இறந்தவர்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கத்துடன் எழுதிக்கொள்வது.

தங்களின் ஆக்கங்களையும், வலைத்தள எழுத்துக்களையும் வெகுநாட்களாக வாசித்து வருகிறேன். எனது வாழ்வில் தொடரும் ஒரு நிகழ்வினைப் பற்றிய சந்தேகம், தங்களால் தெளிவு படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதம்.

எனது தந்தை காலமாகி 10 மாதங்கள் ஆகின்றது. என் தந்தை இறந்த போது அவரின் வயது 70.  எனது வயது 41. எனது சிறு வயது முதல், எனது தந்தை எனக்கு ஒரு சிறந்த நண்பர். எங்களிடம் எந்த ஒரு நிமிடமும் தலைமுறை இடைவெளி இருந்தது இல்லை. அவ்வளவு நெருக்கம். இப்பொழுது, என் கனவில் என் தந்தை வரும் பொழுதெல்லாம், அது கனவாக இருந்தாலும், கனவில் என் தந்தையைப் பார்க்கும் போதும், தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கும் போதும், என் தந்தை இறந்து விட்டார் என்ன நினைப்பும் உடன் வந்து விடுகிறது. அதனால் கனவில் வரும் என் தந்தையை, அவரின் உருவத்தையும் மீண்டும் பார்ப்பதற்கும், அவரின் குரலைக் கேட்பதற்கும் கிடைக்கும் வாய்ப்பாக எண்ணி, என் தந்தையைக் கூர்ந்து கவனிக்கின்றேன். பிறகு தூக்கம் கலைந்து விடுகிறது.

இது எதனால்? என் தந்தை இறந்து விட்டார் என்பது என் ஆழ்மனதில் பதிந்து விட்டதா?

தங்களால் இதற்கு விளக்கம் சொல்ல இயலும் என்று இக்கடிதத்தை எழுதியுள்ளேன்.

அன்புடன்,
ஜீவன், மதுரை.

 

அன்புள்ள ஜீவன்

என்னுடைய அம்மா அப்பா இருவருமே கனவில் வருவதுண்டு. பல கனவுகள் உண்மையானவையாகவே தோன்றும். அவர்கள் சார்ந்த அன்றாட நிகழ்வுகள் கனவில் வரும். ஆனால் அந்நேரத்தில்கூட  அவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற பிரக்ஞையும் இருக்கும். பெரும்பாலான கனவுகளில் அவை கனவு என்ற பிரக்ஞையும் உள்ளூர ஓடிக்கொண்டிருப்பதைப்போலத்தான் இதுவும். அனேகமாக அனைவருக்கும் இப்படித்தான்.

சென்றகாலங்களில் ஒரு நம்பிக்கை இருந்தது, இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வரக்கூடாது. வருவது இங்கே அவர்கள் எதையோ மிச்சம் வைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம். உளவியல் ரீதியாகச் சொன்னால், நாம் அவர்களிடம் எதையோ மிச்சம் வைத்திருக்கிறோம் என்று நம் ஆழ்மனம் உணர்வதனால்தான் அது.

உங்கள் மனம் உங்கள் தந்தையைப்பற்றி என்ன நினைக்கிறது எனக் கூர்ந்து பாருங்கள். ஏதேனும் மனக்குறையோ அல்லது முழுமையின்மையோ உணரப்படுகிறதா? அதை சரிசெய்யலாம். அல்லது சம்பிரதாயமான சடங்குகள் ஏதேனும் இருந்தால் செய்யலாம். குறியீட்டு ரீதியாக அவை ஆழ்மனதை ஊடுருவி நம்மை நிறைவடையச்செய்கின்றன என்பது என் அனுபவமும்கூட

இறந்தவர்கள் இவ்வுலகில் முற்றிலும் மிச்சமின்றி ஆவதே இயற்கையின் விதி என நினைக்கின்றன இந்திய மதங்கள்.

ஜெ

 

முந்தைய கட்டுரைஜெ.சைதன்யா
அடுத்த கட்டுரைபாரதி விவாதம்- ஒரு கடிதம்