தன்னறம் இலக்கிய விருது – 2024

ஷோபா சக்திக்கு வாழ்த்துக்கள்

ஜெ

எண்பதுகளின் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கிய எழுத்தாளர் ஷோபா சக்தி, அப்போதிருந்து இன்று வரையிலான நாற்பதாண்டு காலகட்டத்தில் சுய வாழ்வு அலைக்கழிக்கபட்ட காலங்களின் இருள் பாதை நெடுகிலும் வாழவனுபவங்களைக் கதைகளாக்கி விதைத்து வருபவர். எழுத்தைக் கடவுளாகவும் சாத்தானாகவும் நம்புகிறவார்.  சென்று சேர்ந்த எல்லா நிலங்களிலும் அவர் சுமந்தலையும் நிலத்தின் ரத்தம் செறித்தக் கதைகளை சொல்லி வருகிறார்.

தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இருந்து குறிப்பிடத் தகுந்த பங்களிப்பையும், தீவிரமான செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புனைவுப் பரப்பில் தனக்குரிய தனி பயணத்தை கொண்டிருப்பவர். அகதி வாழ்வு, நீங்காத அலைச்சல், அடையாளத் துயர், கதை, மொழி, அரசியல் ஆகிய உயிர்நிலைகளில்   ஷோபா சக்தியின் செயல்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றன. அது நிலங்களைத் தாண்டி தன் அலைக்கழிப்பை இலக்கியத்தின் மூலம் முற்றளித்து, யுத்தத்தின் ரத்த சாட்சியாக தன்னை முன்னிறுத்தும் கலை நேர்மையின் பாங்கு உடையது. சமகால அரசியலும் இலக்கிய அழகியலிலும் காலத்தின் உண்மையுணர்வை அலைச்சலின் மொழியால் நிழல் படிமமாக புனைவில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதனால், சின்னஞ்சிறிய தீவுகளில் இருந்து உலகளாவிய அடையாளம் கொண்ட சுய வாழ்வின் மீதுள்ள நெருக்கடியை எந்த ஒப்பனைகளும் இன்றி புனைவுகளில் நம்மால் சந்திக்க முடிகிறது. சமூகத்தின் கூட்டுப் உணர்வான மௌனத்தின் அவல ஆழங்களை அனுபவப் பகிர்வாக முன்வைக்கும் ஷோபா சக்தி அவர்களின் புனைவுகளை நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறோம்.

கொரில்லா, பாக்ஸ் கதைகள், இச்சா, ம், ஸலாம் அலைக் ஆகிய புதினங்களையும் தமிழின் மிக முக்கியச் சிறுகதைகள் கட்டுரைகள் பலவற்றையும் எழுதித் தந்திருக்கிறார். பதிப்பாசிரியராக சில அவசியமான படைப்புகளை வெளியீட்டும் வருகிறார்.

தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அப்படைப்பாளிகளை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும்தன்னறம் இலக்கிய விருது’  வருடாவருடம் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), கவிஞர் பாலைநிலவன்(2023) ஆகிய ஆளுமைகளுக்கு அவர்களின் இலக்கியப் பங்களிப்பினை பணிந்து வணங்கி இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. விருதுடன் இணைந்து விருது பெரும் ஆசிரியரின் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் அச்சிடப்பட்டு ஆயிரம் இளம் வாசிப்பு மனங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

2024ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது நவீன தமிழ் இலக்கியத் தளத்தில் படைப்பு நேர்மையுடன் வாழ்வின் பரிணாமங்களை எழுதியும் பேசியும் வரும் எழுத்தாளர் ஷோபா சக்தி அவர்களுக்கு சென்றடைவதில் அகநிறைவு கொள்கிறோம்.

~

நன்றியுடன்,

தன்னறம் நூல்வெளி  I குக்கூ

முந்தைய கட்டுரைபிள்ளைகளுக்காக நாம் ஏன் வாழ வேண்டும்?
அடுத்த கட்டுரைஅஞ்சலி: இந்திரா சௌந்தரராஜன்