நெருங்கிவரும் இடியோசை- கடலூர் சீனு

இனிய ஜெயம்

சமீபத்தில் பௌத்த வேட்கை எனும் தலைப்பில் வெளியான, பௌத்த அறிஞரும் காந்திய செயல்பாட்டாளருமான தர்மானந்த கோசாம்பி அவர்களின் தன் வரலாறு வாசித்தேன். அதில் ஒரு சித்திரம். அவர் சமஸ்க்ருதம் கற்க காசி சென்று தங்குகிரார். 1900 அது. காசியை கடுமையான கொள்ளை நோய் தாக்குகிறது. பிணங்கள் எண்ணிக்கை அதிகரிக்க, சுமக்க ஆளின்றி அவை மொத்தமாக வண்டியில் பொதி என ஏற்றி செல்லப்பட்டு எரியூட்டப் படுகிறது.

கோசாம்பி அந்த நகரை விட்டு தப்பி ஓட விழைகிறார். அவரது நண்பர் அவரை தடுத்து, ” எங்கே ஓடி தப்பிக்க? இங்கேயே இப்படியே சேர்ந்து வாழ்வோம், நோய் வந்தால் சேர்ந்து சாவோம். காசியில் இறக்க முத்தி என்றுதானே எல்லோரும் உயிர் பிரியும் சமயம் இங்கே வர துடிக்கிறார்கள்என்று சொல்ல இருவரும் அங்கேயே தங்கி விடுகிறார்கள். நெருங்கிய நட்பு வரை மரணம் பறித்து சென்று விடுகிறது. கோசாம்பியும் காய்ச்சலில் விழுகிறார். அவர் நண்பர் அவரை பேணி, நோயில் இருந்து காக்கிறார்.

கோசாம்பி பிறந்தது முதலே சவலைக் குழந்தையாக இருக்கிறார். அடிக்கடி நோயில் விழுந்து மரணத்தின் விளிம்பு வரை சென்று வருகிறார். புத்தகத்துக்கு வெளியே கோசாம்பியின் இறுதி நாள் குறித்து தேடி வாசிக்கையில் பிரமித்துப் போனேன். மனிதர் சல்லேகன விரதம் இருந்து உயிர் விட்டிருக்கிறார்.

வினோபாவே, முதல் இப்படி எத்தனை எத்தனை பேர் சல்லேகன விரதம் பூண்டிருக்கிரார்கள் என்பதை எண்ண எண்ண வியப்பே மிகும். தேடி வாசித்தேன் இப்படி விரதம் இருந்தால், உடல் கொண்ட அனைத்தையும் பசி உண்டு, பின்னர் அது உயிரையும் உண்டு, இப்படி உயிர் விட 30 முதல் 40 நாள் வரை ஆகுமாம். இந்த பின்னணி கொண்டு வெள்ளை யானை நாவல் சித்தரித்து காட்டும் பட்டினி சாவு என்பதை அறிய ஒருகணம் உடல் விதிர்த்து அடங்குகிறது.

வெள்ளை யானை பேசும் 1878  கால தென்னிந்திய பஞ்சத்தின் பிரிட்டிஷ் ஆளும் அரசின் தானிய கொள்ளையும் மக்களை லட்சம் லட்சமாக மடியவிட்ட கொலை வெறியும் இன்று ஆவணங்களாகவே கிடைக்கிறது. 1868 இல் ஜான் ஸ்ட்ராச்சி என்பவர் எழுதிய உப்பு வேலி சார்ந்த குறிப்புகள் கொண்டுஇந்தியாவையே இரண்டாக கூறு போட்ட உப்பு வேலியையும், அதில் வேலை செய்த 2500 அதிகமான ஊழியர்களையும், அரசு ஒட்ட ஒட்ட உறிஞ்சிய வரி கணக்குகளையும், செத்து மடிந்த மக்கள் எண்ணிக்கையையும் தனது உப்பு வேலி நூல் வழியே ராய் மாக்ஸம் வெளியே கொண்டு வந்தார்.

1920 இல் இந்தியாவுக்கு வந்த பியரி தலோட்டி என்பவர் எழுதிய இந்தியா குறித்த பஞ்ச சித்திரம் துனுக்குற வைப்பது. மைசூர் தசரா விழாவில் பாதையில் விழுந்து கிடக்கும் பிணத்தை துதிக்கை கொண்டு எடுத்து அப்பாலிட்டு நடக்கிறது விழா யானை. பியரி செல்லும் ரயிலில் மத்திய இந்தியா ஸ்டேஷன் முழுக்க பசி மீறிய பராரிகள் கூட்டம். அவர்களை வேலி போட்டு தடுத்து உள்ளே விடாமல் காவல் நிற்கும் காவலாளிகள். பியரி பயணிக்கும் புகை வண்டியில் கூட்ஸ் வேகன் முழுக்க  ஆங்கில அரசு இந்திய மக்களை ஒட்ட சுரண்டி  இறுதி மணி வரை எடுத்து செல்லும் அரசி மற்றும் தானியங்கள்.

எல்லா காலத்திலும் இப்படி இருக்கும் ஆங்கிலேய அரசு இரண்டாம் உலக போர் சூழலில் எப்படி இருந்தது? அது உருவாக்கிய செயற்கை பஞ்சத்தில் வங்க நிலத்தில் ஒரு கிராமமும் அதன் மக்களும் என்ன ஆகிறார்கள் என்பதை, அதே காலத்தில் விபூதி பூஷன் பானர்ஜி யால் தொடராக எழுதப்பட்டதே ஆஷானி சங்கேத் நாவல். (இதே காலகட்டத்தை மையம் கொண்ட நாவல், தமிழ் நிலத்தில் இசை கரைபுரண்டோடும் கும்பகோண காவிரி கரையில் பாபு யமுனாவை முகர்ந்து பார்த்த வகையில் அந்த இருவரும் சென்று விழுந்த தத்துவ சிக்கல், மோக முள்ளாக தமிழ் இலக்கிய நெஞ்சங்களில் குத்திக்கொண்டிருந்தது என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை :) ) பதேர் பாஞ்சாலி நாவலுக்கு முன்பாக சத்யஜித்ரே அதே பெயரில் அதே நாவலை இயக்கிய படம் பார்க்க கிடைத்தது போல, 2022 இல் சுவாசம் பதிப்பகம் வழியே வெளியான இந்த ஆஷானி சங்கேத் நாவல் வாசிக்க கிடைப்பதற்கு முன்பாகவும் சத்யஜித்ரே படமாக்கிய இதன் காட்சி வடிவே மிக முன்னர் முதலில் காணக் கிடைத்தது. காட்சிக்குப் பிறகே இரண்டு நாவலும் வாசிக்க கிடைத்து என்றாலும் இரண்டு நாவலும் அளித்த வாசிபின்பம் அலாதியானது. குறிப்பாக சேதுபதி அருணாச்சலம் மொழியாக்கத்தில் நெருங்கிவரும் இடியோசை என்ற தலைப்பில் அமைந்த இந்த ஆஷானி சங்கேத் நாவல் தமிழில் வாசிக்கத் தெரிந்த, சீரிய இலக்கிய வாசகர் துவங்கி அறிமுக வாசகர் வரை எவரும் தவற விடக்கூடாத அனுபவம்.

வங்க நிலத்தில் பருவம் தவறியதால் பஞ்சம் பிழைக்க புலம் பெயர்ந்து, விவசாய குடிகளும் அவர்களின் வேலைக்கார குடிகளும் சேர்ந்து போட்லா நதிக்கரையில் உருவாக்கிய சிறிய விவசாய கிராமமே புது கிராமம். பிஸ்வாஸ் மஷாய் அந்த ஊரின் பெரு விவசாயி. ஊர் ஊராக மாறி இந்த புது கிராமத்துக்கு வந்து குடி அமைகிறான் கங்காசரன் பண்டிட். பிராமணர் இல்லாத அந்த ஊரில், கொள்ளை நோய் போக ஊரை மந்திரித்து கட்டுவது, ஜோதிடம் சொல்வது, பரிகாரம் செய்வது, வைத்தியம் பார்ப்பது, இவை போக சாதி பேதம் பார்க்காமல் கிராமத்தின் எல்லா குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியராக இருப்பது என அந்த ஊரின் மரியாதைக்குரிய முதன்மை பிரஜயாக மாறுகிறான் கங்கா சரண். அவன் தேவைகள் அனைத்தையும் காணிக்கை என கிராமம் அவனுக்கு அளிக்கிறது. 11 வயதிலும் 8 வயதிலும் இரண்டு மகன்கள். அனங்கா அவன் மனைவி. அனங்காவின் கனவு முழுக்க அவள் இதற்கு முன் வாழ்ந்த தாமரை கரை கிராமம்தான். அங்கே சென்று வீடு கட்டி வசிக்க ஆவல். எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் விலை மெல்ல மெல்ல உயர்ந்து எவருமே எந்த பொருளும் வாங்க இயலாத நிலை வருகிறது. எங்கோ போர் நடக்கிறது, அரசாங்கம் போலீஸ் உதவியுடன் ஒரு மணி அரிசி கூட விட்டு வைக்காமல் எடுத்து செல்கிறது என்பது மெல்ல மெல்ல வெளியே தெரிகிறது. பஞ்சம் மெல்ல மெல்ல அந்த கிராமத்தை கங்கா சரண் குடும்பத்தை சூழ்கிறது. கிராமமும் அவன் குடும்பமும் என்னவாகிறார்கள்?

மனிதம் தவறுகிறது, விழுமியங்கள் சாதி ஆச்சாரங்கள் காற்றில் கரைகிறது, மறைத்து வைக்கிறார்கள், திருடுகிறார்கள், கிடைத்தது அனைத்தையும் தின்று பார்க்கிறார்கள், எல்லாம் தீர்ந்ததும் பிச்சை எடுக்கிறார்கள், பிடி அரிசிக்காக சோரம் போகிறார்கள், குடும்பத்தை விட்டு விட்டு உடையவர்கள் காணாமல் போகிறார்கள், குழந்தைகள் கண்டதை உண்டு பேதி கண்டு சாக கிடக்கின்றன,காப்பாற்ற அரசனோ தெய்வமோ அற்று கால தேவன் காலடி நோக்கி நகரும் மக்கள். ஒரு பஞ்ச சூழலில் என்னென்ன நிகழுமோ அது அனைத்தும் நிகழும் நாவல். இது மட்டுமா இந்த நாவல்? இது மட்டுமே இந்த நாவல் என்றிருந்தால் இந்த நாவல் காலத்தால் கரைந்திருக்கும். மாறாக இதை காலத்தை உதறி எழ வைப்பது அனங்கா.

இந்தியச் செவ்வியல் இலக்கியம் எனும் பேராலயத்தில் என்றும் சுடரும் ஒரு சுடர் என அனங்காவை இயற்றி சென்றிருக்கிறார் விபூதி பூஷன். முதலை இறங்கும் நதியில் கவலை இன்றி குளிப்பவள் என்றே அறிமுகம் ஆகிறாள் அனங்கா. இருதி கணம் வரை செயல் ஊக்கம் குன்றாதவளாகவே, நம்பிக்கை இழக்காதவளாகவே இருக்கிறாள் அனங்கா. இல்லை என்று வந்தவர் எவருக்கும் இல்லை எனாது புசிக்க ஒரு பிடி ஏதேனும் தருபவளாகவே இருக்குறாள் அனங்கா. ஆம். அவள் அன்ன பூரணி. இந்தியப்பண்பாடு வளர்த்தெடுத்து இந்திய இலக்கியம் வழியே உயிர் கொண்டு எழுந்த அன்ன பூரணி. காலபைரவன் உலவும் களத்தில் அவன் கப்பரையை நிறைக்க வந்த அன்ன பூரணி.

ஒரு சொல் குறைவோ மிகையோ இன்றி நிகழும் சித்தரிப்புகள், உரையாடல்கள் வழியே இயல்புவாத அழகியலுக்கு மிக நெருங்கி செல்லும் ஆக்கம் என்றாலும் இப் புனைவு கொண்ட நாடகீய தருணங்கள் அளிக்கும் கொந்தளிப்பு தாள இயலாதது. அரிசிக்காக சோரம் போகிறாள் காபாலி போம். அவளை நீ நரகத்துக்குத்தான் போவாய் என்று திட்டுகிறாள் அனங்கா. “அங்கேயாவது நான் பட்டினி இல்லாமல் இருக்க வாழ்த்துங்களேன் தீதிஎன்கிறாள் போம். “என் பாவம் போக்க நான் கங்கை தேடி போக வேண்டாம் உங்கள் காலடி தேடி வந்தால் போதும்என்கிறாள் போம். இது அத்தனைக்கும் உரியவளாகவே வருகிறாள் அனங்கா. வாசிப்பவரை அலைகழிக்கும் உச்சகட்ட தருணங்கள் இரண்டில் முதலாவது கங்கா சரண் கிட்ட தட்ட பிச்சை எடுத்து விட தயாராகி விட்ட நிலையில் காந்தோமணி எனும் மகள் அவனுக்கு அரிசி தானம் அளிக்கும் தருணம். இரண்டாவது சாவதர்க்கு முன் இறுதி சோறு அனங்காவின் கையால் சாப்பிட வேண்டும் என்று கிராமம் விட்டு கிராமம் வந்து, அனங்கா வீட்டு வாசலில் செத்து விழும் மோத்தி குறித்த சித்திரம்.

சாப்பிடாமல் இருந்தால் செத்துப் போவோம் என்பதை நேர் காட்சியாக ஊர் முதன் முதலாக பார்க்கிறது. ஏதேனும் மாற்றம் நிச்சயம் நடக்கும். சாப்பிட நிச்சயம் ஏதாவது கிடைத்து விடும். அதெப்படி உணவு உண்ணாமல் ஒரு மனிதன் சாக முடியும்? எவரேனும் ஒரு பிடி உணவு தந்து விடுவர்கள். என எல்லா இறுதி நம்பிக்கையையும் அனங்கா வீட்டு வாசலில் விழுந்து கிடக்கும் மோத்தி பிணம் உடைத்து வீசுகிறது. உயிர் வாழ உணவு தேடி, ஊர் மொத்தமும் வெளியேற முடிவு செய்கிறது.

ஊர் விட்டு ஊர் போனால் பிழைக்க வாய்ப்பு உண்டு என்ற நிலையிலும் அதை உதறிவிட்டு, வாழ்வோ சாவோ அது அனங்காவோடுத்தான் என்று அதே கிராமத்தில் அனங்காவோடு நிற்கிறாள் காபாலி போம். விவசாயம் என்றால் என்ன என்றே தெரியாத உயர் சாதியை சேர்ந்த அனங்கா, காபாலி போம் தன்னை விற்று கொண்டு வந்த விதை மணிகளை எடுத்துக் காட்டி வாங்க விவசாயம் பார்க்கலாம் என்று அழைக்கிறாள்.

ஒரு குடும்பம் சிதைகிறது நாவலின் நஞ்சம்மா உட்பட எத்தனையோ டைனமிக் குணாம்சம் கொண்ட பெண் பாத்திரங்கள் மத்தியில், விஷய பாவம் என்ற ஒன்றே இல்லாதகொடுப்பது, எந்நிலையிலும் நம்பிக்கையுடன் மட்டுமே வாழ்வை எதிர்கொள்வது என்ற ஸ்தாயி பாவம் மட்டுமே கொண்ட அனங்கா அதன் காரணமாகவே முந்தியவர்கள் அனைவரையும் விஞ்சி பேருருவாக என்னில் இப்போது எழுந்து நிற்கிறாள்

சமீபத்தில் வாசிக்க நேர்ந்த மொழியாக்கங்களில் மிக மிக அக்கரையுடன் ரசனையுடன் கவனமுடன் செய்யப்பட்ட அழகிய மொழியாக்கம் சேதுபதி அருணாலச்சலாம் செய்திருக்கும் இந்த மொழியாக்கம். நெருங்கி வரும் இடியோசை என்பது மிக அற்புதமான தலைப்பு. கொஞ்சம் கவனித்தவர்கள் அறிவார்கள் நெருங்கி வரும் இடியோசையின் முதல் முணுமுணுப்பை நாம் காதால் கேட்பதை விடவும் நமது அடி வயிற்றில் மெல்லிய பீதியை கிளர்த்தும் கார்வையாக உணர்வோம். அந்த பீதி கிளர்த்தும் கார்வை உணர்வை கொடுத்த நாவல் இந்த ஆஷானி சங்கேத்.

முந்தைய கட்டுரைநவீன மருத்துவம், நவீன வாழ்க்கை
அடுத்த கட்டுரைநீலம் ஒரு கடிதம்