ஒரு கேள்வி- கடிதம்

வணக்கம் ஜெ,

அமெரிக்க/கனடா பயணத்தில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அண்மையில் நடந்த இரண்டு நிறைவளித்த விஷயங்களை உங்களுடன் பகிரலாம் என்று தோன்றியது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை சென்று இருந்தேன். கல்லூரி நண்பன் அமெரிக்காவிலிருந்து மதுரை வந்திருப்பதாக அறிந்த உடன் தொலைபேசியில் அழைத்து சந்திக்க முடிவு செய்தோம். அவன் கல்லூரியில் முதல் பென்ச், எதிலும் முந்தி நிற்பவன். வேலைக்கு சேர்ந்தான், அமெரிக்க போனான், பிறகு தொடர்பில் இல்லாமல் ஆனான். நேரில் சந்தித்த பொழுது, இரண்டு மாதம் ‘மருத்துவ ஓய்வு’ எடுத்து வந்திருப்பதாகவும் ‘anxiety’ தான் காரணம் என்றும் கூறினான். தினமும் தூக்கமாத்திரை சாப்பிட்டு தூங்கும் அளவிற்கு! ஏன் பதற்றம் என சொல்லத்தெரியவில்லை.

சரி, வேலை அல்லாது உனக்காக என்ன செய்கிறாய் என்று கேட்டபொழுது, திகைத்து என்னை நோக்கினான். என்ன செய்ய வேண்டும் என்னும் தோரணையில். சரி நீ என்ன செய்கிறாய் என்று என்னை கேட்டான். நான் புத்தகம் படிப்பேன். தினமும் ஒரு மணி நேரம் ஆவது இலக்கியம் படிப்பேன் என்று சொன்ன உடன், கல்லூரி காலத்தில் நானும் கல்லூரி காலத்தில் படித்தது, பின்பு விட்டுவிட்டேன் என்றான். அதை தொடங்கி பாரேன் என்று ‘அறம்’ சிறுகதை சுட்டியை அனுப்பினேன். அதை அவன் முடித்த உடன் பின்பு ‘சோற்றுகணக்கு’, ‘வணங்கான்’ என்று அனுப்பினேன். அவன் அமெரிக்கா திரும்பி, நேற்று எனக்கு இந்த photoவை  அனுப்பினான்

Seattle, Bothell நூலகத்திற்கு சென்று இருந்ததாகவும், ‘அறம்’ சிறுகதை தொகுப்பை அங்கு இருப்பதை கண்டு எடுத்து வந்ததாகவும் கூறினான். இலக்கியதிற்குள்ளும், உங்கள் படைப்புலகத்தில் நுழைய ‘அறம்’ ஒரு சிறந்த புத்தகம், வாசல். அவன் அதனை கண்டுவிட்டான். இனி அவன் மீள்வான். அறம் seattleஇல் ஒரு நூலகத்தில் உண்டு என்ற செய்தி மேலும் சந்தோஷம் அளித்தது.

அலுவலகத்தில், ஒருவரை நேர்காணல் மூலம் தேர்வு செய்து எப்பொழுது வேலைக்கு சேர முடியும் என்று பேசிகொண்டிருந்தோம். பொதுவாக 30 நாட்களில் சேருவது வழக்கம். அவரோ 15 நாட்கள் அதிகம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விபாசன வகுப்பிற்கு செல்வதாக திட்டம் என்றார். நான் ஆர்வமாக, இது தான் முதல் முறையா என்று கேட்டேன். இதற்கு முன்பு வெள்ளிமலை அருகே மலையில் 3 நாட்கள் சென்று பயின்றதாக கூறினார். உங்களுக்கு ஜெயமோகன்னு ஒரு writer தெரியுமா என்று கேட்டார். அதன் பிறகு எங்கள் பேச்சு ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்தது, ஒரு நட்பும் அமைந்தது. பெங்களூரில் நேரில் பார்த்து இலக்கியம் பேசிக்கொள்ள யாரும் இல்லாமல் இருந்த ஒரு தனிமை அன்றோடு அகன்றது.

நன்றிகளுடன்,

கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்,

நீங்கள் அவரிடம் கேட்ட கேள்வி முக்கியமானது. ‘உங்களுக்காக மட்டும் என்ன செய்கிறீர்கள்?’ அதுவே நம் வாழ்க்கையின் அடிப்படையான கேள்வியாக இருக்கவேண்டும். நம் மகிழ்வுக்காக, நம் நிறைவுக்காக மட்டுமே நாம் செய்யும் செயல்களால் ஆனது நம் மெய்யான வாழ்க்கை

ஜெ

முந்தைய கட்டுரைPhilosophy and Balance
அடுத்த கட்டுரைபாரதி பாஸ்கர்