பெண்ணும் பூவும்

இசைதேடுவது என்பது எனக்கு இசை கேட்பதைப்போலவே முக்கியமானது. யூடியூப் இசைச்சுரங்கம். நான் நல்ல இசைரசிகர்கள் என நினைப்பவர்கள்கூட புதிய இசைக்காக தேடுவதில்லை. நினைவுகளுடன் இணைந்த பாடல்கள், அவ்வப்போது வரும் புதியபாடல்கள் மட்டுமே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

இன்னுமொன்றுண்டு, இங்கே தமிழ் அல்லாத அரிய பாடல்கள் பற்றி நான் எழுதும் குறிப்புகளை மிகமிகமிகக் குறைவானவர்களே வாசிக்கிறார்கள். இந்த தளத்தின் வாசகர்களில் ஐந்து சதவீதம்பேர் கூட வாசிப்பதில்லை என்று தெரிகிறது. அப்பாடல்களை நான் பிறகெப்போதாவது சொன்னால் அவர்கள் நினைவுகூர்வதில்லை. ஆகவே இவற்றை நான் எனக்காக மட்டுமே எழுதிக்கொள்கிறேன்.

என் பார்வையில், பழக்கத்தின் சிறுவட்டத்திற்குள் சுழல்பவர்களுக்கு இசையென்றால் என்ன என்று தெரியாது. அதேபோல இசையுடன் வரலாறும் பண்பாடும் இணைந்து கொள்ளாமல் வெறும் ராக-தாள நுட்பங்களாகவே அதை அணுகுபவர்களும் மெய்யாக இசை கேட்பதில்லை என்பது என் எண்ணம். இசை ஒரு தொழில்நுட்பம் மட்டும் அல்ல. அது ஒரு பண்பாட்டின் அகவெளிப்பாடு.

எனக்கு இசை என்பது அந்தக் காலகட்டத்தையே இழுத்துக்கொண்டு வருவது. ஒரு பழையபாடலில் எழுந்து வருபவை எத்தனை முகங்கள். எத்தனை வாழ்க்கைகள். புனைவு வாழ்க்கைகள். புனைவென்றே தோன்றும் மெய்வாழ்க்கைகள். நம் அண்டைநிலத்துப் பண்பாட்டை அறிய பாடல்கள் வழியாகச் செல்லும் பயணம் போல் உதவுவது வேறில்லை.

இந்தப்பாடலை கண்டடைந்தது திரிவேணி என்ற கன்னட மொழி எழுத்தாளரைத் தேடிச்சென்றபோது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவரை வந்த பயணத்தில் அரைத்தூக்கத்தில் இப்பாடலை மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

திரிவேணியை நம் இன்றைய பார்வையில் பொதுரசனைப் படைப்புகளை எழுதிய ஒருவர் என்றே மதிப்பிடவேண்டும். எல்லாமே பெண்ணின் கண்ணீர்க்கதைகள். அவை பெரும்பாலும் சினிமாவாக ஆகியிருக்கின்றன. கன்னடத்தின் இடைநிலைப் படங்களின் இயக்குநரான புட்டண்ண கனகலுக்கு பிடித்தமானவை இவருடைய கதைகள். (புட்டண்ண கனகலிடம் பாரதிராஜா உதவி இயக்குநராகப் பணியாற்றினார்)

திரிவேணியின் ஒரு கதை சேட்டத்தி என்ற பேரில், மலையாளத்தில், புட்டண்ண கனகல் இயக்கத்தில் 1965-ல் வெளிவந்துள்ளது. ஓர் இளம்விதவை. அவளுக்கு ஒருவன் விடாப்பிடியாகப் பாலியல்தொல்லை அளிக்கிறான். அவள் அவனிடமிருந்து விலகி ஓடிக்கொண்டே இருக்கிறாள். அவளுடைய மைத்துனனுக்கு அவள்மேல் பெரிய மதிப்பும் அன்பும் இருக்கிறது. ஆனால் சற்றே அன்பு வெளித்தெரிந்தாலும் குடும்பத்திலேயே சந்தேகம் உருவாகிறது. அவளை ஊரே துரத்தித் துரத்தி அலர் பேசுகிறது. அந்த அலருக்கு எதிராக தப்பி ஓடிக்கொண்டே இருப்பவள் ஒரு கட்டத்தில் பைத்தியமாகிவிடுகிறாள்.

திரிவேணி என்றபேரில் எழுதிய அனுசூயா சங்கர் 1928ல் மைசூர் அருகே இலக்கியக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். பாகீரதி என்ற பேரும் உண்டு. மைசூர் பல்கலையில் இளங்கலைப் பட்டத்தில் தங்கப்பதக்கத்துடன் வென்றார். கணவர் சங்கர் ஆங்கிலப் பேராசிரியர். அபஸ்வரம் என்னும் முதல் நாவல் 1952ல்  வெளிவந்தது. 20 நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுதிகளும் எழுதியுள்ளார். பெரும்பாலான நாவல்கள் மலையாளத்தில் அறுபதுகளிலேயே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நான் மூன்றுநாவல்களை அக்காலத்தில் வாசித்திருக்கிறேன்.

திரிவேணி புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார். ஆனால் வாழ்க்கை பெருந்துன்பம் கொண்டது. தொடர்ச்சியான கருச்சிதைவுகளால் உடல்நலிந்திருந்தார். 1963 ல் தன் குழந்தையை பெற்றதும் குருதிகசிவால் இறந்தார். ஏறத்தாழ 10 ஆண்டுகள் அவர் எழுதினார். அந்தக்காலகட்டத்தில் உடல்நலக்குறைவினால் அலைக்கழிந்து கொண்டிருந்த போதிலும் ஒரு நாளில் ஐந்து மணிநேரம் விடாது எழுதிவந்தார். இறக்கும்போது வயது 35 தான். திரிவேணியின் வீடு இன்று ஒரு அருங்காட்சியகமாக உள்ளது (திரிவேணி வாழ்க்கை பதிவு)

திரிவேணியின் புகழ்பெற்ற நாவல் ஹன்னலே சிகுரிதாக (சருகு தளிர்விட்டது) நாவலின் திரைவடிவத்தில் இடம்பெற்றது ’ஹூவு செலுவெல்லா நன்னெந்திது…’ கன்னடத்தின் மிகப்புகழ்பெற்ற பாடல். புகழ்பெற்ற படமும்கூட. இயக்கியவர் எம்.ஆர்.விட்டல். எம்.ரங்காராவ் இசை. கவிஞர் ஆர்.என்.ஜெயகோபால். கன்னடத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரங்காராவ். ஆர்.என்.ஜெயகோபால் கன்னடத்தில் மிக அதிகமாக பாடல்கள் எழுதியவர், கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் பாடல்கள். பாடியவர் எவரென்று சொல்லவேண்டியதில்லை.

இந்தப்பாடலில் நடித்திருப்பவர் கன்னடத்தின் மின்னும் நட்சத்திரம் என அழைக்கப்பட்ட கல்பனா. கல்பனாவின் வாழ்க்கையையும் ஒரு சோகத்துடனேயே நினைவுகூர முடியும். 1943ல் ஒரு துளு குடும்பத்தில் பிறந்த சரத் லதா பி.ஆர்.பந்தலு இயக்கிய 1963ல் சாக்குமகளு என்ற படத்தில் கல்பனா என்ற பேரில் அறிமுகமானார். கன்னடத்தில் வேறெந்த நடிகையையும் விட ரசிகர்கள் கொண்டவராகத் திகழ்ந்தார்.

இயக்குநர் புட்டண்ண கனகல் மேல் கல்பனா தீவிரமான மோகமும் மதிப்பும் கொண்டிருந்தார். அது ஆசிரியர் – மாணவி உறவு. கூடவே பாலுறவாகவும் இருந்தது என்று சொல்லப்படுகிறது. புட்டண்ண கனகல் கல்பனாவை பயன்படுத்திக்கொண்டு தூக்கிவீசினார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் கல்பனா கலைஞர்களுக்குரிய கொந்தளிப்பான குணம் கொண்டவர், அவசரமுடிவுகளை எடுப்பவர் என்றும் சொல்லப்படுகிறது.

கல்பனா மிக ஆடம்பரமாக வாழ்ந்தார். அவருடைய நகைகளும் ஆடைகளும் அன்று கர்நாடக மக்களுக்கு முக்கியமான முன்னுதாரண வடிவங்களாக இருந்தன. புட்டண்ண கனகலுடன் கல்பனாவுக்கு உறவு முறிவு உருவாகியது. புட்டண்ண கனகல் ஆரதி என்ற நடிகையை முன்வைக்கலானார். கல்பனா மனமுடைந்தார். ஆழ்ந்த உளச்சோர்வு, நிதிச்சிக்கல் என அலைக்கழிந்தவர் 1979ல் ஐம்பதுக்கும் மேல் தூக்கமாத்திரைகளை விழுங்கித் தற்கொலை செய்துகொண்டார். (கல்பனா வாழ்க்கைக் குறிப்பு)

இந்த ஒரு பாடல் அத்தனை நினைவுகளையும் கொண்டுவந்து என்மேல் கொட்டுகிறது. இது பெண்ணின் பெருமைபேசும் பாடல். பெண்ணுடன் பூவை ஒப்பிடுவதில் ஒரு குரூர உண்மை உண்டா என்ன என்று எண்ணவைக்கிறது

ஹூவு செலுவெல்லா நந்தெந்திது
ஹெண்ணு ஹூவெ முடிது
செலுவே தானெந்திது...

கோகிலேயு கானதல்லி நானே தொரயெந்திது
கொளெலினெ தனி, வீணெயெ கனி,
கொரலல்லி இதெயெந்து
ஹெண்ணு வீணேயெ ஹிதிதா
சாரதையே ஹெண்ணெந்திது

நவிலொந்து நாட்யதல்லி தானே மொதலெந்திது
கெதருதெ கரி குனியுவே பரி
கண்ணிகே சொம்பெந்து
ஹெண்ணு நாட்யதரசி
பார்வதியெ ஹெண்ணெந்திது

முகிலொந்து பானிலள்ளி தானே மிகிலெந்திது
நீடுவே மளே தொளயுவே கொளே
சமணாரெனெகெந்து
ஹெண்ணு பாப தொலவா
சுரகங்கே ஹெண்ணெந்திது…

(தமிழில்)

பூ அழகெல்லாம் தானென்றது.
பெண் பூவைச் சூடி
அழகென்பதே தானென்றாள்.

குயில் ஒன்று பாட்டில்
தானே தலைவி என்றது
குழலின் ஒலியும் வீணையின் இசையும்
என் குரலில் உள்ளன என்றது.
பெண் வீணைமீட்டும் சாரதையே
பெண்ணல்லவா என்றாள்

மயில் ஒன்று நாட்டியத்தில்
நானே முதல் என்றது
ஒளிவிடும் வண்ணச்சிறகுகளால்
கண்களை நிறைத்தது
பெண் ஆடலரசி பார்வதியே
பெண்ணல்லவா என்றாள்

முகில் ஒன்று வானில் நின்றது
மழையென பொழிந்து
அனைத்தையும் நிறைத்து
கழுவுபவள் தானே என்றது.
பெண் பாவங்களை அகற்றும்
சுரகங்கையே பெண்ணல்லவா என்றாள்

*

முந்தைய கட்டுரைகீதையை அறிதல் -10
அடுத்த கட்டுரைதத்துவம் என்னும் சமநிலை