கடம்பவனங்கள் – கடலூர் சீனு

இனிய ஜெயம்

சார் நாம பாக்காத இன்னொரு கோயில் இங்க இருக்குசாலை ஓரம்  ஸ்கூட்டரை போட்டு விட்டு நெய்வேலி வழியே வடலூர் செல்ல மேப்பை கிண்டிப் பார்த்துக்கொண்டிருந்த இதயதுல்லா சொன்ன இடம் எறும்பூர். சிதம்பரம் அருகே புவனகிரியில் இருந்து சேத்தியாதோப்பு கூட்ரோடு வழியே விருத்தாசலம் திரும்பும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் சென்றால், இடதுபுறம் இரண்டு கிலோமீட்டரில் வரும் சிறிய கிராமம் அது.

மைய்ய சாலையை விட்டு எறும்பூர் கிராம சாலைக்குள் நுழைந்தோம். சிதம்பரம் தொட்டு விருத்தாசலம் தொடர்ந்து பண்ருட்டி கெடிலம் என தொடர்வது ஏரி பாசனம் வழியே நிறைவான நெல் விவசாயம். இதில் பண்ரூட்டி நெய்வேலி பகுதி செம்மண் நிலம் சார்ந்து பெரும்பாலும் முந்திரி பலா விவசாயம் நடக்கும். இங்கே ஏரி பாசனம் வழியே விவசாயம் நடக்கும் ஊர். பெரும்பாலும் சற்று முன்னர் அறுவடை முடிந்த வயல்கள். ஒரு பெரிய ஆல மரத்தின் கீழ் அய்யனார் கோயில். கடந்தால், பெரிய நீர் வற்றிய ஏரி. உள்ளே உழுது விவசாயம் நடந்து, மாலை 4 மணி வெயிலில், அரை அடி உயர வெல்வெட் நாற்று கம்பளம் விரிக்கப்பட்டு பச்சை வாசனை வீசியது. உள்ளே எங்கோ அது நான் அறிந்த பெண் உடல் வாசனையுடன் இணைந்து உன்மத்தத்தைக் கிளர்த்தியது

கடந்தால் நூறு வீடுகளுக்குள் இருக்கும் சிறிய கிராமம். மையத்தில் கால் ஏக்கர் அளவு விரிந்த விளிம்புகள் உடைந்த, கலங்கலான நீர் பாதி நிறைந்த குளம். அருகே மங்கிய சந்தன வண்ண நான்கடி உயர காம்பவுண்டு சுவரில் உதிர்ந்தது போக மிச்சமாக சிகப்பு எழுத்துக்களில் அருள்மிகு கல்யாணசுந்தரி கடம்பவனேஸ்வரர் கோயில் எறும்பூர் என்று கண்டிருந்தத்து. கீழே கோயில் திறக்கும் மூடும் மற்றும் விசேஷ பூஜை நேரங்கள்.

கால் ஏக்கர் சதுரத்தை நிறைந்த தோட்டத்தின் நடுவே அமைந்த சிறு கோயில். காம்பவுண்டு தாண்டி, இடது புறம் உயரமான நான்கு தூண்கள் நெருக்கமாக நிற்கும் நடுவே நாவிலிருந்து நிலம் தொட வடக்கயிறு தொங்கும் காண்டாமணி கொண்ட மண்டபம். வலதுபுறம் சன்னதி ஏதும் இன்றி தனியே நிற்கும் கால பைரவர், கடந்தால் சிறிய மண்டபத்தில்  தம்பதி சமேதராக காட்சி அளிக்கும் நவ கிரகம். வடக்கு பகுதியில் சன்னதி ஏதும் இன்றி நிற்கும் 4 அடி உயர, அபய வரத கரம் கொண்ட மகேஸ்வரி, அடுத்து (பிற்காலம் வந்ததாக இருக்கலாம்) மயில் மேல் ஆறுமுகன், அருகே மகுடம் உடைந்த நின்ற நெடுமால் விஷ்ணு, அடுத்து தூரிகை கொண்டு எழுதியது போல மிக அழகிய சூரியன், தெற்கு பக்கம் சிறிய விநாயகர் சந்நிதி. அதாவது ஷன்மதக் கடவுளரும் நின்றருளும் தலம்.

சுற்றி வந்து கோயிலை கண்டால், 12×12 அளவு அடித்தளம். (தளம் போட்டு புதைக்கப்பட்ட உபான வரி) ஜகதி வரி, குமுத வரி, கண்ட வரி, பட்டிகை வரி என அமைந்த பாத பந்த ஆதிட்டானம் மேல் எழுந்த, அரை தூண் வடிவங்களால் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்ட பாத வர்க்கம். நடு பகுதியில் தூண்கள் தாங்கும் பஞ்சார அணிகள் ஏதும் அற்ற, நின்ற நெடிய செவ்வக கோஷ்டம். தூண்கள் உச்சியில் சதுர அமலகம் மேல் அமைந்த, பலகை மேல் அமைந்த நான்கு திசை தரங்க போதிகை மேல் அமைந்த கபோதம் மேல் எழுந்த கண்டம் மேல் கவிழ்த்திய அரை வட்ட வடிவ வேசர விமானம். நான்கு திசையும் நோக்கும் சிற்பங்கள் ஏதும் அற்ற பஞ்சார கோஷ்டம். உச்சியில் சிறிய கலசம்  என கருவறை மேல் அமைந்த விமானம்.

8×8 அளவில், மூன்று படிகள் மேல் அமைந்த, துவார பாலகர் ஏதும் அற்ற வாயில் கொண்ட, கருவரையுடன் இணைந்த சிறிய அர்த்த மண்டபம். அதன் முன்னால் சதுர சிமின்ட் தளம் மேல், மையத்தில் உயர்ந்து, இரு புறமும் சரிந்த அலைவரிசை வடிவ தகர கூரை, வலது புறம் சிறிய சன்னதிக்குள் செவ்வாடை கட்டி, கரிய முகத்தில் சந்தனம் எழுதி அணி செய்விக்கப்பட்ட 4 அடி உயர  அழகிய கல்யாண சுந்தரி. அவள் வலது பக்கம் சிறிய கருவறைக்குள் சிறிய சண்டேசர். மண்டபத்துக்கு வெளியே கருவறைக்கு எதிரே சிறிய தகர ஷெட் இல் ரிஷபம். அதன் பின்னால் வினோத சிமின்ட் கொடிமரம். அதி இளைஞனான என்னை விட மூன்று வயது மூத்த, 50 வயது முதியவர் ஒருவர் வந்து, தடவி தடவி பூட்டின் துளையை கண்டுபிடித்து, தடவி தடவி இருக்கும் இரண்டு சாவியில் எது சரியான சாவி என்று தேர்வு செய்து, அதை பூட்டிற்குள் நுழைத்து ரொம்ப நேரமாக ஏதோ செய்தபடி இருந்தார். நானே திருவருட் செல்வர் சிவாஜி கணேச அப்பராக மாறி மணிக்கதவே தாழ் திறவாய் என்று பாடிப் பார்க்கலாமா என்று சிந்திக்கத் துவங்கிய நேரத்தில், தாழ் விலகி கதவு திறந்து, டியூப் லைட் வெளிச்சத்தில், எவர்சில்வர் பட்டை போட்டு, செப்பு ஐந்தலை அரவம் குடை பிடிக்க, கருவறை நிறைந்து கடம்பவனேஸ்வரர் காட்சி தந்தார்.

வணங்கிவிட்டு கோயிலை கடிகார சுற்று சுற்றினால், கருவறையின் 9 மணி பகுதி கோஷ்டத்தில் வீராசனத்தில் அமர்ந்த ஜடா பாரம் கொண்ட, கழுத்தில் கண்டி, மார்பில் முப்புரிநூல் அணிந்த, வலது கையில் சின் முத்திரை காட்டும், (இடது கை மஞ்சள் துணிக்குள்) மிக அழகிய யோக தட்சிணா மூர்த்தி

கருவறையின் நேர் பின்புறம் ஜடா மகுடம் கொண்ட, பின் கையில் மான் மழு ஏந்திய, தியான முகத்துடன், நிமிர்ந்து பத்மம் மேல் பத்மாசனத்தில் அமர்ந்த யோகேஸ்வரன். தமிழ் நிலம் கொண்ட மிக மிக அழகிய படிமைகளில் ஒன்று இது. மாலை மஞ்சள் ஒளி ஏந்தி, பொன் போல ஒளிரும் பாத வர்க்கத்தில், மை போன்ற மேனியில் சந்தன அணி திகழ அமர்ந்திருந்த அவர் கோலம், காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.

3 மணி பகுதியில் யோகேஸ்வரன் எழிலுக்கு சவால் விடும் வகையில் அதே உருவ அமைதியில், வலது மேற் கையில் அக்க மாலையும், இடது மேற் கையில் குண்டிகையும் ஏந்திய, யோகத்தில் அமர்ந்திருக்கும் நான்முகன். மாலை வெயிலில் மேனியின் ஒரு பகுதி ஒளிர, மறு பகுதி நிழலில் அமிழ்ந்து, இதோ இக்கணம் தியானம் முடிந்து எழ போகிறார் எனும்படிக்கு உளமயக்கு அளித்தது அந்த உயிர்த்தோற்றம். 10 ஆம் நூற்றாண்டு சோழக்கலையின் இணையற்ற அற்புதங்கள் இந்த யோகீச சிவனும் பிரம்மனும்.

சும்மா கோயிலை சுற்றி வந்தோம். பாத வர்க்கம் முழுக்க கல்வெட்டுகள். 1966 இல் இக் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்து எல்லா கல்வெட்டுக்களும் படிக்கப்பட்டுமுதலாம் பராந்தகனின் 28 வது ஆட்சியாண்டில் (கி.பி 935) 

வடகரை நல்வயலூர்க் கூற்றத்து தேவதானம், உறுமுர்ச் சிறுத்திருக்கோயில் பெருமான் அடிகளுக்கு, இளங்கோவன் குணவன் அபராஜிதன் என்பான் (அதற்கு முன் செங்கல் கற்றளி இருந்திருக்கும்) ஸ்ரீ விமானக் கற்றளி எழுப்பினான் என்று அறியப்பட்டது. அப்போது இந்த ஊர் எறும்பூர் அல்ல உருமூர். இந்த சிறு கோயில் சிவனார் பெயர் பெருமான் அடிகள்.(இவர் ஈஸ்வரன் அந்தஸ்தை அடையும்போது இந்த கோயில் கடம்ப வனத்தின் மையத்தில் இருந்திருக்கலாம்சுந்தர சோழன், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் எல்லோர் காலத்திலும், விளக்கெரிக்க பொன் கழஞ்சு, அமுது செய்விக்க விவசாய நிலம், சாவா மூவா பேராடுகள் எல்லாம் இந்த கோயிலுக்கு நிவந்தமாக அளிக்கப்பட்டிருக்கிறது. சோழ நிலத்தில் இந்த கோயில் இங்கே இவ்விதம் அமைய முக்கிய காரணம் அருகே உள்ள தர்மநல்லூர் கிராமம்.

எறும்பூரில் இருந்து தர்ம நல்லூர் போக இப்போது வழி இல்லை. மீண்டும் மைய்ய சாலைக்கு வந்து அடுத்து வரும் இடதில் மீண்டும் திரும்ப வேண்டும். மைய்ய சாலைக்கு போகும் வழியில், அய்யனார் கோயிலை நின்று பார்த்தோம். தகர கொட்டாயில் வீராசனத்தில் இடது கை தொடையில் வைத்து, வலது கையில் அருவாள் பிடித்த அமர்ந்திருந்த சிகப்பு வண்ண பிதுங்கு விழிகள் முறுக்கு மீசை அய்யனார் முன்னே இரண்டு காவல் துறை பொம்மைகள். இப்போது உருவாகும் வீர வழிபாடு கோயில் எனில், இவர் வீரப்பன் என்றால் இவர்கள் விஜயகுமாரும் கங்காதரனும் என்றும் அமையக் கூடும் என்று கற்பனை ஓடியது. பின்னால் நின்ற ஆல மரம் உள்ளபடிக்கே பிரம்மாண்டம் என்பதன் நேர் சாட்சி. உள்ளே புகுந்து சுற்றிப் பார்த்தோம். நூறு கால் மண்டபம் போலவே இருந்தது. வெளியேறி சாலை வந்து, மீண்டும் இடது பக்கம் திரும்பி தரும நல்லூர் கிராமம் நுழைந்தோம்.

துவக்கமாக சிறிய பெருமாள் கோயில். தொடரும் வன்னியர் சாதனை டிஜிட்டல் பேனர்கள் பின்னால் கிராமம். அதை தாண்டினால் ஆதி திராவிடர் மாணவர் விடுதி. தாண்டினால் பள்ளி. தாண்டினால் எப்போதும் போல எல்லாவற்றாலும் புறக்கணிக்கப்பட்டோர் வாழும் எல்லை. Jcp இயந்திரம் ஒன்று தனது கரண்டி கையால் பள்ளம் பறித்துக்கொண்டு இருந்தது. எடுத்து எடுத்து போட வந்து விழுந்துகொண்டே இருந்தது களிமண்.

ஆம் இந்த நிலவியல்தான் இந்த நிலத்தை மிக மிக பண்டைய காலம் தொட்டு இன்று வரையிலான விவசாய பூமியாக வைத்திருக்குறது. இங்கு இருந்து சில கிமி தள்ளி ஓடும் அரசிலாறு, பல நூறு ஆண்டு முன்னர் இங்கே ஓடி, அது நகர்ந்து நகர்ந்து இப்போது உள்ள இடத்துக்கு சென்றிருக்கிறது. எனவே இங்கு எங்கே தோண்டினாலும் பத்து அடி வரை விவசாயத்துக்கு உதவும் வண்டல் மண்ணும் அதன் கீழே களி மண்ணும், அதன் கீழே பண்டைய கால ஆற்று மணலும் கிடைக்கும். அப்படி இந்த ஊருக்கு வெளியே பூலான் சேரி பகுதியில் 2003 அன்று பத்தர் தொழிலாளர்கள் பானை வணய மண் அள்ளிய போது சில தொல் பொருட்கள் கிடைத்தன. முதுமக்கள் தாழியின் பகுதிகள் உள்ளிட்டு எல்லாமே சங்க காலத்தை சேர்ந்த தடங்கள். பானை ஓடு ஒன்றில் பொறித்த பெயர் மிச்சம் ம க ன் என்று படிக்க பட்டு அந்த எழுத்தமைதி கிமு 2 முதல் கி பி 2 வரையிலான சங்க காலத்தை சேர்ந்தது என்று சொல்லப்பட்டது. சில பானை குறியீட்டு சின்னங்கள் ஐராவதம் மகாதேவன் அவர்களால் வாசிக்கப்பட்டு அவரது வழக்கப்படி அது சிந்து சமவெளி நாகரீகத்தோடு தொடர்புபடுத்தபட்டது. 2013 இல் இந்த ஆய்வுகள் எல்லாம் அப்படியே இல்லாமல் போய், இதெல்லாம் என்ன ஆனது என்று இன்று வரை யாருக்கும் தெரியாது. முன்னாள் முதல்வர் திரு ஜெயலலிதா செத்தாலும் அது எப்படி என்று தெரியாது, இந்த முதுமக்கள் தாழி என்றாலும் அதுவும் என்னானது தெரியாது. ஊடகம் பெருகி, ஒவ்வொருவரும் செய்தி மழையில் நனைந்து கொண்டிருக்கும் இந்த காலத்தின் வினோதம் குறிப்பிட்ட எந்த செய்தியை தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அதை தெரிந்து கொள்ளவே முடியாது என்பது.

வண்டியை போட்டு விட்டு, பள்ளம் தாண்டி ஊருக்கு வெளியே போனோம். ஊரார்வெளியேபோகும் பாதை அது. ஒரு சிறுவன் இடது கையில் ஏதோ தின் பண்டத்தை வைத்து கொறித்து கொண்டே கக்கா போனபடியே யார்ரா இவனுக என்று எங்களை வினோதமாக பார்த்தான். கடந்து போனால் சோழர்கள் கட்டி நாம் கைவிட்ட ப்ரும்மாண்ட ஏரி ஒன்றில் சென்று பாதை முடிந்தது. ஏரி சுற்றி வர வழி இல்லை. இதுதான் பூலான் சேரி. இங்குதான் எங்கோ அந்த சங்க கால மக்கள் விவசாயம் செய்து, வங்கிழடுகளை முதுமக்கள் தாழிக்குள் வைத்து என்று வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். நீர் குறைந்து ஆனால் வளமான சதுப்பு நிலமாக நின்ற அந்த களத்தின் ஓரம் சற்று நடந்தோம். வசீகரிக்கும் இந்திர நீல வண்ண மீன் கொத்திகள் குறுக்கே பறந்தன. நீர் வெளிக்குள் நாமக் கோழிகள் பொளக் ஒலி எழ மூழ்கி எழுந்து கொண்டு இருந்தன. மாலை பொன் வெய்யில் பொன் பூசிய பாதையில் பொன் பூசிய காட்சிகளை கண்டபடி திரும்பி நடந்தோம் வழியில் எங்கள் பாதையின் குறுக்கே பற்றி எரியும் மஞ்சள் வண்ண தலை கொண்ட மாங்குயில் தத்தி நடந்து எழுந்து பறந்தது. மொட்டை பனை மரம் மேலே, அதன் குழியில் கிளிகள் இரண்டு அமர்ந்திருந்தது. மரம் ஒன்றில் நீண்ட இலைகள் அற்ற மெல்லிய கிளையில், வெண்மை நெஞ்சு கொண்ட கருப்பு மீன் கொத்தி, உண்ட மீன் செரிக்க வேண்டிய தியானத்திலோ, அல்லதுபசிச்ச வயித்துக்கு ஒரு மீனு இல்ல என்னடா தேசம் இதுஎன்ற விசனத்திலோ தலை தாழ அசைவற்று மௌனமாக அமர்ந்திருந்தது.

வெளியேறி விருத்தாசலம் சாலை வழியே, நெய்வேலி வந்து, குருஞ்சிப்பாடி வர பயணத்தை தொடர்ந்தோம். இந்த வரிசையில் ஏரி மீன் கிடைக்கும் அதனால் லாரி ட்ரைவர்களுக்கான மீன் சாப்பாடு கடைகள் உண்டு. வேடிக்கை பார்த்த படியே அந்தி மயங்கும் சாலையில் பயணித்தோம். இடது புறம் நெடுக கருவேல முள் காடு. ஒரு முனையில் காடு முடித்து சட்டென அறுவடை முடிந்த வயல் வெளிகள் விரிந்தது. சாலை நெடுக இடது புறம் வரிசையாக அறுவடை செய்யும் இயந்திர வண்டிகள் வரிசை.வலது புறம் நெடுக குவித்து வைத்த அறுவடை செய்யப்பட்ட நெல் மலைத் தொடர். அதை எடுத்து செல்ல ஓரம் நிற்கும் லாரிகள். நெல் மலைத் தொடர். எத்தனை எத்தனை பசியின் ஈடு இந்த அரிசி. இடையே பலா பழ பாரம் ஏற்றி விரையும் மீன்பாடி வண்டிகள், செம்மறி ஆடுகளை நிரப்பி கொண்டு விரையும் லாரிகள். எல்லாமே உணவு. இவ்வளவும் பசிக்கு உணவு. பசி எனும் அரூபத்தின் ஸ்தூலம் இவ்வுணவு வடிவங்கள். எல்லாமே பசியால் உள்ளிழுக்கப்பட்டு சீரணிக்கப்பட்டுவிடும் இந்த பலாபழ லோடுகள், செம்மறி ஆட்டு லாரிகள், நெல் மலைத் தொடர்கள்.

Nh விட்டு வலது பக்கம் நெய்வேலிக்குள் திரும்பினோம். சிவந்து அடங்கும் சூரியன் ஒளிர வைக்கும் செம்மண் களத்தில் தூரத்தில் ஏதோ சைஃபை பட காட்சி போல அணு மின் நிலையம் ப்ரும்மாண்ட போக்கிகளில் புகை உறைந்து நிற்க, உறைந்து நின்றிருந்தது. நகரம் வந்து பாலம் வழியே nlc கடந்தோம். பாலத்தின் கீழே நெடிய தொடராக கன்வேயர்ல் டன் டன் ஆக நிலக்கரி சென்று கொண்டிருந்தது. கற்பனையிலும் அவன் வடிவை உணர இயலா வேறு ஏதோ ஒரு விஸ்வரூபனின் பசிக்கான உணவு. கால காலத்துக்கு முன்னால் இருந்து பாதாள இருள் உலகில் நெடுங்காலம் காத்திருந்த அவனுக்கான உணவு

இரவு எழுந்த சாலையில் தூரத்தில் பொன் ஒளியில் வள்ளல் பெருமானின் சத்திய ஞான சபை தெரிந்தது. இயல்பாக வயநாடு மக்கள் நினைவில் எழ அவர்கள் ஆன்மா சாந்தி பெறும் பொருட்டு மனதுக்குள் வேண்டிக் கொண்டேன். நிலம் எனும் நல்லாள் தான் கொண்ட பசிக்கு எடுத்துண்ட சிறு உணவு. புவியின் மைய்யத்தில் என்றும் அணையாத அந்த பசித்தீசபை நெருங்க இரவு வானின் பின்னணியில் ஒளி நிறைந்த சபை ஒரு ஜோதி போலவே தெரிந்தது. இங்கிருக்கும் ஒவ்வொரு துளி பசியும் ஒவ்வொரு துளி நெருப்பு. இந்த பூமியின் எல்லா பசியையும் சேர்த்தால்? யாரரிவார் ஒருவேளை அந்த பசித்தீ தான் வடவைத் தீயோ. வடவைத் தீ க்கு எதிராக இங்கே வள்ளல் பெருமான் ஏற்றி வைத்திருக்கிறார் ஒரு அணையாத அடுப்பு. பசிப் பிணி போக்கிய அந்த வள்ளலின் தட்டகத்தில் இன்று அதிகாரப் பசி கொண்ட அரசியல் சழக்குகள். அது தனிப்பெரும் கருணை கொண்ட அருட்பெரும் ஜோதி. அது இந்த சிறுமைகளையும் மன்னிக்கட்டும்

வடலூரில் நண்பரை நடுவீரப்பட்டு அனுப்பி விட்டு கடலூர் பேருந்து ஏறி அமர்ந்து கண்களை மூடினேன். உள்ளே எழுந்தது யோகத்தில் இருக்கும் சிவனின் முகம். யோகத்தில் இருக்கும் பிரம்மனின் முகம். ஓடிசாவில் கண்ட தியானத்தில் அமர்ந்திருந்தவனின் அதே முகம். புத்தனின் முகம்.

முந்தைய கட்டுரைமூன்றுவகை யோகம்
அடுத்த கட்டுரைசுயவிமர்சனம், கடிதம்