அன்புள்ள ஜெயமோகன்,
சற்றுமுன் இறைவன் என்ற கதையை வாசித்தேன். நான் உங்கள் மீது கடுமையான கசப்புகளுடன் இருந்தவன். காழ்ப்புகளுடன் நிறைய எழுதியுமிருக்கிறேன். அந்தக் காழ்ப்புகளெல்லாம் என் அரசியல்சார்ந்தவைதான். நான் நம்புவதே உண்மை என்ற நம்பிக்கை. அரசியல்பிரச்சாரகர்கள் சதா உருவாக்கிக்கொண்டிருக்கும் வெறுப்பு. இந்தக் கதையை தற்செயலாகத்தான் வாசித்தேன். அந்த கதையின் இயல்பான சம்பாஷணைகள்தான் என்னை வாசிக்கச் செய்தன. எத்தனையோ முறை உங்களின் எத்தனையோ கதைகளை நான் பார்த்தும் வாசித்ததில்லை. இவனையெல்லாம் வாசிக்கமாட்டேன் என்றெல்லாம்கூடச் சொல்லியிருக்கிறேன். இறைவன் கதையில் இசக்கியம்மை “எனக்க ஜீவிதம் மட்டும் ஏன்டீ இப்பிடி ஆயிட்டுது பகவதியே?” என்று கேட்குமிடத்தில் நெஞ்சுவிம்மி கண்ணீர் துளித்துவிட்டது.
அதுவரைக்கும் கதை இனிமையான கவித்துவத்துடன் வந்துகொண்டே இருந்தது. இருட்டை வெள்ளையடிப்பேன் என்று ஆசாரி சொல்லுவதாகட்டும், பகவதி சுவர் வழியாக காட்டுக்குள் போய்விட்டாள், அவளை கிணறுதோண்டி நீரை எடுப்பதுபோல எடுப்பேன் என்று சொல்வதாகட்டும் அழகான கவிதை. அந்த இடம் வேறு ஒன்று. மனித வாழ்க்கையின் கையறுநிலையைச் சொல்லும் உச்சம். அங்கிருந்து மேலும் மேலும் சென்று கதை ஓர் தெய்வநிலையை அடைந்துவிடுகிறது. அங்கே விக்கித்துவிட்டேன். கண்ணீருடன் எவ்வளவுநேரம் அமர்ந்திருந்தேன் என்றே சொல்லமுடியாது.
இந்தக் கண்ணீர் இரக்கம், அனுதாபம், துக்கம் ஆகியவற்றால் வருவது அல்ல. மனம் ஒரு உச்சநிலையை அடையும்போது வரும் கண்ணீர். இன்பம்கூட இல்லை. அதைவிட மேலான ஒன்று. நான் இறைவன் என்று கலைஞன் சொல்கிறான். உங்களுடைய சொந்த குரல்போல அது ஒலித்தது. இறைவனேதான். இந்தக்கதையை ஒருவனால் எழுதமுடிந்திருக்கிறது. தமிழில் இது நிகழ்ந்திருக்கிறது. நான் இறைவன் என்று அவன் சொல்லிக்கொள்ள முடியும்தான். நினைக்க நினைக்க மெய்சிலிர்ப்பே உருவாகிறது. எப்படி இந்த அற்பச்சூழலில் வாழ்கிறீர்கள் ஜெயமோகன். எப்படி எல்லாவரையும் தாங்கிக்கொள்கிறீர்கள்? தனியாக இருக்கையில் சிரித்துக்கொள்வீர்களா?
இந்தக்கதையைப் பற்றி என் பால்ய நண்பரிடம் சொன்னேன். இருவரும் சேர்ந்து நிறைய வேலைபார்த்திருக்கிறோம். ‘அதிலே அவனோட அரசியல் இருக்கும்’ என்று ஆரம்பித்தார். பேச்சை அப்படியே துண்டித்துவிட்டேன். எப்படி நம் மண்டைகளை கழுவிக்கொண்டே இருக்கிறார்கள் அற்ப அரசியல்வாதிகள். நாமும் எப்படி நம் அறிவையெல்லாம் அவர்களுக்கு அடகுவைத்துக் கொண்டிருக்கிறோம். கலையின் மேன்மை இங்கே நிகழ்ந்திருக்கிறது. நமக்கு கண்ணே இல்லை. கபோதிகளாக அதைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறோம். நினைக்க நினைக்க ஆறவில்லை. உங்களுக்கே எழுதலாமென ஆரம்பித்தது அப்படித்தான். இந்த நெகிழ்வையும் உச்சத்தையும் அடைய எவ்வளவு மனம் விரிவடையவேண்டும். ஆனால் உண்மையிலேயே இதெல்லாம் தொடமுடியாதபடி மனம்குறுகிப்போனவர்கள் பல்லாயிரம்பேர் இங்கே இருப்பார்கள். அவர்களின் இழிச்சொற்களும் பழிச்சொற்களும் உங்களுக்கு வந்துகொண்டேதான் இருக்கும். அதனால் அவ்வப்போது ஆசாரிக்கு வரும் மூதேவி உங்களிடமும் வந்துசெல்லவும் வாய்ப்புண்டு.
இப்படி கதைகளை எழுதிக்குவித்திருக்கிறீர்கள் என்றால் எப்படி ஒரு மனநிலையில் இருந்திருப்பீர்கள் என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. இதுதான் கலை. கலைக்கு ஏதாவது நோக்கம் இருக்குமென்றால் இதுதான். வடிவங்களிலே சோதனை செய்வது, வேறுமாதிரி எழுதிப்பார்ப்பது எல்லாம் இதை அடையமுடியாதவர்கள் செய்வது. நக்கல், நையாண்டி, பகடி எல்லாமே மேலோட்டமானவை. இதுதான் மெய்யான கலை. இதை உணர்வதற்கும் ஒரு மனநிலைவேண்டும். வாழ்க்கையை கொஞ்சம் அறிந்திருக்கவேண்டும். மனம் மேலே செல்லவேண்டும். பெரியவிஷயங்களுக்கு முன் ஈகோ இல்லாமல் நிற்கும் கள்ளமின்மை வேண்டும். அரசியல்பேசினாலோ இலக்கியவம்புக்குள் சிக்கினாலோ நாம் இழப்பது அந்த கள்ளமின்மையைத்தான். அந்த கதையின் உச்சத்தில் கண்ணீர்விட எனக்கு வாய்த்ததே பேறுதான். அது மேதைகளும் ஞானிகளுமெல்லாம் சென்று சேர்கிற உச்சம். என்ன சொல்ல என்று தெரியவில்லை. வணங்குகிறேன் என்று மட்டுமே சொல்லமுடியும்.
எம்.பிரபு