ரசனை கிடைக்கப்பெறுவதா ?

ஆசிரியருக்கு,

நீங்கள் எனக்கு சிற்பக்கலையை அறிமுகப்படுத்திய அந்த அம்பை கோயில் கணங்கள் மறக்க முடியாதவை , பின் முண்டந்துறை செல்லும்போது ஓவியத்தையும், பின் ஓரிரு ஆண்டுகளில் சிதம்பரத்தில்  நடனத்தையும், கடுமையான எதிர்விசை இருந்தும் மெல்ல மெல்லக்  கர்நாடக இசையையும் என சம வீச்சுடன் இவைகள்  அறிமுகமானது , பின் நமது திருவையாறு பயணமும் என இப்போது திரும்பிப் பார்க்கையில் எனக்குக் கிட்டத்தட்ட எல்லாக் கலைகளையும், அதன் அடிப்படைகளையும் நீங்கள்தான் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.  இன்று அந்த சூடு தணிந்த நிலையில்  நான் மெல்ல இவைகளையும் என்னையும்  மதிப்பீடு செய்கிறேன்.

எனக்கு அறிமுகமான எல்லா முதற் கணங்களும் அபாரமானவை, கோட்டை  மதில் சுவர் அகல வீசித் திறப்பது போல, அதிகாலை கோயில் நடை திறப்பது  போல மிக விசாலமானது, அவ்வறிமுகக் கணங்களில் அவ்விடத்தில் யார் இருந்திருந்தாலும் கிட்டத்தட்ட இதே துவக்கமும் பின் தொடர்பும் நிகழ்ந்திருக்கும்.

இலக்கியத்தில் சிறப்புத் தேர்ச்சியும், பிற கலைகளில் உபரி ஞானமும் உள்ள பெரும் கலைஞன்  ஒருவரின் அறிமுகம் இலக்கியத்தின் மீது முதன்மையான அழுத்தமும் பிற கலைகள் மீது ஆர்வமும் நாட்டமும் என என்னை நடத்துகிறது. பிற கலைப்படைப்புகள் கிடைக்கப் பெறுவதைவிட விட (இசை விதிவிலக்கு ) இலக்கியப் படைப்புகள் எளிதில் அகப்படுகிறது, ஊருக்கொரு நூலகம், புத்தகக் கடைகள்,  கண்காட்சிகள் , வாசிக்கும் நபரொருவரை சந்தித்து உரையாடுவதும் ஒப்பீட்டளவில் எளிது, எனவே முதலில் நான் புத்தகம், பிறகு ஜெ மூலமாகத் தீவிர இலக்கியம் என இயல்பில் வந்து சேர்ந்தேன்.

இதே சாத்தியத்தில் , உதாரணமாக ஓவியமோ, சிற்பமோ சமூகத்தில் எளிதில் அகப்படுகிறது,  அதன் பெரும்  கலைஞர்களை , ரசிகர்களை சந்தித்து உரையாடுவதும் எளிது என்ற நிலை இருந்தால் எனக்கு முதலில் எளிதில் அறிமுகமாகும் கலையுடன் பிரதான தொடர்பும் பிற கலைகளுடன்  உபரித் தொடர்பும் இருந்திருக்குமா?  மனிதன் எளிதில் ஆழமாக  ஆட்படக் கூடியவனா ?  நான் உட்பட உங்களின் எத்தனை வாசகர்கள் இலக்கியத்தில்  மிஞ்சுவோம் ? மனிதனின் மானசிகமான உறவென்பது திருமண உறவு போலப் பெரிதும் கிடைக்கப் பெறுவதும் , அணுக சாத்தியமானதும் (availability and accessibility)  என்ற எளிமையான விதி  சார்ந்ததா ?

நமது மதுரை  சந்திப்பில்  கேட்க நினைத்த கேள்வி இது.

கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன்,

சாதாரணமாகப் பார்த்தால் அப்படித்தெரியும். ஆனால் பெறுவது-  அடைவது என்ற இரு தரப்பிலும் நின்று பார்த்தால் அப்படி அல்ல என்பதைக் காணலாம்.

நல்ல கலையும் இலக்கியமும் மக்களுக்குக் கிடைத்தாகவேண்டியிருக்கிறது. அதுவும் உரிய வயதில். அப்போது கணிசமானவர்கள் இயல்பாகவே அவற்றுக்குள் வருவார்கள். மேலைநாடுகளில் சிறுவயதில் மேலை இசையுடன் ஒரு தொடர்பு குடும்பத்திலேயே அளிக்கப்பட்டுவிடுகிறது.  படுக்கைநேரவாசிப்பு மூலம் இலக்கியமும் அறிமுகமாகிறது. எங்கும் இலக்கியமும் கலைகளும் கிடைக்கின்றன. ஆகவே அங்கே ஓரளவுக்கு அடிப்படை ரசனை உடையவர்கள்கூட இலக்கியத்திற்கும் கலைகளுக்கும் வந்து சேர்கிறார்கள்

நம் நாட்டில் நல்ல ரசனை உடையவர்கள் அறிவுத்திறன் உடையவர்கள் நல்ல கலையையும் இலக்கியத்தையும் கடைசிவரை அறிமுகம் செய்துகொள்ளாமலேயே போகும் வாய்ப்பே அதிகம். நல்ல ஒரு வாசகரிடம் எப்படி வாசிக்க ஆரம்பித்தீர்கள் என்று கேட்டால் ஒரு தற்செயலை, ஒரு மனிதரை சுட்டிக்காட்டுவார். இயல்பான அறிமுகம் நிகழ அனேகமாக வாய்ப்பே இல்லை, தற்செயலே ஒரே திறப்பு.ஆகவேதான் இலக்கியமும் கலைகளும் இன்னும் விரிவாக அறிமுகம் செய்யப்படவேண்டும் என்று வாதிடுகிறோம்.

கலையிலக்கியங்களை மட்டுமல்ல, தத்துவத்தையே கூட முதிரா இளமையில் அறிமுகம் செய்துகொள்வது என்பது ஒரு பெரிய வாய்ப்பு. அகவை முதிர்ந்து, அன்றாடவாழ்க்கையின் அழுத்தங்கள் கூடிய பின் உள்ளம் ஒருமுகப்படுவதில்லை. கலையிலக்கியங்களுக்குத் தேவையான கனவும் பித்தும் குறைந்துவிடுகிறது. இசையை நாம் பதின்பருவத்தில் கேட்ட கொந்தளிப்புடன் பின்னர் கேட்பதே இல்லை. இளமையில் கலைகளுக்குள் செல்வது வாழ்க்கை முழுக்க நீடிக்கும் ஒரு பெரிய நல்லூழை அடைவது. வாழ்க்கையின் எல்லா இடைவெளிகளையும் கலையிலக்கியம் நிரப்பும். மெய்யான ஆன்மிகத்திற்கும் கொண்டுசெல்லும்.

இந்தியாவில் இன்று குழந்தைகளுக்கு வணிகக்கலை- சினிமா- தன்னியல்பாக அறிமுகமாகிறது. வேறெந்த கலைகளும் அறிமுகமாவதே இல்லை. அதற்கான அமைப்புகள் இல்லை. வீட்டிலும் கல்விநிலையத்திலும் அதற்கெல்லாம் எதிர்மனநிலையே உள்ளது. அவற்றைக் கற்பவர்கள் மிகப்பிந்தி அதற்குள் தற்செயலாக வருபவர்கள்தான்.

ஆனால் எந்த அகவையிலானாலும் கலையிலக்கியங்களையும் தத்துவத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பது மகத்தான ஒரு அனுபவமே. ஒரு புதிய கலை, ஒரு புதிய சிந்தனைப் போக்குக்கு அறிமுகமாவதென்பது சாதாரண விஷயம் அல்ல. அது பெரும் கொந்தளிப்பையும் பரவசத்தையும் அளிப்பது. அப்படி ஓர் உலகம் நம் அன்றாடத்திற்குள் இருக்குமென்றால் வாழ்வில் சலிப்பென்பதே இல்லை.

இன்றைய வாழ்க்கையின் பெரும் சிக்கலே சலிப்புதான். நாம் நம் வருமானத்தில் பெரும்பகுதியை அச்சலிப்பை வெல்லவே வீணாகச் செலவழிக்கிறோம். சலிப்பை வெல்ல செயற்கையான உற்சாகங்களை உருவாக்கிக் கொள்கிறோம். ஒன்றை நினைவுகூர்க, ஓர் உற்சாகத்தை நீங்கள் மெய்யாகவே அடைந்தால் அது உங்களை மேலும் ஆற்றல்மிக்கவர்களாக ஆக்கும். ஏனென்றால் அதில் கொஞ்சமேனும் ஒரு கற்றல் அம்சம் இருக்கும். வெறும் கேளிக்கைகள் சூதாட்டம் போன்றவை. அவை மெய்யான கொண்டாட்டத்தை அளிப்பவை அல்ல.

ஆனால், அப்படி கலையிலக்கியங்களையும் தத்துவத்தையும் நவீன வாசகர்களுக்கு முறையாக அறிமுகம் செய்ய அமைப்புகள் இன்று நமக்கில்லை. அவ்வண்ணம் சில அமைப்புகளை உருவாக்கவேண்டும் என்னும் பெருங்கனவு எனக்குண்டு. காலம் அமையவேண்டும். (2011ல் எழுதிய கட்டுரை இது. பத்தாண்டுகளுக்குள் அத்தகைய அமைப்பை உருவாக்கியிருக்கிறேன். 2022 முதல் தொடர்ச்சியான பயிற்சிவகுப்புகள் நிகழ்ந்து வருகின்றன) 

ஆனால் அதே ஐரோப்பிய நாடுகளில்கூட எல்லாரும் கலையிலக்கியம் பக்கம் வந்துவிடுவதில்லை. அவர்கள் அங்கும் மிகச்சிறுபான்மையினரே. பிறர் அன்றாடவாழ்க்கையில் மூழ்கி மறையவே வாய்ப்பு. எப்போதுமே மானுட விதி அதுதான். அவனுடைய மூளைக்குள் ரசனையும் அறிவுத்தேடலும் பிறப்பிலேயே இருக்கவில்லை என்றால் புற அறிமுகத்தால் என்ன பயன்?

நாயைப் புலால் மணமே இல்லாமல் வளர்ப்பவர்கள் உண்டு. ஆனால் பிறந்து வெளிவந்த குட்டியானாலும் சரி பத்து வருடம் அசைவ வாசனையே இல்லாமலிருக்கும் நாயானாலும் சரி மாமிசத்தை மணம் காட்டினால் வந்து கவ்விக்கொள்ளும். அதன் உணவு அது என அதன் மூளைக்குத்தெரியும். பலசமயம் ரசனை என்பது இப்படித்தான்.

ஜெ

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Sep 9, 2011 

 

விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடுகள் 

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்

எழுதும் கலை

எழுதுக

வணிக இலக்கியம்

இலக்கியத்தின் நுழைவாயிலில்

இலக்கிய முன்னோடிகள் 

வாசிப்பின் வழிகள்

நாவல் கோட்பாடு

 

 

முந்தைய கட்டுரைகதிர்காமு ரத்தினம்
அடுத்த கட்டுரைவெண்முரசு வாசிப்பை தொடங்குதல்