தமிழ்விக்கி, வெள்ளைவாரணனார்- கடிதம்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி பற்றிய பிரமிப்பு ஒவ்வொரு முறை உள்ளே வரும்போதும் கூடிக்கொண்டே செல்கிறது. ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வழக்கமாக உங்கள் மேலுள்ள எரிச்சலை காட்டி தமிழ்விக்கியை வசைபாடினார். அவர் தமிழார்வலர். இசைத்தமிழில் ஆய்வுசெய்பவர். நான் இசைத்தமிழ் பற்றி ஏதாவது ஒரு பதிவை எடுத்துப்பார்ப்போம் என்று சும்மா தேடினேன். என் மூளையில் பதிந்த ஒரு பெயர் வெள்ளைவாரணனார். அந்தப்பெயருள்ள இன்னொருவர் இல்லை. (இதுபோல் இன்னொரு அபூர்வப்பெயர் பாலறாவாயன்). அதை கூகிளில் தேடினேன்.

நண்பர் “அதெல்லாம் விக்கிப்பீடியாவிலேயே இருக்கிறது” என்று சொன்னார். விக்கிப்பீடியா பதிவை பார்த்தோம். அதன்பின் தமிழ்விக்கி பதிவைப் பார்த்தோம். (வெள்ளைவாரணர்) உண்மையிலேயே திகைத்துப்போய்விட்டேன். அது ஒரு பெரிய ஆய்வுக்கட்டுரை போல் இருந்தது.  மிக விரிவான பதிவு. அவருடைய பங்களிப்பு பல படிகளாக விளக்கப்பட்டிருந்தது. அவர் காலகட்டத்து விவாதங்கள் இருந்தன. மிகத்தெளிவாக பல பகுதிகளாக அமைந்த கட்டுரை. கூடவே ஏராளமான இணைப்புகளும் கூடுதல் வாசிப்புக்கான தொடுப்புகளும் இருந்தன. அந்த கட்டுரையில் இருந்து விபுலானந்தருக்குச் சென்றேன். வீ.பா.க சுந்தரம், லெப கரு இராமநாதன் செட்டியார் , கா.சுப்ரமணிய பிள்ளை என அறிஞர்கள் வந்துகொண்டே இருந்தனர்.

அரும்பணி ஆற்றிய தமிழறிஞர்களுரக்குத் தமிழ்ச்சமூகம் செய்யவேண்டிய கடமை அப்படி ஒரு பதிவை உருவாக்குவது. அந்தப்பதிவினாலேயே அவர் வரலாற்றில் நிலைநிற்பார். தமிழார்வலர் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் தலைவணங்கியாகவேண்டிய பெரும்பணி. ஆனால் தமிழ்ப்பற்று என்று சொல்லிக்கொள்கிறோமே ஒழிய உண்மையில் நமக்கிருப்பது அரசியல்காழ்ப்பும் சாதிக்காழ்ப்பும் மட்டும்தான். தமிழின் பெயரால் எவரும் உங்களைப் பாராட்டப்போவதில்லை. நண்பர் கூட அதில் ஏதாவது பிழை கண்டுபிடிக்கமுடியுமா என்றுதான் பார்த்தார். தமிழ்தான் நம் அக்கறை என்றால் நாமே அப்படி ஒரு பதிவை உருவாக்கியிருப்போமே என்று நான் நினைத்துக் கொண்டேன். அந்தப்பதிவை உருவாக்கியவர் தமிழாய்வாளர் என்று சொல்லிக்கொள்ளப் போவதில்லை. அவருக்கு எந்தப்புகழும் இல்லை. ஆனால் அவர் தமிழுக்கு ஒரு பெரிய கொடையை அளித்துள்ளார்.

இன்றைய காழ்ப்புகளும் சிறுமைகளும் காலத்தில் மறையும். சிறிய மனிதர்களின் சிறிய உள்ளம் அப்படித்தான் செயல்படும். பெரும்பணிகள் காலம் கடந்து நிற்கும்.

சித. இராமநாதன்

முந்தைய கட்டுரைஉணவடிமைகள்
அடுத்த கட்டுரைஇரு கடல், ஒரு நிலம் – அருண்மொழி நங்கை