விக்கிப்பீடியா என்னும் உலகளாவிய இணையக் கலைக்களஞ்சியம் பற்றிய அண்மைச் செய்திகளை இணைப்பு அனுப்பியுள்ளேன். நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு நன்கொடை அளிப்பவர். இவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இப்போதும் நன்கொடையாளர்தானா?
பிரபாகர் குமாரசாமி
- பிடிக்கவில்லையென்றால் இந்தியாவில் செயல்பட வேண்டாம்: விக்கிப்பீடியாவுக்கு டெல்லி ஐகோர்ட் கண்டனம்
- தீவிர இடதுசாரிகளால் கட்டுப்படுத்தப்படும் விக்கிப்பீடியாவுக்கு நன்கொடை தர வேண்டாம்: எலான் மஸ்க் வலியுறுத்தல்
- விக்கிப்பீடியா ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல – உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
- அதானி குழுமம் சார்ந்து விக்கிப்பீடியா புதிய குற்றச்சாட்டு
- விக்கிப்பீடியா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்: கிடுக்கிப்பிடி கேள்வி
அன்புள்ள பிரபாகர்,
நான் இன்றும் அனேகமாக ஒவ்வொரு நாளும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துபவன் – ஆங்கில விக்கியை. அது உண்மையாகவே ஒரு மாபெரும் அறிவுக்குவியல். ஆகவே கண்டிப்பாக அதற்கு இன்னும் கொடை அளிப்பேன்.
விக்கி அறிவுக்கும் பொழுதுபோக்குக்கும் ஊடகமே. நான் விக்கியை இசைகேட்கவும் பயன்படுத்துகிறேன். நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடல்களையே கேட்போம். கேட்காத அரிய பாடல்களைக் கேட்க ஒரு வழி உண்டு. விக்கியில் சென்று ஆண்டுவாரியாக சினிமாக்களின் பட்டியலைப் பார்த்து அதில் சொல்லப்பட்டுள்ள பாடல்களை யுடியூபில் தேடிப்பார்ப்பது. நான் ஒவ்வொருநாளும் ஒரு வைரத்தை எடுப்பேன்.
விக்கியின் தொடர்பயனர் என்றவகையில் அதன் எல்லை எனக்குத் தெரியும். ஆண்டுகள், பெயர்கள் ஆகியவற்றை சட்டென்று தேடுவதற்கு அது உதவியானது. ஆனால் கருத்துக்களை அதில் பார்க்கலாகாது. அவை பலசமயம் அறிஞர்களின் கருத்துக்களின் மேற்கோள்கள்தான், ஆனால் பாமரர்களின் கருத்துக்களும் ஊடுருவிவிடுவதுண்டு.
அத்துடன் விக்கிபீடியாவுக்கே முன்முடிவுகளும் உண்டு. உதாரணமாக இந்தியா, இந்திய தத்துவம் ஆகியவை சார்ந்து மேலைநாட்டுக் கல்வியமைப்புகளின் பார்வையே பதிவாகியிருக்கும். மேலோட்டமானவையாக,மெல்லிய எதிர்நிலைபாடு கொண்டவையாக அவை இருப்பது சாதாரணம். மேற்கோள் காட்டப்பட்டுள்ள அறிஞர்களில் பலரும் மிக எளிய ஆய்வாளார்களாக இருப்பார்கள். இதை தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறேன்.
பலரும் விக்கியின் உசாத்துணைகளுக்குள் சென்று பார்ப்பதில்லை. சென்று பார்த்தால் நிறையவேடிக்கைகள் உண்டு. விக்கி கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயத்துக்கும் உசாத்துணைக்கும் சம்பந்தமே இருக்காது. குத்துமதிப்பாக எதையாவது உசாத்துணையாகக் கொடுத்தால்போதும். அப்பதிவை சரிபார்ப்பவரும் இன்னொரு பாமரராகவே இருப்பார். அவர் அந்த நூல்களைச் சென்று பார்க்கவே மாட்டார்.
விக்கியில் எவரும் ‘ஆசிரியர்’ ஆகலாம். எவரும் ‘தொகுப்பாளர்’ ஆகலாம். வெட்டியாக இருந்தால்போதும். இதுவே அதன் மிகப்பெரிய பலவீனம். ஓர் உதாரணம் சொல்கிறேன். ஷெமாவோ என்னும் சீனப் பெண் விக்கியின் ஆசிரியர்- தொகுப்பாளராக தன்னார்வலப் பணியாற்றிக்கொண்டு 2012 முதல் 2022 வரை தொடர்ச்சியாக மத்தியகால ருஷ்ய வரலாறு பற்றி மிகக்கற்பனையான தரவுகளை சீன விக்கிபீடியாவில் ஏற்றிகொண்டே இருந்தார். தன்னை மத்தியகால ரஷ்யவரலாற்றில் மாஸ்கோ பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்று சொல்லிக்கொண்டார்.எந்த ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை. அதைக் கேட்கவும் எவருமில்லை.அவருக்கு இருந்த எல்லா இணைய ஆதாரங்களும் பொய். அவர் எவரென இன்று வரை தெரியாது.
ஷெமோவாவின் வழி இதுதான். ஏற்கனவே உள்ள வரலாற்றுத் தரவுகளை திரித்தும் இணைத்தும் மனம்போனபடி ’அடித்துவிட்டு’ பதிவுபோடுவது. அப்பதிவுக்கு ஆதாரமாக சிக்கலான, மிகப்பெரிய நூல்களையோ இணையப்பக்கங்களையோ சுட்டி கொடுப்பது. அந்த நூல்களையோ பதிவையோ அத்துறையின் ஆராய்ச்சியாளர் மட்டுமே படித்துப் புரிந்துகொள்ள முடியும். சாமானியர்களான பிற விக்கி சரிபார்ப்புநர்கள் அதை அப்படியே ஆதாரமாகக் கொண்டு பதிவை ஏற்றுக்கொண்டார்கள். ஏறத்தாழ 300 பதிவுகளுக்குமேல் அவர் போட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஷெமோவாவுக்கு ரஷ்ய மொழி தெரியாது. ரஷ்யமொழியை தானியங்கி மொழியாக்கம் வழியாக வாசித்து செய்திகளைத் திரட்டியுள்ளார். அவர் போட்ட கற்பனைப் பதிவுகள் பல்லாயிரம் நூல்களில், கட்டுரைகளில் எடுத்தாளப்பட்டன. கல்வி ஆய்வேடுகளில்கூட விக்கி சுட்டியுடனும் இல்லாமலும் அளிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்டபின் ஷெமோவாவின் பொய்ச்செய்திகள் அவர் பெயரிலிருந்தவை மட்டும் அழிக்கப்பட்டன. ஆனால் விக்கியின் பிறமொழிப் பதிவுகளில் அவர் பெயர் சுட்டாமல் அந்தக் கட்டுரைகள் பல்லாயிரம்முறை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
2022ல் தான் அந்த மோசடி வெளிவந்தது. சீன நாவலாசிரியை யிஃபான் ஒரு ரஷ்ய தரவுக்காக விக்கியில் தேடி அதிலிருந்த கற்பனையைக் கண்டு தொடர்ச்சியாஅக தேடி இந்த மோசடியை கண்டுபிடித்தார். ஷெமாவோ தன் பிழையை ஒத்துக்கொண்டு, வெறும் வேடிக்கைக்காகவே அதைச் செய்ததாக சொன்னார். இது ஷெமாவோ மோசடி என அழைக்கப்படுகிறது.
விக்கிபீடியாவை அவநம்பிக்கையுடன் அணுகி வாசிப்பதே சிறந்தது. இன்னொரு இடத்தில் மறுசோதனை செய்துகொள்வது ஆய்வுகளுக்கு நல்லது. நான் மேலதிக உறுதிப்பாட்டுக்காக வேறு கலைக்களஞ்சியங்களை நாடுவேன். பிரிட்டானிகாவே இணையதளத்தில் உள்ளது. அதில் சுருக்கமாக இருந்தாலும் மிக அதிகாரபூர்வமாக தகவல்களும் கருத்துக்களுமே இருக்கும்.
விக்கிபீடியாவில் இருந்து நாம் இணைப்புகள் வழியாக இணையம் அளிக்கும் பலநூறு நூல்தொகைகளுக்கு, இணையதளங்களுக்கு, செய்திகளுக்குச் செல்லமுடியுமென்பது ஒரு வாய்ப்பு. அவற்றில் எவை பயனற்றவை என்பதை தொடர்ச்சியாக ஒரு துறையில் வாசிப்பவர்கள் உணரமுடியும்.
விக்கிப்பீடியாவில் எளிய அன்றாடத்தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை நாம் கலைக்களஞ்சியங்களில் தேடமுடியாது. உதாரணமாக தமிழகத்திலுள்ள எல்லா ஊர்களுக்கும் ஒரு பதிவு உள்ளது. மக்கள்தொகை உள்ளிட்ட தகவல்கள் அதிலுள்ளன. அவை மிக உதவியானவை.
இப்படிச் சொல்கிறேன், மேலோட்டமான முதற்கட்ட வாசிப்புக்கும் சிந்தனையறிமுகத்துக்கும் விக்கி மிகப்பெரிய வாய்ப்பே. எதைத்தேடினாலும் விக்கி வந்து முதலில் நிற்பதனால் அதுவே பொதுவான, பரவலான அறிமுகக்களமாகவும் உள்ளது. ஆனால் கொஞ்சம்கூடுதலாக அறிய விரும்புபவர்கள் கூகுளில் இரண்டு, மூன்று எனக் கீழே வரும் பதிவுகளையே நாடிச்செல்லவேண்டும்.
இடதுசாரிகள் விக்கியில் ஊடுவிவிட்டனரா? அப்படி நான் நினைக்கவில்லை. விக்கியை எவர் வேண்டுமென்றாலும் ஒரு கும்பலாகச் சென்று கைப்பற்றிவிடமுடியும். பழைய பதிவுகளை திருத்த முடியும். எவ்வளவு கடும் உழைப்பில் எவர் செய்த பதிவாயினும் இஷ்டத்துக்கு வெட்டிச்சுருக்கவும், மாற்றியமைக்கவும், அழிக்கவும் முடியும். தமிழ் விக்கிப்பீடியாவில் அதுதான் நிகழ்கிறது. ஒரு சிறு பழமைவாதக் கும்பல் தமிழ்விக்கிப்பீடியாவை கைப்பற்றிச் சீரழித்துக்கொண்டுள்ளது. அவர்களை எதிர்க்க இன்னொரு பெரும்கும்பலாலேயே முடியும். விக்கி பொது ஊடகம் அல்லவா? எப்படி அதில் தமிழகத்தில் எவருக்கும் ஒப்புதல் இல்லாத, மிகப்பழமையான, மொழிநடை ஒரு சிறுகும்பலால் புகுத்தப்படுகிறது? அவர்களின் கருத்துக்களும் முன்முடிவுகளும் எப்படி விக்கியில் நிறைக்கப்படுகின்றன? எப்படி விக்கி பயனற்றதாக ஆக்கப்படுகிறது? அது இப்படித்தான்.
இதே போன்று வெவ்வேறு அரசியல்குழுக்கள் ஆங்கில விக்கியைக் கைப்பற்றிக்கொண்டு பிரச்சார ஊடகமாக மாற்றியுள்ளன. இடதுசாரிகளும் வலதுசாரிகளும் அதிலுண்டு. சில தொழில்நிறுவனங்களும் வணிகவிளம்பர அமைப்புகளும் ஒருங்கிணைந்த முறையில் கணக்குகளை உருவாக்கிக்கொண்டு விக்கிப்பீடியாவை கைப்பற்றியுள்ளன. சில நாடுகளின் அரசுகளே மறைமுகமாக விக்கையை கைப்பற்றிக்கொண்டுள்ளன. நீங்கள் சில பதிவுகளைக் கண்டாலே விளம்பரப்பதிவு என்று தெரியும்.
இன்று உண்மையிலேயே விக்கிபீடியா ஒரு முதன்மையான சவாலை எதிர்கொள்கிறது. விக்கிப்பீடியா தொடங்கப்பட்டபோது அதற்கு ஓர் இலட்சியக்கனவு இருந்தது. அன்று அறிவை உலகப்பொதுவாக்குதல், கட்டற்ற ஊடகம், தொழில்நுட்பத்தை இலவசமாக்குதல் போன்றவை தொழில்நுட்பர்களை கிளர்ச்சிகொள்ளச் செய்த கருத்துக்களாக இருந்தன.குட்டன்பர்க், ஆர்கைவ் போன்ற இணையநூலகங்கள், லினக்ஸ் போன்ற சுதந்திர மென்பொருட்கள் எல்லாம் அதன் விளைவாக உருவானவை. விக்கிபீடியாவும் அதில் ஒன்று. இவற்றில் பங்களிப்பாற்றியவர்கள் அந்த இலட்சியத்தால் கவரப்பட்ட தொழில்நுட்பர்கள், மற்றும் மாணவர்கள்.
இன்று அந்த இலட்சியக்கனவு கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. இன்று விக்கிபீடியாவை அரசியலமைப்புகள், மத இயக்கங்கள், கொள்கைக்குழுக்கள், பலவகையான வணிகநிறுவனங்கள் திட்டமிட்டுக் கைப்பற்றிக்கொள்கின்றன. அவ்வாறு நிகழும் ஊடுருவலை எதிர்கொள்ள விக்கியிடம் எந்த தயாரிப்பும் இல்லை. அதன் கட்டமைப்பே அதற்கு உதவாதது. பதிவுசெய்துகொண்ட எவரும் அதில் தகவலிடலாம். விக்கி உறுப்பினர்களாக எவரும் ஆகலாம். அவர்களை பிறர் உள்ளே விட்டால்போதும். அந்த ஜனநாயகத்தன்மையே இன்று அதை அழிக்கும் நஞ்சாக ஆகிக்கொண்டிருக்கிறது.
விக்கி முதன்மை ஊடகமாக ஆகிவிட்டிருக்கிறது. கூகிளில் அதுவே முதலில் வருகிறது. அதன் செய்திகளுக்கு எவர் பொறுப்பு? அதில் குற்றம் நிகழ்ந்தால் எவரை தண்டிப்பது? அது உலகளாவியது. இந்தியாவுக்கு வெளியிலிருந்துகொண்டு இந்திய எதிர்ப்பை அதில் கொட்டமுடியும். எப்படி கட்டுப்படுத்துவது? சர்வாதிகார நாடுகள் மொத்த விக்கியையே தடைசெய்து வைத்துள்ளன. இந்தியா போன்ற ஜனநாயக நாடு அதைச் செய்ய முடியாது.
ஆனால் அரசியலமைப்புகள், மத இயக்கங்கள் போன்றவை மானுடக்குற்றங்களைச் செய்தால் எவரேனும் பொறுப்பேற்றே ஆகவேண்டும். ஒரு தவறான தகவலால் கலவரம் நடந்தால் எவர் பொறுப்பு? ஒரு வணிகநிறுவனம் உள்நோக்கத்துடன் பொய்ச்செய்திகளால் தகர்க்கப்பட்டால் எவர் அதன்பொருட்டு தண்டிக்கப்படுவார்கள்? தேர்தல்களில் பொய்ப்பிரசாரம் வழியாக விக்கி தலையிடுமென்றால் என்ன செய்வது?
விக்கி தன் செய்திகளுக்கு அறிவுத்தகுதிகொண்ட ஆசிரியர்களை நியமிக்கவேண்டும். peer circle உருவாக வேண்டும். ஆனால் இத்தனை லட்சம் பதிவுகளை எப்படி கையாளமுடியும்? அந்த அறிஞர்களை எப்படி தேர்வுசெய்வது, எப்படி ஒருங்கிணைப்பது? அவர்களுக்கான பொதுக்கொள்கை என எதையேனும் வரையறை செய்யமுடியுமா? அப்படியென்றால் அது ஒரு மாபெரும் அறிவுசார் அமைப்பாக இருக்கும். மானுடம் கண்டதிலேயே பெரிய அறிவமைப்பு. எனில் அவர்களுக்கான ஊதியத்தை எங்கே தேடமுடியும்? விக்கி இப்போதே நிதிக்கொடைகளால் ஓடும் அமைப்பு.
இன்று சாட்ஜிபிடி போன்ற ’தானியங்கித் தகவல்திருட்டு மென்பொருட்கள்’ (அல்லது தகவல்திரட்டிகள்) விக்கி போன்று பொதுவெளியில் கிடைக்கும் செய்திகளையே திரட்டி அளிக்கின்றன. அதாவது விக்கியில் செயற்கையாக பொய்ச்செய்திகளை கொட்டினால் அவற்றை சாட்ஜிபிடி அள்ளி தொகுத்து அளித்துவிடும். அது விக்கியை குறிப்பிடாமையால் அது விக்கி செய்தி என நமக்குத் தெரிவதில்லை. சாட்ஜிபிடி விக்கி, பிரிட்டானிகா எல்லாவற்றையும் சமமாகக் கண்டு குழப்பி சுருக்கி அளிக்கிறது
(செயற்கை அறிவு என்பது மிக அபத்தமாக தனியங்கித் தகவல் திருட்டுக்கு அந்நிறுவனங்களே சூட்டிக்கொண்ட பெயர். அப்பெயர் உருவாக்கும் குழப்பம் இணையத்தில் உள்ள தகவல்பெருக்கு, அதை தொகுக்கும் முறை ஆகியவற்றைப் பற்றிய அறிவில்லாத பாமரர்களிடம் பெரிய கிளர்ச்சியை உருவாக்குகிறது)
இச்சூழலில் விக்கி ஏதோ ஒரு தரவுக்களஞ்சியம் என இருந்துவிடமுடியாது. ஆகவேதான் அரசுகள், வணிகநிறுவனங்கள் எல்லாம் அதை அஞ்சத் தொடங்கியுள்ளன. அதை எவ்வகையில் கட்டுப்படுத்துவது, பொறுப்பேற்கச் செய்வது என்பது பெரிய கேள்விதான்
ஜெ