அமெரிக்கப் பயணம் நிறைவை நோக்கிச் செல்கிறது. ஒரு மாதத்திற்கும் மேல். சென்ற செப்டெம்பர் 22 காலையில் இங்கே வந்தோம். சான்பிரான்ஸிஸ்கோவில் நண்பர் விஸ்வநாதன் – பிரமோதினி இல்லத்தில் தங்கினோம். விஸ்வநாதன் என்னுடைய புறப்பாடு நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்- வெளியாகப்போகிறது. என்னுடன் 2022ல் அமெரிக்காவின் இருகரை தொடும் பயணத்தில் உடன் வந்தார். அதைப்பற்றிய அவருடைய நூல் இருகடல் ஒரு நிலம் விஷ்ணுபுரம் வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது.
இந்தப் பயணத்திலும் வழக்கம்போல அமெரிக்காவின் மேற்கிலிருந்து கிழக்கு வரை நீண்டபயணம் மேற்கொண்டேன். சான்பிரான்ஸிஸ்கோவில் வால்நட் கிரீக் என்னும் இடத்தில் ஒரு வாசகர் சந்திப்பு. அதன்பின் ராலே சென்றோம். ராஜன் சோமசுந்தரம் இல்லத்தில் இரண்டு நாள். பூன் முகாம் சந்திப்புகள். பூன் முகாம் இன்று அமெரிக்காவின் ஒரு முக்கியமான பொதுச்சந்திப்பாக ஆகிவிட்டிருக்கிறது. அதை முழுமையான ஒரு தொடர்நிகழ்வாக ஆக்க எண்ணியுள்ளோம்.
மிஷிகன் மாநிலத்தில் டிராய் கம்யூனிட்டி சென்டரில் இரண்டாவது பொதுவாசகர் சந்திப்பு. எண்பதுபேருக்குமேல் கலந்துகொண்ட நிகழ்வு அது. அங்கே ஒன்றரை மணிநேர உரை ஒன்றை ஆற்றினேன். அது பதிவுசெய்யப்பட்டுள்ளது. பின்னர் வெளியாகும். மிஷிகனின் வெவ்வேறு கலாச்சாரக் களங்களைச் சேர்ந்த நண்பர்கள் கலந்துகொண்டார்கள். மதுனிகா, சங்கர், சுரேஷ், கலை, லட்சுமணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மிஷிகனில் இருந்து வந்து நண்பர் பழனிஜோதி- மகேஸ்வரி இல்லத்தில் சிலநாட்கள் தங்கியிருந்தோம். இங்கே பழனிஜோதி இல்லத்தில் ஒரு சம்பிரதாயமற்றச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். நிறையபேர் வர ஆர்வம் காட்டியமையால் ஒரு பொது இடம் முடிவுசெய்யப்பட்டு அங்கே பொதுநிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. ஐம்பதுபேர் கலந்துகொண்டனர். கேள்வி-பதில் நிகழ்வாக நடைபெற்றது.
வாஷிங்டனில் லௌடன் பள்ளியில் ஓர் உரைநிகழ்வு. அதற்குமுன் நண்பர் நிர்மல் இல்லத்தில் ஒரு சிறு சந்திப்பு. மறுநாள் நண்பர் வேல்முருகன் வீட்டில் இன்னொரு பெரிய சந்திப்பு. நண்பர் வாஷிங்டன் பீட்டர் உட்பட முப்பதுபேர் வந்திருந்தனர். தமிழில் நாவல்கள் எழுதிவந்த சத்யராஜ்குமார் வந்திருந்தார்.
இதைத்தவிர சிகாகோ மணிவாசகம் இல்லத்திலும், ராலே ராஜன் சோமசுந்தரம் இல்லத்திலும் , மதுனிகா இல்லத்திலும், நியூஜெர்ஸி பழனிஜோதி இல்லத்திலும் தொடர்ச்சியாக நண்பர்கள் வந்து சந்தித்துக்கொண்டே இருந்தார்கள். சென்ற முறை அமெரிக்க இளம்தலைமுறையினரிடம் நிறையப் பேசினேன். இம்முறை இன்னும் அதிகமாக. அவர்களின் அறிவார்ந்த தீவிரம், கலைப்பயிற்சி, வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றுடன் சுதந்திரத்தையும் உணரமுடிந்தது. இப்பயணத்தின் நிறைவில் அவர்களின் முகங்களே நினைவில் நிறைந்துள்ளன.
ஒவ்வொரு முறை அமெரிக்கா வந்துசெல்கையிலும் ஆழ்ந்த நிறைவையே உணர்கிறேன். நண்பர்களுடன் அமையும் அரிய உரையாடல்கள். அமெரிக்காவின் உளம்நிறையச்செய்யும் அபாரமான விரிநிலம். அத்துடன் இந்த அறிவுதிகழ் நாடு உருவாக்கும் நம்பிக்கையும் கனவுகளும்.
இரு கடல் ஒரு நிலம் நூல்
இரு கடல் ஒரு நிலம் மின்னூல்