கலாமின் கனவு

ஜெ,

அப்துல்கலாம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவருடைய பொன்மொழிகள். இன்று பரவலாக உள்ளன. அவர் கனவுகாணுங்கள் என்று சொன்ன பொன்மொழியை நான் என் டெஸ்க்டாப்பில் வைத்திருந்தேன். அதை ஓர் அறிவுஜீவி பயங்கரமாகக் கிண்டலடித்தார். அறிவுஜீவிகளுக்கு ஏன் அவரைப் பிடிக்கவில்லை?

சா.ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்,

எனக்கு கலாம் பற்றி பெருமதிப்புண்டு. 2007ல் இளையராஜா அளித்த பாவலர் விருதை கலாம் கையால் பெற்றதை ஒரு வாழ்நாள் வெற்றி என்றே இன்றும் கருதுகிறேன். அவர்கள் இருவரும் என் வணக்கத்துக்குரிய பேராளுமைகள்.

அறிவுஜீவிகளில் இரு வகை உண்டு. ஆழமான தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். அதன் விளைவான நிரந்தரக் கசப்புகொண்டவர்கள் ஒருவகை. அவர்கள் தங்கள் உலகியல்தோல்விகளை உள்ளூரப் பெரிதாக எண்ணுபவர்கள். ஆனால் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். அறிவே தன் தகுதி என பாவனை செய்வார்கள். ஆனால் அதிகாரத்தையே அகத்தே வழிபடுவார்கள்.  அவர்கள் ஏற்கப்பட்டுவிட்ட, பொதுவான, எதையும் எரிச்சலுடன் அணுகுவார்கள். கேலி செய்வார்கள். அதன் வழியாக தங்களை ஒரு படி மேல் என காட்டிக்கொள்ள முனைவார்கள். அறிவுஜீவி என்பதன் முதிராநிலை அது.

இன்னொருவகை அறிவுஜீவிகள் மெய்யாகவே அறிவியக்கத்தின் வரலாற்றை அறிந்தவர்கள். அதற்குப் பங்களிப்பவர்கள். அவர்களுக்கு உலகியல் வெற்றி தோல்விகள் அளவீடே அல்ல. அவர்களின் பார்வை ஒட்டுமொத்தமானது. ஆகவே அவர்கள் தாழ்வுணர்ச்சியால் இயக்கப்படுவதில்லை. விளைவாக எல்லாவற்றையும் ஒரு சமநிலையில் வைத்துப்பார்க்க அவர்களால் இயலும். அவர்கள் இப்படிப்பட்ட எளிய நையாண்டிகளில் ஈடுபடுவதில்லை. கசப்பில் இருந்து அவர்களின் விமர்சனம் எழுவதில்லை. மெய்யான அக்கறையில் இருந்து, நேர்நிலை மனநிலையில் இருந்துதான் விமர்சனங்கள் உருவாகும்.

எனக்கு கலாம் ஆற்றிய பங்களிப்பென்ன என்று நன்றாகவே தெரியும். இன்று பாரதீய ஜனதா ஆதரவாளராக உள்ள மாலன் முன்பு திமுக ஆதரவாளராக சன் டிவியில் பணியாற்றிய காலகட்டத்தில் அப்துல்கலாம் இந்திய ஜனாதிபதியாகத் தேர்வானார். அப்போது அவர் கலாம் பற்றி மிக அலட்சியமாக விமர்சனம் செய்து எழுதியிருந்தார். கலாம் வெறுமொரு பொறியாளர் மட்டுமே என்றும், அவரை அறிவியலாளர் என்று சொல்லக்கூடாது என்றும், அவர் பாரதிய ஜனதாவின்போஸ்டர்பாய்மட்டும்தான் என்றும் எழுதினார். நான் அன்று அதை மறுத்து எழுதியிருக்கிறேன். இன்றும் அதையெல்லாம் எழுதுவோர் உண்டு. அப்படிச் சொல்பவருக்கு என்ன அறிவியல் தெரியும், என்ன தகுதி என்றால் சிரிப்புதான் நமக்கு வரும்.

நான் அறிவியல்தொழில்நுட்பம் சார்ந்த ஒரு துறையில் பணியாற்றியவன். அறிவியலாளன் அல்ல, ஆனால் என்ன நிகழ்கிறது என்ற புரிதல் உள்ள தொழிற்சங்கவாதி. அப்துல் கலாம் இந்திய அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஆற்றிய பங்களிப்பு சாதாரணமானது அல்ல. ஒவ்வொரு இந்தியனும் அவரைப் போன்றவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். ஆனால் எந்தக் கண்டுபிடிப்பையும் அவர் பெயரால் பதிவுசெய்ய முடியாது. அவருக்கு அரசு அதிகாரபூர்வமாக அறிவியல் சார்ந்த எந்த கௌரவத்தையும் வழங்க முடியாது. அவர்களே தங்கள் பங்களிப்பை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் கண்டுபிடித்த எல்லாமே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவற்றை திரும்பக் கண்டுபிடித்தவை. ‘reverse engineering’ என்று சொல்லத்தக்கவை. சர்வதேச அளவில் அவை காப்புரிமை மீறலாகவே கருதப்படும்.

பாதுகாப்பு, தகவல்தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றில் முதல் உலக நாடுகள் தங்கள் தொழில்நுட்பங்களை ரகசியமாகவே வைத்திருக்கின்றன. அவற்றை மிகமிக அதிகத் தொகைக்கு விற்கின்றன. அப்படி விற்கும்போதுகூட தங்களிடம் காலாவதியான தொழில்நுட்பத்தை, தங்களை விட பலமடங்கு கீழான தொழில்நுட்பத்தையே விற்கின்றன. தங்கள் மேலாதிக்கத்தை அவ்வாறு அவை நிலைநாட்டுகின்றன. அது மாபெரும் பொருளியல்சுரண்டலும்கூட. நாம் நம் இயற்கைச்செல்வங்களை அள்ளி அள்ளி கொடுத்து உதவாதவற்றை வாங்கிக்கொண்டிருக்கவேண்டும்.

இந்தியா நீண்டகாலமாக செய்துவருவது இந்த ‘reverse engineering’ வழியாக அந்த அறிவுசார்ந்த ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு போர்தான். முதல் உலகநாடுகள் விற்கும் மருந்துகளை அப்படியே இறக்குமதிசெய்தாலே இந்தியா திவாலாகிவிடும். நாம் அவற்றுக்கு நிகர்மாற்றை உடனே கண்டுபிடிக்கிறோம். பாதுகாப்புத்துறையிலும் தொழில்நுட்பத்துறையிலும் நம் அறிவியலாளர் அதைத்தான் செய்கிறார்கள். ஆகவேதான் அவை அவ்வளவு பூடகமாக நிகழ்கின்றன.  ஆராய்ச்சி என்பதே ‘ unzip’ செய்வதுதான் என்று அங்கேயே கிண்டலாகச் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் அது எளிய பணி அல்ல. அதில் ஏறத்தாழ முதன்மைக் கண்டுபிடிப்பு அளவுக்கே ஆராய்ச்சியும், ஒத்திசைவும், பெரும் முதலீடும் தேவை. (மொத்த தமிழ்சினிமாவின் தொழில்நுட்பமும் அப்படி சினிமா பார்த்து, ஊகித்து, நாமே உருவாக்கிக்கொண்ட எதிர்ப்பொறியியல்தான்.)

அசாதாரணமான ஒருங்கிணைப்புத்திறன் கொண்டவர் அப்துல் கலாம். அவரிடம்  வேலைபார்த்த உறவினர்கள் எனக்குண்டு. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் கண்கண்ட தெய்வம்போல. அவரிடம் பாதுகாவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு மலையாளி நண்பர் அவருடைய வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுக்கவேண்டும் என்பதையே பெருங்கனவாகக் கொண்டு வாழ்கிறார். கடைசிப்பணத்தையும் செலவழிக்க தயாராக இருக்கிறார். அவ்வப்போது வந்து என்னிடம் பேசுவார். நாங்கள் பலவகையிலும் முயன்று வருகிறோம். அந்த தீவிரமான அர்ப்பணிப்பை ஈட்டிக்கொண்ட ஒருவராலேயே கலாம் செய்ததுபோன்ற சாதனைகளைச் செய்ய முடியும். 

கலாம் பாதுகாப்புத்துறையில் செய்த சாதனைகளால்தான் இந்தியா தன் பொருளியல் சுதந்திரத்தை பேணிக்கொள்ள முடிகிறது. நீங்களும் நானும் ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழமுடிகிறது. அதுவே உலகச்சூழல். அணுவாயுதம், ஏவுகணைத் தொழில்நுட்பம் இல்லாத நாடு இன்னொரு நாட்டுக்கு அடிமையாகவே இருக்கவேண்டும். பொருளியலை அடகுவைக்க வேண்டும். உக்ரேன் போல அடிவாங்கும்போதுகூட உலகம் திரும்பிப்பார்க்காது. கலாம் நமக்கு அளித்தது வெறும் ஏவுகணை அல்ல. சுதந்திரத்துக்கான பாதுகாப்பு. இன்றைய உலகில் ஆயுதமில்லாமல் சுதந்திரம் இல்லை.

தகவல்தொழில்நுட்பத்துறையில் கலாம் அணியினர் சாதித்தவை என்னென்ன என என்னால் விரிவாகவே எழுதமுடியும் – ஆனால் சட்டபூர்வமாக நான் எழுதக்கூடாது. 1985ல் கிராஸ்பார் தொழில்நுட்பம் வந்தது முதல் 1995ல் துணைக்கோள் சேவை வந்தது வரை தகவல்தொடர்புத்துறையில் தொடர்ச்சியாக இந்திய விண்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த அறிவியல் நிறுவனங்களின் பெரும்பங்களிப்பு உண்டு. இன்றுகூட இந்தியா அவர்களை நம்பியே உள்ளது. அவர்கள்தான் தகவல்தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கினர். இன்றைய இந்தியாவின் பல லட்சம் கணிப்பொறியாளர்கள் உருவாக அவர்களே அடித்தளம் அமைத்தனர். இன்று நாம் மின்னூடகப் பணப்பரிவர்த்தனை வரை வந்துள்ளோம் என்றால் அவர்களால்தான். கலாம் அணியினரின் கொடை மருத்துவத்திலும் உண்டு என நான் அறிவேன்.

கலாம்  அறிவியல் சாதனையாளர். அதேசமயம் முற்றிலும் தன்னலமற்ற மக்கள்பணியாளர். ஒரு மேலைநாட்டு பெருந்தொழில்-வணிக நிறுவனத்தின் சார்பில், அவர்கள் உருவாக்கி அளிக்கும் தொழில்நுட்ப உதவியுடனும் பெரும் முதலீட்டுடனும் ஆய்வுகள் செய்து ஒன்றை கண்டுபிடித்து நோபல் பரிசு பெறும் ஒருவரை விட கலாம் போன்றவர்கள் ஆற்றிய பணி என்பது மனிதநோக்கில் ஒரு படி மேலானது என்றே நினைக்கிறேன். நவீன அறிவியலாளர்கள் பலர் நவீன கார்ப்பரேட் அரக்கர்களின் அடிமைகள் மட்டுமே என்பதை நாம் நினைவுகூரவேண்டும். நோபல் பரிசுபெற்றவர்கள்கூட. அவர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய துணைக்கோள் தொழில்நுட்பத்திற்காகவும், இந்திய செய்தித்தொடர்புத்துறை வளர்ச்சிக்காகவும் உழைத்த ஒருவர்தான் உண்மையான அறிவியலாளர். இன்று இந்தியா அடைந்துள்ள பொருளியல் வளர்ச்சிக்கு தனிநபர் என்ற அளவிலேயே கலாமின் பங்களிப்பு மிக அதிகம். அவரை விமர்சனம் செய்பவர்களுக்கு ஏதாவது அடிப்படைத் தகுதி உண்டா என்பதே நாம் முதலில் கேட்கவேண்டிய கேள்வி.

கலாம் மகத்தான ஆசிரியர். அவர் தலைமைப் பணியாற்றிய நிறுவனங்களிலேயே அவர் ஆசிரியர் போலத்தான் செயல்பட்டிருக்கிறார். அங்கே அவருடைய வகுப்புகளை பற்றி பெரும் பரவசத்துடன் அவருடன் பணியாற்றியவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். இறுதிவரை ஆசிரியர்ப்பணி மேல் பெரும் பற்றுடன் இருந்தார். இந்திய ஜனாதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபின்னரும், இறுதிக்கணம் வரை, அவர் மிகச்சாமானியமான ஆசிரியராகவே தன்னை வைத்துக்கொண்டார். 2007ல் எனக்கு விருது அளித்த நிகழ்வில் முன்னாள் குடியரசுத்தலைவரான அவர் தன் காரில் சென்று ஜெயகாந்தனை அவர் வீட்டில் இருந்து அழைத்து கொண்டு அரங்குக்கு வந்தார். ‘காரில் நிறைய இடமிருக்கிறது. நான் வரும்வழிதான்’ என்று அவர் அன்று சொன்னதை நான் வியப்புடன் நினைத்துக்கொள்கிறேன்.

எவரும் பொன்மொழி சொல்லலாம். ஆனால் வாழ்ந்த முன்னுதாரணங்கள், சாதனையாளர்கள் சொல்லும் பொன்மொழிகள் மட்டுமே மதிப்புக்குரியவை. அவை அவர்களின் செயல்திட்டத்தின், சிந்தனையின் வெளிப்பாடுகள். வாழவும் வெல்லவும் விழைபவர்களுக்கு அவை வழிகாட்டிகள். கலாம் பற்றி போலிப்பொன்மொழிகள் ஏராளமாக உள்ளன என நான் அறிவேன். ஆனால் அதுவும் அவர்மேல் கொண்டுள்ள மதிப்பின் வெளிப்பாடே. 

பொன்மொழிகளை பார்த்தால் ஒன்று தெரியும். ஓர் அறிஞர் அல்லது சாதனையாளர் தன் வாழ்க்கைபற்றியோ தன் கொள்கை பற்றியோ சொல்லும் வரிகளை அவர் திரும்பத் திரும்பச் சொல்ல நேரிடும். ஒரு கட்டத்தில் அவர் அதை சொல்லிக்கொண்டே இருப்பார். புதிது புதிதாகவும் விந்தையாகவும் சொல்வதற்கு அவர் இலக்கியவாதியோ கேளிக்கையாளரோ அல்ல. அவர் சொல்வது அவரது வாழ்க்கைத் தரிசனம். அவர் முழு வாழ்க்கை வழியாக அடைந்த ஒரு பார்வை. அது இறுதியில் ஒருவரியாக, ஒரு படிமமாகச் சுருங்கியிருக்கும். அதை அவர் சொல்லிக்கொண்டே இருப்பார். அது மானுடத்தை நோக்கி அவருடைய செய்தி. ஒரு பொன்மொழி புதிதாக, வேடிக்கையாக இருந்தால் அது நம்பத்தக்க பொன்மொழி அல்ல – அதற்கு மொழிசார்ந்த அலங்கார மதிப்பு மட்டுமே உள்ளது, அது உண்மைக்கு அணுக்கமானது அல்ல.

அந்த எளிய ஒற்றைவரியை, ஒற்றைப் படிமத்தை அவருடைய வாழ்க்கையென, அவருடைய சிந்தனை என பெருக்கிக்கொள்வதையே கொஞ்சமேனும் அடிப்படை அறிவுள்ளவர் செய்வார்கள். அந்த அடிப்படை அறிவு அற்றவர்கள்ஏன் இந்த வரியை நான் சொல்ல மாட்டேனா? இதை விட நன்றாகச் சொல்வேனேஎன யோசிப்பார்கள். அவர்களே அத்தகைய வரிகளைக் கேலி செய்கிறார்கள். அத்தகைய மூடர்கள் நிறைந்ததே நம் நாடு. சமூகவலைத்தளங்கள் மூடர்களின் ‘இன்குபேட்டர்கள்’.

இங்கே அறிஞர்களை, சாதனையாளர்களை நையாண்டி செய்யும் போக்கு மிகுதி. ஆனால் அதையெல்லாம் செய்பவர்கள் அரசியல்திருடர்களை, வெறுப்புவணிகர்களை, வெறும் கேளிக்கைநட்சத்திரங்களை, மதமூடத்தன்மையை முன்வைக்கும் பழமைவாதிகளை தங்கள்  ஆதர்சங்களாக முன்வைத்து உருகவும் செய்வார்கள். அதுவே அவர்களை அடையாளம் காட்டுவது.

அத்துடன் கலாம் பற்றிய ஒவ்வாமை உலக வணிகத்தொழில்நுட்பச் சூழலில் உண்டு. அது இயல்பு. ஏனென்றால் அவர் அவர்களை எதிர்த்து வென்றவர். அத்துடன் இன்னொன்றுமுண்டு, இந்திய உயர்நிலை அறிவியலாளர்களில் எந்த மேலைநாட்டு பல்கலைக்கழகங்களிலும் பயிலாமல், இந்தியக் கல்விமுறை வழியாகவே வந்தவர் கலாம். ஆகவே மேலைநாட்டு நிறுவனங்கள் கலாம்  மீதான ஒவ்வாமையை மேலையூடகங்களில் உருவாக்குகிறார்கள். அதை விமர்சனமின்றி விழுங்கிக் கக்குபவர்கள் நம்மிடையே உண்டு. 

எந்தச் சமூகம் சாதனைகளை அடையாளம் காண்கிறதோ, அதைச் செய்தவர்களை கொண்டாடுகிறதோ அச்சமூகமே வாழும், வெல்லும். கலாம் இளைஞர்கள் நடுவே கொண்டுசெல்லத்தக்க சமகால முன்னுதாரணம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கலாம் கீழ் பணியாற்றிய என் உறவினர் சொன்னார். 1980 வாக்கில் கலாம் திருவனந்தபுரத்தில் பணியாற்றியபோது அவர் பேசும் திட்டங்கள் எல்லாமே வெற்றுக்கனவுகள் என்றே தோன்றின. ஏனென்றால் இந்தியா அன்றிருந்த நிலை அப்படி. நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு போனில் அழைக்க இரண்டு மணிநேரம் காத்திருக்கவேண்டும். பத்து தேங்காய்களின் விலை ஆகும். ஒரு ஸ்கூட்டர் வாங்க பணம் கட்டிவிட்டு ஐந்தாண்டுகள் காத்திருக்கவேண்டும். ஆனால் இந்தியா தனக்கான துணைக்கோள்களை உருவாக்கிக்கொள்ள முடியும், விற்கக்கூட முடியும் என்பார். இந்திய இளைஞர்கள் கணிதத்திறன் கொண்டவர்கள் ஆகவே கணிப்பொறியாளர்களை உலகமெங்கும் அனுப்பமுடியும் என்பார். அன்று அவை அபத்தமான மிகைக் கற்பனைகள் என்றுதான் தோன்றின. அவர் அதிலிருந்த நல்வாய்ப்பை மட்டுமே பார்த்தார். எதிர்மறை அம்சங்களை தாண்டத்தக்க தடைகளாக எண்ணினார். அவருடைய நம்பிக்கைவாதமே வென்றது. அவர் அவற்றை நம்பிச் சொன்னமையால் அவை செயலூக்கத்தையும் தூண்டின.

அவர் தன்னைச் சார்ந்தவர்களிடம் பெரும் கனவுகளை தூண்டிக்கொண்டே இருந்தவர். அவர் மாபெரும் நிர்வாகி- ஆனால் எவரையும் கடிந்துபேசாமல் தண்டிக்காமல் அதைச் சாதித்தார். தொடர்ச்சியாக கனவுகளை முன்வைத்து, அவற்றைக்கொண்டு மனிதர்களை அவர் தொகுத்தார். அது எத்தனைபெரிய சாதனை என இன்றைய நவீனயுகத்து நிர்வாகிகளை அறிந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அக்கனவுகள் நனவாவதைக் கண்ணால் காணவும் அவரால் இயன்றது. ஆகவேதான் அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். ‘கனவுகாணுங்கள்என்று. அச்சொல்லை உணரவும் ஒரு அறிவுநிலை, உணர்வுநிலை தேவை.

ஜெ

முந்தைய கட்டுரைகால்டுவெல்
அடுத்த கட்டுரைOn Colour