விழாக்கள், கடிதம்

அன்புள்ள ஜெ,

கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவிலும், கனடாவிலும் , அமெரிக்காவிலும் உங்களை தொடர்ந்து சந்திக்கும் படி அமைந்தது  இயற்கை எனக்களித்த நல்லூழ்.தூரன் விருது விழா எனக்கு எப்பொழுதும் மனதிற்கு மிகவும் அணுக்கமானது. முதன்முறை உங்களை நேரில் சந்தித்தது 2022 தூரன்  விழாவில் தான்.இம்முறை இந்தியா வந்தபோதும் தூரன் விழாவில் இரண்டு நாட்கள் கலந்து கொண்டது மகத்தான அனுபவமாக இருந்தது. இந்தாண்டு  விழாவில் எனக்கு கிடைத்த இன்னுமொரு  பொக்கிஷமான தருணம் கவிஞர் தேவதேவன் அவர்களை முதன்முதலாக  நேரில் சந்திக்க கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளாக  தொடர்ந்து தேவதேவன் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். என்றேனும் ஒருமுறையாவது அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கும்.  இங்கு வெளிநாட்டில் வசிப்பதால் எப்போதாவது மட்டுமே இவர்களையெல்லாம்   நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. இந்தியா வந்த சமயங்களிலெல்லாம்  கவிஞர் தேவதேவன் அவர்களை காணும்  வாய்ப்பு பலமுறை  தொடர்ந்து தவறிக்கொண்டே இருந்தது. இங்கிருந்து கொண்டு விஷ்ணுபுரம் விழாக்களிலோ, மற்ற நிகழ்வுகளிலோ அவரின் புகைப்படத்தை பார்க்கும் பொழுது சற்று ஏக்கமாக இருக்கும்,நாம் என்று இவரை சந்திக்கப்  போகிறோம் என.

அண்மையில் தேவதேவன் அவர்களின் ‘கவிதையின் மதம்’ புத்தகம் வாசித்தேன். அதை வாசித்து  முடித்த போது தேவதேவனின்  கவியுலகத்தையும்,அந்த கட்டுரைகளில் அவர் பார்வையின் வழியே அடைந்த கவிதையின் தரிசனங்களையும் ,தேவதேவன் என்னும் கவி ஆளுமையின் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்தரங்கமான ஆன்மீக பயணத்தையும் மிகவும் நெருக்கமாக புரிந்து கொண்டது போலொரு உணர்வெழுச்சி. அப்போது தோன்றியது,இனி  தேவதேவன் அவர்களை  நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் ஒன்றுமில்லை, அவரை முக்கியமாக சந்திக்க வேண்டிய இடத்தில் சந்தித்து விட்டோமென்பது போலொரு விடுதலை உணர்வு .ஆனால் இந்தாண்டு தூரன் விருது  விழாவிற்கு  கிளம்பும் பொழுதே மிக ஆழமாக ஒரு உள்ளுணர்வு இருந்தது, இம்முறை அவரை சந்திக்கும் படி அமையுமென்று. விழாவின்  முதல் நாள் மதியம் மண்டபத்தை அடைந்து  அரங்குகள் நிகழ்ந்து  கொண்டிருக்கும் மாடியறைக்கு சென்றபோது படிக்கட்டுகளின் அருகே உள்ள நுழைவாயிலின் கண்ணாடிக் கதவருகே ஜிப்பாவுடனும், தோல் பையுடனும் நான் பார்த்த முதல் முகம், ஆம் ! கவிஞர் தேவதேவன் தான். நீண்ட நாட்களாக  நாம் ஏங்கிக் காத்துக் கொண்டிருந்த  ஒரு விஷயம் அது  நிகழும் தருணத்தில்  மனம் ஆரவாரத்தைக் காட்டிலும் ஆசுவாசமே அடையும் போல.அடிமனதிலிருந்து அமைதியும் மகிழ்வும் ஒருசேர்ந்த உணர்வு  எழுந்தது,இது போதும் என்பது போல்.

அன்று மாலை தேவதேவன் அவர்களை சந்தித்து, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு நான் மிகவும் ரசித்து வாசித்த ‘கவிதையின் மதம்’ புத்தகத்திலேயே கையெழுத்து வாங்கிக் கொண்டேன்.முதல் நாள் அமர்வுகள் முடிந்து மாலை  அவரிடம் நிதானமாக உரையாடும் அளவிற்கு நிறைய நேரம்  கிடைத்தது.அந்த நாள் மனதிற்கு  மிகவும் நிறைவனாதாக அமைந்தது.அதே நாள் இரவு கல்வெட்டாய்வாளர் வெ.வேதாச்சலம் அவர்களிடமும்  உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.அவர் என்னிடம்  எந்த ஊர் என்று விசாரித்துக் கொண்டிருக்கையில், என் சொந்த ஊர் சிவகங்கை அருகில் உள்ள திருமலை கிராமம்  என்று சொன்னேன். திருமலை மலைக்கோவிலுக்குள் உள்ள கல்வெட்டுகளை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். ஆம் என்றேன். அவர் அதையெல்லாம் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியது நாங்கள் தான் என்றார். எனக்கு வியப்பிலும் மகிழ்விலும் வார்த்தையே வரவில்லை.அடுத்த நாள் ஆய்வாளர் காந்திராஜன் அமர்வில் அவர் வாசகர்களுக்கு போட்டுக்காட்டிய தமிழகத்தின்  முக்கியமான குகைஓவியங்கள் பற்றிய படவரிசையிலும் திருமலை மலைக்கோவிலில் குகை ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.எனக்கு உள்ளுக்குள் பெரும் உற்சாகமாக இருந்தது.

விவரம் அறிந்து நினைவு தெரிந்த நாட்களில் தங்கிய முதல் ஞாபங்களில் ஒன்று என் சிறுவயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் என் சொந்த ஊர் கிராமத்தின் மலைக்கோவில். அந்தக் கோவிலின் கல்வெட்டுகளை,குகை ஓவியங்களை ஆவணப்படுத்தியவர்களையெல்லாம் நான் வேறு எங்கு சென்று சந்திக்க முடிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.தங்கள் வாசகர்களாக இருப்பதால் மட்டுமே எங்களுக்கு கிடைக்கும் கொடைகள் தான் எத்தனை!

தூரன் விருது விழாவில் வெறும் ஒன்றரை நாளில் அத்தனை இனிய  அனுபவங்கள். ஓலைச் சுவடிகளை அறிமுகப்  படுத்தி வாசிக்க கற்றுக் கொடுத்த கோவை மணி அவர்களின் அமர்வு ,  காலை ஜெகநாதன் அவர்களோடு நம் நண்பர்களுடன்  பறவை பார்த்தல், ஆய்வாளர்களின் அரங்குகள், நாதஸ்வரம் நிகழ்வு,வாசக நண்பர்களுடனும் கவிஞர்களுடனும் எழுத்தாளர்களுடனும் உரையாடும் வாய்ப்பு,இவை அனைத்திற்கும் மேல் எப்போதும் விதையென உள்ளுக்குள் பதியும் உங்கள் உரை.தூரன் விழா முடிந்து பூன்  முகாமில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லி உங்களிடம் விடை பெற்றுக் கொண்டேன்.

தூரன் விருது முடிந்த மறுநாள் கோயம்பத்தூரில் இருந்தோம். அங்கு phone  temperedglass  மாற்றுவதற்காக ஒரு கடைக்கு சென்றிருந்தேன்.அந்தக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு ஒரு இருபதிலிருந்து இருபத்தி ஐந்து வயதிற்குள் இருக்கும்.அவர் மேஜையில் பஷீரின் சிறுகதைகள் ,எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி’ மற்றும் தொ.பரமசிவனின் ‘அறியப்படாத தமிழகம்’ புத்தகங்கள் இருந்தன. அவரிடம்  ‘நீங்களும்  புத்தகம் லாம் வாசிப்பிங்களா ‘ என்று கேட்டேன். அவரும் ஆர்வமாக ‘ஆமா, பஷீர் தான் எனக்கு பிடிச்ச எழுத்தாளர் ‘ என்று சொன்னார் . உள்ளுக்குள் எழுந்த ஆர்வத்தை கட்டுப்படுத்தப் முடியாமல் ‘நீங்க ஜெ வோட எழுத்த வாசுச்சிருக்கீங்களா ?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஆமா  வாசிச்சிருக்கேன்.எனக்கு அவரோட பேட்டிகளும், பதில்களும் ,  உரைகளும்  ரொம்ப பிடிக்கும் ‘ என்று சொன்னார் .நான் வேறு  ஏதும்  கேட்பதற்கு முன்னரே அவராக தொடர்ந்து ‘ஒரு ஊர்ல 100  பேர் இருக்காங்கன்னா,90 சதவீதம் பேர் எதை முன்வக்கிறாங்களோ, அதுதான்  majority ன்ற பேர்ல ஒட்டுமொத்த  பார்வையா இருக்கும் . எனக்கு ஜெ கிட்ட பிடிச்ச விஷயமே  தனியா நின்னாக்கூட  அவர் உண்மைன்னு நம்புற விஷயத்தில   தைரியமா முன்வைக்கிற அவரோட கருத்துக்களும் பதில்களும் தான் ‘ என்று சொன்னார். ஒரு சலனமில்லாத தூய புன்னகையை அகத்திற்குள் உணர்ந்தேன்  . ‘உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம் ‘ என்று மட்டும் சொல்லி  அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன் .முந்தைய நாள் தூரன் விருது விழாவில் நீங்கள் ஆற்றிய உரை  நினைவிற்கு வந்தது.வெளியே வந்து கண்ணாடிக்கதவின் வழியே அந்த இளைஞனை பார்த்தேன். உள்ளே வந்த அடுத்த வாடிக்கையாளரிடம் அவர் உரையாடிக்  கொண்டிருந்தார்.அந்தக் கடைக்கு வரும் யாவரைக்  காட்டிலும் அவர்  வாழ்க்கை எத்தனை  பெரியது என்று தோன்றியது .எவ்வளவு  சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒரு இலக்கிய வாசகனின் அகவாழ்க்கை  என்பது அத்தனை விரிவுகொண்டது என்று எப்போதும் நீங்கள் சொல்லும் வார்த்தை நினைவிற்கு வந்தது.

விடுமுறைக்கென்று இந்தியா சென்று இங்கு திரும்பும்போது எப்போதும் இருக்கும் ஒரு homesick  கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வளவாக  இல்லை. காரணம் , இங்கு வந்து  சில நாட்களில் உங்களை மீண்டும் சந்திக்கப் போகிறேன்  என்கிற பூரிப்பும், உற்சாகமும்.

ஆசையாய்  மிகுந்த ஆவலாய் காத்துக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு ‘பூன்(எமர்சன்) முகாம்’ . நான் உங்களை முதன்முதல் ஈரோடு  விழாவில் சந்தித்த போது நீங்கள் பூன் முகாமை பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள். கனடாவிலிருந்தும் கூட வாசகர்கள் வந்திருந்தனர் என்று சொன்னீர்கள் . ‘நான்  கண்டிப்பாக அடுத்தடுத்த பூன் முகாமில் கலந்து கொள்வேன் சார்’ என்று உங்களிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அப்போது என்னிடம் அமெரிக்கா விசா இல்லை .இந்தாண்டு துவக்கத்திலியே அமெரிக்கா டூரிஸ்ட் விசா கிடைத்ததும் வந்த முதல் நினைவு  பூன் முகாமில் இனி கலந்து கொள்ளமுடியும் என்ற கொண்டாட்டமான உணர்வு தான். கனடா வந்து சேர்ந்த பின்பு சரியாக பூன் முகாமிற்கு ஒரு மாத கால அவகாசம் இருந்தது.என்னால் இயன்ற வரை முகாமிற்குரிய வாசிப்பை கொடுத்து விட்டு வந்திருந்தேன்.charlotte விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்து  நண்பர்களுடன் blowing rock conference center  வரும் வழி , முகாமின் முழு இரண்டு நாட்கள் , எமர்சன்  முகாம் முடிந்து மீண்டும் அங்கிருந்து கிளம்பி  விமான நிலையம் வரும் வரைக்கும்  உள்ளே செல்வதும் வெளியே பேசுவதும் முழுக்க முழுக்க இலக்கியம், தத்துவம், கவிதை என்ற ஒரு பெரும் அறிவியக்கக்  கொண்டாட்டமாகவே இருந்தது.

‘பச்சை மாமலை போல் மேனி’ என்று ராஜன் சோமசுந்தரம் அவர்கள் பாடிய பாடலுடன் முதல் நாள் அரங்குகள் ஆரம்பாகியது. மதுவின் நீர்மை சிறுகதை பற்றிய உரை ஆகச்சிறந்த துவக்கமாக அமைந்தது.அச்சிறுகதையில் படிமமாக  வரும்  பாட்டியின் தனிமையையும், குளத்தையும் கம்பராமாயண பாடலோடு ஒப்பிட்டு அவர் விவரித்த விதம் வியப்பில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து வந்த அத்தனை உரைகளிலும், வாசகர்களின் கேள்விகளிலும் ஒரு படைப்பை நுட்பமாய் அணுகி வாசிப்பின் மூலம் கிடைக்கும் ஆழமான insights  திறந்து கொண்டே இருந்தது. வெண்முரசு மழைப்பாடல் உரையும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல்களிலும் வெண்முரசின் வாசர்கள்கள் நாங்கள் அனைவரும் ஒருவிதமான பரவச நிலையில் இருந்தோம். எல்லா உரைகளுமே அவரவருக்கு உரித்தான நடையில்  மிக நேர்த்தியாக அமைந்திருந்தது. ஒவ்வொரு உரை முடிந்த பின்னரும் எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில்களும் விளக்கங்களும் ஒவ்வொரு படைப்பையும், படைப்பாளியையும் எப்படி நுண்ணியறிந்து வாசிப்பை மேலும் கூர்மை படுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்கு பெரும் படிப்பினையாக  அமைந்தது.

விக்ரம் திரைப்படத்தில் கமல் ஒரு வசனம் சொல்வார் ‘தீவிரம் ன்றது கெட்ட வார்த்தை இல்ல, it ‘s  a virtue ‘ என்று.அந்த தீவிரம் தான் நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுப்பது. நாங்கள் அனைவரும் தங்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக  அடைந்து கொண்டிருப்பது.இரண்டு நாட்கள் அங்கு நிகழ்ந்த அரங்குகள் அனைத்துமே முற்றிலும் செறிவானதாக அமைக்கப்பட்டிருந்தது. உரை ஆற்றியவர்கள், உரைக்குப்பின் நிகழ்ந்த வாசகர்களின்  கேள்வி பதில் உரையாடல்கள் ,நேரத்தை கையாளுதல் என்று அனைத்திலுமே ஆழம், தீவிரம். ஒவ்வொரு அமர்க்கு முன்பும் நிகழ்ந்த ராஜன் சோமசுந்தரம் , பழனி மற்றும் குழுவின் துவக்க பாடல்களில் கூட அத்தனை தீவிரம். கையில் இருந்த சிறிய வாத்தியங்களை வைத்துக் கொண்டு மெல்லிய பின்னணி இசையுடன் ஒவ்வொரு  அமர்வுக்கு முன்பும் அவர்கள் பாடிய பாடல்கள் அந்த தருணங்களை  அழகானதாய் ஆக்கியது. கம்பராமாயணம் போன்ற மரபிலக்கியங்களுக்குள் நுழைய, டால்ஸ்டாய், தஸ்தோவ்ஸ்க்கி போன்ற ரஷ்ய இலக்கியத்தை அறிய, தமிழ் நவீனக் கவிதைகள் மட்டுமல்லாமல் கமலா தாஸ் போன்றோரின் கவிஉலகமும் கடந்து எமர்சனின் வேரிலிருந்து வந்த walt  whitman வரை அனைத்திற்குள்ளும்  உட்புக பெரும் திறவுகோலாக  இருந்தது.

வாழ்க்கை என்பது தருணங்களால் ஆனது என்று சொல்வீர்கள்.எங்கள் அனைவருக்குமே அப்படியொரு உன்னதமான தருணமாக அமைந்தது இரண்டாம் நாள் காலை பூனின் மலைக்குன்றில் நம் நண்பர்களுடன்  பார்க்கக்கிடைத்த  சூரிய உதயம்.முதல் நாள் காலையிலே ஐந்தாறு பேர் சேர்ந்து ஒரு ஏரியில் சூரிய உதயம் பார்க்க சென்றோம். அது அந்த நாளையே பொலிவுடன்  துவக்கி வைத்தது.இரண்டாம் நாள் காலையிலும் அதே குழு வேறொரு மலைக்குன்றிற்கு சென்று சூரிய உதயம் பார்க்க திட்டமிட்டிருந்தார்கள்.மறுநாள் அதிகாலையிலே எழுந்து அங்கு சென்று  விட்டோம். மலை உச்சிக்கு அருகே உள்ள  பனிமூடிய சாலையில் விடியல் பொழுதில் நின்றுகொண்டிருந்தது சொற்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட  அந்தக்கர்ண  விருத்தி போன்ற பேரனுபவம் . இந்த ஆண்டு குமரகுருபரன் விழாவின் ஒரு உரையில் ராமகிருஷ்ணர் அதிகாலை நடையின் போது மயங்கி விழுந்து பின் எழுந்து அதற்கான காரணம் கேட்கப்பட்டபோது புலரியின் அதீத அழகை கடவுள் என்றும் , தான் கடவுளைக் கண்டு மயங்கி விழுந்ததாகவும் சொல்லப்பட்ட வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.    சூரியன் உதயமாவதற்கு முன்பே ஒருவர் சொல்லி ஒவ்வொருவராய் நம் நண்பர்கள் அனைவரும் வேறு வேறு கார்களில் வரிசையாய் வந்து கொண்டிருந்தார்கள்.எல்லோரும் வர வர இன்னும் உற்சாகம் பெருகிக்கொண்டே போனது. 7:40 மணி போல தொட்டிலில் திரைச் சீலையை  விலக்கி எட்டிப்  பார்க்கும் குட்டி  குழந்தை போல் சூரியன் மெல்ல மெல்ல அந்த மலைமுகிடின் விளிம்பிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தான். இந்த உலகையே ஆட்கொள்ளும் பேரொளியுடனும் பெரும்கருணையுடனும் . வான்மேகங்களுக்கு மேலே மருதாணியிடப்பட்ட நகநுனி போல்  பிறைநிலா உருவில் வெளிவந்து தழல் கொண்ட முழு நிலவாகி  மலை விளிம்பிலிருந்து விடைபெற்று அவன் விண்ணேறி தரிசனம் தந்த சிலமணித்துளிகள் நாங்கள் அனைவரும் பேச்சு,சப்தம், புகைப்படம் எடுத்தல் என்ற எந்த செயலுமற்று முழுக்க முழுக்க ஒரு மோனநிலையில் இருந்தோம்.  அந்த நேரத்தில் எங்கள் எல்லோர் மனதிலும் நின்றது  அந்த நாளின் இயற்கையின் துளி தேனை எடுத்துக் கொண்டோம் என்ற எண்ணம் தான்.அன்றாடத்தின் ஒவ்வொரு  நாளும் இயற்கையின் ,இலக்கியத்தின் ஒரு துளியை உங்களுக்கானதாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எமர்சன் முகாமின் துவக்க உரையில் நீங்கள் சொன்ன வார்த்தைகள் அது. அந்த பொழுதில் நீங்கள் எங்களுடன் இல்லை.உங்கள் அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தீர்கள்.ஆனால் நீங்கள் விதைத்த விதையின் நீட்சியாக எங்கள் எல்லோர் சிந்தனையிலும் ஆசிரியராக, அருவமாக கதிரெழுந்த அந்தபெரும்தரிசனத்தின் அந்த கணத்தில்  நீங்களும்  எங்களுடன் தான் இருந்தீர்கள்.

அன்று மதியம் உணவு இடைவேளையின் போது நிகழ்ந்த இன்னுமொரு  அழகிய தருணம் ஆஸ்டின் சௌந்தர் அவர்களின் 60  ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் மகன்  சஹா ஆற்றிய உரை. ஆஸ்டின் சௌந்தர் அவர்கள்,ராதா, சஹா ஆகிய மூவரையும் முதன் முதலில் சந்தித்தது சென்ற ஆண்டு கனடா இலக்கிய தோட்டத்தின் இயல் விருது விழாவில் தான். முதன் முறை அவர்கள் மூவரையும் ஒருசேர பார்த்த போதே முழு நேர எழுத்தாளராக வளர்ந்து கொண்டிருக்கும்  சஹாவிற்கு அவர்கள் கொடுக்கும் சுதந்திரமும், சஹாவிடமிருந்து எந்த தருணத்திலும் கற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கும் சௌந்தர் ராதா அவர்களின் திறந்த மனநிலையும் admiration ஆக இருந்தது.  கனடாவில்  எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின்  சந்திப்பில் மீண்டும் அவர்கள் மூவரையும் ஒருசேர பார்த்தபோது அந்த admiration  உணர்வு வலுத்துக் கொண்டே சென்றது. சஹா அவர் தந்தைக்காக ஆற்றிய உரையில் இருந்த நேர்மையும் உண்மையும் எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமாய், நெகிழ்வூட்டதாய் இருந்தது.கண்களில் வழிந்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. சஹாவின் உரை முடிந்த பின்னர் நீங்கள் சொன்னீர்கள்  ‘எழுத்தாளனாய்  உருவாகும் மகன்களை அடைந்த தந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும்  உவகை  அது’ என்று.அந்த தருணத்தில்  தங்கள் 60  ஆவது பிறந்தநாளின் போது அஜிதன் எழுதிய ‘பற்றுக பற்று விடற்கு’ கட்டுரை நினைவில் எழுந்தது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் கல்விமுறையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிந்து இப்போது கவிஞராக, எழுத்தாளராக,பதிப்பாசிரியராக இருக்கும் சஹாவுடனான பின்மதியத்தில்  நிகழ்ந்த உரையாடலிலும் சஹாவிடமிருந்து நேர்மையான பதில்கள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.அமெரிக்காவிலும் கனடாவின் கல்விமுறையிலும் பயின்று கொண்டிருக்கும் பதினோரு வயதுள்ள  என் மகளுக்கு நான் என்ன கொடுக்க வேண்டும், அவளிடமிருந்து நான் என்ன எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதலையும், தெளிவையும் சஹாவின் உரையாடல் கொடுத்தது.

வாசிப்பினூடாக  இணையும் இது மாதிரியான நிகழ்வுகளில் பெறும் மற்றுமொரு கொடை  இங்கு காணக்கிடைக்கும்   அற்புதமான மனிதர்கள்.இந்தியா அமரிக்கா என்ற இரு விஷ்ணுபுர அமைப்புகளிலுமே எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி திரைக்கு பின்னால் ஆத்மார்த்தமாக உழைக்கும் அழகான உள்ளங்களை  காண முடிகிறது.ஜெ வின் வாசகர்கள்  என்ற ஒற்றை புள்ளியில் சந்தித்து விரியும் இந்த நட்பு சுற்றம் தான் எத்தனை விசாலமானது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  முதன் முறை தூரன் விருதில் உங்களை சந்தித்ததும் , உங்கள் அறிவியக்கத்தின் மத்தியில் அங்கே இருந்ததும் அளப்பரிய மகிழ்வை கொடுத்தது. அது கற்றலும்,இணை உள்ளம் கொண்ட சுற்றத்தால் மட்டுமே கிடைக்கப்பெறும்  இன்பம் என்று புரிந்தது. எது உண்மையில்  என் அகத்தை நிறைக்கும் களம் என்ற ஒரு தெளிவு கிடைத்தது .அதன் பின் இந்த மூன்று ஆண்டுகளாக  வாசிப்பை கூர்மைப்படுத்திக் கொள்ளும் பொருட்டு என்னால் இயன்ற வரை வகுப்புகளிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறேன். தேடலும் ஆர்வமுள்ளவர்களுக்காக இந்தியா அமெரிக்கா வென்று உலகத்தின் முனைகளில் unified  wisdom வகுப்புகள்,எமர்சன் முகாம் என்று எங்களுக்காக நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை கற்றல் சார்ந்த திறப்புகளுக்கும் ஆத்மார்த்தமான நன்றி ஜெ.சென்ற ஆண்டு குமரகுருபரன் விருது விழா ஏற்புரையில் ‘நன்றியை காட்டிலும் இன்னும் ஏதாவது சிறந்த வார்த்தை கிடைச்சா உங்களுக்கு சொல்றேன் சார்  ‘ என்று கவிஞர் சதிஷ்குமார் ஸ்ரீனிவாசன் சொல்வார். அது உண்மை தான் . தாங்கள் செய்யும் அத்தனைக்கும் எத்தனை முறை சொன்னாலும் நன்றி என்பது மிகச்சிறிய வார்த்தை தான்.


இதுவே நான் கலந்து கொண்ட முதல் பூன்முகாம். முகாமிற்கு முந்தைய நாள் விமான நிலையத்திலிருந்து இறங்கியதிலிருந்து நான்காம் நாள் முகாம்  முடிந்து சரியாய் நேரத்திற்கு விமான நிலையம் சென்றடையும் வரை பங்கேற்பாளர்களுக்கு ஒரு துளி பதட்டமில்லாமல் சரியான நேரத்திற்கு pick up , drop ,உணவு , வகுப்புகள் என்று அத்தனையும் மிகச்செறிவாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தன.அதனால் எந்தவித புறஉலக சிதறல்களுமின்றி பூரணமாக இரண்டு  நாட்கள் வகுப்பில் மட்டுமே லயித்திருக்க முடிந்தது .ஆஸ்டின் சௌந்தர் , ராஜன் சோமசுந்தரம் மற்றும் ஒருங்கிணைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.இங்கு கனடாவில் இடம்பெயர்வதற்கு  முன்பு கணவரின் பணிநிமித்தம் காரணமாக அமெரிக்காவில் ஆறு வருடங்கள் ஆறு வேறு மாகாணங்களில் வசித்திருக்கிறோம். அமெரிக்க நிலத்தில் முன்பெப்போதும் உணராத நிமிர்வும்  நிறைவும்  எமர்சன் முகாமில் கலந்து கொண்ட அந்த இரண்டு நாட்கள் கிடைத்தது.அது பிறிதேதாலும் கொடுக்க இயலாத  கற்றல் மட்டுமே கொடுக்கும் நிறைவு. புதிய நிலம் இல்லாமல் புதிய கல்வி நிகழ முடியாது என்று  நீங்கள் சொல்லும் வார்த்தைகள்  உண்மை.

அன்புடன்,
இந்துமதி.

முந்தைய கட்டுரைRedemption from One’s Own Body
அடுத்த கட்டுரைஅகிலன்