இசை:ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,
இசை விஷயத்தில் மாற்றுக்கருத்தாக எதையாவது சொல்லியாகவேண்டும் என்ற உந்துதல் என்னிடத்தில் இல்லை. இந்தியத் திரைப்படப் பாடல்களை  பலவருடங்களாக கூர்ந்து கவனித்து வருகிறேன். எனக்கு உள்ள சொற்ப ஞானத்தில்தான் இதை எழுதுகிறேன்.
இது முற்றிலும் எனது சுய அனுபவம் சார்ந்ததும் எனது அவதானிப்பின் கூர்மையை பொறுத்தது மட்டுமே.இசையென்பது ப்ரக்ருதி ஒரு ஸ்தூலத்தின் வழியாக தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளும்போது ஏற்படும் பேரதிர்வு என்று புரிந்துகொள்கிறேன்.என்னால் சாஸ்திரியையும், தீக்ஷிதரையும், ஜி.ராமனாதன் முதல் இளையராஜா வரை அனைவரது இசையையும் எந்தவித முன்முடிவுகளும் இன்றி ரசிக்க முடிகிறது என்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியே.

ஒரு கலை என்பது ஒரு சமூகம் அல்லது நாகரீகம் மற்ற சமூக நாகரீகங்களோடு உறையாடும் ஒரு கருவி என்றே புரிந்துகொள்கிறேன். ஒவ்வொரு சமூகமும் அதன் ஆத்மாவின் வெளிப்பாடு என்று கொள்ளத்தக்க ஒரு கலை வெளிப்பாடு அச்சமூகத்தின் இசையே. இசை மற்ற சமூகங்களின் இசையிலிருந்தும் தாக்கங்களை ஏற்றுக்கொண்டு ஒரு ஒன்றுபட்ட நுண்கலை வடிவை எடுத்துக்கொண்டது.

சினிமா இசையை மொத்தமாக வியாபாரம் என்று ஒதுக்கவும் முடியாது, அதேசமயம் அதை உயரிய இசை நுணுக்கம் என்று புரியவும் முடியாது. அதுவும் தற்போதைய திரையிசை என்பது ஒரு நாகரீகமான, பழமையான ஒரு சமூகத்தால் ரசிக்கப்படுகிறது என்பதே எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

ஒரு திரைப்படப் பாடலை எப்படி மதிப்பீடு செய்வது என்பது பலகாலம் எனக்குள் இருந்த மிகப்பெரிய கேள்வி. திரைப்படப்பாடல் என்பது கலையா, நுண்கலையா என்பது நிறுவப்பட்டால்தான் அதற்கான மதிப்பீட்டு அலகுகளை நிர்ணயிக்கமுடியும்? என்னைப்பொருத்தவரை அது கலை, நுண்கலை இரண்டிற்கும் இடையேயான ஒரு சமரசமாகவே படுகிறது. திரைப்படப்பாடல் என்பது இவை இரண்டிற்குமான கூறுகளை வெவ்வேறு சதவிகிதங்களில் கலந்து பயன்படுத்துகிறது.

காலப்போக்கில் பாடல்களை கேட்டுக்கேட்டு எடுத்துக்காட்டுகளால் அறிவது என்ற முறையிலேயே எனது கருத்துகளை நிறுவிக்கொண்டேன். ஹிட் பாடல் என்பது வேறு, நல்ல பாடல் என்பது வேறு என்ற அடிப்படை புரிதலே ஒரு பாடலை மதிப்பிடும்போது எடுத்துக்கொள்ளவேண்டிய முதல் கருதுகோள் என்று வைத்துள்ளேன்.

திரைப்படப்பாடல்கள் ஒரு இசையமைப்பாளரின் உண்மையான, முழுமையான  மனோதர்மத்தை வெளிக்கொணரும் சுதந்திரமும், சாத்தியங்களும் இல்லாதது. ஒரு பாடலைக்கேட்டால் அந்தப்பாடலை நாம் மதிப்பிடமுடியுமே ஒழிய அந்த இசையமைப்பாளரை அல்ல. ஏனெனில், அவரது ஆத்மா அந்தப்பாடலில் மிகக் குறைவான அளவே உள்ளது.
ஒரு இசையமைப்பாளரின் மேதமையையோ, இசையில் அவரது ஆளுமையையோ நிர்ணயிக்கவேண்டும் என்றால் குறைந்தது அவரது தனிப்பாடல்களையும், அவரது பெரும்பாலான படைப்புகளையோ அவதானித்தபிறகே முடியும். திரைப்பாடல் என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதோடு மட்டுமல்லாமல் அது ஒரு செயற்கை அனுபவம் மட்டுமே. கூடவே மனோதர்மமும், ஸ்பாண்டனிடியும் கிடையாது.

தற்போதெல்லாம் பாடல் வரிகளின் பங்கு இசைவெற்றியில் பெரிதும் பேசப்படுகிறது. பாடல் வரிகள் கவிஞரின் மொழி ஆளுமை குறித்தது மட்டுமல்லாது, கேட்பவரின் மொழியறிவும் அனுபவமும் சார்ந்தது. ஆனால் அது இசையின் வெற்றியல்ல, அதன் வரிகளுடையது மட்டுமே.

உண்மையில் சொல்வதானால்,இசைக்கு மொழி அவசியமில்லை, சம்மந்தமும் இல்லை. தேனோடு எதைக்கலந்தாலும் நன்றாகத்தான் இருக்கும். எனவே இசையின் தனிச் சுவையை ரசிக்க முடியாதவர்கள் அதன் மூலம் வேறு பாவனைகளுக்கு தாவிவிடுகிறார்கள். அதற்கு மொழி ஒரு துணை. எவ்வளவு நல்ல வரிகள் இருந்தாலும் அது இசையை ரசிக்கத் தேவையில்லாததே. ஒரு பாடல் இருக்கிறது, சிங்கார வேலனே தேவா என்று. அதன் அடுத்தவரி எத்தனை பேருக்குத் தெரியும்?

பாடல் வரிகள் ஒருபோதும் இசையனுபவத்தைத் தருவதில்லை. அது சுத்தமான ஒலிகளை ரசிப்பவருக்குத் தேவையில்லாத ஒரு கவனச் சிதறல்தான். வரிகள், இசைக்காரணமல்லாது ஒரு பாடலை ஹிட்டாக்க உதவும் ஒரு கருவி. பெரும்பாலும் இவ்வகைப்பாடல்கள் தத்துவத்தை சொல்வதற்குப் பயன்படுத்துவார்கள். அதற்கு இசைக்காரணங்களால் பெருமை இல்லை. பாடல் வரிகள் தரும்  அனுபவத்தின் வெற்றியே அது.

தற்போதுள்ள விஞ்ஞான சாத்தியங்களில் எஃப்.எம் ரேடியோ முதல் செல்போன் வரை அனைத்துவழிகளிலும் ஒரு பாடலை மீண்டும் மீண்டும் மக்களை கேட்கவைத்தாலே அது மிகப்பெரிய ஹிட்டாகிவிடும் என்பதற்கு பல பாடல்களை உதாரணம் காட்டமுடியும். இது “ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதனால் அது உண்மையாகிவிடும்” என்பதன் வெளிப்பாடே. அது உண்மை ஆகாது என்பது நமக்குத்தெரிந்தாலும் நாம் பொய்யை ரசிக்க, விரும்ப, அதையே உண்மை என்று நம்ப ஆரம்பித்துவிடுவோம். இதுகாரணமாக மட்டுமே வெற்றி பெற்ற பாடல்கள் பற்பல.
இளையராஜா இந்தியத்திரையுலகில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு. இளையராஜாவின் மோகமுள் இசை ஒரு நுண்கலை வெளிப்பாடு என்று சொல்லலாம். கரகாட்டக்காரன் ஒரு கிராமிய, ஹிந்துஸ்தானி கலவையானது. அவரது பல திரைபடப் பாடல்களை குறிப்பிடும்போது மேற்கத்திய மற்றும் இந்திய கிராமிய இசைக்கலவை என்று சொல்லலாம்.
இளையராஜாவிடமிருந்தே இந்த திரைப்பாடலில் கர்னாடக சங்கீதத்தின் கூறுகளைத்தேடுதல் என்ற ஒரு துறை முதலானது என்று சொல்லலாம். அதற்கு முன்பும் பலர் கர்னாடக/ஹிந்துஸ்தானி சங்கீத அடிப்படையில் பாடல்கள் அமைத்திருக்கிறார்கள். ஏன், கிட்டப்பா, முத்தையா பாகவதர் இருவர்குறித்த ஒரு நிகழ்ச்சியும், சாஸ்த்திரீய இசையுலகில் பெரிய அளவில் பேசப்படுவதே. நாடகங்களில் கூட ராஜபார்ட் “எவரனி” என்று தேவாம்ருதவர்ஷினியில் பாடிக்கொண்டு அறிமுகமாவதும் உண்டு என்று படித்திருக்கிறேன்.
இளையராஜா இசையிலிருந்து இந்த கர்னாடக இசையை கூறுகளை கண்டுபிடிக்கும் முறை தொடங்கியது என்று சொல்வேன். இதற்கு பல காரணங்கள் இருப்பினும் முக்கியமாக இவர் அதிக அளவில் மேற்கத்திய இசையை கலந்து கொடுத்ததும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அவருக்கு சாஸ்திரிய இசை தெரியாது, இருப்பினும் அவர் எவ்வளவு நன்றாக இசையமைக்கிறார் என்று, அவரை பெருமை படுத்துகிறார்களா சிறுமைபடுத்துகிறார்களா என்று புரியாமல் மையமாக பேசுபவர்களும் ஒரு காரணம்.
எனக்கு இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும், ஆனால் அது பெருமளவில் மேற்கத்திய இசை சார்ந்து இருப்பதனால் அவரது இசையை எனக்கு நானே எனது கலாசாரத்தோடு அதை ஜஸ்டிஃபை செய்துகொள்ள செய்யும் ஒரு முயற்சி அதில் சாஸ்திரீய இசையை தேடுதல். அவரது பாடலுக்கோ அல்லது அவருக்கு முன்னும் பின்னும் இருப்பவருக்கும் அத்தகைய அங்கீகாரம் ஒருபோதும் தேவையில்லை என்றாலும், இது எனக்கான ஒரு நியாயம். அவ்வளவே.
ஒருநாள் நான் பாடல்கள் கேட்க நல்ல ஸ்பீக்கர் வாங்கவேண்டும் என்று அதற்கான தேடுதலில் ஒரு விற்பனை ஸ்தலத்திற்கு சென்றிருந்தேன்.சில பாடல்கள் சிடியில் எடுத்துப்போயிருந்தேன், அதிலிருந்து சில பாடல்களை கேட்டால் அந்த ஸ்பீக்கர் ஸிஸ்டத்தின் தரம் தெரிந்துவிடும். அந்த அளவு நுணுக்கம் நிறைந்த பாடல்கள். அந்த சிடியில் இருந்த பாடல்கள் அனைத்தும் இளையராஜாவினுடையதே. அங்கு இருவர் வந்தார்கள், அவர்களது கையிலிருந்த சிடியில் இருந்து சில பாடல்கள் கேட்டார்கள், அவர்களது கமெண்ட்களை கேட்க எனக்கே சிரிப்பு வந்துவிட்டது. “The voice gets smoothen in this, the slight chips in the voice are not clear on this” என்ற வகையில் போய்க்கொண்டே இருந்தது. இவர்களுக்கு இசையை விட அது எப்படி வெளிப்படுகிறது என்ற அறிவியலின் மீது தான் ஆர்வம். கிட்டத்தட்ட இது உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதை விட பேக்கேஜிங் எப்படி இருக்கிறது என்பதே இவர்களின் கவனம். இவர்கள் இசை ரசிகர்கள் அல்ல என்பது என் அபிப்ராயம்.
ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் இவ்வகையைச்சார்ந்தவர்களே. ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஆகச்சிறந்த டெக்னீஷியன். ஆனால் இசை அலகுகளில் அவரது ஆளுமை மிகவும் கேள்விக்குறியதே. எம்.எஸ்.வி. யிடம் இருந்து ப்ரவாகமாக வரும் சங்கதிகளும் நுணுக்கங்களும் இவரிடம் கிடையாது என்றே நினைக்கிறேன். இளையராஜா போன்றவர்கள் ஒரு இசைக் குறிப்பெழுதினால் அதைவிட அதிகமாக பாடகர் பாடக்கூடாது என்றே சொல்லிவிடுவார். அவரது இசை ஆளுமை அத்தகையது.
ஏ.ஆர். ரஹ்மான் ஒரு வரிப்பாடலை ஒரு பாடகரை 200 விதமாக பாடவைத்து அதிலிருந்து சிறந்ததைப் பொறுக்கி எடுத்து துண்டு துண்டாக்கி கம்ப்யூட்டரில் இணைத்து ஒரு பெரிய மாய லோகத்தை ஸ்ருஷ்டிக்கிறார்.ஏ.ஆர். ரஹ்மான் ஒரு தனிமனிதனின் இசை ஆளுமையை ஒரு கூட்டு முயற்சியாக்கி அதில் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் பல நல்ல பாடல்களை தந்திருந்தாலும் என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தவில்லை. காரணம் இவரது இசை ஆளுமை இன்னும் எனக்கு புரியவில்லை.
ஆனால் இசை வியாபார உலகில் இசை ஆளுமை குறித்த கேள்வி பெரிதாக எழுவதில்லை. ஒருவேளை ரஹ்மானிடம் எனது எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறதோ என்று நினைக்கிறேன். ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியது குறித்து எனக்கு சந்தோஷமே. ஆனால் அது இசைக்காக எனும்போது.. ?? ஹ்ம்ம்.. நல்லது. அதுவும் ஒரு தமிழன் வாங்கிவிட்டான், இந்தியாவிற்கு விருது என்றெல்லாம் சொல்லும் போது அப்பாடல்களின் இந்தியத்தன்மை குறித்த கேள்வி எழுகிறது. ஜெயித்தது யாராக இருந்தாலும் தோற்றது என்னைப்பொருத்தவரை இசை.
நான் நினைப்பதை எல்லாம் என்னால் தெளிவாக எழுதமுடியவில்லை. ஏதும் தவறாக சொல்லியிருந்தால், மன்னிக்கவும்.
வணக்கம்
ராம்

அன்புள்ள ராம்

உங்கள் இசை குறித்த அவதானிப்புகளை நான் சிந்தித்துப்பார்க்கிறேன். அதைப்பற்றி எனக்குக் கருத்துக்கள் ஏதுமில்லை– இசை பற்றி கருத்து சொல்லும் இடத்தில் நான் இல்லை. நீங்கள் முறைபப்டி இசை கற்றவர் என்பதை எழுதியிருக்கிறீர்கள்.

பொதுவாக கலைகளை மூன்றாகப்பிரிக்கலாம். நாடார் கலை செவ்வியல் கலை பரப்புக்கலை. [Folk, Classic,Pop] மூன்றும் மூன்றுவகையானவை. நாட்டார் கலை மக்களால் மக்களுக்காக உருவாக்கபபு மக்களால் ரசிக்கபபுவது. அதை ரசிக்க அந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வாழ்வதே போது. தனிப்பயிற்சி தேவை இல்லை. நாட்டார் கலைஞன் தொழில்முறை நிபுணத்துவம் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதில்லை. பொதுவாக நாட்டார் கலையில் உருவ வளர்ச்சிப்போக்கும் இருக்காது. ஆனால் நாட்டார்கலை நேரடியாக வாழ்க்கையுடன் தொடர்புள்ளது. ஆகவே அது தொடர்ச்சியாக உள்ளடக்கம் வளரும்.

நாட்டார் கலையில் இருந்துசெவ்வியல் கலை உருவாகிறது. அது தனிமனித ஆத்மார்த்தத்தின் வெளிப்படும். நிகழ்த்துபவனும் ரசிப்பவனும் அதற்கான பயிற்சியை மேற்கொண்டிருப்பான். செவ்வியல்கலை பல்வேறு கலைஞர்களின் கூட்டுமுயற்சியாக மேலும் மேலும் வளரும். வளர்ச்சி என்பது அதில் தொடர்ச்சியான நுண்மையாக்கம்தான்

பரப்புக்கலை இரண்டிலிருந்தும் வேறுபட்டது. அது வரலாறு அற்றது. வேரற்றது. செவ்வியலையும் நாட்டர் கலையையையும் ஒரே சமயம் பயன்படுத்திக்கொள்வது. அதில் கலைஞன் கேளிக்கையாளன். வணிகன். அதேசமயம் கலைஞனும்கூடத்தான். அவன் நுகர்வோர் கேட்பதைக் கொடுக்கிறான், அவ்வளவுதான். அதில் எல்லா கலைகளின் சிறந்த சாயல்கள் இருக்கும். கீழான சாயல்களும் இருக்கும் .

அது நவீன உற்பத்திமுறையின் மூலம் தன் உழைப்பில் இருந்து அன்னியபப்ட்டுப்போன உழைபபளர்க்காக முதலாளித்துவ காலகட்டத்தின் தொடக்கத்தில் உருவானது. இளைப்பாற்றுதலையே இலக்காகக் கொண்டது. ஆகவே சாராம்சம் அற்றது. மேலோடமாக அந்தக்காலகட்டத்தின் எல்லா சிந்தனைகளையும் அது பிரதிபலிக்கும். அதற்கென பண்பாட்டு உள்ளடக்கம் ஏதும் இருக்காது

சினிமாப்பாடல், வணிக சினிமா எல்லாமே பரப்பு கலைகள் மட்டுமே. அவற்றில்; செவ்வியலைக் காண்பதனால் அவை செவ்வியல் கலையாக ஆகிவிடுவதில்லை. அது முழுக்க முழுக்க எடுத்தாள்கைக் கலை [Applied art] ஆகவே அதை அந்தக்கோணத்திலேயே ரசிக்கவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 14
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 15