மொழியாக்கமும் படைப்பாக்கமும்

(21 அக்டோபர் அன்று ஈரோடு நண்பர்கள் சந்திப்பில் பேசப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)

நண்பர்களுக்கு வணக்கம்.

இந்த சந்திப்புக்கு நண்பர் கிருஷ்ணன் அவர்கள் அழைத்தபோது, மொழியாக்கம் தொடர்பாக ஒரு சிறிய நண்பர் உரையாடல் என்ற அளவில் அமையும் என்று சொன்னார். ஆனால் எதிர்பார்த்ததை விட நண்பர்கள் பதிவுசெய்ததால், ஓர் உரையுடன் தொடங்கலாம் என்று முடிவானது. நம்முடைய நண்பர் சந்திப்புகளின் இயல்பு தீவிரமான ஒரு விஷயத்தை செறிவாகப் பேசி அதன் மேல் விவாதம் மேற்கொள்ளுதல். அந்த வகையில், தன்வயமான உரையாக அல்லாமல், புறவயமாக, மொழியாக்கம் என்றால் என்ன, மொழியாக்கத்தை தத்துவார்த்த படுத்த முடியுமா என்ற கேள்வியை இங்கே சற்று பரிசீலித்துப் பார்க்க இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். இதைப்பற்றி இதுவரை வெளிப்படுத்தாத சற்று தயக்கம் மிகுந்த சில எண்ணங்கள் என்னிடம் உள்ளன. அணுக்க நண்பர் கூடுகை என்பதால் இந்தச் சபையில் அவற்றை வெளிப்படுத்தத் துணிகிறேன். மொழியாக்கத்தில் உள்ள ஆக்கச் செயல்பாடு என்ன, அதன் படைப்பூக்கம் எப்படிப்பட்டது என்று இந்த பேச்சு வழியாக ஒரு சிந்தனைப் பயணம் மேற்கொண்டு சற்று விசாரிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

நண்பர்களே, இசைமேதையான வீணை தனம்மாளைப் பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. தனம்மாள் தஞ்சாவூரின் ஒரு பழம்பெரும் இசை மரபைச் சேர்ந்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து மறைந்தார். தனம்மாள் காலத்தில் அவர்கள் குடும்பம் தஞ்சையிலிருந்து இடம்பெயர்ந்து சென்னை ஜார்ஜ் டவுனுக்கு குடி வந்து விட்டிருந்தது. நாட்டுப்பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு மச்சு வீட்டில் வசித்தது. அப்போது அரச ஆதரவுக்கான வாய்ப்புகள் கடந்துசென்றுவிட்டக் காலம். தனியார் புரவலர்களின் அன்பளிப்புகள் வழியாக குடும்பம் நடந்தது. அந்த வசதியற்ற சூழலிலும் அந்தக் குடும்பம் மாடியின் பெரிய ஒழிந்த அறையை முற்றிலுமாக பாட்டியம்மாளுக்கே விட்டுக்கொடுத்தது. மொத்தக் குடும்பமும் அவருக்கு அடியில் கீழ்த்தளத்தில் நெருங்கி வாழ்ந்தது.

பாட்டியம்மா தனம்மாளுக்கு அப்போது அறுபது வயதுக்கு மேல். கண் பார்வை மங்கிவிட்டது. சிடுசிடுப்புக்காரி. யாரையும் அண்ட விட மாட்டார். இரண்டு வேளை உணவருந்த மட்டும் படியிறங்கி வருவார். மற்ற நேரத்தை வீணை சாதகத்தில், அல்லது வெற்று அறையின் முற்று நிசப்தத்தில், தனிமையில் கழிப்பார். வாரம் ஒரு முறை மாலை வேளையில் அவர் வீணை இசையைக் கேட்க நண்பர்கள் அந்த அறையில் கூடுவதை அனுமதிப்பார். அப்போதும் பூரண மௌனத்தை எதிர்பார்ப்பார். ஓசைமிகுந்த வெளியுககுக்குள் போவதில்லை. கோயில்களில், அடுத்தவர் வீடுகளில் வாசிக்கும் வழக்கமும் இல்லை.

அப்போது ஒரு நாள் தனம்மாளிடம் அவரைப் பெரிதும் மதித்த நண்பர்களும் பிரமுகர்களும் வந்து, மெல்ல சொன்னார்கள். சென்னையில் சங்கீத வித்வத் சபை என்று ஓர் அமைப்புத் தொடங்க போகிறோம், உங்கள் ஆதரவு வேணும், என்று. என்ன சபை? அங்கே என்ன செய்வீர்கள்? என்று தனம்மாள் கேட்டார். இசை என்றால் என்ன என்று பேசி, அதன் சிறப்பை உணர்த்தி, மக்கள் மத்தியில் ஆதரவுத் தேடப் போகிறோம் என்றார்கள். தனம்மாள் புருவத்தை உயர்த்தி, “ஓ! சங்கீதத்தைப் பேசப்போகிறார்களாம்!” என்று சொன்னார்.

தனம்மாள் நுணங்கிய இசைச் சூழலில் வாழ்ந்தார். ஆகவே சங்கீதம் பேசப்படமுடியாது என்று கருதினார். இதே போல் ஒரு கதை மேற்கிசையின் மேதை ராபர்ட் ஷூமனை பற்றிச் சொல்லப்படுகிறது. பியானோவில் அவர் வாசித்த ஓர் இசைத்தொடரை விளக்கச் சொல்லி ஒருவர் கேட்க, மீண்டும் பியானோவில் அமர்ந்து அதே இசைத்தொடரை முதலிலிருந்து வாசித்துக் காட்டினாராம். அவரில் வெளிப்பட்டதும் அதே நுண்மையே.

இசை போன்ற தூயக் கலைகளுக்கு ஒருவேளை இந்தப் பிடிமானங்கள் பொருந்தக்கூடுமோ என்னவோ. ஆனால் நன்றோ தீதோ, இங்கு கூடியுள்ள நாம் புழங்குவது மொழியின் சூழலுக்குள். மொழியின் நுண்மையை புரிந்துகொள்ள நமக்கு மொழியே வழியாக உள்ளது. மொழியின் வழிகளை அறிய வேண்டுமென்றால் மொழியின் கலங்கிய நீருக்குள் புகுந்து தான் நாம் பயணமாக வேண்டியுள்ளது.

ஆகவே “மொழியாக்கம் என்றால் என்ன” என்ற கேள்வியை அணுக, மொழியின் முக்கிய கருவியான சில உவமைகளின் துணையை எடுத்துக்கொள்ளப்போகிறோம். மொழியாக்கத்தைப் பற்றிய உவமைகளை அடையாளக்குறிகளாகக் கொண்ட சற்று நெளிவான ஒரு சுழல் பாதை வழியாக நாம் பயணிக்க உள்ளோம்.

இந்த உரையை மூன்று பகுதிகளாக அமையும். ஒரு ஃபனல் போன்ற வடிவாக இதைக் கற்பனை செய்யலாம். முதற் பகுதியில் சற்று விரிந்த பார்வையில், இயற்கைக்கும் மனிதமனத்துக்கும், கலைக்கும் மொழிக்குமான உறவைப் பற்றியும், அதில் உள்ள ஆக்க அம்சத்தைப் பற்றியும்; இரண்டாம் பகுதியில் குவிந்து, மொழி என்ற விசேஷ அமைப்பில் உள்ள படைப்பாக்கத்தைப் பற்றியும்; மூன்றாம் பகுதியில் மீண்டும் விரிந்து மொழியாக்கம் என்பதே இயற்கையின் படைப்பாக்கத்துக்கான ஓர் உவமையாக எப்படி செயல்படுகிறது என்பதைப்பற்றியும் பேசவுள்ளேன்.

நண்பர்களே, என் பேச்சை வீணை தனம்மாளின் கருத்தோடு தொடங்கியமைக்கு ஒரு காரணம் உள்ளது. மொழியாக்கத்தைப் பற்றி அடிக்கடி சொல்லப்படும் ஓர் உவமை, அது ஒரு நிகழ்த்துக்கலை போன்றது என்பதாகும். ஒரு பாடலுக்கு நாட்டியக்காரர் அபினயம் பிடிப்பது போல, ஒரு கதாபாத்திரத்தை நடிகர் தன் உடலசைவுகள் வழியாக நடித்துக் காட்டுவது போல, ஒரு பிரதியை மொழியாக்கக்காரர் மற்றொரு மொழியில் நிகழ்த்துகிறார் என்று சொல்லப்படுகிறது. தியாகராஜரின் ஒரு கீர்த்தனைக்கான பாடாந்திரம் – அல்லது ‘பிரதி’ – ஏற்கணவே உள்ளது. அதைத்தான் தனம்மாள் வீணையில் இசைக்கிறார். ஆனால் வீணை என்பது வேறு வடிவம் – வேறு மொழி – என்பதாலேயே சில நுண்மையான வேறுபாடுகளுடன் அந்த வெளிப்பாடு நிகழ்கிறது. அந்த இரண்டாம் வடிவத்தின் புதுமையை, அன்னியத்தன்மையைத்தான் நாம் ஒரு மொழியாக்கத்தை வாசிக்கையில் சுவையென அறிகிறோம். இவ்வாறு அந்த உவமையை விரித்துச் சொல்லலாம்.

இது மொழியாக்கத்தை அணுக ஒரு நல்ல உவமை. ஒரு வாசலாக அமைவது. ஆனால் இதிலிருந்து நாம் சற்று ஆழமாகச் செல்லக்கூடிய வேறொரு இடம் உள்ளது. நிகழ்த்துக்கலையை மொழியாக்கத்திற்க்கு உவமையாக சொல்கிறோம். ஆனால் கலையே கூட அனுபவத்தின் மொழியாக்கம் என்று சொல்லலாம் அல்லவா? ஓர் அனுபவத்தை ஒரு புலனறிதலாக ஆக்குவது தான் கலை என்றால் அனுபவங்களை புலன்களின் மொழிகளுக்கு புரியும்படி மொழிமாற்றம் செய்யும் செயல்பாடு தான் கலை எனலாமா?

தென்மேற்கு பருவக்காற்று என்ற பாடலின் தொடக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் மழைத்துளிகள் சொட்டும் சப்தத்தை டிரம்ஸ் வழியாக நிகழ்த்திக்காட்டும் இடத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். கோடை முதல் மழையின் குளிர்ந்த நீர்த்துளிகள் தனித்தனியாக, பெரிதுபெரிதாக, மண்ணின் மணத்தைத் தட்டி எழுப்பக்கூடிய வேகத்தோடு விழுவதை அந்த இசையின் தாளம் நிகழ்த்திக்காட்டுகிறது. மழை என்ற ஐம்புலன் அனுபவத்தைத் தூய செவி அனுபவமாக மாற்றுகிறது அந்த இசை. அதே மழை தாரைகளாக விழுந்தால் அது தந்திவாத்தியங்கள் வழியாக இசைக்கோப்பில் நிகழ்த்தப்படுவதுண்டு. தாளமும் தந்திகளும் அனுபவத்தின் இருவேறு சரடுகளை இசையாக மொழிமாற்றம் செய்வதாக நாம் சொல்லலாம். அனைத்து நிகழ்த்துக்கலைகளிலும் இந்த மொழிமாற்றத்தின் அம்சம் செயல்படுவதை நாம் காணலாம். பழம்பெரும் கதகளி ஆட்டக்காரர் பட்டிக்காம்தொடி ராவுண்ணி மேனோன் கீசகனின் இறப்புக்கணத்தை நிகழ்த்திய விதத்தைப்பற்றி ஒரு தொன்மம் போல் பேசப்படுகிறது. மூச்சுப்பயிற்சி வழியாக மூச்சை மெல்ல மெல்ல தளரவிட்டு, மூச்சு நிற்கும் நொடி வரை நிகழ்த்திக் காண்பிப்பதும், அதற்கு ஏற்றார் போல் விரல்களும் அங்க அசைவுகளும் ஒடுங்குவதும், அதன் தாளத்தை செண்டை தன்னளவில் நிகழ்த்துவதும் அந்த வெளிப்பாட்டின் அம்சங்களாகக் கூறப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் மரணம் என்ற அனுபவத்தின் ஒவ்வொரு வகை மொழியாக்கம் என்று சொல்லலாம். இசை, நடனம், நாடகம் மட்டுமல்ல, ஓவியத்திலும் புனைவிலும் கூட நிகழ்வது அனுபவத்தின் மொழிமாற்றம் நான்.

என்ன நடக்கிறது? கலை என்பதையே அடிப்படையில் ஒரு நகலெடுக்கும் செயல்பாடு என்று சொல்லலாம். எதை நகலெடுக்கிறது? நம் அறிதல்களை. அல்லது அவற்றின் சில நகர்வுகளை, அசைவுகளை. அவை நமக்கு மெல்ல புலனாகும் திறப்பை. அந்த அசைவுகளை வெவ்வேறு ஊடகங்கள் வழியாக போல்செய்துப் பார்க்கிறோம். பள்ளிப்பேருந்து ஒரு பருத்த பூனை போல் குதித்து குதித்து வருவதை என் நான்கு வயது மகன் நடித்து மகிழ்கிறான். மனிதர்கள் அனைவருக்குமே இன்னொன்றைப் போல்செய்து பார்ப்பதில், ‘மிமிக்ரி’ செய்வதில், ஒரு மகிழ்ச்சி உள்ளது. ஒரு பிரதியை மொழியாக்கம் செய்வதில் உள்ள பிரதான மகிழ்ச்சியும் இதுவே. ஆகவே மொழியாக்கம் என்பதை ஒரு வகையான மிமிக்ரி என்று சொல்லலாம். இது மொழியாக்கத்தைப் பற்றி சொல்லத்தக்க இரண்டாவது உவமை.

கலை என்பதே நாம் உணரும் இப்பிரபஞ்சத்தின் நகர்வுகளை போல்செய்து பார்ப்பது என்ற கருத்து புதியதல்ல. உங்களில் தத்துவ வாசகர்கள் உடனே அடையாளம் கண்டிருக்கலாம், இது அரிஸ்டாடில் சொன்ன கருத்து. அதற்கு அவர் mimesis என்ற சொல்லை உபயோகிக்கிறார். ஓர் அவல நாடகம் அதன் கதை நகர்வால் (plot) தான் நிலைகொள்கிறது என்று அவர் கருதினார். ஏனென்றால் ஒரு நல்ல அவல நாடகம் வாழ்க்கையை ஆளும் விதிகளின் புரிந்துகொள்ளமுடியாத விசைளின் நகர்வைத்தான் மாதிரிசெய்கிறது என்றார். படைப்பூக்கத்துடன் அமைக்கப்பட்ட கதையின் சட்டகத்தில் அந்த நகர்வுகளை கண்டுகொள்ளும்போது தான் பார்வையாளன் அவற்றை அறிகிறான், சுத்தீகரணம் அடைகிறான் என்று அரிஸ்டாடில் சொல்கிறார்.

இன்னொன்றை மாதிரிசெய்து அதைக் கண்டு அதன் மூலமாக அகம் மாறுபடுவது என்பது விலங்குகளில் மனிதனுக்கே உரித்தான தனித்திறன். ஏனென்றால் ஒரு வேளை மனிதனுக்கு மட்டும் தான் அகம் என்று ஒன்று உள்ளது. ஆனால் மாதிரிசெய்தல் என்ற நிகழ்வு மனிதனுக்கு மட்டும் உரியதல்ல. பூச்சியினங்கள், மீனினங்கள், பறவையினங்கள் என்று இயற்கையில் பல உயிர்கள் மற்றதை மாதிரிசெய்து தங்களை வெளிப்படுத்துகின்றன. பூச்சிகள் இலைகளையும் சருகுகளையும் மாதிரிசெய்கின்றன. பட்சியிறகுகள் கண்களை மாதிரிசெய்கின்றன. சில பூக்கள் அதன் மகரந்தத்தை சேகரிக்க வரும் தேனிகளுக்கு அன்னக்கலங்களாகக் காட்சியளிக்கின்றன. இவ்வகை வேடங்கள் அந்த உயிர்கள் தங்கள் சுற்றத்தோடு இசைந்து (adaptation) வாழச் செய்வதாக, அவற்றை மேலும் வாழ்திறன் (fitness) கொள்ள வழிவகுப்பதாக உயிரியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இன்னொன்றை நடிப்பது வழியாக உயிர்கள் தங்கள் சகோதரர்களுக்கு, இனவிருத்திக்கான இணையர்களுக்கு – தங்கள் சொந்த மொழி பேசும் உயிர்களுக்கு – ஒரு செய்தியை விடுப்பதாகவும், தங்களை வேட்டையாட எண்ணும் அல்லது தங்களுக்கு இரையாகக் காத்திருக்கும் வேற்று மொழி உயிர்களுக்கு வேறொரு செய்தியை விடுப்பதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவ்வாறு ஒரு செய்திப்போட்டி வழியாகத்தான் உயிர்கள் தங்கள் சுற்றத்தோடு இசைவும் வாழ்திறன் வளர்ச்சியும் அடைவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை பல கருத்துகளில் ஒன்று என்று தான் கருத வேண்டியுள்ளது. உயிர்கள் திகப்பூட்டும் விதங்களில் மாதிரிசெய்கின்றன. அவை அனைத்தையும் எளிமையாக போட்டி என்ற கருத்தில் ஒடுக்கிவிட முடியாது. பவளப்பாறை மீனினம் ஒன்றின் துணையினங்கள் ஒவ்வொன்றும் ஒரு தோல் வண்ணம் கொண்டது. அவை ஒவ்வொன்றும் மற்றதை மாதிரிசெய்ய பரிணாமம் அடைந்துள்ளன. இதை mutual mimicry என்கிறார்கள். சூழ்நிலைக்கேற்றாற்போல் நெகிழ்வாக ஒன்றையொன்று மாதிரி செய்வதாலேயே அவை தங்கள் பலங்களை பகிர்ந்துகொண்டு, ஒரு கூட்டினமாக மேலும் சூழல் இசைவும் வாழ்திறனும் அடைகின்றன.  ஆம், செப்புமொழி எதுவானாலும் சிந்தனை ஒன்று என்பது போல.

மாதிரிசெய்தலுக்கு இயற்கையில் வேர்கள் இருப்பது கலையார்வலர் அறிந்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான கருத்து என்று நினைக்கிறேன். மனித மூளையில் கலைக்கான உந்துதல் இருப்பது பண்பாட்டின் விளைவல்ல, அது பண்பாடையே உருவாக்கிய இயற்கைவிதி ஒன்றின் வெளிப்பாடு என்று தான் இன்றைய முன்னணி ஆய்வு கருதுகிறது. அதாவது உயிர்கள் சூழலுடன் கொள்ளும் இசைவாக்கங்களைப்போலவே, கலைகளும் மனித உயிரின் ஓர் இசைவாக்கம் என்று சொல்கிறது. மனித மூளையில் அதற்கான அமைப்பு உள்ளது. அது மனிதனின் சூழல் இசைவையும் வாழ்திறனையும் அதிகரிக்கிறது. இது தான் அந்த கருத்து.

இதை ஒரு சாம்ஸ்கிய கருத்து என்று சொல்லலாம். மனித மூளை அடிப்படையிலேயே மொழியை கையாளும் அமைப்புக் கொண்டது என்ற நோம் சாம்ஸ்க்கியின் கருத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  அந்த அமைப்பு இருப்பதால் தான் அது எந்த மொழியையும் கற்கும் திறன் கொண்டுள்ளது, மொழி விளையாட்டுகளில் ஈடுபடுகிறது என்கிறார் சாம்ஸ்கி. கலை மூளைக்கும் அப்படி ஓர் அமைப்பு உள்ளதாக இன்று கூறப்படுகிறது.

 அப்படியென்றால் மொழி மூளையை கலை மூளையின் ஒரு விசேஷ வகைமை என்று சொல்லலாம். புலன் வெளிப்பாடுகள் வழியாக புலன் அறிதல்களை போல்செய்து விளையாடுவது கலை. அதே விளையாட்டை மேலும் நாசூக்காக விளையாட மொழி மனிதனுக்கு ஒரு விசேஷ களத்தை அமைக்கிறது. கலைகள் பண்பாடு வளயத்துக்குட்பட்டு வெளிப்படுகின்றன. ஆனால் பண்பாட்டின் சட்டகத்தை மீறி ஓர் அறிதலென அது தத்துவார்த்தமாகத் தொடர்புறுத்த வேண்டுமானால் மொழியின் துணை தேவையாகிறது (அல்லது மொழிக்குள் பிறக்க விதிக்கப்பட்டவர்கள் என்பதாலேயே மொழியின் துணையின்றி நம் தொடர்புறுத்தல்கள் நிறைவடையாமல் போகின்றன). மொழி வழியாகவே கலையின் அறிதல்கள் மானுடப்பொதுவாகின்றன. ஆம், தனம்மாளும் ஷூமனும் சொல்வது ஒரு பகுதி உண்மை தான் – தூய கலைகளுக்கும் ஒரு துளி மொழி தேவைப்படுவது தான் நிதர்சனம். நம்முடைய அதிர்ஷ்டம், பரிணாமத்தால் ஒன்றை ஒன்று மாதிரி செய்யும் திறன் கொண்ட பவளப்பாறை மீன்களைப்போல, மனிதர்களும் ஒருவரின் மொழியை மற்றொருவர் மாதிரிசெய்யும் ஆற்றல் கொண்டவர்கள். அவ்வாறு மாதிரி செய்வது வழியாக நாமும் நம் ஆற்றல்களை பகிர்ந்துகொண்டு ஓர் உயிரினமாக மேலும் பலசாலிகளாக வழியுள்ளது. மேலும் சூழல் இசைவு கொள்கிறோம்.  வாழ்திறனை அதிகரிக்கிறோம்.

மற்ற விலங்குகளைப்போல் அல்லாமல் மனிதனுக்கு சக விலங்குகளால் வேட்டையாடப்படும் வாய்ப்பு குறைவு. நாம் அஞ்சக்கூடிய விஷயங்கள் வேறு. அவற்றில் ஒரு பெரும் பகுதி அகவயமானது. அதிகார இழப்பு, மதிப்பிழப்பு, உறவுகளின் இழப்பு, பிம்ப இழப்பு… மாற்றத்தை, கரைந்து போதலை, இறப்பைத்தான் நாம் அஞ்சுகிறோம்.  நமக்கு எதிராக பல்லும் நகமும் கூர்தீற்றி நிற்கும் விலங்கு காலம்.

காலத்தின் நகர்வுகளை அறிய, சுத்தீகரணம் அடைய, நம் வசம் உள்ள பிரம்மாஸ்திரங்களில் ஒன்று கலை, மற்றும் அதன் விசேஷப்பகுதியான மொழி. கலையையும் மொழியையும் நாம் மாதிரிசெய்யும் தோறும், ஒருவரொடு ஒருவர் பகிரும் தோறும், நம் கூற்றனை கையாள மேலும் நுண்மையான உத்திகளை ஒரு குலமாக மனிதர்களாகிய நாம் அடைகிறோம். நோவையும், சாவையும் இசைந்து கையாள மேலும் திறனுடன் வாழ கற்றுக்கொள்கிறோம். இந்தக்காரணங்களால் தான் ஓர் இனமாக நம் வாழ்திறனை அதிகரிக்கக்கூடிய மிகுந்த நெகிழ்வுடைய ஓர் இசைவாக்கம் என்று – அல்லது இயற்கை நமக்கு அருளிச்செய்த ஒரு படைக்கலம் என்று – மொழியாக்கச் செயல்பாட்டைச் சொல்லத் துணிவேன்.

நண்பர்களே, இதுவரை மொழியாக்கத்தை வரையறை செய்ய மூன்று உவமைகளை குறிப்பிட்டேன். மொழியாக்கத்தை ஒரு நிகழ்த்துகலை என, மிமிக்ரி என, இருத்தலியலை கையாள மனிதகுல பரிணாமத்தில் விளைந்த ஒரு படைக்கலம் என உருவகித்தேன். இவை மூன்றுக்கும் பொதுவான ஓர் அம்சத்தை நீங்கள் கவனத்திருக்கலாம், இவை மூன்றும் கலைக்கும் சொல்லத்தக்க உவமைகள் ஆகும். ஆகவே ஒரு கலைப்படைப்பை உருவாக்குவதும் அதை மொழியாக்குவதும் சாராம்சத்தில் வெவ்வேறு செயல்கள் அல்ல.

அடிப்படையில் இரண்டுக்கும் அடியில் செயல்படும் நகர்வு என்ன? அதை படைப்பு என்று சொல்லலாம். இயற்கையில், உயிரினங்களில், இந்த படைப்பம்சம் திகைப்பூட்டும் அளவுக்கு வெளிப்படுகிறது. ஆனால் அங்கே அது குருட்டாக, ஒரு கட்டற்ற விளையாட்டாக  நிகழ்வதாகத் தோன்றுகிறது. மனிதனில் அந்த விளையாட்டம்சம் மிகக் கவனமாகக் கையாளப்படுவதைக் காண்கிறோம். உருவம் வண்ணம் ஆழம் என்று ஒவ்வொன்றையும் அளந்து அளந்து தான் கலைப்படைப்பு உருவாக்கப்படுகிறது. ஆனால் மகத்தான கலைப்படைப்பில் அவை போகிறபோக்கில் ஒன்றுதிறட்டப்பட்டது போல், ஆசிரியரின் கட்டை மீறி முழுதும் உருவானது போல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இயற்கையில் மட்டுமே வெளிப்படும் தற்செயல்களின் முழுமை அதில் வெளிப்படுகிறது.

இந்த படைப்பம்சம் ஒரு மூல இலக்கியப் படைப்பில் மட்டுமல்ல, அதன் மொழியாக்கத்திலும் வெளிப்படும். ஒரு நல்ல மொழியாக்கம் அடைய நினைக்கும் இலட்சிய வடிவம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். மொழியாக்கம் என்பது வெறும் வார்த்தைகளை மொழிமாற்றும் இயந்திரத்தனமான செயல் அல்ல. ஒரு புதிர்விளையாட்டு அல்ல. அது மூலப்படைப்புக்கு நிகராக இன்னொரு படைப்பை உருவாக்கும் செயல். ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஒன்றை பெயர்த்து எடுப்பது அல்ல, அது ஆக்கம். இதுவே இந்த பேச்சின் மையக்கருத்தாகக் கூற நினைக்கிறேன்.

இது ஒரு சர்ச்சைக்குறிய கருத்து என்று சொன்னால் நீங்கள் அனைவரும் ஆச்சரியப்பட மாட்டீர்கள் என நம்புகிறேன். ஓர் உதாரணம் சொல்கிறேன். இவ்வாண்டு நொபேல் பரிசு பெற்றவர் ஹான் காங் என்ற கொரிய எழுத்தாளர் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். நொபேல் பரிசின் நூறு வருட வரலாற்றில் ஆசியாவிலிருந்து ஹான் காங் உட்பட மொத்தம் 9 நபர்களுக்குத்தான் இதுவரை அந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய அழகியலை மையப்படுத்தும் நொபேல் போன்ற பரிசுகளுக்கு ஆசிய மொழி எழுத்தாளர்கள் சென்று சேர்வதென்பது எளிய காரியம் அல்ல. நல்ல மொழியாக்கக்காரர்கள் வழியாக அது நிகழ்கிறது.

ஹான் காங்குக்கு அமைந்த வெவ்வேறு ஐரோப்பிய மொழியாக்கக்காரர்களில் முக்கியமானவர் டெபரா ஸ்மித். ஹான் காங்கின் ‘தி வெஜிடேரியன்’ என்ற நாவலை 2015-ல் ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தார். அப்போது அவருக்கு 28 வயது தான். அவர் கொரிய மொழி கற்கத் தொடங்கி மூன்று வருடங்களே ஆகியிருந்தன. ஆனால் அந்த நாவலின் மொழியாக்கம் ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் பெருத்த வரவேற்பு பெற்றது. உலகளவில் ஒரு கொரிய நாவல் அந்த அளவுக்குக் கொண்டாடப்பட்டது அப்போது தான்.

இந்த மொழியாக்கம் 2018-ல் ஒரு சர்ச்சைக்கு உள்ளானது. இந்த சர்ச்சையை புரிந்துகொள்ள கொரிய மொழி இலக்கியச் சூழலைப்பற்றி ஒரு வார்த்தைக் கூற வேண்டும். 2015-க்கு முன்னாலும் கொரிய மொழி படைப்புகள் ஆங்கிலத்துக்கும் மற்ற ஐரோப்பிய மொழிகளுக்கும் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. ஆனால் அவை வாசிக்கப்படவில்லை. காரணம் அவற்றைச் செய்தவர்கள் கல்லூரி பேராசியர்கள். ஆம், தமிழ் போன்ற சூழல் தான். அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை பிசகாமல் மொழிபெயர்த்தார்கள். ஆனால் அப்பிரதிகள் வாசிக்கும் படி இல்லை. ஒரு விமர்சகரின் வார்த்தைகளில் சொன்னால் ‘பெரும் மெனக்கடலோடு உயிர் பிழிந்து எடுக்கப்பட்ட சக்கைப் படைப்புகளாக’ அவை இருந்தன.  டெபரா ஸ்மித்தின் மொழியாக்கம் தொடர்ந்து வாசிக்கப்பட்டது.

அந்த பேராசியர்களில் சிலர் டெபரா ஸ்மித்தின் மொழியாக்கம் பிழைகள் கொண்டது என்று கூறி ஓர் அறிக்கை வெளியிட்டனர். அது மூலத்தின் அடங்கிய தொனியை பிரதிபலிக்கவில்லை என்றும், வார்த்தைக்கு வார்த்தை விசுவாசமாக இல்லை என்றும், மொழிபெயர்ப்பாளர் சில இடங்களில் பிரதியை சுதந்திரமாக அர்த்தம் கொண்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டியது. இந்த அறிக்கை கொரியாவிலும் வெளியிலும் சர்ச்சை ஏற்படுத்தியது.

டெபரா ஸ்மித் அதற்கு பதிலளித்தார். படைப்பூக்கமற்ற மொழியாக்கம் என்று ஒன்று இருக்க முடியாது, இருந்தால் அதை மொழியாக்கம் என்றே ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார். ஆங்கிலத்திலிருந்து மிகவும் தூரம் கொண்ட கொரிய மொழியிலிருந்து ஒரு நூலை ஆங்கில புனைவு மொழிக்குக் கொண்டு வரும் போது அது மூலத்திலிருந்து வேறுபட்டுத்தான் தோன்றும் என்றார். தான் முதன்மையாக மூலத்தின் உணர்வுகளுக்கும் நகர்வுகளுக்குமே விசுவாசம் கொண்டிருந்ததாக சொன்னார். “எங்காவது விசுவாசம் தவறியிருந்தால் அது மேலும் பெரிய விசுவாசம் ஒன்றின் நிமித்தமாகத்தான்” என்பது அவருடைய பிரபலமான வரி.

இங்கே மொழியாக்கம் என்பது ஒரு திரவத்தை இன்னொரு பாத்திரத்து மாற்றி விடுவது போன்ற செயலாக பலரால் கருதப்படுகிறது. ஆனால் அதுவல்ல செயல். அந்த திரவத்தைக் கொள்ள சரியான பாத்திரத்தை அமைப்பது தான் மொழியாக்கக்காரரின் சவால். அவர் படைப்பூக்கம் வெளிப்படுவதும் அங்கே தான். அந்த பாத்திரம் மூலத்தை மாதிரி செய்யவேண்டும். அதாவது அரிஸ்டாடில் சொல்வது போல் மூலத்தின் நகர்வுகளை கண்டுகொண்டு அவற்றை இலக்குமொழியில் நிகழ்த்த வேண்டும். அதற்கு அந்த மொழியை சற்று வளைத்து நெளிக்க வேண்டிவரலாம், அதை மேலும் நெகிழ்வு கொண்டதாக மாற்ற வேண்டிவரலாம். ஆனால் பலர், குறிப்பாக மொழி ஆர்வலர்கள், மொழியாக்கம் என்பதை மொழியை நகலெடுக்கும் செயல்பாடு என்று நம்புகிறார்கள்.

இந்தப் பிழைப் புரிதலால் மொழியாக்கம் செய்பவரைப் பார்த்து அடிக்கடி சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. நடமாடும் சொல்லகராதிகள் போல் சரியான சொல்லை தேர்ந்தெடுப்பதைப்பற்றி இலவச அறிவுறை வழங்குவார்கள். இல்லை மற்ற எல்லைக்குச் சென்று,  “மூலத்தின் எஸ்ஸென்ஸை கடத்திவிடுவீர்கள், அப்படித்தானே?” என்பார்கள். ஆரஞ்சு போல் ஓர் இலக்கிய ஆக்கத்தைப் பிழிந்து சாற்றை மட்டும் எடுத்து ஒரு புட்டியில் ஊற்றிக் கொடுக்க முடியுமா என்ன? ஓர் ஆரஞ்சுக்கு நிகராக இன்னொரு ஆரஞ்சை அல்லவா வைக்க முடியும்? புதிய ஆரஞ்சின் தோலும் நிறமும் சற்று மாறுபட்டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் அது ஆரஞ்சாக இருக்க வேண்டும். சுளைகள் நாட்டுப்பழத்தின் வாசமும் சுவையாழமும் கொண்டிருக்க வேண்டும்.

மொழியாக்கம் பற்றி பேசும் போது அதில் இழக்கப்படுவதை பற்றியே ஒரு பேச்சு எப்போதும் நிகழ்கிறது. இதிலும் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மொழியாக்கம் தன்னளவில் ஓர் படைப்பு என்று நிற்கும் என்றால் அது முழுமையாகவே இருக்கும். ஆம், மூலத்தின் சில அம்சங்களை இழந்திருக்கும். உதாரணத்திற்கு வட்டார வழக்கு, மொழி சார்ந்த நகைச்சுவைகள். ஆனால் எதையாவது பெற்றுமிருக்கும். அப்படி இழந்தும் பெற்றும் அது ஒரு புது வடிவை அடையும். அது ஒரு கணக்கில் ‘தப்பாக’த் தோன்றும். ஆனால் தன்னளவில் சரியாகவும் தோன்றும்.

இப்போது தான் ஜெயமோகனின் குமரித்துறைவி நாவலை மொழியாக்கம் செய்து முடித்தேன் என்பதால் அதிலிருந்தே ஓர் உவமை. அப்படி முழுமை கொள்ளும் போது அந்தப் படைப்பில் ஒரு ‘பிழை’ இருக்கும். வார்த்தை விசுவாசம் அரைபுள்ளி கால்புள்ளி போன்ற எளிய பிழைகள் அல்ல. அதன் வடிவத்தின் முழுமையை அடைய ஓர் ஒதுக்கலை, ஒரு சிறிய சமரசத்தை அது செய்யும். உதாரணம், ஏழாம் உலகம் நாவலை மொழியாக்கும் போது குய்யன் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதே எனக்குத் தவறாகத் தோன்றியது. ஆகவே அவன் பேசிய சொற்றொடர்களில் ஆங்கிலத்தை உடைத்தேன். பலவகையான ஒலிசார்ந்த வேடிக்கைகளை அவன் வசனத்தில் மூலத்திற்கேற்றார்போல் கொண்டுவந்தேன். அவை நிகழ்வது ஆங்கிலத்தில் தான். ஆனால் முழு ஆங்கிலத்திலும் அல்ல. ஆறு வயதுச் சிறுவனின் சிரிப்பில் காணப்படும் ஓட்டைப்பல்லைப்போல அந்தப் பகுதிகள் இப்போதும் மொழியாக்கத்தில் உள்ளன.

அதைத் தவிர்க்க முடியாது, ஏனென்றால் அது மூலம் அல்ல, தன்னளவில் ஒரு தனிப்படைப்பு. அப்படி ஒரு தனிப்படைப்பு தான் நமக்கு உபயோகமானதும் கூட.  குமரித்துறைவியின் உவமையை நீட்டினால், அம்மையும் அப்பனும் இணைந்திருப்பது மூலம் என்றால், அவர்களுடைய திருமணத்தை நாம் இங்கே நமக்காக நிகழ்த்திப்பார்ப்பது தான் மொழியாக்கம். நம்முடைய மொழியின் எல்லைக்குள் அல்லவா எந்த திவ்ய லீலை என்றாலும் நிகழ முடியும்?

குய்யனைப் பொறுத்த வரை அவன் நாவலின் இறுதியில் தன்னை ‘நிரபராதி’ என்று சொல்லும் இடத்தில் innocent என்ற பதம் அதன் அனைத்து அர்த்தங்களிலும் அவனுக்குப் பொருந்தும் படி திரண்டு வந்ததில் அந்த பாத்திரப் படைப்பு முழுமை அடைந்ததை கண்டுகொண்டேன். அதற்கு மேல் ஒரு முழுமையை எதிர்பார்க்கமுடியாது என்றும்.

ஆகவே தான் மொழியாக்கத்தைப் பற்றிப் பேசும் போது தொடர்ந்து அதை விசுவாசம் பற்றிய பேச்சாக கொண்டுபோவது அலுப்பூட்டுவதாக அமைகிறது. இந்தப்புள்ளியில் நாம் தேவைக்கதிகமாக அங்கலாய்க்கிறோம் என்று நினைக்கிறேன். ஒரு நல்ல படைப்பூக்கம்மிக்க மொழியாக்கம் தன்னளவில் சில சரியான மீறல்களை நிகழ்த்தும் என்று நினைக்கிறேன். ஆம், மேலும் பெரிய விசுவாசத்திற்காக மீறல்களை நிகழ்த்துவது தான் மொழிபெயர்ப்பின் கற்பு.

நண்பர்களே, இதுவரை மொழியாக்கச் செயல்பாடை விளக்க சில உவமைகள் வழியாக பயணித்தோம். இறுதியாக ஓர் உவமையுடன் இந்த உரையின் கடைசி பகுதிக்கு வருகிறேன்.

கடல் வானை பிரதிபலிப்பது போல், ஒரு மொழியாக்கம் தன் மூலத்தை பிரதிபலிக்கிறது என்று சொல்லலாம். நினைத்துப்பாருங்கள், வானத்தில் நட்சத்திரங்கள் நகர்கின்றன. சூரியனும் சந்திரனும் தோன்றி மறைகின்றன. மேகங்கள் ஊர்ந்து செல்கின்றன, பறவைகள் வலசை போகின்றன. இவை அனைத்தும் கடலிலும் நடக்கின்றன. ஆனால் அதே வடிவில் அல்ல. இது வேறு. கடலுக்குள் இருப்பது வான் அல்ல. அது முழுதாக கடலும் அல்ல. வானும் அல்லாத, கடலும் அல்லாத, ஓர் இடையிடம் அது.

மொழியாக்கம் என்பது அப்படிப்பட்ட ஓர் இடையிடம், ஓர் இடையினம், என்று நினைக்கிறேன். மொழியாக்கத்தின் ஆங்கிலப்பதமான translation என்ற சொல்லில் உள்ள trans என்ற பகுதி இந்த இடைநிலையை குறிக்கிறது. இது ஒரு லத்தீன் வேர்ச்சொல். ஒரே பக்கமாக நிற்காமல், மீறிச்செல்லும் விஷயங்களைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல் இது. வேதியியல் படித்தவர்கள் அறிந்திருக்கலாம், ஒரு வேதிப்பொருள் இன்னொன்றாக மாறும் நிலையில் வகிக்கும் நிலையற்ற இடைநிலையை அதன் transition நிலை என்பார்கள். ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாதவர்களை நாம் transgender என்கிறோம். அது போல ஒரு மொழியாக்கம் மீறிச்சென்று ஓர் இடைநிலத்தை வகிக்கிறது. ஆகவே அது ஓர் இடையினம்.

இந்த இடைநிலை என்ற கருதுகோள் எனக்கு தனிப்பட்ட முறையில் எப்போதுமே கிளர்ச்சியூட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இடைநிலைகள் எல்லாமே சாமானிய உலகத்தை மீறிச்செல்லும் உந்துதலால் உருகொள்பவை. ஆகவே படைப்பூக்கமான வழிகளும் நகர்வுகளும் கொண்டுள்ளவை. எளிதில் புரிந்துகொள்ள் முடியாதவை. தன் இரண்டுமற்ற ஆன்மாவில் சாராம்சமான ஓர் உண்மையை என்றும் பொதித்திருப்பவை.

சமீபத்தில் கதகளி கலைஞர் கலாமண்டலம் கோபியைப் பற்றி அடூர் கோபாலகிருஷ்ணன் எடுத்த ஓர் ஆவணப்படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு காட்சி. இருட்டில் கோபி ஆசான் அமர்ந்திருக்கிறார். அவர் முகத்திலும் மார்பிலும் மட்டும் வெளிச்சம். வலதுபக்கம் காட்டி, “இவள் என் பாரியாள்” என்கிறார். பச்சைக்கரை முண்டு உடுத்தி அமர்ந்திருக்கும் அவர் மனைவி சிறு புன்னகையுடனும் விலக்கத்துடனும் படப்பிடிப்புக்கருவிக்குள் பார்க்கிறார். கோபி ஆசான் இடது பக்கம் காட்டி, “இவள் மேடையில் என் பாரியாள்,” என்கிறார். இருட்டிலிருந்து கோட்டக்கல் சிவராமனின் உருவாம் தோன்றுகிறது. வெட்கத்தில் உடல் குழைய, இமைகள் தாழ, உணர்ச்சி நிறைந்த புன்னகையுடன் முகத்தை உயர்த்தமுடியாதென்பது போல் உயர்த்தி நம்மைப் பார்க்கிறார்.

முதல் உறவு யதார்த்தமானது, சாமானியமானது; இரண்டாவது கனவுத்தன்மைக்கொண்டது, அதீதமானது. முதலை இரண்டாவதின் சாயல் என்று சொல்லலாம், அல்லது இரண்டாவதை முதலின் லட்சிய வடிவம் என்று சொல்லலாம். இங்கிருந்து எழுந்து அதை அடைய, அங்கிருந்து அதைக் கொண்டு வந்து இங்கே நிகழ்த்திப்பார்க்க மனம் துடித்தபடியே உள்ளது. ஆம், இதுவும் இரு மொழிகளுக்கிடையிலான, இரு வெளிப்பாடுகளுக்கு இடையேயான ஊசல். இவ்விரு துருவங்களுக்கு இடையில் தான் மனித வாழ்க்கை நிகழ்கிறது. நம் கலைகளும் மொழியின் அவஸ்தைகளும் அனைத்தும் இந்த இடைவெளியை நிறப்பத்தான்.

நண்பர்களே, இந்த ஊசல் பிரபஞ்சத்தின் ஆதார நகர்வுகளில் ஒன்று எனக் கருதுகிறேன். இந்த பிரபஞ்ச சிருஷ்டிக்கும் நம் புலனறிதல்களுக்குமான உறவு என்ன? அதை ஒரு மொழியாக்கம் என்று உருவகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். மனிதனின் அறிதல் என்பதே மொழியாக்கம் வழியாகத்தான் – அதன் மிகப்பொதுவான அர்த்தத்தில், அதன் அத்தனை பிழைகளுடனும், மீறல்களுடனும்  –  நிகழ்கிறது என்று சொல்லத்துணிவேன்.

ஒரு புனைவெழுத்தாளராக இந்த இடைநிலையை எழுத்து வழியாக விசாரிக்க வேண்டும் என்று ஆர்வம் எனக்குள்ளது. ஓர் உதாரணத்தை மட்டும் சொல்லி முடிக்கிறேன். வரலாற்றுக்கும் வரலாற்றெழுத்துக்குமான உறவை அவதானிக்கையில், அதையும் ஒரு மொழியாக்கம் என்று உருவகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். வரலாறு என்ற அறியமுடியாத மூலத்தை மொழியாக்குவது தான் வரலாற்றெழுத்து. இலட்சிய மொழியாக்கம் என்று ஒன்று இருக்க முடியாது என்பது போல் இலட்சிய வரலாற்றெழுத்து என்று ஒன்றும் இருக்க முடியாது. மொழியாக்கம் அடிப்படையில் ஒரு படைப்பாக்கம், வரலாற்றெழுத்தும் அவ்வாறே.

இதில் படைப்புச்சுதந்திரம் செயல்படும் விதம் பொறுத்து ஆய்வுசார் வரலாற்றெழுத்து முதல் தூய புனைவு வரை வெவ்வேறு படிநிலைகள் உள்ளன. வரலாற்றெழுத்தின் இறுக்கத்திற்கும் புனைவின் நெகிழ்வுக்கும் நடுவே உள்ள இந்த இடைநிலைகளை புனைவாளர்களும் அபுனைவாளர்களும் வெவ்வேறு உத்திகளைக்கொண்டு பரிசீலிக்கிறார்கள். சமீபத்தில் இலக்கியத்துக்கும் வரலாறுக்குமான தொடர்பை பற்றிப் பேசும் போது ராமச்சந்திர குகா, “என்னால் புனைவு எழுத முடியாது, வரலாற்றெழுத்தின் இறுக்கம் என்னை அசௌகரியப்படுத்தியது. ஆகவே நான் வாழ்க்கை வரலாறுகள் எழுதத் தொடங்கினேன்” என்றார். அவர் நிற்பதும் ஓர் இடைநிலையில் தான். அவரை ஒரு வகையான மொழியாக்கக்காரராகத்தான் நான் காண்கிறேன்.

சுயசரிதைகள், வாழ்க்கை வரலாறுகள் போன்ற வடிவங்கள் புனைவு கலந்தும் கலக்காமலும் பல இடைநிலைகளில் இன்று எழுதப்படுகின்றன. இந்த இடைநிலைகளில் எழுத்தை நிகழ்த்திப் பார்க்கும் போக்கில் தமிழ் அனைத்து விதங்களிலும் முன்னோடி மொழி என்று என் வாசிப்பில் சொல்வேன். என் எழுத்தும் இந்த திசையில் சென்றுகொண்டிருப்பதை காண்கிறேன். இதன் மூலமாக வரலாறை, காலத்தை மேலும் அணுக்கமாக புரிந்துகொள்ள வழியுள்ளதா என்று காண விழைகிறேன்.

*

நண்பர்களே, சமீபத்தில் வாசித்த ஓர் அழகான வரியுடன் நிறைவுசெய்கிறேன். “கடவுள் உலகத்தை ஏழு நாட்களில் படைத்தார். மைக்கலாஞ்சலோ அதை சிஸ்டீன் தேவாலயத்தின் கூரையில் வரைய நான்கு ஆண்டுகள் ஆனது. நாம் அதைப் பார்த்து முடிக்க, ஓர் ஆயுள்.” பிரபஞ்ச ஆக்கத்துக்கும் வரலாற் றாக்கத்துக்கும் கலை ஆக்கத்துக்கும் மொழி ஆக்கத்துக்கும் அடியில், வானை கூரையை பார்த்தபடி, சிறிய குறிப்பேடுடன் அமர்ந்திருக்கிறோம் நாம்.

இந்த ஆயுளில் அதைக் காண்போமாக. நன்றி.

***

முந்தைய கட்டுரைMoisture
அடுத்த கட்டுரைகேரளத்தின் கணக்கு- கடிதம்