சிகண்டி- ஒரு வாசிப்பு

ஜெ,

மலேசிய சௌவாட் நகரையும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளையும் கதைக்களமாக கொண்டு இருள் உலகை மிகத்தீவிரமாக சித்தரிக்கும் சிகண்டி நாவல் எனக்கும் முற்றிலும் அன்னியமான களம். ஆனால் நாவலில் நிரம்பி வழியும் நுணுக்கமான தகவல்களால் மிக அணுக்கமான அந்தரங்கமான வாசிப்பை நிகழ்த்திக் கொள்ள முடிந்தது என்றே நினைக்கிறேன்.

எட்டு போன்ற சௌவாட் ஒன்று மற்றும் இரண்டு. நடுவில் இருக்கும் மையமான சந்தை. அதனை ஒட்டிய இருட்டு சந்தை. கிழக்கில் இருக்கும் தைப் ரோடு மற்றும் காராட் பசார். மேற்கில் இருக்கும் சாகார் சாலையில் சன் விடுதி மற்றும் பாலியல் விடுதி. வடக்கில் இருக்கும் சீனர்களின் வளமையான பகுதியும் அங்கு இயங்கும் உணவகங்களும். தெற்கில் இருக்கும் பன்றி கொட்டகை மற்றும் அதை ஒட்டிய சிறு காடு என கண் முன் நிறுத்தி விடுகிறார். இத்தனை வரையறுக்க முடிந்ததாக இருந்தாலும் சௌவாட் காடு போல முளைத்துக்கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் சௌவாட்டில் வசிக்கும் சீனா, தமிழ், பர்மா, வங்காளம், இந்தொனேசியா, தாய்லாந்து நாட்டின் மக்கள் கலவை. அவர்களின் விழாக்களான சீனப்புத்தாண்டு, இறந்தவர்கள் உணவு உண்டு செல்லும் விழா, மியா ஷானின் கூத்து, பௌர்ணமி, அமாவாசை வழிபாடு, டத்தோசாமி, தாய்லாந்து புத்த கோயில், பகுச்சரா மாதா திருவிழா, தொழுகைக்கான அழைப்பை விடுக்கும் மசூதி, கிறித்துவ பாதிரிமார்களின் ஜெபம், மதுரைவீரன் கோயில், குவான் யின் கோயில் ஆகியவற்றின் வழியே நெருங்கி அந்த பண்பாட்டை உணர முடிகிறது.

விதவிதமான உணவுகளும், போதைப் பழக்கங்களும், சூதாட்டங்களும் சௌவாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வெவ்வேறு குழுக்களும் அத்தனை தகவல்களோடும் சொல்லப்பட்டுள்ளது.

நாவலில் ஒரு அத்தியாயத்தில் பிணைந்து இருக்கும் முன் பற்றும் பின் அத்தியாயத்துக்கான விவரங்களால் கூர்ந்த மூளை உழைப்பை கோரும் அதே நேரத்தில் அதற்கான உந்துதலையும் அளிப்பதாக உள்ளது. “வைட் கொப்ராஎன்பவரது அறிமுகம் நாவலின் கடைசி இரு அத்தியாத்திற்கு முன்பு நிகழ்ந்து அதிலேயே முடிகிறது. அது நாவலின் வாசிப்பை எந்த விதத்திலும் தடுப்பதாக இருக்கவில்லை.

 முதல் அத்தியாயத்தில் வரும் மலேசிய சுதந்திரத்திற்கு முன்பான நிகழ்வு நாவலுக்கு வலுவான சரடாக அமைந்து விடுகிறது. வீரனுக்கும் மாரியப்பனுக்குமான சண்டையில் தன் கையில் இருக்கும் தெய்வத்தை நம்பி களமிறங்கும் மாரிமுத்து கை உடைந்து ஆடை களையப்பட்டு தோற்கும் பகுதியின் இறுதியில் மாரிமுத்துவின் அக்காஅவன் கையில் இருப்பது சாமி தான்யாஎன்றே வீரனைப் பார்த்து கூறுகிறாள்.

இன்னொரு முக்கிய சரடாக பாலியல் அடையாள இழப்பு வலுவாக கையாளப்பட்டுள்ளது.

வீரனின் அறிமுகத்திலேயே அவன் காட்டிலிருந்து வருவதாகவும், அவனது பூர்வீக அடையாளங்கள் தெரியாதவனாகவும், அடித்து பிடுங்கி தின்பவனாகவும், வன்புணர்பவனாகவும் வருகிறான். அந்த ஆதி உணர்வின் எச்சங்களோடு வீரனின் இரண்டாவது தலைமுறையான பதின் வயது தீபன் அமைந்துள்ளான். அவனுக்குள் இருக்கும் மிருகத்தை பள்ளியில் சண்டையிடும் போதே அவனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அப்பாவை அடிக்கும் போதும், சராவை அடிக்கும் போதும் அவனது கை அவன் கட்டுப்பாட்டை மீறி அறைந்து கொண்டே இருக்கிறது. சௌவாட்டில் அவன் வேலை செய்யுமிடத்தில் பல முறை முதலில் சென்று முழு உடல் பலத்துடன் தாக்குபவனாக இருக்கிறான். தீபனால் வன்புணர்வு செய்யப்பட்ட நண்பனின் தங்கையும், பிலிப்பைன்ஸ் காரியும் அவனால் இயல்பான காமத்தை அடைய முடியாதவனாகவே காட்டுகிறது. இன்னொருபுறம் அவன் தன்னுள் இருக்கும் ஆதி மிருக குணத்தை உணர்ந்தவனாகவே இருக்கிறான்.

வீட்டை விட்டு வெளியேறி மாமா வீட்டு முன்னால் நிற்கும் தீபனை அவனது வளரத்துவங்கிய மீசையே அங்கு தங்க வழி செய்கிறது. வறுமை நிறைந்த சூழலிலிருந்து நிறைவேறாத இளமை பருவ ஏக்கங்களோடு நகரத்தை நோக்கி வரும் தீபனுக்கு அங்குள்ள திருட்டு சந்தை (காராட் பசார்) அத்தனை ஆசைகளையும் தீர்க்கும் இடமாக அமைந்து விடுவதாக தோன்றுகிறது. இருள் உலகத்திற்குள் ஷாவின் கைப்பிடித்து அழைத்து செல்லப்படுகிறான். காசி நண்பனாக அவனுக்கு அந்த உலகத்தின் வெவ்வேறு பகுதிகளை அறிமுகம் செய்து வைக்கிறான்.

தன்னை குழந்தைத் தன்மையிலிருந்து ஆண்மகனாக, ஆண்மையுள்ளவனாக மாறிவிட்டதாக எண்ணிக்கொள்ளும் நேரத்தில் அவனுக்கு ஆண்மையிழப்பு ஏற்படுகிறது. அதன் பிறகான அவனது மனதின் அலைபாய்தல்கள் மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

முதலில் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று நினைப்பவன், பின் வீட்டிற்கு சென்று அம்மாவின் மடியில் படுத்தால், லூனாஸ் ஆற்றில் குளித்தால், மாரியம்மன் கோயிலுக்கு சென்றால் அனைத்தும் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறான். வீட்டுக்கு செல்லும்போது மீசை தாடி எல்லாம் எடுத்துவிட்டு சிறுவனாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறான். காலத்தில் பின்னோக்கி சென்று தன் அன்னையின் மடியில் சிறுவனாகி படுத்துக் கொள்ள வேண்டும் என்ற விழைவு நாவல் முழுவதும் வருகிறது.

ஆண்மையிழப்பு அவனை கட்டற்ற வன்முறையை, எந்நேரமும் வெளிப்படுத்தக் கூடியவனாக மாற்றுகிறது. அவ்வாறு ஒருமுறை கல்லூரி பையனை அடிக்கும் இடத்தில் அவன் காமத்தின் உச்சத்தினை அடைகிறான். அந்த உச்சத்தினை அடைவதற்காகவே மீண்டும் மீண்டும் சண்டையிடுகிறான்தன் உடல் எடை கொண்டதாக மாறி அவனை வேர்ப்பின்னலால் அழுத்துவதாக உணர்கிறான்.

வன்முறை மிகுந்தவனாக, மிருக காமம் கொண்டவனாக, அம்மாவிற்கான ஏக்கம் கொண்டவனாக, பிரச்சனைகளில் சரணடைபவனாக, ஆண்மை மிக்கவனாக இருக்கும் ஆசை கொண்டவனாக, உண்மையான காதலை கொண்டவனாக, பணத்திற்காக சராவை ஏமாற்ற தயங்காதவனாக, மாமா மகனின் மீது பாசம் கொண்டவனாக என ஒரு பாத்திரம் மிக உயிர்ப்புடன் உருவாகியுள்ளது.

இன்னொருபக்கம் திருநங்கைகள் தங்களை பெண்ணாக அங்கீகரிப்பதற்காக அடையும் இழப்புகளும் ஏமாற்றங்களும். அவர்களை அரவணைப்பவராக ஈபு இருக்கிறார். அவரது உறவுக்கொடியில் மகளாக இருக்கும் சரா, ஒளி பொருந்திய பாத்திரமாக இந்த இருள் உலகில் தெரிகிறாள்.

நாட்டியத்தில் கடவுளை தரிசிக்கும் அவள், தன்னை விரும்பியவன் விளக்குவதை அணுவும் பொறுக்க முடியாதவளாக இருக்கிறாள். அவன் தன்னை விலக்கினாள் தன்னை மாய்த்துக்கொள்ள தயங்காதவளாக இருக்கிறாள். தீபன் தன்னை கொல்லப்போவதாக சொன்னவுடன் அவளே தூக்கில் ஏறி தன்னை மாய்த்துக் கொள்கிறாள். அவளது கருணை தீபனை ஈபுவிடமிருந்து காப்பாற்றுகிறது.

பகுச்சராவின் நான்கு கைகளில் இரு கைகளில் இருக்கும் வேதமும், அபய முத்திரையும் சராவாகவும், மற்ற இரு கைகளில் இருக்கும் வாளும் சூலமும் ஈபுவாகவும் இருக்கிறது. சரா அப்சரா நடனத்தை தீபனுக்கு பகுச்சரா மாதாவின் முன்பு ஆடிக்காட்டும் போது சுவரில் இருக்கும் தேவியின் உடல் முழுவதும் கருணை கொள்வதாகவும், வாளும் சூலமும் கருணை சூடிக் கொள்வதாகவும் வரும் இடம் ஒரு உச்சம். அதனை சராவிற்கு உறவுக்கொடி கொடுத்து மகளாக ஏற்ற பிறகு கனிந்து நிற்கும் ஈபுவிற்கு பொருத்திப் பார்க்கலாம்.

தன் ஆண்மையை மீட்க உதவும் நாகப்பித்தை அடைய பணத்திற்காக சராவின் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை பணத்தை திருட முடிவு செய்கிறான். அந்த திட்டம் ஷாவாலும் காசியாலும் சராவை கொல்லும் திட்டமாக மற்றப்படுகிறது. மாமாவின் கடனால் ஏற்படும் சிக்கலிலிருந்து சிறுவன் கண்ணனை மீட்பதற்காகவும் பணம் தேவைப்படுவதால் சூழல் கூர்கொள்கிறது.

அதற்கான தயாரிப்பில் பூஸ் பூனையை அவன் கொன்று ரசிப்பதும், கருங்குரங்கை தலையில் அடித்து திறப்பதும் அவனுள் இருக்கும் வன்முறையை ரசிப்பதை தூண்டி விடுகிறது என்றே தோன்றுகிறது. சராவை கொள்வதற்கு முன் இரு மனநிலையில் இருக்கும் அவன் கடைசியில் மிருகத்தின் பாதையை தெரிவு செய்கிறான். சரா தூக்கில் தொங்கும்போது துடிப்பதை அப்சரா நடனமாக பார்ப்பது, அவன் செல்லும் இருளின் உச்சம் என்றே தோன்றுகிறது.

சராவின் கருணை தெரிய வரும்போது அதற்காக வெட்கி தன்னை கொன்றுவிடுமாறு வேண்டுகிறான். நாக்கை துண்டித்து சராவாக தெரியும் பகுச்சரா மாதாவின் முன் படையலிட நினைக்கிறான். அந்தக் கடைசி அத்தியாயம் சுருங்கி விட்டதோ என்று கூட தோன்றுகிறது. பலிபீடத்தில் நிர்வாணமாக பகுச்சரா மாதாவின் முன் மண்டி போட்டிருக்கும் அவன் கண்களுக்கு மாதா குவான் யின்னாகவும், சராவாகவும், அவனது அம்மாவாகவும் மாறி மாறி தெரியுமிடம் இந்த நாவலில் தீபனின் வழியே அடையப்பெற்ற உச்ச தரிசனமாக நான் எண்ணுகிறேன். கருணை வடிவமாக இருக்கும் பகுச்சரா தேவி, சராவாக, குவான் யின்னாக தன்னை மன்னித்து விட்டதாக தோன்றுகிறது அவனுக்கு. அனைத்து துன்பங்களையும் தானே எடுத்துக் கொள்வது போன்ற கருணை மிகு புன்னகையை காண்கிறான். இது மலேசியாவில் அந்த மண்ணில் இருந்து மட்டுமே அடையக்கூடிய தரிசனமாக அமைந்துவிடுகிறது.

மாரிமுத்துவிலிருந்து தொடரும் வழியில் இரண்டாம் தலைமுறையான கண்ணனால், தீபனின் அடிவயிற்றில் இருக்கும் பல்லிக்கு கண்கள் வரையப்பட்டு சுவரில் இருக்கும் பல்லியை பார்த்து கூடுவதற்காக எழுகிறது. ஈபு தீபனுக்கு மலர் மாலையிட்டு, மஞ்சள், பன்னீர் தெளித்து தாயாம்மாகை முறையில் அறுவடைக்கு தயார் செய்கிறார். மண்டியிட்டிருக்கும் தீபனின் முன் மூடிய தட்டில் சவரக் கத்தியைக் கொண்டு வந்து வைக்கிறாள். தன் குறியை அறுத்து அதுக்காவாஎன்ற சொல்லுடன் திரும்ப வராதபடி செல்வது, அவனிடமிருந்த வீரனின் ஆதி மிருக உணர்வு அவனை விட்டு அகலும் தருணம் என்றும் அவனுள் உருவாகும் தாய்மை அவனுக்கான பாதை என்றும் தோன்றுகிறது.

க சரத்குமார்

செங்கல்பட்டு 

முந்தைய கட்டுரைபொழுதுபோக்கு எழுத்து, இலக்கியம்- கடிதம்
அடுத்த கட்டுரைஹிரியண்ணா