துரியோதனன் வெறிக்கொண்டு ஆடிய சபையில், மூத்தோர் முன்னிலையில் நுால்நெறி, குலநெறி என்றெல்லாம் கூறிக் கொண்டு நடந்த அநீதியின்போது குனிந்தமர்ந்திருந்த விதுரர், பிறகு கொதித்தெழுகிறார். தமையனான திருதர், பேரரசி காந்தாரி, காந்தாரர்கள், துரியோதனன், கர்ணன் என அவர்களின் மாளிகைகள் இருக்கும் திசைகள்தோறும் நடையாய் நடக்கிறார். சகுனியின் மனம் வென்று விட்ட திருப்தியின் மிகையில் வெற்றியை கடந்து எங்கோ சென்று விடுகிறது. ஓநாயின் செயல் கிழித்துண்பது மட்டுமே. அவருக்கு காந்தாரியின் மீதோ ஏன் துரியன் மீதோ கூட அன்போ பிணைப்போ ஏதுமிருக்கவில்லை. பாண்டவர்கள் மீது கூட வஞ்சமில்லை. அது ஒரு தருணம். அன்றிருந்த மனம். காலம் அதனை வென்று சாற்றை விழுங்கி விட, மருமகன் பாரதவர்ஷத்தை ஆள வேண்டும். அவன் எதிரிகள் முற்றழிய வேண்டும் என்ற இலக்கு மட்டுமே சக்கையாக எஞ்சுகிறது. சக்கை என்றாலும் அது அவர் வாழ்வின் சாரம் என்பதனால் இருப்பென நிலைக்கிறது.
நண்பர் விப்ரரின் இறப்புக்கு பிறகு பேரரசர் திருதரின் துலாக்கோலின் முனை மைந்தன் பக்கம் நழுவுகிறது. விதுரரே அதை உணரும்போது திருதரும் உணர்ந்திருக்கலாம். மிகையான அங்கமொழியாலும் அதீத ஆத்திரத்தாலும் ஓசையெழுப்பி அழுவதாலும் அதை மறைத்துக் கொள்ள முயல்கிறது அவருள்ளம். ஆனால் காந்தாரிக்கு இவ்வேடங்களேதும் தேவையில்லை. அவருக்கு குந்தியைப் போன்றோ திரௌபதியை போன்றோ பெருவிழைவுகள் இல்லை. அறம் சார்ந்த அம்மனம் மகன்களின் மீது தீச்சொல் இடுவதோடு தன் மீது விழுந்துக் கிடக்கும் சம்படைகளின், அம்பைகளின், சிவைகளின் இழப்புகளுக்கு அஸ்தினபுரி பதில் சொல்ல வேண்டிய காலம் கனிந்து விட்டதாக ஆவேசம் கொள்கிறது. மனைவியின் வார்த்தைகளில் வெகுண்டெழுந்தாலும், பாண்டுவின் மைந்தர்களை தொழும்பர்களாக்கி அவர்களின் மனையாளை அவை முன் நிறுத்தி தீராபழியை தன் மீது சுமத்திக் கொண்ட மைந்தனின் ஊழ் அவனை கொண்டு நிறுத்தும் இறுதியை எண்ணியதில் பேரரசரின் உள்ளம் அச்சத்தில் நடுங்குகிறது. அவ்வச்சத்தையே சொற்களென உதிர்க்கும் மனைவியின் மீது சினம் எழுகிறது. இருப்பினும் அதிலுள்ள உண்மை அவரை உசுப்ப, மகனின் நலன் கருதி பாண்டவர்கள் இழந்தததனைத்தையும் அவர்களிடமே திருப்பி அளிப்பதாக ஆணை பிறப்பிக்கிறார். ஆனால் அரசருக்கு பேரரசரின் ஆணையை மதிக்கும் எண்ணமில்லை.
பீஷ்மரோ, திருதராட்டிரரோ தங்களின் இயலாமையோ, மறைந்துக் கிடக்கும் உளக்கிடுக்கையை மறைக்கவோ அல்லது தங்களை தாங்களே மறுக்கவோ துரியோதனனின் உடலைக் கருவியாக்கிக் கொள்ளும் முறைமையில் தற்போதைய முறை பீஷ்மருக்கு. அரசருக்கு ஆதரவாக தன் முடிவை அறிவிக்கும்முன் குலநீதியை மீறவியலாது அநீதியை நோக்கிய பயணத்திற்கு வழிக்காட்ட வேண்டிய தனது துயரத்தை துரியோதனனின் உடலை வதைப்பதன் மூலம் ஆற்றிக் கொள்கிறார். பாண்டவர்களின் பூமியை திருப்பியளிப்பதாக மாமன்னர் பிறப்பித்த ஆணை பீஷ்மராலும் நிராகரிக்கப்படுகிறது. பாண்டவர்களில் பீமன் இதனை சரியாகவே கணித்திருந்தார். தருமருக்கு பீஷ்மரின் மீது எங்கோ நம்பிக்கை ஒட்டியிருந்தது. அனைத்தும் தகர்ந்துப்போக இப்போது இந்திரபிரஸ்தத்துக்கும் துரியனே அரசர். ஆனால் அது அவர் விழைவல்ல. அவருடைய பெற்றோர்களின் விழைவுமுமல்ல. அவர் மாமனின் கருவி. அதோடு கர்ணனின் கருவியும் கூட. எது எப்படியிருப்பினும் சுழன்றாடும் வஞ்சத்தை இனி குப்பிக்குள் அடைக்க முடியாது. மரண விளையாட்டு தொடங்கியிருந்தது.
இரு நாட்டின் அமைச்சர்களுமான விதுரரும் சௌனகரும் நிகழ்பவற்றின் தீவிரத்தை உணர்ந்தவர்களாக அதனை தடுப்பதற்கு பகீரதப்பிரயத்தனம் செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஊழின் ஆட்டத்தை யாரால் மாற்றி விட முடியும்? அதன் சக்திக்கு தலைவணங்கி தங்களை ஒப்புக் கொடுக்க தயாராகி விட்டவர்கள் அதனை வஞ்சம், சினம், அறம், நெறி, நுால் என்று பலவாறு பெயரிட்டுக் கொண்டனர். மாமன்னர் ஹஸ்தியின் வழித்தோன்றல்களின் தலைவிதியை காந்தாரத்திலிருந்து வந்த கணிகர் எழுதிக் கொண்டிருந்தார். பாண்டவர்கள் கானகத்தில் பனிரெண்டு ஆண்டு காலத்திற்கு விடுதலைச் செய்யப்பட்ட அடிமைகளுக்குரிய வாழ்வை வாழ வேண்டுமென்றும் பின் மறைந்து வாழ்ந்து ஓராண்டை கடக்க வேண்டும் என்றுமாக இருந்தது அவ்விதி. பதிமூன்றாண்டு ஆண்டு காலம் நிறைந்த பின் அவர்கள் நகர் திரும்பி வந்து தங்கள் நாட்டைக் கோரலாம். மறுக்கப்படுமெனில், படை கொண்டு மோதலாம். வென்றால் நாடாளலாம். விரும்பினால் மீண்டும் சூதாடலாம் என சிம்மம் சிறுத்திருந்ததில் சிறுநரி கொண்டாட்டமிட்டது. திருதராட்டினரின் அறத்துக்கும் அகத்துக்குமான பேராட்டத்தில் அவரது உளக்கிடக்கையே தீர்ப்பென்றானபோது அவருள்ளம் யுயுத்ஸு, சஞ்சயன், இசைசூதர்கள் என அமைதிக் கொள்ளத் தொடங்கியிருந்தது.
பாண்டவர்களின் வாரிசுகள் அஸ்தினபுரியின் கடமைக்குள் வர, அவர்களின் அன்னைகள் அவரவர் நாடுகளுக்குச் சென்று விட, தலைமை வைதிகர் தௌம்யர், அமைச்சர் சௌனகர் ஆகியரோடும் திரௌபதியோடும் மகன்கள் கானகம் புறப்பட, குந்தி தனித்து விடப்படுகிறார். இருப்பினும் தளர்ந்து விடவில்லை. அவருக்கான கடமைகள் கூடியிருந்தன. கடந்தவைகளை வென்றாக வேண்டும். மைந்தர்கள் கான் மீளும் போது குடிமக்களின் மனதில் அவர்களின் நினைவகலாதிருக்க வேண்டும், மகன்களின் சினமும் தணியாதிருக்க வேண்டும். அதன்பொருட்டு அவர் நிதம்பசூதனிக்கும் பிரத்யங்கரைக்கும் வேண்டுகோளும் ஆணையும் இட்டுக் கொண்டேயிருப்பார். அந்த ஆணையின் வழியே அவரின் நெஞ்சத்திலும் வஞ்சமகலாதிருக்கும். மைந்தர்கள் திரும்ப வந்து நிலம் மீட்டு ஆட்சிபீடம் அமர்கையில், நுாறு பெற்றும் நீர்கடன் செலுத்த மைந்தரின்றி பேரரசரும் அரசியும் இறுதியை எட்டுவர். அவர்களுக்கு, அன்னத்தையும் நீரையும் தன் மைந்தர்கள் பிச்சையென இடும் வரை அவர் அந்த வஞ்சத்தை அடைக்காத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
ஒரு சிறுமை, ஒரு ஆணவம், ஒரு செருக்கு, ஒரு தளுக்கு, ஒரு மேன்மை, ஒரு உயர்வு என்பன அதன் பேருச்சத்திற்கு சென்று அடங்கி மீளும்போது அவரவர் மேலெழும்பிக் கிடந்த உயர்வெண்ணங்கள் வடிந்து தன்னிலை மீளுகின்றனர். பீமனும் சகதேவனும் இதில் தங்கள் ஆளுமையோடு தனித்து தெரிகின்றனர். காடு பீமனின் பலம் என்பதோடு பீமனுக்கு விழைவுகளேதும் இல்லை. அவருடைய சிந்தனையும் சொற்களும் நேர்வயமானது. அவை யாருக்கும் எதற்காகவும் தடுமாறுவதில்லை, தயங்குவதில்லை. அவருள்ளத்தில் அரசியலுக்கோ அறத்துக்கோ கூட இடமில்லை. திரௌபதியின் தோழமையையும் அவ்வப்போது அகத்தை வெளிப்படுத்த அர்ஜுனனின் அண்மையையும் தவிர அவர் பெரிதாக வேறெதையும் பொருட்படுத்துவதுமில்லை. சகதேவன் நுணுக்கமானவன். அகம் குவித்தவற்றை அங்ஙனமே அள்ளியெடுக்கவும் அதைச் சொல்லென தொகுத்துரைக்கவும் அவனால் இயலும். அதை தருமரும் அறிந்திருந்தார். அறமும் விழைவுமான அவரை வேதமும் தத்துவமும் வழிநடத்தக் காத்திருந்தன. நகுலனும் அர்ஜுனனும் அகவேடம் கலைந்தது போன்ற விடுதலையுணர்வில் கட்டுக்களற்றவர்களாகியிருந்தனர்.
ஐவரும் தேவியும் முதலில் வந்தடைந்த கானகம் சௌனகம். அம்மரபின் வழி வந்த அப்போதைய ஆசிரியரான காத்யாயனரிடம் அவையில் நடந்த நிகழ்வுகள் சொல்லப்பட்டபோது அவர் விழைந்ததே விளைந்ததென்கிறார். யாரும் மறுக்கவில்லை. நீலிமை மலையடிவாரத்தில் அமைந்த அத்தொன்மையான சௌனக மரபு நால்வகை சொல்வைப்புகளைக் கற்கும் முறைக்கு மேல் ஒலியொப்பு முறை ஒன்றை வளர்த்தெடுத்திருந்தது. சொல்லிணைவுகளின் ஒலியொழுங்கை வகுத்து அதன் அடிப்படையில் வேதத்தை இசைவடிவாக ஆக்கிய அம்முறைக்கு அவர்கள் சந்தஸ் என்று பெயரிட்டிருந்தனர். தருமர் முதன்மை சௌகரிடமிருந்து வேத பயில்முறையை கற்கிறார். உடன் தன் இளவல்களை ஏந்திக் கொண்டது போல காடு தன்னை ஏந்திக் கொள்ளவில்லை என்பதையும் அறிகிறார். காத்யாயனரிடம் தன் விழைவுகளையும் அச்சங்களையும் வெல்லும் வழியைக் கோரி நிற்கிறார்.
தான் எனும் பிரக்ஞை எழ பெற்ற அணு அக்கணமே உயிர் கொள்ளும் விழைவு கொள்கிறது. விழைவு துன்பத்தை அளிப்பது எனினும் துன்பமின்றி உயிர்களுக்கு வாழ்வில்லை. உயிர் கொண்டவையனைத்தும் அதனதற்கான வேள்வியில் ஈடுபடுகிறது. மானைக் கொன்று மகவுக்கு ஊட்டிவிடும் பெண்புலிக்கு அது வேள்வி. அரசன் எனில் ஆட்சியே முதன்மை வேள்வி. அறத்தில் நிற்றலே நீ அளிக்கும் அவி. உன் அறமே நீ என்று சௌனக குரு உபதேசித்து வாழ்த்தி விடையனுப்ப அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மருந்துமலையான துவைதவனம் நோக்கிச் செல்கின்றனர்.
இரண்டாம் காடான துவைதவனத்தில் வேதாங்கமான ஆயுர்வேதக்கலை தொடர்மரபின் முதன்மையாசிரியராக பனிரெண்டாவது கணாதர் வீற்றிருக்க, அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு உடல் கொண்ட நோய்க்கு ஊழோ வினையோ காரணமல்ல என்று கற்பிக்கப்பட்டது. எது முடிவற்ற பொருள் கொண்டதோ எது எங்கும் பொருள் அளிப்பதோ அதுவே வேதம் என்றது சார்வகம் என்னும் அம்மரபு. இன்புறுதல் என்பது உயிர்கள் அனைத்திற்குமான உரிமை. எரி நீர் வளியொளி விசும்பு எவருக்கும் உரியதல்ல. ஆற்றலே வெல்கிறது. அறம் என்பது அத்தருணத்தில் உருவாகி எழுந்து வரும் நிகர்நிலை. நெறியை பேணுக. அது உன்னைப் பேணும். அதுவே நிலைநிறுத்தும் விசை என்றது கணாதரின் போதனை.
நால்வேதமென வியாசரால் தொகுக்கப்பட்டவைகளை கற்று சொல்லவும் கற்றுச் செல்லவும் முனைவோர் மத்தியில் பாண்டவர்கள் தங்கள் பயணத்தைத் தொடருகின்றனர். அவர்கள் அவற்றை கற்க விழைந்தாலும் அவர்களின் பயணம் கற்பதன் பொருட்டல்ல. நடந்து விட்டவைகளை கடந்து விடவில்லை அவர்கள். பீமன் படை கொண்டு சென்று வென்று தருமருக்கு முடி சூட்டுவோம் என்கிறார், அர்ஜுனன் மீட்டெடுக்கும் செயல் தன்னுடையது என்றாலும் செய் என்ற சொல் தருமருடையதாக இருக்க வேண்டும் என்கிறார். தருமருக்கு வழக்கம்போல அறச்சிக்கல். ஆசையும் அறமும் மோதிக்கிடக்க, சகதேவன் படை கொண்டு முடியை அடைந்தால் இறுதிவரை படை கொண்டே அதனை காக்க வேண்டியிருக்கும் அறத்தின் வல்லமையால் எழுந்து வரும் அரசை அறமே படைக்கலமென காக்கும் என்கிறான். தடுமாறும் தருமரின் மனம் இளவலின் இக்கருத்தில் நிழற்கொள்ள, திரௌபதி அவர் மீது உக்கிரம் கொள்கிறாள். ஆனால் அது அவள் தன் அகத்தை மறைத்துக் கொள்ள அணிந்துக் கொள்ளும் வேடம். காடு அவளுள் பொதிந்திருக்கும் பெருங்கருணையை வெளிச்சமிட தொடங்கியிருந்தது. அது நீடிக்கும்பட்சத்தில் அவள் அவர்களை மன்னிக்கவும் செய்து விடலாம். தன் உள்ளத்தில் கனலும் வஞ்சம் கரைந்துப் போவதை அவளால் அனுமதிக்க முடியாது. அழல் ஒரு கணமும் அணையலாகாது. அம்பையைப் போல அதை அழியாது காத்தாக வேண்டும். அதேசமயம் அவசரம் கொள்ளலுமாகாது. இது இளைய யாதவரின் போர். அவர் வரும் காலம் வரை உடலே சிதையெனக் கொண்டு பதிமூன்று ஆண்டு காலம் எரிய எண்ணம் கொள்கிறாள். மனைவி என்ற சொல்லோ நிலையோ கூட அவளை கட்டுப்படுத்தலாகாது. அழலே வேள்வி. புன்னகையும் இன்பமும் அதன் அவி. பாரதவர்ஷம் குருதிக்களமாகும் வரை அவ்வஞ்சம் அடைக்காக்கப்பட வேண்டும். கடுஞ்சினத்தையும் அதனாலெழும் சொற்களையும் அவியாக்குவதன் வழியே தான் வஞ்சம் கொண்ட நெஞ்சத்தை மீட்டெடுக்க இயலும் என்று உறுதிக் கொள்கிறாள்.
துவைதவனத்திலிருந்து கணாதரின் முதல் மாணவர் சப்தகரின் குருநிலை அமைந்துள்ள காம்யக காட்டுக்கு செல்கிறது பாண்டவர் குழு. சப்தகர் அவர்களுக்கு முதற்செயலின் மறுசெயலே மானுடனின் மறுகணம் என்றுரைக்கும் பிரஹஸ்பதி நீதியை கற்பிக்கிறார். அது அரசமரும் தகுதி கொண்டோருக்கான நுால். நம்மை சூழ்ந்திருக்கும் வலைகளின் நடுவே நாமுள்ளோம் என்பதோடு நாமும் இணைந்தே அவ்வலையை பின்னுகிறோம் என்பது அறிதல். அறிதலும் வலை பின்னுவதே என்பதை கண்டடைவது விடுதலை என்றது அந்நுால். அவர்கள் அங்கிருந்து பிரக்ஞாதாரா என்ற காட்டாற்றால் வகுக்கப்பட்ட ஐதரேயக்காட்டுக்குச் செல்கின்றனர். அப்க முனிவரின் மைந்தரான விசாலரின் பதினான்காவது மனைவியான இதரை என்றழைக்கப்பட்ட மகிதை என்னும் குயவப்பெண்ணுக்கு பிறந்த மகிதாசனே பின்னாளில் ஐததேயர் என்றாகிறார். பிரம்மத்தை அறிய முடிவதில்லை என்பதே அதைப் பற்றிய முதல் அறிவாகும். ஏனெனில் அறிந்ததுமே அது அறிவாகி விடுகிறது. எல்லைக்குட்பட்டதாகிறது. முடிவற்ற, அளவிடவியலாத ஒன்று அங்ஙனம் தன்னை அடைத்துக் கொள்வதில்லை என்று தனது மாணவர்களுக்கு விசாலர் வேதமெய்பொருளை கூறிக் கொண்டிருந்தபோது மகிதாசன் வருகிறான். பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் அக்குருநிலையிலிருந்து விலகிச் சென்றவன் மீள திரும்புகிறான். நிகரற்றதும் முடிவில்லாததுமான விசும்பை இக்குடத்திற்குள் நிறைத்துக் கொண்டு வந்துள்ளேன். பெற்றுக் கொள்க தந்தையே… என்கிறான். குடத்திற்குள் அடங்குவதா விண்ணகம்? என வியந்தனர் சூழ்ந்தோர். எங்குமுள்ளது விசும்பு எனில் இதுவும் விசும்பே என்கிறான். மகனுடனான தொடர் உரையாடல் ஏதோ உணர்த்த விசாலர் கைகளைக் கூப்பியபடி மகன் முன் மண்டியிடுகிறார். அவன் அவர் காதுகளில் “பிரக்ஞையே பிரம்மம்“ என்கிறான்.
எல்லா குருநிலைகளிலும் வினாக்கள் எழத் தொடங்கியிருந்தன. அருவென அமைந்தது உருவென ஆனது எப்போது? அலகிலி எல்லை கொண்டது ஏன்? பிரக்ஞையென அமைவது பொருளென ஆனது எப்போது? அத்தனைச் சொற்களும் ஏன் அங்கு சென்றதும் தயங்கி நின்று விடுகின்றன? நாம் ஆற்றுவது நாமறியாப் பெருஞ்செயலை என்றுணர்ந்தவனே அத்திகைப்பிலிருந்து விடுபட முடியும் என்றும் நாம் காண இயலாதவற்றை ஊழ் என்றும் அறியாத முடியாத ஒன்றை “அது“ என்றுமாக பகரும் சொற்களுக்கும் விடைகளுக்கும் அப்பால் எங்கோ சென்றுக் கொண்டிருந்தன கேள்விகள். தத்தம் குருமார்களிடம் திருப்தியடையாத மாணக்கர்கள் வெவ்வேறு மரபுநிலைகளை நோக்கி செல்வதும் தங்களுக்குள் விடை தேடுவதுமாக விடாய் கொண்டலைந்தனர். இளையயாதவர் கூட மெய்மையை தேடி அலைந்த நாட்களில் அப்படியான கேள்விகளுடன் திரிந்தவரே.
அவர் ஐதரேய குருநிலையில் இருந்தபோது ஆசிரியர் மகாபிங்கலர் அரசனே வேதகாவலன், அவனை வேதமே காக்கும் என்றுரைக்கையில், அவ்வாறாயின் கம்சன் ஒன்றமறியா குழவிகளைக் கொன்றதற்கு வேதம் பொறுப்பேற்றுக் கொள்கிறதா? அனைத்து மறத்துக்கும் வேதமே துணையென்றால் அவ்வேதத்தை மிதித்து மேலேறிச் சென்று அறத்தை அடைய வேண்டிய காலம் வந்து விட்டது. எழுக புதிய வேதம்… பசித்தவனுக்கு அன்னமும் நோயுற்றவனுக்கு மருந்தும் தனித்தவனுக்கு துணையும் வஞ்சிக்கப்பட்டவனுக்கு வாளுமென எழுவதே மெய்வேதம். இங்கு இதைப்போல ஆயிரம் மடங்கு பெரிய குருதிவேள்வி ஒன்றை நிகழ்த்துவேன். அத்தனை தேவர்களையும் வரவழைத்து மெய்வேதம் எதுவென்று காட்டுவேன் என்கிறார். அங்கிருந்து புறப்படுகிறார். துவாரகையை அமைக்கிறார். வேத முனிவர்கள் அறிய முடியாமையாக தன்னை உணர்த்தும் ஒன்றை “அது“ என்றனர். அதுவன்றி ஏதுமிருக்கவில்லை என்று உணர்ந்தனர். ஒருமையான அது மேலே உள்ளதா கீழே உள்ளதா? அங்கு படைப்பாற்றல் உண்டா? அது எப்படி பிறந்தது? அதை யார் உருவாக்கினர் அல்லது உருவாக்கவில்லை என்ற வினாக்களோடு “அதை“ அணுகினர். அதனை பிரம்மம் என்றனர். அது வேதம் விளைந்த தொல்காடுகளை ஆண்டது. வேதங்களின் தொகுப்பு சப்தசமன்வயத்தை உருவாக்கியதுபோல தத்துவசமன்மயம் உருவாக வேண்டுமென்பது இளையயாதவரின் விழைவு. அவர் வேத மறுப்பாளர் அல்ல. மகரந்தத்தை கொண்டு செல்லும் சிறுவண்டு மரத்தை மறுப்பதில்லை. அது எடுத்துச் செல்வது அதன் சாரத்தையே. அவர் வேள்வியை மறுக்கவில்லை. வேண்டுபவர்கள் வேட்கலாம். அது இகம். வேதம் பரத்துக்கும் உரியது என்பதே அவர் தரப்பு.
இதற்கிடையே அஸ்தினபுரியில் விதுரரின் ஏற்பாட்டில் மைத்ரேய மாமுனிவர் மன்னர் துரியோதனனை ஆற்றுப்படுத்த முயல, அரசனோ திரும்பி வர முடியாத தொலைவு சென்றிருந்தான். அது சென்றடையவிருக்கும் புள்ளியானது குருதிக் கொண்டு வரையும் கோலம் என்று அம்முனிவர் காலத்துக்கு முன்பே உரைக்க, திருதராட்டினர் தன் மகனுக்கு தீச்சொல் இட வேண்டாம் என்று மண்டியிடுகிறார். தனயனை கண்டிக்காத தமையன் மீது கோபம் கொள்ளும் விதுரர் அங்கிருந்து கிளம்பி தைத்ரிய காட்டுக்கு வருகிறார், உடன் அஸ்வகந்த வைரத்தையும் எடுத்துக் கொண்டு. அது வைரமன்று, அஸ்தினபுரி என்றுணர்ந்தவர் அவர். ஆறாவது காடான தைத்திரயம் வந்த பாண்டவர் குழு அவரை சந்திக்கிறது. அவர் கான் வாழ்க்கைக்கு லாயக்கற்றவர். கனியாமல் கனி உதிர்வது வலி மிக்கது என சகதேவன் அவருக்கு எடுத்துரைக்க அதை உணர்ந்தவராக அவர் அஸ்தினபுரி மீள்கிறார்.
பாண்டவர்கள், பிரம்மம் ஒன்றே. வேதம் பிரம்ம வடிவம். மானுடன் அறியும் அனைத்துமாக அதுவே ஆக வேண்டும். அனைத்துக் கலைகளும் வேதமே, அனைத்து அறிதல்களும் வேதப்பகுதிகளே என்று யாக்ஞவல்கியரால் வகுக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படும் பிருகதாரண்யகம் வருகின்றனர். வேதம் செழித்த காடுகளில் அதுவே மிகவும் பெரியது. கௌஷீதக மரபை சேர்ந்த அஸ்வாலாயனரை ஆசிரியராகக் கொண்ட சூரியர் குருவினின்று விலகி தேடல் விழைவுக் கொண்டு மானுடர் விழிகளே அறியாத காடு நோக்கி பயணிக்கிறார். எவரும் அறியாத ஓரிடத்தில் தன்னுள் அமைந்த அது தன்னை உணரும் தருணம் வேண்டுமென விழைகிறார். இதுவல்ல… இதுவன்று… என்று மறுத்து எவராலும் அறியப்படாத எப்பெயரும் சுட்டாத தாவரங்கள் அமைந்தவிடத்தை தனக்கானதாக உருவாக்கிக் கொள்கிறார் அவருள் எழுந்து நான் என்று உணர்ந்த ஒன்று ஒளியின்றி தவித்து பின் அது நான் நான்.. என அதிர்ந்து மெல்ல சுடர் கொண்டு தன்னொளியால் அவ்விருளை அகற்றுகிறது. முன்பிருந்த எதுவும் பின்னிற்காத மெய்யறிதல் ஒன்றை நாடி அங்கு வந்த யாக்ஞவல்கியரிடம் தானறிந்த வேதவரியை சொல்கிறார். ”நானே பிரம்மம்”
தருமரைச் சொற்கள் சூழ்கின்றன. அறியும் ஆவல் உந்துகிறது. சாந்தீபனி காடு நோக்கி பயணம் தொடர்கிறது. செளனக குருநிலையிலிருந்து பிரிந்து சென்ற சாத்தோக்யத்திலிருந்த பிரிந்து வந்தது சாந்தீபனி மரபு. பிறிதிலாதது ஏன் தன்னை பிறிதென காட்டுகிறது என்ற கேள்வியுடன் கிளம்பிய அதன் முதலாசிரியர் சகஸ்ரர் எவருமில்லாத காடு தனக்குத்தானே கொண்டாடிக் கொண்டதை காண்கிறார். ஒன்றுக்கு முற்றிலும் நிகரென பிறிதொன்றைக் கண்டு ஒன்றின் போதாமையை பிறிதொன்று நிரப்பும் மெய்மையை உணர்கிறார். தான் உணர்ந்தவற்றை மகாலீலாசித்தாந்தம் என்கிறார். இளையயாதவர் சாந்தீபனியில் கற்றவர். குரு தேடியடைந்த மாணவர். அங்கு மைந்தனென வளர்ந்தவர். மெய்யவைகளில் சொல்லேற்றும் திறன் கொண்டவர். கம்சனின் கொலை வெறியாட்டத்தில் கொதித்துபோகும் தன் சீடனுக்கு இப்புவியானது நெறி, அறம், அன்பு, இரக்கம், அழகு போன்றவற்றோடு மீறலும் மறமும் வெறுப்பும் கொடுமையும் நிறைந்ததே என்றுரைக்கிறார். இதுவே லீலை. இருநிலைகளுக்கு நடுவே அசையா நிகர்நிலை கொண்டவனே அந்த லீலையை காண்கிறான். இன்பத்திலும் துன்பத்திலும் இருளிலும் ஒளியிலும் அசையாத சித்தம் கொண்டவனே யோகி. அவனே இப்பெருவிளையாடலை காணும் விழிப்புள்ளவன். இங்கு அனைத்தும் புயலொன்றால் அலைக்கழிக்கப்பட்டு சுழன்றாடுகின்றன. தானும் அதில் ஆடுபவன் ஆடலை அறிவதில்லை. சித்தம் அசைவற்றவனே அப்பெருஞ்சுழற்காற்றை காண முடியுமென உபதேசிக்கிறார்.
ஆனால் உபதேசிக்கும் தகுதிநிலையை அவர் பெற்றிருக்கவில்லை. புத்திரபாசம் அவரை கடந்து விடுகிறது. தான் கற்ற, கற்பித்த வேதங்கள் அனைத்தும் எங்கோ செல்ல வேதமெய்மை என்ற சொல்லே பொருளற்று போக சித்தமெங்கும் மைந்தனே நிறைந்திருக்க, முதிய தகப்பனாய் துவாரகையின் அரசரிடம் மகனை மீட்டு வரும் உதவி கோரி நிற்கிறார். குருவின் வேண்டுகோளை நிறைவேற்றும் கிருஷ்ணர், உங்களின் மைந்தனுக்கும் மதுராவில் கம்சனால் கொல்லப்பட்ட ஆயிரங்கணக்கான மைந்தர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா? லீலை என்றால் என்னவென்று தாங்கள் சொன்னது இதுவா அல்லது இது மாயையா? என்கிறார் ஆசிரியரிடம். ஆசிரியரை கொன்று உண்டு எழுந்து நிற்கும் வார்த்தைகள் இவை. இவ்வூழே உனக்குமென்றுணர்க. உன் முதல் மாணவன் உன்னை மறுப்பான். நீ வாழ்ந்தது எவருக்காகவோ அவர்களே உன்னை அழிப்பர். தன்னந்தனிமையில் லீலை என்றால் என்னவென்று நீயும் உணர்வாய். நச்சுப்பாம்பை வளர்ப்பவன் அதனிடம் கடிபட்டாக வேண்டும். உன்னிடமும் வளர்கிறது அச்சொல், என குருவானவர் சீடனுக்கு வன்சொல் வழங்கி விட்டு மகன் வருவதற்கு முன்பே அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
இதுவரை குறும்பால், துறுதுறுப்பால், கூர்நோக்கால், சித்தத்தெளிவால், ஞானத்தால், பெருகி நிற்கும் ஆளுமையாக வெளிப்பட்ட துவாரகை மன்னரின் இடர்மிகு தருணங்கள் இந்நாவலில் இடம் பெறுகின்றன. தந்தையென கருதும் தமையன் பலராமர் அவரிடமிருந்து விலகி மதுராவுக்கு சென்று விடுகிறார். அது யாதவர்களிடையே எழும் உட்பூசலால் நிகழ்வது. குலத்துக்கொன்றாக மணம் செய்துக் கொண்ட அவர் எந்த அடியை எடுத்து வைப்பினும் அது பாதகமே. அக்ரூரர் கூட இளையயாதவரிடமிருந்து நகர்ந்து விடுகிறார். மோதல்கள், துரோகம், வஞ்சம், சால்வனின் படையெடுப்பு என அடுத்தடுத்து தான் சந்திக்கும் பிரச்சனைகளை வேரறுக்க அவர் எடுக்கும் இரக்கமற்ற நடவடிக்கைகள் இந்திரப்பிரஸ்தமும் அர்ஜுனனின் வில்லுமே அவரின் பலம் என்று பாரதவர்ஷத்தில் நிலவிய சொல்லை மாற்றி நிறுவுகிறது. அவர் சால்வனின் நாட்டை சூறையாடி எரித்து அதன் சாம்பலை அஸ்தினபுரியின் கங்கை வாயிலில் சிலையென நின்றிருக்கும் அம்பையன்னைக்கு படைக்கிறார்.
உலகியலில் வேதம் என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து விடும் ஒரு பெருந்தத்துவத்துத்தின் அணிச்சரடுதான் சொல்வளர்க்காடு. அவர்கள் மைத்ராயனியம் வருகின்றனர். அது வேதம் நிறையும் காடுகளை சென்றடையும் தடங்களின் சந்திப்பு மையம். அதன் கல்விச்சாலை என்பதே அன்னக்கூடம்தான். அங்கு அமையும் பணிகளே அதன் வேள்வி. உண்ண வருபவர்கள் உண்டு எழும் நிறைவே அதன் விடுதலை. தருமரின் உள்ளம் அடுமனைப்பணியில் தன்னை ஆழ்த்திக் கொள்கிறது. பரிமாறி நிறைகிறது. சமைத்து மகிழ்கிறது. எச்சிலெடுத்து சென்னி சூடிக் கொள்கிறது. அங்கு வரும் சமணப்படிவர் தருமரிடம் இப்புவியில் விழைவு ஒன்றை தவிர வேறெதுமில்லை. அன்பு என்பது நாம் கொள்ளும் விழைவே. அதனை நாடும் வழியை அறம் என்று அணிச்சொல்லாக்கி விடுகிறோம். விழைவை வெல்லாதவன் அதனையன்றி எதையும் அறிய இயலாது என்கிறார். நீ இங்கு அன்னமளித்து ஆணவத்தை வென்றாய். அனைத்தறிவுகளையும் நிகரெனக் கொண்டு அறியாமை வெல்கிறாய். ஆனால் உன் விழைவை அறுத்து இங்கு நீ அமைந்துள்ளாய் என எண்ணுகிறாயா என்று வினவுகிறார்.
தருமரின் அகம் விரிகிறது. அறிகிறது. அவர் விழைவது திரௌபதியின் அன்பை. அறிதலே கடத்தல். கடப்பதே விழைவை வெல்லும் வழி என்கிறார் அருகர். கடக்க வேண்டும். கடக்க வேண்டும். கடந்தேயாக வேண்டும். சொல்வளர்காடுகள்தோறும் சென்ற அவருக்கு சொல்லாடுதல் பயனற்றது மெய்ச்சொற்களோ முரண்பட்டுள்ளன. மறுக்கப்படாதவர் எவருமிலர். அறமும் நெறியும் சொற்களின் இருளுக்குள் புதையுண்டுள்ளன என்றுணர முடிகிறது. அங்கிருந்து கிளம்ப எண்ணுகிறார். இம்முறை அவருடைய பயணத்தில் யாரும் உடனிருக்க போவதில்லை.
கந்தமாதனம் என்னும் அக்காடு எரி காடு. அனல்காடு. வெம்மையானது. வாழ ஏதற்றது. செல்ல பாதையற்றது. உளம் கொள்ளும் ஊக்கம் துணை வர அவர் நடக்கிறார், கடக்கிறார். உடல் வெப்பத்தில் தகிக்கிறது. நா விடாய் கொண்டு தவிக்கிறது. எங்கிருந்தோ வந்த குளிர்மை எங்கோ பாறையிடுக்கில் வழியும் நீரை அடையாளம் காட்டுகிறது. வயிற்றில் அக்னி எரிகிறது. அதற்கு அவியூட்ட நாசி அனலில் வெந்து விழுந்துக் கிடக்கும் பறவையிடம் அழைத்து வருகிறது. பசியே அனல். அன்னமே விடுதலை. இப்புவியை ஆட்டுவிக்கும் பேரனலின் ஒற்றை வடிவம் பசி. அவர் அமுதாக விழைகிறார்.
மரங்கள் நகர்வதில்லை. பறவைகளே பறந்தலைகின்றன. காடு முழுக்க மகரந்தம் பரவிக் கிடக்கிறது. வண்டுகள் தேடி வந்தமர்கின்றன. மலர்கள் வண்ணங்களை நிறைத்துக் கொள்வதும் மரங்கள் கிளைகளை விரித்து நிற்பதும் அவற்றை வரவேற்கவே.
மகாபாரதத்தை இத்தனை நுணுக்கமாக அறிதல் மிகப்பெரிய அனுபவம்.