சுஜாதா, இலக்கிய மதிப்பீடுகள்

சுஜாதாவின் இன்மை, கடலூர் சீனு

வணக்கம்,

கடலூர் சீனு அவர்கள் எழுதிய சுஜாதாவின் இன்மையை படித்தேன். அனேகமாக அவர் சொல்லும் தீவிர இலக்கியத்தைப் பற்றிய எண்ணங்கள் நீங்களும் பல முறை சொல்லக் கேட்டுள்ளேன். அதாவது சில புனைவுகள் வாசித்தால் ஒன்றும் இருக்காது. அதில் ஒர்  இலக்கியத்துக்கான எந்த தகுதியும் இல்லை என்பது போன்ற கருத்துக்கள்.

எனக்கு அதில் ஒரு உறுத்தல் இருக்கிறது. இலக்கியத்தைப் பற்றிய கொள்கையோ எண்ணமோ எல்லோருக்கும் ஒன்று போல இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தால் அங்கு இலக்கியம் மேம்படாமல் தேங்கியுள்ளது என்பதே அர்த்தம்.

மேலும் வாசிப்பு பழக்கம் உள்ள எல்லோரும் தீவிர இலக்கியத்தையே வாசிக்க விரும்புவர் என்றும் சொல்ல முடியாது. பெரும்பாலும் சுற்றியுள்ள வேலை மற்றும் குடும்பச் சூழலில் இருந்து சற்று வெளிவந்து வேறு ஒரு உத்வேகமான உலகம் அல்லது தன் கடந்த காலத்தை நினைவு கூறும் கதைகளையே வாசிக்க விரும்புவர். அவ்வாறு வாசிக்க விரும்பும் வாசகரே பெரும்பான்மை.

அப்படியிருக்கும்போது எவ்வளவு படித்த எழுத்தாளனானாலும் வெகு மக்களின் வாசிப்புத்தேவையை நிறைவேற்றல் என்கிற நோக்கம் கொண்டு எழுதப்பட்டால்அவ்விலக்கியம் சமகால யதார்த்தத்தையும், வெகுஜன புரிதலுக்கான எளிமையையும் கொண்டே எழுதப்படும். ஆனால் அது தீவிர‌ இலக்கியம் அல்ல என்றும்,  இலக்கியமே அல்ல என்கிற இடத்திலும் கொள்வது அந்த எழுத்தின் மீதோ எழுத்தாளன் மீதோ வீசும் வசைதானே?

இன்னொன்று. நீங்கள் சொல்லுகிற தீவிர இலக்கியம் அல்லது சிறந்த இலக்கியம் என்பது நான் படித்த வரையில் ஒரு அதிர்வையே ஏற்படுத்தும். அதிலிருந்து மீண்டு வர சில நாட்கள் கூட பிடிக்கும். ஆனால் சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களுடைய எழுத்துகளில் ஒரு உத்வேகம் இருக்கும். வாழ்க்கைக்கான நேர்மறைச்சிந்தனை இருக்கும். எத்துனை துன்பம் வந்தாலும் அதை தாண்டி வாழ்ந்து பார்க்க ஒரு வேகம் கொடுக்கும். பெரும்பாலும் அதுவே அப்புனைவின் சாராம்சமாக இருக்கும். அன்றாட வாழ்வில் ஏற்படும் இன்னல்களால் பாதித்தவன் அதிலிருந்து மீள உத்வேகம் கொடுக்கும் இலக்கியத்தையே வாசிக்க நினைப்பான். நிச்சயமாக வாழ்க்கையின் துன்பத்தை சொல்லி மன அதிர்ச்சியை ஏற்படுத்தும் இலக்கியத்தை நாட மாட்டான். அவனுக்கு நாளைக்கான வாய்ப்பைச் சொல்லும் எழுத்தே உயர்ந்த இலக்கியம். வாழ்வின் அறத்தைச் சொல்வதல்ல. இன்னும் சொல்லப்போனால், எது தேவையோ அதுவே அறம்/தர்மம். அப்படி இருக்கையில் ஒருவனின் மனத்தேவையை கொடுக்கும் இலக்கியமே அவனளவில் சிறந்த இலக்கியம்.

உங்களுக்கு தெரியாமலில்லை. யோகிராம் சுரத்குமாரிடம் பாலகுமாரனின் எழுத்தை குப்பை என்று நீங்கள் சொன்னதாக கேள்வி. அப்படி நீங்கள் சொன்ன காலத்தில் பல பெண்களுக்கு பாலா தான் வாழ்வின் விளக்கு என்றும் கேள்வி. உங்களுக்கு குப்பை மற்றொருவருக்கு வாழ்க்கை. அப்படிதானே? காரணம் உங்கள் மன முதிர்ச்சி, வாழ்வானுபவம் அவர்களுக்கு இல்லை. சின்ன தோல்வியும் பேரிழப்பாக நினைக்கும் ஒருவனுக்கு ஆற்றுப்படுத்த அவனைப்போலவே ஒருவன் நடமாடும் கதையே அப்போதைய அவன் தேவை.

ஒரு அறமோ, சோற்றுக்கணக்கோ, விஷ்ணுபுரமோ குழந்தை இலக்கியம் ஆகாது. ஒரு குழந்தை அந்த இலக்கியத்தை அடைய, அந்தந்த வயதின் இலக்கியத்தை வாசிப்பின் மூலம் கடந்தே வர வேண்டும். வாசிப்பே அறியாது, மிக இலகுவான வாழ்க்கையில் வளர்ந்த ஒருவனுக்கு சு.ரா வும், ஜெ.மோ வும் வள வள எழுத்தாளர்கள்தான். ஏன்! அவர்களுக்கு கணேஷ் வசந்த் துப்பறியும் கதைகள் நல்ல இலக்கியமாகப்படலாம்.  பொன்னியின் செல்வன் பெரும் காவியமாகப்படலாம். அன்றாட கஷ்டங்களை தோல்விகளை கண்டு அதை வாசிப்பில் மீண்டும் வாழ்ந்து பார்க்த்து, தவறை புரிந்து கொள்ள நினைக்கும் மனிதனுக்கு பாலகுமாரன் தான் வாழ்வின் அர்த்தத்தை சொன்னவர்.

அதற்காக அதுவே அவனுக்கு போதும் என்று சொல்ல முடியாது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல அவனுக்குள்ள தேடல் இன்னும் சிறந்த இலக்கியத்தை அடையத்தூண்டும். அந்த தூண்டலின் ஒரு காரணியாக ஒவ்வொரு காலத்திலும் ஒரு இலக்கியம் மனதுக்குத்தோன்றும். அவ்வளவுதான். நான் தெரிந்த வரையில் திருக்குறள், ஆத்திச்சூடியை விட சிறந்தது சித்தர் பாடல்கள்தான். அதற்காக அதை பள்ளி பாடத்திட்டமாக வைக்க முடியுமா? குறளோ, ஆத்திச்சூடியோ எல்லோருக்கும் கிடைப்பது. அதில் தெளிந்து கடந்து மீண்டும் தேட தகுதி பெறுபவன் சித்தர் பாடலை அடைவான். அதை அடைந்த பிறகு, குறள் ஒன்றும் பெரிய தத்துவமில்லை என்று தோன்றும். அப்படித்தோன்ற குறளை வாசித்துக்கடந்தால் தான் முடியும். வாசிக்காமலேயே பிறர் சொல்ல கேட்டு நேராக சித்தர் பாடலுக்கு வந்தால் அவன் குழம்பித்தான்‌போவான். தெளிவாக மாட்டான்.

என்னளவில், எது நல்ல இலக்கியமென்பது ஒரு பொது முடிவு அல்ல. அவரவர் வாழ்க்கை அவர்களுக்கு கொடுப்பது. இன்று காலை தான் ‘கோட்டி’ சிறுகதை முடித்தேன். ஏதும் படித்து அல்லது உணர்ந்து அறியாமல் எதிரில் உணரச்சி பட சொல்பவனின் மனபோக்கில் யோசித்தால் காந்தியின் ஆஹிம்சையையும், திட்டமிடுதலையும் விட்டு தோட்டித்தனத்தைதான் எடுத்துக்கொள்ள முடியும். இது இலக்கியத்திற்கும் பொருந்தும். சிறந்த இலக்கியத்தை உணரவே முடியும். செல்வதைக் கேட்டோ, தேடியோ கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்கும் பக்குவம் இருக்காது.

ரவிவர்மன்

அன்புள்ள ரவிவர்மன்

கடலூர் சீனு இன்று தன்னளவில் ஒரு விமர்சகராக அடையாளப்படுத்தப்படுபவர். மேடைகளில் பேசுகிறார், வகுப்புகள் நடத்துகிறார். தொடர் இலக்கியச் செயல்பாடுகளில் இருந்துகொண்டே இருக்கிறார். அவருடைய கருத்துக்களும் நிலைபாடுகளும் வெளிப்படையாக தொடர்ச்சியாக முன்வைக்கப்படுவன. அவற்றுக்கிடையே ஒரு கருத்துத்தொடர்ச்சி உண்டு. அதுவே அவருடைய நிலைபாடு. அது வெறும் ‘வாசக எதிர்வினை’ அல்ல.

கடலூர் சீனு அக்கடிதத்தில் சுஜாதாவின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றி மிகச்சிறந்த மதிப்பையே முன்வைக்கிறார். அவருடைய நாடகங்கள், சிறுகதைகளில் அவர் அடைந்த வெற்றிகளை அடையாளம் காட்டி அவைதான் அவருடைய அடையாளம் என்கிறார். அவருடைய துப்பறியும் நாவல்கள் அல்லது சினிமா வசனங்களை வைத்து அவைதான் அவருடைய வெளிப்பாடு என்பவர்கள் அவரை அவமதிக்கிறார்கள் என்று சொல்கிறார்.

கடலூர் சீனுவின் கருத்துக்கு அவர் பொறுப்பேற்கலாம். நான் நீங்கள் என்னிடம் பேசியிருக்கும் ஒரு தரப்பை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.

உங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களுக்கு நான் திரும்பத் திரும்ப நாற்பதாண்டுகளாக விளக்கம் அளித்து வருகிறேன். இந்த தளத்திலேயே ஐம்பது கட்டுரைகளுக்குமேல் உள்ளன. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் என்னும் நூல் எழுதியுள்ளேன். வணிக இலக்கியம், வாசிப்பின் வழிகள் போன்ற நூல்கள் வழியாக தொடர்ச்சியாக என் விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். காணொளிகூட வெளியிட்டிருக்கிறேன்

நீங்கள் அவை எவற்றையும் படிக்கவோ கேள்விப்படவோ இல்லை என நினைக்கிறேன். மிகத்தொடக்கநிலை வாசகர். அப்படி அறிமுகமான பலர் பின்னாளில் நல்ல எழுத்தாளர்கள்கூட ஆகியிருக்கிறார்கள். ஆகவே நான் திரும்பத் திரும்ப சலிக்காமல் பதிலளித்து வருகிறேன். தமிழ்ச்சூழலில் வேறுவழியே இல்லை.

இலக்கியவிமர்சனம் சார்ந்த எந்த ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும் உடனே தமிழில் இருந்து சில குரல்கள் எழுந்து வரும். அவையே உங்கள் கடிதத்திலும் உள்ளன. அவை:

  • இலக்கியம் என்றால் என்ன என்று எவரால் சொல்லமுடியும்? அவரவர் ரசனை அவரவருக்கு. ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்குப் பிடிப்பதில்லை. ஒருவர் ஒன்றை உயர்வாக நினைக்கிறார். இன்னொருவர் இன்னொன்றை உயர்வாக நினைக்கிறார்.
  • சில எழுத்துக்கள் தொடக்கநிலை வாசிப்புக்குரியவை. எளிமையானவை. அவற்றை ஏன் நிராகரிக்கவேண்டும்?
  • இதுதான் இலக்கியம் என்று சொல்லும் ஒருவர் அதிகாரத்தை உருவாக்கிக்கொள்கிறார். அதை ஏற்கமுடியாது.
  • இலக்கியத்தை வாசித்தால்போதாதா, எதற்கு கருத்து சொல்லவேண்டும்? ஒரு படைப்பு நன்றாக இல்லை என்று சொல்ல நாம் யார்?

இவை எல்லாமே இலக்கியவிமர்சனம் என்னும் மாபெரும் அறிவுத்துறை ஒன்று இருப்பதே தெரியாத பாமரர்களால் சொல்லப்படுவன. பாமரர்களுக்கு அறியாமை அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கை உண்டு. அதை உடைப்பதும் எளிதல்ல. மோதிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

இலக்கியம் என்றால் இன்னது என ‘அறுதியாக’ எவரும் சொல்லிவிட முடியாது. ஆனால் அதை வரையறுக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கிய விமர்சகர்களும் அறிஞர்களும் முயன்றபடியே இருந்தாகவேண்டும். ஓர் இலக்கிய விமர்சகர் முன்வைப்பது அவருடைய கருத்தைத்தான். தீர்ப்பை அல்ல. அதை அவருக்கு நிகரான இன்னொரு இலக்கிய விமர்சகர் மறுப்பார். அப்படி ஒரு விவாதம் உருவாகும். அந்த வகையான விவாதங்கள் வழியாக ஒட்டுமொத்தமாக ஒரு கருத்து திரண்டு வரும். முரண்பாடுகள் வழியாக உருவாகும் சமரசப்புள்ளி அது. அப்படித்தான் ஒரு சமூகம், ஓர் அறிவுச்சூழல் தனக்கான அறிவுமதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்கிறது. தனக்கான பெரும்படைப்புகளை- கிளாஸிக்குகளை- அடையாளம் கண்டுகொள்கிறது.

‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்’ என ஒரு வரிசையை பாரதி உருவாக்குகிறார் அல்லவா, அது இலக்கியவிமர்சனப் பார்வைதான். அதில் நான் கபிலரைச் சேர்த்துக்கொள்வேன். நம்மாழ்வாரையும் சேர்த்துக்கொள்வேன். அப்படித்தான் பல்லாயிரம் கவிஞர்களில் இருந்து நம் மொழியின் தலையாய கவிஞர்கள் இவர்களெல்லாம் என்ற பொதுவான கருத்து திரண்டு வருகிறது. ஒரு பட்டியல் உருவாகிறது. இது நிகழாத மொழியில் இலக்கியம் இல்லை என்றே பொருள்.

‘எல்லாமே இலக்கியம்தான், கம்பனை ஒருவர் பெரிய கவிஞர் என நினைக்கிறார், கூளப்பநாயக்கன் காதல் எழுதிய சுப்ரதீபக் கவிராயரை ஒருவர் மேலாக நினைக்கிறார். அவரவர் ரசனை அவரவருக்கு’ என்று நம் மரபில் எவரும் சொன்னதில்லை. கம்பன் கம்பன்தான். சுப்ரதீபர் அவருக்கு எவ்வகையிலும் இணை என அடிப்படை அறிவுடையோர் சொல்ல மாட்டார்கள். அந்த ரசனைபேதத்தை உருவாக்கவே  இலக்கிய அழகியல், இலக்கிய விமர்சனம் எப்போதும் முயல்கிறது.

ஒருவர் ஒன்றை ரசிக்கும்போது பலவற்றை நிராகரித்தே அதைச் செய்யமுடியும். சாதாரணமான சாப்பாட்டிலேயே கூட அதுதான் நிகழும். இந்த உணவகம் சுவையானது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? பலவற்றுடன் ஒப்பிட்டு அவற்றை நிராகரித்து  இதை முன்வைக்கிறீர்கள். சோற்றில் ரசனை பார்ப்போம் அறிவில் ரசனை தேவையில்லை என்கிறீர்களா என்ன?

இலக்கியம் ஒன்று அல்ல. பல படிநிலைகள் உள்ளன. பொதுரசனைப் படைப்புகள் உள்ளன. அவை கேளிக்கைநோக்கம் கொண்ட படைப்புகள். அவற்றிலேயே படிநிலைகள் உள்ளன. அந்தவகையில் நாஞ்சில் பி.டி.சாமியும் ராஜேஷ்குமாரும் ரமணி சந்திரனும் கீழ் நிலை. கல்கியும் சுஜாதாவும்  மேல் நிலை. வணிக எழுத்து இலக்கியம் இரண்டும் வேறுவேறு என்றால் கோபித்துக்கொள்பவர்கள்கூட நாஞ்சில் பி.டி.சாமியும் சுஜாதாவும் ஒன்று என்று சொன்னால் சண்டைக்கு வருவார்கள். ரசனை என்பதே தரம்பிரிப்பதைச் சார்ந்து செயல்படுவதுதான்.

இலக்கியம் பொழுதுப்போக்கு வாசிப்புக்கு  அப்பாலுள்ள இன்னொரு களம். அங்கேயே வேறுபாடுகளுண்டு. மேலாண்மை பொன்னுச்சாமியும் சு.சமுத்திரமும் இலக்கியவாதிகள்தான், ஆனால் அவர்கள் ஒரு நிலை. பல படிகள் மேலேதான் சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும். இந்த வேறுபாட்டைத்தான் இலக்கிய விமர்சகன் உருவாக்கிக்கொண்டே இருக்கிறான். இந்த வேறுபாடு வழியாகவே நாம் இலக்கியத்தை ரசிக்கிறோம். எல்லாரும் ஒன்றே என்பவர் எதையும் ரசிக்கவில்லை.

தொடக்கநிலை எழுத்தை எவரும் ‘நிராகரிப்பது’ இல்லை. அவை இலக்கியம் அல்ல என்றே சொல்கிறர்கள் விமர்சகர்கள். ஏனென்றால் அவையே இலக்கியம் என நினைக்கும் ஒரு நோய்க்கூறு தமிழிலுண்டு. அப்படி நினைப்பவர்கள் அங்கேயே நின்றுவிடுவார்கள். அவை தொடக்கநிலை எழுத்து என்று தெரிந்துகொள்பவரே ரசனையில் முன்னகர முடியும். விமர்சகர் அவரை நோக்கியே பேசுகிறார். முன்னகரும் சாத்தியம் கொண்டவருக்கு விமர்சகரின் அந்த அடையாளம் காட்டல் உதவியானது. முன்னகரும் சாத்தியமே அற்றவர்கள் உண்டு. தொடக்கநிலைக்குமேல் அவர்களின் அறிவும் ரசனையும் வளர்வதில்லை. அவர்கள் வாசிப்பது வெறும் பொழுதுபோக்கு எழுத்து என்றால் அவர்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் அவர்களைக் குறைத்துப் பார்ப்பதாக எண்ணிக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் அவ்வளவுதான் என்பதே உண்மை, அதற்கு ஒன்றும் செய்யமுடியாது.

இப்படி அடையாளப்படுத்துபவனுக்கு அதிகாரம் உருவாகுமா? ஆம் உருவாகும். அறிவதிகாரம் என ஒன்று உண்டு. ஆனால் அந்த அதிகாரம் ஆதிக்கத்தால் உருவாவது அல்ல. ஏற்பினால் உருவாவது. க.நா.சுவுக்குத் தமிழ்ச்சூழலில் ஓர் அறிவதிகாரம் உண்டு. அது அவர் சொன்னதை நுண்வாசகர்களின் நான்கு தலைமுறையினர் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்வதனால் உருவாகும் அறிவதிகாரம்.அப்படி ஓரு விமர்சகனுக்கு அறிவதிகாரம் உருவாகிறது என்று நினைத்தால் அதை தர்க்கபூர்வமாக எதிர்த்து தோற்கடியுங்கள். அவனுடன் விவாதியுங்கள். க.நா.சு அவருடைய காலகட்டத்தில் மிகக்கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். அதைக்கடந்தே அவர் நிலைகொண்டார்.

இலக்கியத்தில் என்றல்ல, கலையிலும் தத்துவத்திலும் தொடர்ச்சியான பரிசீலனையும் மறுப்பும் நிராகரிப்பும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். அது அறிவியக்கத்தின் வழி. சாதாரணமாக வாழ்க்கையிலேயேகூட அதுதான் நிகழ்கிறது. நீங்கள் பயன்படுத்தும் பொருட்களையே எப்படியெல்லாம் பழையவற்றை நிராகரித்து மேலும் பொருத்தமானவற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று பாருங்கள். அறிவியக்கத்தில் நிராகரிப்பு என்பது ஒர் அடிப்படைச் செயல்பாடு. எந்த நிராகரிப்பும் தீர்ப்பு அல்ல. ஒரு தரப்புதான். ஏற்கலாம், மறுக்கலாம். அந்த தரப்பு எப்படி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதே முக்கியம் எல்லா கருத்தும் இங்கே நிகழும் விவாதக்களத்தின் ஒரு பகுதிதான்.

ஒருவர் ஒரு ரசனையை, ஒரு கருத்தை ஒட்டி ஒரு மதிப்பீட்டை கொண்டிருக்கிறார். அதை முன்வைப்பதும் பரப்புவதும் அவருடைய உரிமை. கடமையும்கூட. அதைச்செய்யாதவர் எவருமே இல்லை. இந்த பூமியில் அனைவரும் எது அவர்களுக்குத் தெரியுமோ அதை கற்பித்துக்கொண்டுதான் இருப்பார்கள். எதை அவர்கள் நம்புகிறார்களோ அதை பரப்பியபடியே இருப்பார்கள். அது ஒரு தரப்பு. நீங்கள் அதை ஏற்கலாம், மறுக்கலாம், விவாதிக்கலாம், அல்லது புறக்கணிக்கலாம். அப்படி ஒவ்வொரு தரப்பும் வெளியாகி, அத்தரப்புகள் நடுவே நிகழும் விவாதம் வழியாகவே ரசனையும் சிந்தனையும் முன்னகர முடியும்.

இதெல்லாமே எதையாவது கற்றுக்கொள்ளும் தன்மையும், முன்னகரும் வாய்ப்பும் உடையவர்களை நோக்கி மட்டும் பேசப்படுவன. எஞ்சியோர் அக்கறை கொள்ளவேண்டியதில்லை. அவர்கள் விரும்பியதை வாசித்து மாறாவட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்க என்ன தடை?

ஜெ

முந்தைய கட்டுரைதாரா செரியன்
அடுத்த கட்டுரைபிள்ளைகளுக்காக நாம் ஏன் வாழ வேண்டும்?