள் செலுத்தி நீரை புகட்டினேன். மூன்றுமுறை வாந்தி எடுக்கச் செய்தபோது வெறும் நீர் வெளிவந்தது

எழுந்து பெருமூச்சுடன் அவளைப் பார்த்து நின்றேன். நனைந்த நைட்டியை அவள் தலைவழியாகக் கழற்றினேன். உள்ளாடைகள் மட்டும் அணிந்த அவளை மெல்ல தூக்கி வெளியே கொண்டுவந்து படுக்கையில் படுக்கச் செய்தேன். அப்போதுதான் படுக்கையின் ரத்தத்தில் அவள் கிடப்பதைக் கண்டேன். மெல்ல அவள் கீழிருந்து ரத்தம் தோய்ந்த தலையணையை எடுத்தேன்

அவள் கண்விழித்தாள். என்னை அதிர்ச்சியுடன் பார்த்து ”அருண்!” என்றாள். பின்பு மெல்ல புன்னகை புரிந்தபடி கண்ணை மூடிக்கோண்டு ”அருண் ”என்றாள்

நான் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். அவள் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கன்னத்தைப் பொத்தியபடி என்னைப் பார்த்தாள். ”ஏண்டி, என்னை தூக்கில ஏத்தணும்னு நெனைக்கிறியா?”

அவள் நம்பாமல் என்னைப்பார்த்து ”அருண் நீயா?” என்றாள் பின்னர் விழித்துக் கொண்டு ”அருண் நீ எப்டி உள்ள வந்தே?” என்றபின் கதவைப் பார்த்தாள்

”ஜன்னலை உடைச்சு வந்தேன்… நீ என்ன பண்ணினே? சொல்லுடீ… என்ன காரியம் பண்ணினே…” அவள் தோளைப் பிடித்து உலுக்கினேன்.

அவள் உடைந்து அழுதபடி மெத்தையில் சரிந்தாள் ”என்னால் முடியல்லை அருண்…. என்னால முடியல்லை… ப்ளீஸ்.. என்னை சாகக்கூட விடமாட்டியா? என்னால ஒரு செகண்ட் கூட உன்னை மறந்துட்டு இருக்க முடியல்லை… தீயில நின்னு எரிஞ்சுட்டே இருக்கிற மாதிரி இருக்கு… என்னை விட்டிரு”

நான் அவளை விட்டுவிட்டு எழுந்து நின்றேன். அவள் முகத்தை அந்த ரத்தத் தலையணையில் போட்டு தேய்த்தாள். நான் ”எழுந்திரு” என்று அந்த பெட்ஷீட்டைப் பிடித்து இழுத்தேன்.

சந்திரா எழுந்து என் கையைப் பிடித்து ஆவேசமாக இழுத்து தன் மீது என்னைப் போட்டுக் கொண்டாள். நான் எழ முயல்வதற்குள் என்னை இறுக அணைத்து முத்தமிட ஆரம்பித்தாள்

”நோ.. நோ சந்திரா…”

”ஐ வில் டை..! ஐ வில் டை!” என்று காய்ச்சல் போல பிதற்றியபடி அவள் என்னை முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். அவள் முகம் ரத்தம் தோய்ந்து செக்கச் சிவப்பாக இருந்தது. ஏதோ விசித்திரமான மோகினிப் பேய்போல. வெறித்த நீர்ப்படலம் பரவிய கண்கள், மந்திரம் போல ஏதோ ஒலியிலாமல் சொல்லிய சூடான உதடுகள், அவிழ்ந்து தலையணைமேல் பரவிய கரிய நீள்கூந்தல்…. மோகினி…

என் முதுகு சிலிர்த்தது. இரு கைகளையும் இருபக்கமும் ஊன்றி எழ முயன்றபோது அவள் தன் கால்களாலும் என்னைப் பின்னிக் கொண்டாள். அவள் மென்மையான உடல்மேல் நான் அமிழ்ந்தேன். என் காமம் விழித்துக் கொண்டது. விபரீதங்களில் மட்டுமே எழும் காமம் ஒன்று ஆணுக்கு உண்டு சுசி….

வலுவான நீரோட்டம் கொண்ட ஒரு ஓடை. வழவழக்கும் மலைப்பாம்பு. பற்றிச்சூழ்ந்து கொள்ளும் தீ. அவள் தோள்களும் கழுத்தும் மார்புகளும் எல்லாம் ரத்தம். அவள் கையை எடுத்தபோது மணிக்கட்டின் கட்டு அவிழ்ந்து ரத்தம் மணிகள் போலச் சிதறியது. நான் ”இரு ”என்று அவள் கையைப் பிடித்தேன் ”ம்ம்ம்”என்ற உறுமலுடன் அவள் என்னை விலக்கி இறுகப் பிடித்துக் கொண்டாள்

நான் அவள் கண்களைப் பார்த்தேன். அச்சம் குளிர்ந்த நீர் போல என் மீது கொட்டியது அவளை மூர்க்கமாக உதறி எழுந்து கொண்டேன். அவள் மெத்தையில் மல்லாந்து விழுந்து பாம்பு போல் நெளிந்து எழுந்து என்னை நோக்கி கை நீட்டி ”அருண் ப்ளீஸ் ப்ளீஸ்” என்றாள்

என் எல்லைகள் மறைந்தன. நான் பாய்ந்து அவளை அணைத்து அவள் உடல்மேல் கவிழ்ந்தேன். அவளுடைய ரத்தம் தோய்ந்த தோள்களில் கன்னங்களில் கழுத்தில் முத்தமிட்டேன். ரத்ததின் சிவப்புக்கு ஈடு இணையே இல்லை. எரியும் சிவப்பு. கொதிக்கும் சிவப்பு. சிவப்பு செக்கச் சிவந்த தீயில் இருவரும் சேர்ந்து எரிந்தோம். ஒரு கருப்பைக்குள் இரு உதிரக்குழந்தைகள் பின்னிப் பிணைந்து கொள்வதுபோல…

பின்பு நான் புரண்டு படுத்தேன். நாவால் என் உதடுகளை நக்கினேன். உப்புவீச்சம். திரும்பி அவளைப் பார்த்தேன். புன்னகையுடன் ஒருக்களித்து ”என்ன?” என்றாள்

”ரத்தம்”

”ருசியா இருக்கா?”

நான் அவளையே பார்த்தேன். ரத்தம் உலர்ந்த கன்னங்கள், தோள்கள்… அவள் மார்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அழுந்தியிருந்தன. அவளுடைய சிரிப்பில் மெல்லிய பித்து இருந்தது.

”பிடிச்சிருக்கா?” என்றாள்

நான் கண்களை மூடினேன். அவள் புரண்டு என்னருகே வந்து என் மீது கையைப் போட்டு ரகசியக்குரலில் ”பிடிச்சிருந்தா அப்டியே என்னை சாப்பிட்டிரு… மொத்த ரத்தத்தையும் குடிச்சிரு… ஐ யம் ரெடி ” என்றாள்.

நான் எழுந்து போர்வையை இடுப்புக்குக் கட்டிக்கொண்டு எழுந்து பாத்ரூமுக்குச் சென்றேன். உடலெங்கும் களைப்பாக இருந்தது. கால்கள் என் எடையை தாங்க முடியாமல் தள்ளாடின.

கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். என் உடலெங்கும் ரத்தம். அப்போதுதான் கருப்பையில் இருந்து வெளிவந்த குழந்தைபோல இருந்தேன். ஷவரை திறந்து விட்டுக்கொண்டேன். என் உடலை நீர் கழுவி செந்நிறமாக ஓடியது. என்னில் இருந்து ஓடும் அந்த செந்நிறப் பிரவாகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

டவல் ஒன்றை மார்புக்குக் கட்டியபடி சந்திரா வந்து பாத்ரூம் வாசலில் நின்றாள். தரையைப் பார்த்து ”எவ்ளவு ரத்தம்?” என்றாள்.

நான் பேசாமல் அவளைத் தாண்டி வெளியே சென்றேன். ஈர உடலுடன் ஜன்னல் வழியாக நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

சந்திரா ஈரமாக வெளிவந்தாள். ”அருண் நான் என் கையை மறுபடியும் கெட்டியா கட்டிட்டேன்” என்றாள். ”இப்ப நோ பிராப்ளம்…”

”ம்ம்?” என்றேன்

அவள் படுக்கை விரிப்பை இழுத்து எடுத்தாள். தலையணையுடன் அதை சுருட்டி அறை ஓரத்தில் போட்டபின் வெறும் மெத்தைமேல் ஏறிப்படுத்துக் கொண்டாள். அருகே இருந்த கூஜாவிலிருந்து நீர் சரித்து கண்ணாடித்தம்ளரை நிரப்பி அதைக் குடித்தாள்

”அருண்”

”ம்ம்”

”இதுமாதிரி எனக்கு இருந்ததே இல்லை…. எனக்கு ஒண்ணுமே ஞாபகம் இல்லை… மின்னல் மின்னலா… சுவரெல்லாம் அப்டியே திரைச்சீலை நெளியறது மாதிரி…. ஒரு செகண்ட் செத்திட்டேன்னே நெனைச்சுட்டேன் ”

என் மௌனம் அவளை நிம்மதியிழக்கச் செய்தது. ”அருண்”

”ம்ம்’

”ஏன் பேசமாடேங்கிறே?”

”சொல்லு”

”என்னை வெறுக்கிறியா?”

நான் தோளைக்குலுக்கினேன்

”எனக்கு எல்லாம் தெரியும் அருண்… உனக்கும் எனக்கும் ஒரு பொருத்தமும் இல்லை. நாம சேரவே முடியாது… உலகத்துக்கு முன்னாடி போகவே முடியாது. நானும் உன்னை விட்டுரணும் அப்பதான் உனக்கு ஒரு லைஃப் இருக்கும்னுதான் நெனைக்கிறேன்… எத்தனயோ வாட்டி உன்னை விட்டுரணும்னு நினைப்பேன்… ஆனா முடியறதில்லை. நீ இல்லாம நான் என்ன ஆவேன்னு நெனைச்சாலே என் மனசு பொங்க ஆரம்பிச்சுடுது… அதான்”

நீ நிறைந்த கண்களுடன் ”அதான் அருண்…என்னால முடியல்லை… நான் செத்தாலொழிய உனக்கு நிம்மதி இல்லை… அதனாலதான் அப்டி முடிவுசெஞ்சேன்…”

நான் பெருமூச்சுவிட்டேன்.

”நான் முட்டாத்தனம் பண்ணிட்டேன் அருண்… செத்திருந்தா என்ன ஆகியிருக்கும்… எல்லாமே ஊர் சிரிச்சிருக்கும். அதைவிட நவீன் என்ன ஆகியிருப்பான்… நெனைக்கவே பயங்கரமா இருக்கு… என்ன முட்டாள்தனம்.. சே…”

”உண்மைதான்… நீ அவனை மறந்துட்டே” என்றேன்.

அவள் முகம் கறுத்தது பேசாமல் சுவரைப் பார்த்தாள். பின்பி திரும்பி என்னிடம் ”ஆனா அப்ப எனக்கு அதைவிட வேற வழியே இல்லேன்னுதான் பட்டுது. யப்பா என்ன ஒரு அவஸ்தை… சொன்னேன்ல தீயில எரியிற மாதிரி… அப்டி ஒரு வலி துக்கம் ஆங்காரம்…. அருண் நான் என் லைஃப்ல அப்டி ஒரு உச்சகட்ட துக்கத்தை அனுபவிச்சதே இல்லை” என்றாள்.

அவள் மெல்ல புன்னகைத்தபடி ”அதே மாதிரி இப்பமாதிரி உச்சகட்ட சந்தோஷத்தையும் அனுபவிச்சதில்லை… துக்கம் அதுக்கப்றம் சந்தோஷம் எல்லாமே மலைமாதிரி பிரம்மாண்டமா ஆயிட்டுது.. நெனைச்சா ரெண்டுமே கனவுமாதிரி இருக்கு…”

”எனக்கும் அப்டித்தான்” என்றேன். ”படிப்படியா மலை மேலே ஏறி உச்சிக்கு வந்தாச்சு, இனிமே ஏற படியே இல்லேன்னு படுது”

அவள் சந்தேகமாக ஏதாவது கேட்பாள் என்று நான் எதிர்பார்த்தேன்.

அவள் பெருமூச்சுடன் ”ஆமா அருண்… நானும் எல்லாத்தையும் பாத்தாச்சுன்னு தொணுது. இனிமே லைஃப்·ப்ல எதுவுமே முக்கியமில்லை. இனி எதுக்காகவும் நான் அழப்போறதில்லை. எதையும் எதிர்பார்த்து தவிக்கப்போறதும் இல்லை…. நான் எல்லாத்தையும் கடந்து வந்திட்டேன் அருண்.. புதுசா பிறந்திட்டேன்… தேங்க் யூ..எல்லாம் உன்னாலதான்… தேங்க் யூ”

அவள் கையை நீட்டினாள். நான் அருகே சென்றதும் என்னை அணைத்து மெல்ல முத்தமிட்டாள். நான் அவளை அணைத்துக் கொண்டேன். அவளை மெல்ல முத்தமிட்டேன்.

சுசி, அப்போது அந்த உணர்வை அடைந்தேன். ஆம் அந்த உறவு அதன் முடிவை அடைந்து விட்டது. இனி அவள் எனக்குத் தேவை இல்லை. நான் நினைத்தால்கூட அந்த உறவை என்னால் நீடிக்க முடியாது. முடிந்துவிட்டது. அந்த வழிந்தோடும் ரத்தம் வழியாக நான் எல்லாம் கழுவப்பட்டுவிட்டது.

சந்திரா படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின்பு பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்தேன். என்னை அறியாமலேயே தூங்கிவிட்டேன்.

அதிகாலையில் வெளியே அழைப்பு மணி ஒலித்தது. மீண்டும் மீண்டும் விடாமல் ஒலித்தது. நான் எழுந்து வெளியே பார்த்தேன். வானம் இருண்டுதான் இருந்தது. அதற்குள் சந்திரா எழுந்துவிட்டாள்.

”ஐயோ” என்று அவள் தன் உடைகளை நோக்கி ஓடினாள். அதற்குள் வெளியே நவீன் கதவைத் திறக்கும் ஒலி. மறுகணமே எங்கள் அறைக்கதவு தட்டப்பட்டது

சுசி உன்னுடைய வெறிகொண்ட குரல். ”அருண் கதவைத்திறங்க.. அருண்.. தெறங்க கதவை… நீங்க உள்ள இருக்கிறது எனக்குத் தெரியும்… தெறங்க கதவை”

சந்திரா சேலையை அரக்கப் பரக்க சுற்றிக்கொண்டாள். நான் கதவைத் திறக்கப் போனேன்.

சந்திரா என் கைகளைப் பற்றிக் கொண்டாள். ”நோ” என்றாள்

நான் அவளை தள்ளி தாழில் கையை வைத்தேன்

வெளியே நீ கதவை ஓங்கி உதைத்தாய், அடித்தாய். உன் குரல் கதறல் போல ஒலித்தது ”கதவைத்திறங்க அருண்… அருண்.. திறங்க… ஐ ஸே ஓபன்…”

சந்திரா என் கைகளை மிண்டும் பிடித்தாள். ”நோ அருண்… நோ… ப்ளீஸ்”

நான் அவளை உந்தி தள்ளினேன் ”போ… அந்தப்பக்கம்” என்று பல்லிடுக்கால் சீறினேன். சந்திரா சுவரோரமாக ஒண்டி தலையில் இரும்புக்கம்பியால் அடிவாங்கியவள் போல கைகளால் முகத்தைப்பொத்தி தலைகுனிந்து நின்றாள். அவள் உடம்பு நடுங்கியது

நான் கதவை நிதானமாக திறந்தேன். வெளியே நீ நின்றிருந்தாய். உன் கண்களில் கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது, உன் உடல் பதறுவதைக் கண்டேன்.

”சுசி” என்றேன்

”டோண்ட் ஸே மை நேம் யூ கிரீப்…” என்று கிரீச்சிட்டாய். மூச்சுவாங்க உடம்பே அதில் அலைபாய கைநீட்டிச் சொன்னாய். ”என் கண்ணாலயே பாக்கலாம்னுதான் வந்தேன். அப்பதான் உன் மேலே என் மனசில உள்ள ஆசை அழியும்… இல்லாட்டி என்னால வாழ முடியாது. பாத்துட்டேன்… நான் செத்தாச்சு அருண்… அவ்ளவுதான்.. வர்ரேன்”

”சுசி சொல்றதைக் கேள்”

நீ என் கையை தட்டி விட்டு அதேவேகத்தில் வெளியே சென்றாய். நான் நவீனின் பிரமித்த முகத்தைப் பார்த்தேன். என்னால் அவனை ஏறிட்டுப்பார்க்க முடியவில்லை. சந்திரா அப்படியே தரையிலமர்ந்து முகத்தை முழங்காலில் வைத்துக்கொண்டு உடலை முடிந்தவரை குறுக்கிக்கொண்டாள்.

கதவுக்கு அப்பால் இருந்து ராஜம்மா கிழவியின் முகம் எட்டிப் பார்த்தது. மெல்ல உள்ளே வந்து ”நீயே பாத்துட்டியா தம்பி? பகலிலே நடந்துண்டிருந்தது.. துஷ்டன் இப்ப ராத்திரியிலேயும் வர ஆரம்பிச்சிட்டானா? அது யாரு பொண்ணு?”

நவீன் நிதானமான குரலில் ”பாட்டி, இது எங்க குடும்ப விஷயம். நீங்க உங்க வீட்டுக்குப்போய் வேலையப் பாருங்க” என்றான்

”நல்லாருக்குடா இதுவா குடும்ப விஷயம்? கண்டவன்லாம் வீட்டுக்கு வரான்”

”அதைப்பத்தி கவலைப்படவேண்டியது எங்கப்பா… அதுக்கப்றம் நான்… உங்களுக்கு என்ன? பேசாம போங்க.. இல்லேன்ன்னா மரியாத கெட்டிரும்… ம்ம்ம்” நவீனின் குரல் போலவே இல்லை. அழுத்தமான ஆண்மகனின் குரல்.

கிழவி ”நல்ல குடும்பம்டா சாமி” என்று வெளியே சென்றாள்

நவீன் சட்டென்று திரும்பி உள்ளே போய்விட்டான். பிரமிப்புடன் நிமிர்ந்து அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் சந்திரா. அவள் கண்களைப் பார்த்தேன். அதிலிருந்த வெறிப்பு எனக்கு அச்சமளித்தது.

நான் என் உடைகளை அணிந்து கொண்டேன். செருப்பைப் போட்டேன் ”போய்ட்டு வரேன் சந்திரா”

அவள் என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை

நான் வெளியே வந்து டாக்ஸி ஒன்றைப் பிடித்து வேகமாக என் வீட்டுக்கு வந்தேன். வாசலிலேயே அம்மா பதற்றமாக நின்றிருந்தாள் அருகே சுபா.

அம்மா என்னை நோக்கி ஓடிவந்தாள். ”டேய் என்னடா ? என்னடா ஆச்சு? இப்பதான் ஸ்கூட்டரிலே கெளம்பிபோனா… லண்டனுக்கே போறேன்னு சொன்னாடா.. என்னடா ? எங்கடா போயிருந்தே சண்டாளப்பாவி… டேய் அந்த தட்டுவாணி– ”என்று நிறுத்திவிட்டு சுபாவின் ”உள்ள போடீ” என்றாள்

நான் மேற்கொண்டு பேசாமல் உள்ளே ஓடினேன். அம்மா என் பின்னாலேயே வந்தாள். கார்ச்சாவியை எடுத்து என் காருக்குள் புகுந்து அதை கிளப்பி சாலையில் அதிவேகமாக சீறிச் சென்றேன். உன்னை வழியெங்கும் தேடினேன்.

விமான நிலைய வாசலில் காரை நிறுத்திவிட்டு ஓடி உள்ளே நுழைந்தேன். கவுண்டரிலேயே டிக்கெட் வாங்கிவிட்டு நீ உள்ளே சென்றிருந்தாய். நான் உள்ளே நுழையும்போது பயணிகள் விமானத்துக்குள் செல்ல ஆரம்பித்திருந்தார்கள். கடைசியில் நீ நிற்பதைக் கண்டேன்.

கதவுகளைத் திறந்து திறந்து உன்னை நோக்கி ஓடி வந்தேன். அதற்குள் அடுத்த காத்திருப்பு அறைக்கு நீ சென்றுவிட்டிருந்தாய். கண்ணாடிக் கதவுகளுக்கு இப்பால் நின்று நான் ஒலியில்லாமல் கதறினேன்.

சுசி, ஒரு கணம் நீ என்னைப் பார்த்தாய். உன் கண்களின் சுருக்கத்தில் கசப்பையும் குரோதத்தையும் பார்த்தேன். சுசி உன் முகத்தில் ஒருபோதும் அவை வருமென நான் எண்ணியதில்லை. உன் சிறிய உதடுகள் லேசாக சுழித்தன. பின்பு நீ கண்ணாடிக் கதவுகள் வழியாக திரும்பிப் பாராமல் சென்று மறைந்தாய்.

கண்ணாடிக் கதவுகளின் அசைவுகள் உருவாக்கிய அலைகளில் உன் பிம்பம் மிதந்து மிதந்து ஒன்று பலவாகப் பெருகிப்பரவி ஒவ்வொன்றும் என்முன்னால் இருந்து விலகி விலகிச் செல்வதை கண்டேன் சுசி. அந்த குளிர்ந்த முன்னிரவின் தனிமையில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட கருவிபோல முற்றிலும் செயலிழந்தவனாக நின்று மஞ்சள் சுடிதாரின் கடைசித் திவலை அமிழும் உன் கடைசிப் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

(மேலும்)
முந்தைய கட்டுரைபாஸ்கர் சக்தி
அடுத்த கட்டுரைஇசை:ஒரு கடிதம்