டிசி புக்ஸ் என்னுடைய ஒரே ஒரு சிறு நூலைத்தான் வெளியிட்டிருக்கிறது- மாடன் மோட்சம். அது சிறுகதை. அதை சிறு நாவலாக பின்னொட்டு முன்னொட்டுகளுடன் வெளியிட்டு ஆண்டுக்கு லட்சரூபாய் ராயல்டி தருகிறார்கள். டிசி புக்ஸ் சார்பில் என்னை தொடர்புகொண்டு ஷார்ஜா புத்தகவிழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள்.
ஷார்ஜா புத்தகவிழா ஷார்ஜா அரசு நடத்துவது. நான் அரசு விருந்தினராக திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பர் 8 அதிகாலை கிளம்பி காலையில் துபாய் சென்று சேர்ந்தேன். இங்கிருந்தே பிஸினஸ் கிளாஸ் உபசரிப்புகள். அங்கே உள்ளேயே அதிகாரபூர்வமாக எதிர்கொண்டு அழைத்துச்சென்றனர். ஷார்ஜா புல்மான் விடுதியில் அறை. மிகப்பெரிய அறை. கண்ணாடிச்சன்னலுக்கு வெளியே கடலின் ஒரு விரல் மட்டும் நீண்டு கிடப்பதுபோல நீலநீருடன் ஒரு சிறு குடா.
எட்டாம்தேதி மாலைவரை தூங்கிவிட்டேன். மாலையில் கீழே சென்று அங்கே நிகழ்ந்த ஓர் இசை நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்தேன். மாலையில் கண்ணாடிச்சன்னல் வழியாக நகரத்தை பார்த்தபடி பதினான்காவது மாடியில் பறந்து நின்ற கந்தர்வனாக நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அத்தகைய விடுதியறைகளின் இனிய தனிமை எனக்கு பிடித்தமானது. அப்படி எத்தனையோ விடுதியறைகளில் அமர்ந்திருந்திருக்கிறேன்.
ஒன்பதாம்தேதி காலையில் நண்பர் ரோட்ரிக்ஸ் அவருடைய மனைவியுடன் வந்திருந்தார். ரோட்ரிக்ஸ் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் எழுதிய கடிதங்கள் என் தளத்தில் வெளியாகியுள்ளன. மருபூமி மரணங்களின் தரிசனம், தனிமையின் நூறு ஆண்டுகள். அவருடைய முதல் கதை வல்லினம் இதழில் வெளியாகியுள்ளது. (பிரபஞ்ச நடனம்). பத்து மணிக்கு எழுத்தாளர்கள் இருபதுபேரை ஷார்ஜா பயணத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஷார்ஜாவின் அருங்காட்சியகம், நவீனக் கலைக்காட்சியகம் ஆகியவற்றுக்குச் சென்றோம். மெல்ல மெல்ல எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தோம். புல்கேரிய எழுத்தாளர் ஜ்யோர்ஜி கோஸ்படினோவ் (Georgi Gospodinov) 2023 ஆண்டுக்கான புக்கர் பரிசு பெற்றவர். ஏற்கனவே அவரை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சந்தித்திருக்கிறேன்.
கொரிய எழுத்தாளர் டேய் (Tae Yong Jung) ஒரு சூழலியலாளர். எகிப்து எழுத்தாளர் யெஹ்யா சஃவாட் (Yehia Safwat) என்னைப்போலவே தொன்மங்களில் ஆர்வமுடையவர். லீனா அபுசம்ஹா (Lina Abu Samha) குழந்தை எழுத்தாளர். மலேசியாவில் பணியாற்றும் பெட்ரோ உரியா ரெசியோ (Pedro Uria-Recio ) செயற்கை நுண்ணறிவு பற்றி எழுதும் ஸ்பானிஷ் மொழி எழுத்தாளர்.டுனீஷிய எழுத்தாளர் ஆடம் பதி (Adam Fathi ) டுனீஷியாவின் முதன்மையான கவிஞர், மொழியாக்க நிபுணர்.
அராபிய நவீன ஓவியக்கலையின் தனித்தன்மை என்பது மனித உடல்சித்தரிப்பு மிகக்குறைவு என்பது. உருவமற்ற ஓவியம் என்பதே ஓர் எல்லை. ஆனால் கலைக்கு எப்போதுமே எல்லை புதிய சாத்தியங்களை திறந்து கொடுக்கிறது.
பொதுவான உரையாடலிலேயே ஏராளமான புதிய புரிதல்கள். அராபிய மொழி 22 நாடுகளில் பேசப்படுகிறது. ஆனால் அராபிய மொழி இலக்கியம் பெரும்பாலும் அந்தந்த நாடுகளிலேயே தேங்கியுள்ளது. பெரிய அளவில் இலக்கியம் விற்பதில்லை. அராபிய உலகின் நட்சத்திர எழுத்தாளர்கள் எகிப்தியர்கள்தான். துருக்கி நவீன இலக்கியத்தில் முன்னகர்ந்துள்ள நாடு. ஆனால் அவர்கள் மேல் அரபுலகம் விலக்கம் கொண்டுள்ளது. யெஹ்யா ஒரு அரபு நட்சத்திரம் என்றார்கள்.
அன்று மாலை நானும் ஜியோர்ஜியும் மட்டும் ஒரு காரில் ஷார்ஜாவின் பாலைவனத்தைப் பார்க்கச் சென்றோம். புல்கேரியாவின் பனிநிலத்தில் பிறந்த அவர் பாலையைப் பார்த்ததே இல்லை. குழந்தைபோல மண்ணை அள்ளி வீசி விளையாடிக்கொண்டிருந்தார்.
ஜ்யோர்ஜி பழைய சோவியத் ருஷ்யாவில் பிறந்தவர். அந்த ஆட்சியின் அடக்குமுறையை அறிந்தவர். அவரிடம் என்னுடைய பின்தொடரும் நிழலின் குரல் பற்றிப் பேசினேன். இன்றைய புல்கேரிய அரசியல் எப்படி ஒரு ஜனநாயக சூதாட்டக்களமாக இருக்கிறது என்றார்.
பத்தாம்தேதி காலையில் நண்பர் ஆசிப் மீரான், மஜீத், சுரேஷ், சசி ஆகியோருடன் ஓரு கேரளபாணி உணவகத்திற்கு காலைஉணவுக்காகச் சென்றேன். (அறக்கல்) நல்ல புட்டு- கடலை சாப்பிட்டேன். பத்து மணிவரை அங்கே பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் சென்ஷி வரவில்லை, மாலையில் நிகழ்வின்போதுதான் வந்தார்.
நானும் நாஞ்சில்நாடனும் 2012 ல் முதல்முறையாக அமீரகம் வந்தபோதுதான் ஆசிப் மீரானைச் சந்தித்தேன். புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் மகன். மலையாள சினிமாவில் ஈடுபாடுகொண்டவர். மலையாள சினிமா பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். (மலையாளத் திரையோரம்). அமீரக நண்பர்கள் அனைவருக்கும் பிரியமான ஒரு நட்புமையம் அவர். அவருடைய வீட்டில் 2012ல் தங்கியிருக்கிறோம்.
மாலையில் என் நிகழ்வு. டிசி ரவியின் மைந்தர் கோவிந்துடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். ஆடம்பரமான அரங்குகள். விவாதமேடைகள். அரபு நூல்கள் அடுக்கடுக்காக நிறைந்திருந்தன. ஷார்ஜா உட்பட அரபுநாடுகள் தங்களை இன்று பண்பாட்டுமையங்களாகத் தொகுத்துக்கொள்ள விரும்புகின்றன. கல்விமையங்களாக ஆக்கவும் இலக்கு கொண்டுள்ளன. ஆகவே அரபுலகின் இலக்கியம் ஒட்டுமொத்தமாகவே அங்கே திரண்டுள்ளது.
அராபிய மொழியில் அறிவியலை அறிமுகம் செய்யவே இன்று அதிகமாக முயல்கிறார்கள் என நினைக்கிறேன். இந்த புத்தகவிழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களிலேயே அதிகமானவர்கள் அறிவியலாளர்கள் என்பதை கவனித்தேன்.
அரங்குகளைச் சுற்றிவந்தேன். டிசி புக்ஸ் அங்கே ஏராளமான கடைகளை வைத்திருந்தனர். ஒரு வரிசை முழுக்கவே அவர்கள்தான். அவர்களுக்கு அங்கே நிரந்தரக்கடையும் உண்டு. அரபுலகில் அவர்களின் விற்பனையில் பாதி ஷார்ஜா புத்தகச் சந்தையில்தான். தமிழிலிருந்து சிக்ஸ்த் சென்ஸ், யூனிவர்சல், சிந்தனை விருந்தகம் ஆகிய கடைகள் இருந்தன. சிந்தனை விருந்தகம் கடையில் சீமான் பற்றி எழுதப்பட்ட ஒரு நூலைப் பரிசளித்தார்கள்.
தமிழில் இருந்து நானும், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனும், இளையராஜாவும் ஷார்ஜா விழாவுக்கு விருந்தினர்கள். அவர்களை நான் சந்திக்க நேரவில்லை. ஹூமா குரைஷி என்னும் பெண்மணி வந்திருந்தார். அவர் ஒரு நடிகை என்றும், கவிஞர் என்றும் சொன்னார்கள். நான் அமர்ந்திருந்த விருந்தினர் அறையில் எனக்குப் பின்னால் அவர் இருந்தார். நண்பர்கள் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
நண்பர் ஜெயகாந்த் ராஜுவும் கல்பனாவும் வந்திருந்தார்கள். கல்பனா ஜெயகாந்த் தமிழில் நல்ல கவிதைகள் எழுதிய கவிஞர். அவர் நூல்களை அறிமுகம் செய்துள்ளோம். (தேன்பிசுக்கு கல்பனா ஜெயகாந்த்). ஜெயகாந்த் மகள் திருமணத்துக்காக அண்மையில் திருச்சி சென்றிருந்தோம். ஜெயகாந்த் அவர் மகளையும் மருமகனையும் விருந்து உபசரித்து வழியனுப்பிவிட்டு களைப்புடன் வந்திருந்தார்.
அமீரகத்தில் பரணி என்னும் இலக்கிய அமைப்பை நடத்தும் நாகர்கோயில் காரரான நண்பர் சான்யோ டாஃப்னிதான் என் நிகழ்வை ஒருங்கிணைத்தார். சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய நிகழ்வில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். பரணி (அமீரகத் தமிழ்க்கலை இலக்கிய விழா) சான்யோ அங்கே இலக்கிய நிகழ்வுகளை தொடர்ச்சியாக ஒருங்கிணைத்து வருகிறார். எழுத்தாளர்.
இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணிவரை உரையாடல் நிகழ்வு. தொன்மங்களின் நவீன இலக்கியமாக்கல் குறித்து நான் பேசினேன். அதன்பின் சான்யோ என்னிடம் சில கேள்விகள் கேட்டார். தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். நிகழ்வு நீண்டுசென்று பத்துமணி ஆகியது. அதன்பின் சந்திப்புகள் உரையாடல்கள்.
மறுநாள் விடுதியிலேயே இருந்தேன். நண்பர் சிந்து மற்றும் அவருடைய நண்பர்கள் வந்திருந்தார்கள். மாலையிலேயே திருவனந்தபுரம்.