வணக்கம். எனது பெயர் கார்த்திகேயன், வசிப்பிடம் கோவை.
கடந்த சில வாரங்களாகத்தான் உங்கள் எழு த்துகளோடு அறிமுகம். உங்களுடைய சிறுகதைகளையும், கட்டுரைகளையும் மட்டுமே இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
ஆன்மிகம் சம்பந்தம்பட்ட விஷயங்களில் ஆழமான நூலறிவும் அனுபவமும் உள்ள நீங்கள் சில ஐயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
1 ) அசைவ உணவு நீங்கள் உண்கிறீர்கள். இது ஆன்மீகத்துக்கு ஒத்துப் போகும் விஷயமா?
2 ) விதியைப் பற்றியும் அதனோடு ஒப்பிட்டு சுய முயற்சியின் திறனைப் பற்றியும் உங்கள் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்.
நன்றி.
அன்புடன் கார்த்திகேயன்.
அன்புள்ள கார்த்திகேயன்
அசைவ உணவுக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை – விவேகானந்தரே அசைவம் உண்டவர்தான்.திபெத், சீன,ஜப்பானிய பௌத்தம் அசைவம் உண்ணுவதை விலக்கவில்லை. உலகம் முழுக்க ஆன்ம ஞானத்தின் படிகளில் ஏறியவர்களில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவாளர்களே. ஜென் ஞானிகள் சீன மெய்யியலாளர்கள் ஐரோப்பிய இறையியலாளர்கள். நீங்கள் உங்கள் குலவழக்கப்படி கற்றறிந்த சிலவற்றைக்கொண்டு ஆன்மீகம் போன்றவற்றை மதிப்பிட விழைய வேண்டாம்.
அசைவம் உண்ணுவது இந்தியாவில் தவிர்க்கப்படவேண்டியது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கான காரணங்கள் குடல்சார்ந்தவை. இந்தியப் பொருளியல் சார்ந்தவை. ஓரளவு ஜீவகாருண்யம் சார்ந்தவை.
ஆன்மீகம் என்பது எது வாய்வழியாக உள்ளே செல்கிறது என்பதைச் சார்ந்தது என நம்புவது ஒரு இந்திய மூடநம்பிக்கை. இந்தியர்களுடைய மதமே எங்கே எதை எப்படி உண்பது என்பது மட்டும்தான் எனப் பலர் இந்த மனநிலையை கிண்டல்செய்திருக்கிறார்கள்.
விதி என நான் சொல்வது எல்லாமே முன்னால் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று அல்ல. மண்மீது கோடானுகோடி உயிர்கள் இயற்கைசக்திகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் முயங்கியும் செயலாற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்தமான விளைவு என்ன, திசை என்ன என நம்மால் ஊகிக்கமுடிவதில்லை. நாம் அதன் பகுதியாகவே இருக்கிறோம். நம் எல்லாச் செயல்களும் செயல்களின்விளைவுகளும் அதைச்சார்ந்தே உள்ளன. இதையே நான் விதி என்கிறேன்
ஒருதனிமனிதன் தன் முழு ஆற்றலாலும் செயல்படவும், முழுமனத்தாலும் சேர்ந்து பணியாற்றவும் கடமைப்பட்டிருக்கிறான். அதுவே அவன் சுவதர்மம்- தன்னறம். ஆனால் அதன் விளைவுகள் அந்த பேரொழுக்கின் சாத்தியக்கூறுகளில் உள்ளன. அதை எண்ணி அவன் பதற்றமும் கவலையும் கொள்வதில் அர்த்தமில்லை.
இவ்வளவே என் எண்ணங்கள். கீதை உரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்
ஜெ