அமெரிக்கா: கனவுகள், திட்டங்கள்…
அன்புள்ள ஜெ,
வணக்கம். என்றும் உங்கள், அக்கா நலம் விழைய ஆவல்.இந்த வருடம் அலுவலக சூழ்நிலை காரணமாக தத்துவ முகாமில் மட்டும் கலந்து கொண்டேன்.
அலுவலகத்துக்கு பக்கம் என்பதால், உங்களையும், அக்காவையும், விசு, பிரமோதினியை வரவேற்க வெள்ளி மாலை விமான நிலையம் வந்தேன். மிகத் தாமதமாக வந்துவிட்டோமோ என்று நினைத்தேன். நான் வந்து சேர்ந்த பத்து, பதினைந்து நிமிடங்களில், நீங்கள் அனைவரும் வந்து சேர சரியாக இருந்தது. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாமென்று கீழே குனிவதற்குள் கட்டி அணைத்துக் கொண்டீர்கள். ராஜன் குடும்பமும் கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
கலிபோர்னியா பயணம் எப்படி இருந்தது என்று கேட்டேன். பயணம் பயணம் மாதிரி இருந்ததென்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னீர்கள். அடுத்த தடவை கேட்கக்கூடாத கேள்வியிது அல்லது வேறு மாதிரி கேட்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.
அடுத்த இரு நாட்களும் உங்களுடன் நேரம் செலவிட முடிந்தது மிகவும் சந்தோசம். இலக்கிய முகாமில் கலந்து கொள்ள முடியாமை குறித்த கவலையில் இருந்த எனக்கு இந்த இரு நாட்கள் ஆறுதலாக இருந்தது. ராஜன், சௌந்தர் அண்ணா, ராதா, ரெமிதா, சஹா, விசு, பிரமோதினி, ஜெகதீஷ், அனு, நான் என்று நம் சிறு குழு ஜெய்ப்பூர் இலக்கிய நிகழ்வுக்குச் சென்றது என்றும் நல்நினைவுகளில் இருக்கும். வாசகர் வட்ட நண்பர் பாலாவும், அவர் மகளும் உங்களைச் சந்திக்க வந்திருந்தனர். சசிதரூர் உரை நன்றாகயிருந்தது. இலக்கியம், அரசியல் இரண்டு ஆளுமைகளும் அவர் உரையில் நன்றாக பிரதிபலித்தது. குழுவாக வந்தவர்களில் நம் குழு மட்டும்தான் பெரியது. ஷோபா டே வாசர்கள் கொண்டு வந்த அவருடைய புத்தகங்களுக்கு கையெழுத்து போட்டுக் கொண்டே நம் குழுவைக் சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்தார். விழா முடிந்து வெளியரங்கில் நடனமாட பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தவுடன் ஷோபா டே முதல் ஆளாக நடனமாடத் தயாராகயிருந்தார். இயல்பான, நட்பான நல்ல ஆளுமையவர்.
அந்த விழா முடிந்து இரவுணவு எல்லோரும் சேர்ந்து உண்டது எல்லாம் நல்ல அனுபவம். கிடைக்கும் நேரமெல்லாம் நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். கேட்க கூர்மையாக செவிகளையும், மனதையும் திறந்து வைத்திருத்தல் போதும். பத்து, பதினைந்து நிமிடங்கள் நான் தொடர்ந்து பேசினாலே நாக்கு வறண்டுவிடுகிறது. நண்பர்களுடன் உங்கள் உரையாடலை பதிவு செய்து வைத்தால் வெண்முரசை விட பெரும்தொகுப்பாகயிருக்கும்.
முகாமுக்கு கிளம்பும் அன்று ரெமிதா வீட்டில் அனைவருக்கும் அருமையான மதிய உணவு. விவேக், வர்ஷா, விபி, சிஜோ, மது, அவர் நண்பர், சசி, என் மனைவி மாரியும் சேர்ந்துகொண்டனர். சிறு இலக்கிய முகாம் மாதிரியிருந்தது. குறைந்த கார்ப் உணவு முறையை பின்பற்றுவதால், மிகவும் கவனமாக இருக்கவேண்டியிருந்தது.
ஞாயிறு மாலை எல்லோரும் முகாமுக்கு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் சில இன்னல்கள் தவிர, தங்குமிடம் சென்ற இரண்டு வருடங்களைவிட மிகவும் அருமையாகியிருந்தது.
கவனத்திலின் அவசியம் பற்றி ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட வாட்ஸப் குழுமத்தில் முழுமையறிவு காணொளி பகிர்ந்து இருந்ததால், மிகத் தீவிரமான மனநிலையில் தத்துவ வகுப்புகள் நடைபெற்றன. வகுப்பு ஆரம்பத்தில் கற்றலின் பிழைகள், கவனித்தலின் அவசியம் பற்றி அவசியம் பற்றி அறிவுறுத்தல்களின் படி ஆரம்பித்தது.
தத்துவத்தில் மனதில் சூட்டுக்கோலால் இருத்திக்கொள்ள வேண்டிய சொற்களை பற்றிய அறிமுகத்துடன் வகுப்பு ஆரம்பித்தது. ரிக் வேதத்தில் காயத்திரி மந்திரத்தை ஒலியாக இசைக்கவிட்டு, அதன் பொருளை நீங்கள் விளக்கிய அனுபவம் வகுப்பில் ஆழந்த அமைதி கலந்த பிரமிப்பு.
ஐரோப்ப அறிஞர்கள் நம் இந்து மரப்புக்கு ஆற்றிய பங்களிப்பை விளக்கிச் சொன்னீர்கள். முதல்நாள் கடைசி அமர்வில் சிருஷ்டி கீதத்தை நீங்கள் விளக்கியது என் அகவுணர்ச்சியை நன்றாகவே உணர முடிந்ததது.
இரண்டாம் நாளில் முதல் வகுப்பில் சொன்ன விஷயங்களை வரலாற்று பார்வையில் விளக்கியது மனதில் ஆழமாக இருத்திக் கொள்ள உதவியது.
இந்து மதம் இயற்கையாக உருவாகி வந்ததை கேட்க ஆச்சரியமாக, மகிழ்ச்சியாக இருந்தது. கேரள ஆதி குடித் தலைவனின் வேண்டுதலில் சொல்லப்படுவதும் அதே பொருளில் ரிக் வேத பாடல் பொருளும் ஒன்றாக இருப்பதை ஆய்வாளர் நேரடி சந்திப்பிலிருந்து குறிப்பு எழுதியது மெய்சிலிர்க்கும் உணர்வு.
மதத் தளங்களுக்கு நீங்கள் சென்று வந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டது மிகவும் உதவியாக எல்லோருக்கும் இருக்கும். அடுத்த தடவை இந்தியா வரும்போது ஒரு சில தளங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும்.
எவ்வளவு பெரிய பரம்பரை, கலாச்சார பின்னணியில் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைக்க மிகவும் பிரமிப்பாக இருந்தது. வெவ்வேறு காலகட்டங்களில் எவ்வாறு தத்துவச் சிந்தனை வளர்ந்து வந்திருக்கிறது என்பது நாம் அனைவரும் அறியவேண்டிய முக்கிய விஷயங்கள்.
“அறிவு சுற்றம் என்பது நாமே தேடி கொள்வது; இந்த வகுப்பில் கலந்து கொண்டதன் மூலம் நாராயண குருவில் தொடங்கும் ஒரு குரு மரபின் மாணவன் என நீங்கள் உணரலாம்; இன்னும் பின் சென்று பார்த்தால் சங்கரரும் பாதராயனரும் கூட எனது ஆசிரியர்களே என்று எண்ணலாம்” இந்த வார்த்தைகள் பொறுப்பும், பெருமையும் கலந்த அகவுணர்ச்சிகள் எங்களுக்கு. குரு நித்திய சைதன்ய நிதியிடம் நீங்கள் கற்றுக் கொண்டவை இன்று, உங்கள் மூலம் நாங்கள் கற்றுக்கொள்வது மிகவும் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. இது ஆதி சங்கரரிலிலுருந்து வரும் ஒரு தொடர் குருகுல பயிலும் முறை.
முதல் நாள் வகுப்பு மாதிரி இரண்டாம் நாள் வகுப்பு முடிய இரவு வெகுநேரம் ஆகிவிடு மென்று நினைத்தோம். ஆனால் மாலை 5 மணி அளவுக்கே முடிந்து விட்டது. குழுவாகவும், தனித்தனியாகவும் உங்களோடும், அக்காவுடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். காளி(?) நீயுமா கிளம்புகிறாய் என்று கேட்டுவிட்டு என் கைகளை இறுக்கப்பற்றிக்கொண்டீர்கள்.
மெய்யான மிக உயர்ந்த அறிவுத் தேடலில் ஈடுபடும் நாம் சின்னச் சின்ன அற்ப விஷயங்களில் நேரம் செலவிடுவது கூடாது என்று அறிவுறுத்தினீர்கள்.
வரந்தருபவனாகிய சூரியனே
இருளை அகற்றுக!
உன் ஒளியால்
என் புலன்களை நிரப்புக!
மகத்தான சிந்தனைகள்
என்னில் எழுவதாக!
என்றும் அன்புடன்
முத்து காளிமுத்து