இந்தியா என்னும் மோசடிக்களம்

ஆசிரியருக்கு,

நண்பர் சிவாவின் கடிதம் (ஒவ்வாமையெனும் உயர்நிலை) நமது இன்னொரு இழி முகத்தைக் காணத் தவறி விட்டது, விரைவில் அவர் அதையும் தரிசிக்கட்டும். உலக இணைய குற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பு தான் அது. இவை இந்தியாவுக்குள் மற்றும் இந்தியாவில் இருந்து இயங்கி வெளிநாட்டு மக்களை ஏமாற்றுவது வரை நடக்கிறது. நாம் இன்று நைஜீரியாவை முந்தி விட்டோம். வட மாநில மோசடிக் கும்பல் அளவுக்கு தமிழகத்தில் இல்லை என்பது ஒரு ஆறுதல். வெளிநாட்டில் நமக்கு இப்படி ஒரு அவப் பெயர் இருப்பதை இங்குள்ள ஊடகங்கள் வெளியிடுவது இல்லை.

நான் பார்த்த வரையில் உள்நாட்டு இணைய மோசடி கும்பலின் நிபுணத்துவம் கூடிக் கொண்டே இருக்கிறது. இன்று இணைய மோசடி பற்றி அறியாத மக்கள் இருப்பது அரிது, இருந்தும் இழப்போர் எண்ணிக்கையும் அவர்கள் இழக்கும் பணமும் மிகுதி. இது எப்படி நிகழ்கிறது. நான் கையாண்ட வழக்குகளை வைத்துப் பார்த்தோம் என்றால் இந்த ஆறேழு ஆண்டுகளில் இந்த மோசடி மூன்று கட்ட பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

முதலில் இருந்தது ஆசையைத் தூண்டுவது. அதாவது உங்களுக்கு பரிசு விழுந்து உள்ளது என்றோ, வெளிநாட்டு நிதி வருகிறது என்று செய்தி அனுப்பி அதைப் பெற மோசடியாளரின் வங்கியில் வைப்பீடு செய்ய சொல்லி ஏமாற்றுவது. ஏமாளிகளின் வாங்கி கடவு எண்ணையும் பெறுவார்கள். இது அரைமணி நேரத்தில் நடந்து முடியும். தற்போது வழக்கொழிந்து விட்டது.

கடந்த ஓராண்டாக உள்ள முறை அச்சுறுத்தல். காவல்துறை அதிகாரி போல உங்களை அழைத்து உங்கள் வங்கி எண்ணை சரியாக சொல்லி உங்கள் எண் பயங்கரவாத செயல்களுக்கு பயன்பட்டு உள்ளது என கூறுவார்கள். பேசுவோர் பெரிதும் ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஹரியானா வை சேர்ந்தவர். ஹிந்தி செய்தித் தாளில் வெளியாகி உள்ளது உண்மையான கைதை படம் எடுத்து அனுப்புவார்கள். உங்கள் பெயரில் தில்லி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது போன்ற பிடியாணையை வாட்ஸ்அப்பில் அனுப்புவார்கள். காவலர் சீருடை அணிந்து காணொளியில் வந்து முரட்டுவார்கள் நேரில் மும்பை வரச் சொல்லுவார்கள். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் செலுத்த சொல்வார்கள். இது இரண்டு நாட்களில் நடந்து முடியும். இது குறைந்து கொண்டு வருகிறது.

இப்போதுள்ள நவீன ஏமாற்று முறை என்பது புகழ்ச்சி. ஏற்கனவே உள்ள அசல் நிறுவனங்களை போலி செய்து ஒரு இணையதளம், ஒரு இன்ஸ்டா குழு துவங்கி உங்களை அணுகுவார்கள். நீங்கள் அவர்களின் தயாரிப்பை வாங்கியதாகவும் அது சிறப்பாக உள்ளதாகவும் ஒரு திருப்தி அடைந்த நுகர்வோர் போல புகழ்ந்து எழுத வேண்டும். அதை அவர்களே எழுதித் தருவார்கள். ஒரு மறு மொழிக்கு இவ்வளவு என கட்டணம் தருவார்கள். பின்னர் உங்கள் மொழி சிறப்பாக உள்ளது எனக் கூறி உங்களை கற்றோர் நிலைக்கு உயர்த்தி விட்டதாக கூறுவார்கள். அதற்கு நீங்கள் வைப்பீடு செய்ய வேண்டும். உங்களை ஒரு இன்ஸ்டா குழுவில் சேர்ப்பார்கள் அதில் 50 பேருக்கு மேல் இருப்பார்கள். அவர்களிடம் இன்ஸ்டா வில் உரையாடலாம். இதில் இணைய லட்ச கணக்கில் வைப்பீடு, ஊதியம் இது போல இரு மடங்கு என்பார்கள். நீங்கள் பணம் செலுத்தியவுடன் அனைத்தும் முடிந்துவிடும். 15 நாட்கள் வரை இதில் நீங்கள் நீடிக்க வாய்ப்பு உண்டு. இதில் உள்ள சிறப்பம்சம் என்பது இந்த நிறுவனம் பொதுமக்களை ஏமாற்றி பெரும் அளவு சம்பாதிக்கிறது அதற்கு சட்ட ரீதியாக உள்ள இடைவெளியை பயன்படுத்துகிறது என உங்களை நம்ப வைக்கும். நீங்களும் ஒரு கூட்டாளியாக இருந்து துர் லாபத்தில் பங்கு பெறலாம் என உணர வைப்பது. அதாவது ஏமாற்றுபவர்கள் ஏமாற்றுவதில் பங்கு பெற்று சம்பாதிக்கிறார்கள் என நம்புகிறார்கள். போலி நிறுவனம் உங்களை, உங்கள் மொழியை, புத்திசாலித் தனத்தை நம்பும்படி புகழும். இந்த போதையில் ஒரு வாரம் வரை வைத்திருக்கும். இன்ஸ்டா குழுவில் உள்ள அனைவரும் ஒருவர் உருவாக்கிய போலி நபர்கள். போலி நபர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். எல்லோரும் உங்களுக்கு பதில் அளிப்பார்கள். இந்த மோசடி கும்பல் உறுப்பினர்கள் படித்த இளைஞர்கள், இது மோசடி பணி எனத் தெரிந்தே பணி செய்கிறார்கள். ஈட்டிய ஊதியத்தில் குடும்பம் நடத்துகிறார்கள்.

இந்த வகை மோசடி இதுவரை இல்லாத அம்சம் ஒன்றைக் கொண்டுள்ளது. உங்களுக்கு முன்பே பணம் தருவது தான் அது. 10,000 க்குள் வைப்பீடு பெற்று 25,000 வரை முதலில் ஊதியம் தருவது. நீங்கள் நம்பும் வாய்ப்பு மிக அதிகம். ஆனால் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் பணம் செலுத்துபவர் உங்களைப் போன்ற சக ஏமாளி. அதாவது வேறு வேறு கணக்கில் இருந்து பணம் வரும், நீங்கள் செலுத்தும் போது கணக்கு ஒன்றே. உங்களை புகழ்வது, நீங்களும் மோசடி மூலம் பங்குதார் ஆகி பொது மக்களின் பணத்தை புத்திசாலித் தனமாக பாதுகாப்பாக பெறுகிறீர்கள் என நம்ப வைப்பது, இன்ஸ்டா குழுவில் பலர் இருபது போல தோற்றம் காட்டுவது, வைபீடுக்கு மேல் ஊதியம் இது எல்லாம் சேர்த்து தூண்டில் போட்டு அதற்கு கீழ் வலையும் விரிப்பது போல. உங்கள் வாய் தூண்டிலில் கால் வலையில் மாட்டிக் கொள்ளும்.

வங்கி அதிகாரிகள் இப்படி மோசடி கணக்கு துவக்கவும் உங்கள் வங்கி விபரத்தை கசிய விடுவதிலும் உதவியாக உள்ளார்கள். குற்றவாளி வெளி மாநிலத்தில் உள்ளார் என்பதால் காவல்துறை மந்தமாக செயல்படும், கூடுமானவரை உங்கள் புகாரை தட்டிக் கழிக்கும். எந்த மோசடியிலும் மாறாத செயல் என ஒன்று உண்டு. நீங்கள் கைபேசி மூலம் ஒப்புதல் தராமல் இது நிகழ்வது இல்லை. பொதுமக்கள் இதை அறிந்தே ஒப்புதல் கொடுக்கிறார்கள்.

இப்போது இந்த இந்திய இணைய மோசடிதாரர்கள் வெளிநாட்டினரிடம் செய்யும் மோசடிக்கு வருகிறேன். பெரும்பகுதி இந்திய வம்சாவெளியினர் பலியாகிரார்கள், வெள்ளை இனத்தவரும் பெருமளவில் ஏமாறுகிரார்கள். இவர்களை பிடிக்க இந்திய அரசு பெரிதாக உதவுவது போல தெரியவில்லை. ஹிதேஷ் மதுபாய் படேல் வழக்கு ஒரு உதாரணம். இவர் இந்தியாவில் கைதாகி ஜாமீனில் வந்து வெளியில் வந்து தலைமறைவானவர். பின்னர் சிங்கப்பூர் சென்றபோது அமெரிக்க வேண்டுகோள் படி கைது செய்து அமெரிக்கா அனுப்பப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றார்.

இது ஒரு சுய விமர்சனம் தான். ஆனாலும் இந்தியா முழுக்க 15 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்த வகையில் நான் உணர்ந்த ஒன்றை சொல்ல முடியும். ஒரு சாதாரண இந்தியன் நல்லவன் தான், தோழமை உடையவன் தான், ஏமாற்றும் நோக்கில் அன்பு செலுத்துபவன் அல்ல. இதை மெல்போன் சிவா பயணித்து உணர்வாராக.

1. ஹிதேஷ் மதுபாய் படேல் வழக்கு
https://www.justice.gov/opa/pr/owner-and-operator-india-based-call-centers-sentenced-prison-scamming-us-victims-out-millions

2. இந்தியா இணைய மோசடி மையம் எனும் கட்டுரை

https://www.google.co.in/amp/s/globalvoices.org/2023/11/10/how-indias-increasing-online-scams-are-threatening-the-digital-landscape/amp/

கிருஷ்ணன், ஈரோடு.

அன்புள்ள கிருஷ்ணன்,

உங்கள் கடிதத்தில் இருந்து நான் மூன்று சிந்தனைகளைச் சென்றடைகிறேன்.

முதல் சிந்தனை, இத்தகைய செய்திகள் ஏன் நம் இந்திய இதழ்களில் வெளிவருவதில்லை? அரசு தடுக்கிறதா? அரசுக்கு எதிரான பலநூறு செய்திகள் வந்துகொண்டுதானே உள்ளன? அரசுக்கு எதிரான செய்திக்குத்தானே உண்மையில் செய்தி மதிப்பு? எவர் தடுக்கிறார்கள்? உண்மை என்னவென்றால், இவை செய்தி ஊடகங்களால் தற்கட்டுப்பாடு செய்யப்படுகின்றன. ஏன்?

செய்தி என்பது இன்று ‘அறிவு’ மட்டும் அல்ல. அது ஒரு வணிகப்பொருள். ஆகவே அது ஒரு கேளிக்கைப்பொருளும்கூட. வாசகர்கள் மகிழவேண்டும், அப்போதுதான் செய்திக்கு விற்பனை மதிப்பு அதிகம். ஆகவே நம்மை மகிழ்விக்கும் செய்திகளே வெளியிடப்படுகின்றன. கொடிய செய்திகளைக்கூட வாசகர்களின் அகம் ஒரு தலைகீழ் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறது. தன்னுடைய எதிர்ப்பு, அச்சம், பதற்றம் ஆகியவற்றை செய்தியாக காணவிழைகிறது, கண்டால் மகிழ்கிறது. ஆனால் தன் குறைகளைச் சுட்டிக்காட்டுவதை, உண்மையான குறைகளைச் சொல்வதை விரும்புவதில்லை.

நண்பர் எழுதிய கடிதத்திலுள்ள ஒரு பார்வையை நம் ஊடகங்கள் வெளியிடமுடியாது – வாசகர்கள் கொதித்துவிடுவார்கள். நம் தூய்மையின்மை, கட்டுப்பாடின்மை, நேர்மையின்மை பற்றி ஊடகம் பேசவே முடியாது. என்ன காரணத்தால் ஒரு வணிக சினிமா அதையெல்லாம் பேசமுடியாதோ அதே காரணத்தால்தான். ஏற்பு கிடைக்காது, எதிர்ப்பு வரும்.

நம் பெருமிதங்களை ஊக்குவிக்கும் போலிச்செய்திகளுக்கு ஊடகங்கள் அளிக்கும் மதிப்பைப் பாருங்கள். தமிழின் தொன்மை, இந்துமதப்பெருமை, இந்தியாவின் தொன்மையும் முதன்மையும் போன்ற செய்திகள் வாசகர்களால் உணர்ச்சிகரமாக வரவேற்கப்படுகின்றன. இந்துமுஸ்லீம் ஒற்றுமை, ஏழையின் நேர்மை, சாமானியர்களின் மனசாட்சி வெளிப்பாடு, பெரிய மனிதர்களின் கருணை மற்றும் பெருந்தன்மை, போட்டியிடும் பெரியமனிதர்களின் பரஸ்பர நட்பு போன்று நம்மால் போலிநெகிழ்வுடன் வரவேற்கப்படும் பல செய்திகள் உண்டு. ஊடகங்களின் செய்திக்கட்டுரைகள் அந்த தலைப்புகளிலேயே திரும்பத் திரும்ப அமையும்.

ஊடகம் உலகம் முழுக்க அப்படித்தான். அமெரிக்க ஊடகம் அமெரிக்கா உலகின் தலைமைவகிக்கும் நாடு என்னும் பெருமிதத்தை ஒட்டியே செய்தி வெளியிடமுடியும். ஏனென்றால் அமெரிக்காவின் பொதுச்சிந்தனையே அதுதான். அந்த தேசம் கல்விமுறை வழியாக உருவாக்கியிருக்கும் அடிப்படை நம்பிக்கை அது. ஐரோப்பா உலகை ‘காட்டுமிராண்டித்தன’த்தில் இருந்து காப்பாற்றியது என்பதே ஐரோப்பியப் பொதுநம்பிக்கை. அதையொட்டியே அங்கே செய்திகள் அமைகின்றன. அறிவுஜீவிகள் சிலரே மாற்றியோசிக்க முடியும். நம்மைப்போல சிறு வட்டத்திற்குள்.

இந்த பொதுநம்பிக்கைகளை எதிர்கொண்டு, விமர்சிக்கவும் இடித்துரைக்கவும் கூடிய ஆற்றல் கொண்டவர்களே அரசியல்தலைவர்கள் (statesman) மற்றவர்கள் அரசியல்வாதிகள் (politicians) பெரும்பாலும் நம் அரசியல்வாதிகள் பொதுமக்களாகிய நம் போலிப்பெருமையை, தன்முனைப்பை விசிறிவிட்டுத்தான் நம்மை கவர்ந்து வாக்குகளைப் பெறுகிறார்கள். அரசில்தலைவர்கள் மக்களை கவரமுடியல்வதில்லை, அவர்களை வழிநடத்துகிறார்கள். மக்கள் விரும்பாதவற்றைச் சொல்லவும் மக்களைக் கண்டிக்கவும் தயங்குவதில்லை. காந்திக்கும், நேருவுக்கும் அரசியல்தலைவர்களுக்குரிய நிமிர்வு இருந்தது. இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடுக்கும் காமராஜுக்கும் இருந்தது.

நாம் நம்மைப் பார்க்க ஆரம்பிக்கையிலேயே நம் குறைகளிலிருந்து விடுபட தொடங்குகிறோம். தன்விமர்சனம் போல ஆக்கபூர்வமான சிந்தனை வேறில்லை, எவ்வளவு கசப்பாக இருந்தாலும். தற்பெருமிதம் போல தேங்கவைக்கும், அழிக்கும் சிந்தனையும் வேறில்லை.

*

ஆன்லைன் மோசடிகளின் விளைநிலமாக இந்தியா ஆகியிருப்பதைப் பற்றிச் சொன்னீர்கள். பலர் இதை சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். குறிப்பாக வட இந்தியாவில் ஆன்லைன் மோசடிக்காக கிராமங்களே இயங்குகின்றன. சட்டம் ஒன்றும் செய்வதில்லை. அரசியல்வாதிகள், காவல்துறையின் பங்கும் பாதுகாப்பும் அதிலுள்ளதே காரணம். நீண்டகாலமாக இந்தியாவுக்குள் இவர்கள் மோசடிகளைச் செய்துவந்தனர். பின்னர் பிறநாடுகளில் குடியேறிய இந்தியர்களிடம் செய்தனர். இன்று உலகுதழுவி இந்தவலை விரிந்துகொண்டிருக்கிறது.

சட்டத்தின் பலவீனம் ஒருபக்கம். இதைச்செய்ய எந்த மனத்தடையும் இந்தியர்களாகிய நமக்கு இல்லை என்பதே மேலும் முக்கியம். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை சகித்துக்கொள்ள ஆரம்பிக்கையிலே நம்முடைய நேர்மையும் இல்லாமலாகிறது. ஊழல் என்பது அரசியல் அல்லது அரசு சார்ந்தது அல்ல. அது மொத்தச்சமூகத்தின் மனநிலையாக ஆகிவிடக்கூடியது. நோய் அரசியலில் இருந்து அடிமட்டம் வரை பரவுவது. அதன் இரைகளும் மக்களே. ஊழல்  என்பது அரசியலின் இயல்பான ஒருபகுதி என பசப்பும் கூலி அறிவுஜீவிகள் இங்கே தோன்றிவிட்டனர்.

*

நம் சட்டம் இன்று பலநிலைகளில் செயலற்றிருக்கிறது. நம் ஊழல்களை இன்று சட்டம் நினைத்தாலும் தண்டிக்கமுடியாது. ஒன்றுசொல்கிறேன். கேரளத்தில் இருந்து கழிவுப்பொருட்களைக் கொண்டுவந்து தமிழகத்தின் நீர்நிலைகளில் கொட்டிச்செல்கிறார்கள். குமரிமாவட்டத்தின் மிகப்பெரிய பிரச்சினை இது. செய்பவர்கள் குமரிமாவட்டத்தினர். அவர்களை மக்கள் பிடிக்கிறார்கள். ஆனால் சட்டப்படி ஐநூறு ரூபாய் தண்டனை. அதைக்கட்டிவிட்டு மீண்டும் வருகிறர்கள்.

சூழியலை அழிக்கும் எச்செயலுக்கும் இந்தியத்தண்டனைச்சட்டம் சில ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டுமே விதிக்கிறது. நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டலாம். பொது இடங்களை சீரழிக்கலாம். அபராரதத்தை கட்டணமாக எடுத்துக்கொண்டால்போதும். மிகக்குறைந்த கட்டணத்தில் நம் நிலத்தையும் நீரையும் சட்டபூர்வாமக அழிக்கலாம்.

ஆன்லைன் மோசடிகளை சட்டம் மிகக்கடுமையாகத் தண்டிக்கவேண்டும். தண்டனையால் அவை இல்லாமலாகுமா? ஆகாது. ஏனென்றால் மக்களின் மனநிலை அதை ஒரு தொழில் என ஏற்கிறது. ஆனால் கடுமையான தண்டனை என்றால் அதைச் செய்வது செலவேறிய, ஆபத்தான செயலாக இருக்கும். ஆகவே இன்றுபோல ஊரே திரண்டு செய்வது குறையும்.

ஜெ

முந்தைய கட்டுரைஇலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
அடுத்த கட்டுரைபயணம் என்பது அறிதலே