அஞ்சலி: இந்திரா சௌந்தரராஜன்

இந்திரா சௌந்தரராஜனை நான் ஒரே ஒரு முறை சென்னை கிரீன்பார்க் விடுதியில் சந்தித்திருக்கிறேன். அன்று ஒரு மணிநேரத்திற்கு மேலாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் பாலகுமாரன் மேல் மிகப்பெரிய மதிப்பு கொண்டிருந்தார். பாலகுமாரன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்று நினைத்தார். என் படைப்புகள் எதையும் படித்திருக்கவில்லை. என்னை கேள்விப்பட்டிருந்தார். நான் சந்தித்தபோது அவர் தொலைக்காட்சித் தொடர்களில் பெரிய ஈடுபாட்டுடன் இருக்கவில்லை. ஒரு தொடர் எழுதுவதற்கான ஆலோசனைக்காகவே வந்திருந்தார். ஆனால் அதை பெரியதாக நினைக்கவில்லை. போதிய அளவு தொடர்கள் வழியாக பொருளீட்டிவிட்டதாக எண்ணினார்.

அவர் அன்று தன் வாழ்நாள் பணியாக எண்ணியது ஆன்மிகச்சொற்பொழிவைத்தான். காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மேல் இணையற்ற பக்தி கொண்டிருந்தார். தனக்கு மிக அரிய சில ஆன்மிக- அற்புத அனுபவங்கள் நிகழ்ந்ததாகச் சொன்னார். நான் அவர் சொன்னதிலிருந்து ஊகித்தது ஒன்று உண்டு. அவர் நாத்திகராக இருந்தார். புனைவுக்காக ஆத்திகத்தை கற்று எழுதினார். எழுதி எழுதி தீவிரமான ஆத்திகராக ஆனார். எழுத்து அவரை அங்கே கொண்டு சென்று சேர்த்தது.

திரில்லர் என்னும் வகைக்கு நல்ல இலக்கணமாக அமையும் சில நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் இந்திய ரசவாதம், தாந்த்ரீகம் ஆகியவற்றை திறம்பட பயன்படுத்திக்கொண்டார். ஒருவகையான இந்திய டான் பிரவுன் அவர். அவற்றில் அவருடைய மொழி- படைப்புத்திறன் உச்சமாக வெளிப்படுவது அவற்றில் அவர் புனைந்திருக்கும் பழங்கால ஏட்டுச்சுவடிகளின் பாடல்களில்தான். புனைவு வழிநடத்திச்சென்ற வாழ்க்கை. அவ்வகையில் எழுத்தாளனின் வாழ்க்கை

அஞ்சலி

இந்திரா சௌந்தரராஜன் தமிழ்விக்கி

முந்தைய கட்டுரைதன்னறம் இலக்கிய விருது – 2024
அடுத்த கட்டுரைஉணவடிமைகள்