இந்த அமெரிக்கப்பயணத்தின்போது வாஷிங்டனின் ACADEMIES OF LOUDOUN என்னும் அறிவியல் பள்ளியில் ஓர் உரையாற்றவேண்டும் என்ற கோரிக்கை வந்தது. அப்போது நான் யோசிக்காத மனநிலையில் இருந்தேன். நிறைய நிகழ்வுகள், எழுதிமுடிக்க வேண்டிய சினிமாப் பணிகள், வகுப்புகள், கூடவே பயணங்கள். எல்லாம் முடித்து அமெரிக்கா கிளம்பவேண்டியிருந்தது. ஆகவே எனக்காக அருண்மொழியே நிகழ்வை ஒப்புக்கொண்டாள். ஆனால் நிதானமடைந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறியபோதுதான் நெஞ்சில் அறைந்தது – ஆங்கிலத்தில் பேசவேண்டும். அதுவும் அமெரிக்கக் குழந்தைகள் முன்.
என்னால் ஆங்கிலத்தில் பேசமுடியும்தான், பல ஆண்டுகளாக ஆங்கிலத்தில் வாசிக்கிறேன். உண்மையில் தத்துவார்த்தமான விஷயங்களை ஆங்கிலத்திலேயே யோசிக்கவும் செய்கிறேன். இப்போது தினமும் கொஞ்சமாக ஆங்கிலத்தில் எழுதுகிறேன். ஏற்கனவே ராலே நூலகத்திலும், கலிஃபோர்னியா ஃபால்ஸம் நூலகத்திலும் இரு உரையாடல்களில் அமெரிக்கர் பேட்டி எடுக்க ஆங்கிலத்தில் உரையாடியுமிருக்கிறேன். ஆனால் அமெரிக்க ஆங்கிலம் மட்டுமே பேசும் மாணவர்கள் அடங்கிய அரங்கில் ஆங்கில உரை என்பது கொஞ்சம் சிக்கல்தான்.
பதற்றமாகவே இருந்தது. ஆனால் மேற்கொண்டு யோசித்தால் பதற்றம் கூடும். ஆகவே அப்படியே கடந்துவிட்டேன். அதை எண்ணியே பார்க்கவில்லை. மெல்ல மெல்ல பிற நிகழ்வுகள் முடிந்தன. இங்கே மூன்றுநாட்களுக்கு ஓர் ஊர். எல்லா ஊரிலும் நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்வுகள். தொடர் உரையாடல். பயணம் முடிய முடிய பேசவேண்டிய நாள் நெருங்கியது. ஆஸ்டின் சௌந்தர் அந்நிகழ்வு எப்படி நிகழும் என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டே இருந்தார். அப்பள்ளி பற்றிச் சொல்லிக்கொண்டுமிருந்தார்.
வாஷிங்டனின் ACADEMIES OF LOUDOUN அரசு நடத்தும் அறிவியல் பயில்வதற்கான ஒரு சிறப்புப் பள்ளி. அங்கே நம் கணக்கில் பிளஸ்டூ வரையிலான மாணவர்கள் பயில்கிறார்கள். பிற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தனித்தேர்வு எழுதி வென்றுதான் அங்கே சேர முடியும். ஆசிரியர்கள் உண்டு. கூடவே வெவ்வேறு அறிவியல்துறைகளில் பணியாற்றும் நிபுணர்கள் தனி ஆசிரியர்களாக வருகிறார்கள். அங்கே படித்து முடிப்பதே வெவ்வேறு அறிவியல் களங்களில் பணியாற்றுவதற்கான தகுதியை அளிக்கிறது. மருத்துவம் உட்பட உயர் அறிவியல் கல்விக்கான வாய்ப்பையும் அளிக்கிறது. ஆகவே போட்டி மிக அதிகம்.
நான் இளம் அறிவியலாளர்களிடம் உரையாடவேண்டும். அங்கே ஆசிரியராகப் பணியாற்றும் ஸ்வர்ணா தலைப்பை அளித்திருந்தார். அறிவியலுக்கு இலக்கியம் எதற்காக? நான் அதை தத்துவமும் என்று கொஞ்சம் விரிவாக்கிக்கொண்டேன். ஆனால் மேற்கொண்டு யோசிக்காமல் முற்றிலும் அதை மறந்து மகிழ்ச்சியாக இருந்தேன். சௌந்தர் அந்த பள்ளியில் பேச வாய்ப்பென்பதே அரிதானது என சொல்லிக்கொண்டே இருந்தார். நான் அவர் மின்னஞ்சலை அரைநிமிடத்தில் படித்து கடந்துகொண்டிருந்தேன்.
அக்டோபர் 21 காலை 11 மணிக்கு நிகழ்வு. 20 காலை நியூ ஜெர்ஸியில் இருந்து நானும் அருணாவும் பழனிஜோதியும், மகேஸ்வரியும் அவரது டெஸ்லா காரில் கிளம்பினோம். டெஸ்லா ஒரு விந்தையான கார். அதற்கும் சொந்தமான சிந்தனைகள் உண்டு. அதுவே சாலையை மாற்றிக்கொள்ளும். எல்லா முடிவையும் அதையும் கேட்டுத்தான் எடுக்கவேண்டும். மாலையில் ஸ்வர்ணா, ரவி இணையரின் இல்லம் வந்தோம். மாலையுணவு நிர்மல் இல்லத்தில். அங்கே ஒரு சிறு சந்திப்பும் உரையாடலும். பத்து நண்பர்கள் வந்திருந்தனர்.
மறுநாள் உரைக்காகத் தயாரிக்கவேண்டும். ஆனால் களைப்பில் ஒரு சொல்கூட மண்டையில் எழவில்லை. கொஞ்சம் மூக்கடைப்பும் இருந்தது. அதற்கு மூக்கில் ஒரு சொட்டுமருந்து விட்டுக்கொண்டதனால் தூக்கக் கலக்கம் வேறு. அருண்மொழிக்கும் தலைவலி. ஆகவே அப்படியே படுத்து தூங்கிவிட்டேன். ஆனால் நல்ல தூக்கம் இல்லை. அரைவிழிப்பு. கனவில் சைதன்யா வந்து ‘அப்பா சொதப்பீராதே’ என்று எச்சரித்தாள். கனவில் சைதன்யா வர ஆரம்பித்தால் ஊர் நினைவு வந்துவிட்டது என்று பொருள்.
காலையில் எழுந்து உரையின் தொடக்கத்தை மட்டும் எழுதிக்கொண்டேன். தொடக்கம் எழுதப்பட்டதுமே ஒரு நிறைவு வந்தது. மேற்கொண்டு என்ன என்று மனதில் ஏதும் எழவில்லை. ஆனால் சமாளிப்போம் என்ற தைரியம் வந்துவிட்டது. நிகழ்வுக்கு நான் கோட்டு போடவேண்டும் என உடை ஒழுங்கு. டை வேண்டியதில்லை. வேடம் முழுமை அடைந்து என்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் பேசத்தக்க ஓர் உருவம் போலத்தான் தெரிந்தது.
லௌட்டன் பள்ளி நம் பார்வைக்கு ஒரு பள்ளி என்று தோன்றாது. முதல்விஷயம், வெளியே ஒரு மாணவர் கூட தென்படவில்லை. அமைதியான ஓர் உயர்தொழில்நுட்ப மையம் போல இருந்தது. கடுமையான காவல் – துப்பாக்கி ஏந்திய வீரர். உள்ளே செல்ல மிகக்கடுமையான சோதனைகள். அடையாள அட்டை, அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. இத்தகைய பள்ளிகளில் துப்பாக்கித் தாக்குதல்களை மிக அஞ்சுகிறார்கள்.
பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்று முகமன் உரைத்தனர். பள்ளியின் நூலகத்தைச் சுற்றிப்பார்த்து ஒரு காபியும் குடித்தோம். ஆச்சரியமாக, எனக்கு எவ்வகையிலும் படபடப்பாக இல்லை. என்னுள் எந்த சிந்தனையும் இல்லை. உரைநிகழ்த்தவேண்டும் என்பதே உள்ளத்தில் எழவில்லை. ஆசிரியை பிரான்ஸெஸ் (Frances Roberts) நூலகத்தைச் சுற்றிக்காட்டினார். பிரான்ஸெஸ் என்னுடைய நூலை வாசித்திருந்தார். நிகழ்வுக்கான முதன்மைக் காரணம் அக்கல்லூரியில் பயிலும் பிரணவ் ரவிக்குமார் என்னும் மாணவர். அவர்தான் என்னை அறிமுகம் செய்து உரையாற்றியவர். என்னைப் பற்றி அவர்களின் இதழில் ஒரு நல்ல குறிப்பும் எழுதியுள்ளார்.
எந்த அமெரிக்கக் கல்விநிலையத்தையும் போலவே பல்லினக் குழந்தைகளின் தொகுப்பாக இருந்தது அந்நிறுவனமும். சுதந்திரம் என்பது அமெரிக்கக் கல்விநிலையங்களின் அடிப்படை இயல்பு. பேசிக்கொண்டும், காபி குடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இளைஞர்களாகிக் கொண்டிருக்கும் சிறுவர்களும் சிறுமியரும். ஆனால் அமெரிக்காவில் சிறுவர்களின் வளர்த்தி அதிகம். சீருடை இல்லை. ஆகவே எல்லா அமெரிக்க இளைஞர்களுக்கும் உரிய அக்கறையின்மையை காட்டும் மோஸ்தர் உடைகள்.
பிரான்ஸெஸ் எனக்கு ஒரு சுருக்கமான அறிமுகத்தை அளித்தார். அதன்பின் அப்பள்ளி பிரணவ் என்னைப் பற்றி பேசினார். பேசுவதற்காக எழுந்து நின்றேன். படபடப்பெல்லாம் இல்லை என்பதை நானே எண்ணி வியந்தேன். என் முன் அமர்ந்திருந்த முகங்கள் என் உள்ளத்தை மலரச் செய்தன. மானுடத்தின் எல்லா இனங்களும் அங்கிருந்தன. ஆர்வம் கொண்ட, உற்சாகமான முகங்கள். அத்தனை முகங்களுமே அறிவின் பிரகாசம் கொண்டவை. என் மலர்வு முகத்திலும் தெரிந்திருக்கலாம். சிரித்தபடித்தான் பேச்சை ஆரம்பித்தேன். ராபின்ஸன் ஜெஃபர்ஸின் ஒருவரியில் இருந்தே என் தொடக்கம். I am really alien here: trust me not. எனக்குப் பிடித்த கவிதை வரி அது. “என்னை நம்பாதீர்கள், என் சொற்களைக் கவனியுங்கள்” என தொடங்கினேன்.
அரைமணிநேரம் உரையாற்றினேன். பேசப்பேச என் மொழி இயல்பாகவும், கூர்மையாகவும் அமைந்தது. அக்கணம் நான் எந்த மொழியில் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று என்னால் உணரமுடியவில்லை. என் உரை வழக்கமாக நான் ஆற்றும் உரைகளைப்போல தன்னியல்பான ஒருமை கொண்டிருந்தது என்று தோன்றியது. படிமங்களில் யோசிப்பது என் வழக்கம். அவ்வாறே அவ்வுரையும் அமைந்தது.
நான் உரையை முன்னரே தயாரித்துக்கொள்ளாமைக்குக் காரணம் உரையைக் கேட்பவர்கள் எவர் என்று தெரியவில்லை என்பதே. மாணவர்களைக் கண்டதும் உரை இயல்பாகவே தீவிரமாகியது. தத்துவம் இலக்கியம் ஆகியவை நவீன அறிவியலுடன் கொண்டுள்ள உறவு, அதில் வெவ்வேறு சமகால அறிஞர்கள் கொண்டுள்ள நிலைபாடுகள் ஆகியவற்றின் வழியாகப் பேசிச் சென்றேன். அதன் தொகுப்பாக இந்திய தத்துவ மரபு முன்வைக்கும் பார்வை. ஆம், நேராக பகவத் கீதைக்குச் சென்று முடித்தேன்.
என் உரை பற்றி உரைக்குப்பின் நான் அடைந்த புரிதல் இது. என் உச்சரிப்பு இந்தியத்தன்மைகொண்டது என்பதனால் நான் சீராக, மெதுவாகப் பேசவேண்டும் என முடிவெடுத்தேன். ஆனால் அப்படிப் பேசும்போது இயல்பான விஷயங்களைப் பேசினால் அது சலிப்பூட்டும். ஆகவே மிகத்தீவிரமாகப் பேசினேன். சொற்றொடர்களை எல்லாம் தத்துவ வரையறைபோலவே அமைத்துக்கொண்டேன். அது பேச்சுக்குக் கனம் சேர்த்தது – தீவிரமான உரை மெதுவாக செல்லலாம்.
தத்துவத் தளத்தில் நிகழ்த்தப்படும் நுண்ணிய உரை ஒரு நல்ல இசைநிகழ்வுபோல, கவிதைபோல, உணர்வுச்சம் கொண்ட நாடகம்போல, மெல்லமெல்ல ஆகவேண்டும். என் உரை அவ்வாறு ஆயிற்று என்பது என் உளப்பதிவாக இருந்தது. அவ்வண்ணம் நிகழ்ந்தமைக்கு முதன்மைக்காரணம் அந்த அரங்கில் இருந்த மாணவர்கள். அவர்களின் உணர்ச்சிகரமான கண்கள் என்னை ஏற்றுவாங்கிக் கொண்டே இருந்தமை. மிகமென்மையான நகைச்சுவைக்கே புன்னகைகள் எழுந்தன. முக்கியமாக என் இந்திய உச்சரிப்பு அவர்களுக்கு தடையாக இருக்கவில்லை. அமெரிக்காவில் அப்படி இன்னொரு வகையான உச்சரிப்பை கேட்கப் பழகியிருக்கிறார்கள். அதை இயல்பாக ஏற்கிறார்கள். உண்மையில் அவர்களின் உச்சரிப்பை நாம் நகல்செய்ய முயன்றால்தான் கேலிப்பொருளாக ஆகிவிடுவோம்.
என் உரை நவீன அறிவியக்க அடிப்படை தெரிந்தவர்களிடம் மட்டுமே சென்றுசேரத்தக்கது.அத்தகைய ஒர் உரையை இன்று இந்தியாவில் எந்தக் கல்விநிலையத்திலும், நிகழ்த்த முடியாதென்பதே என் அனுபவம். உயர்கல்வி நிலையங்களில்கூட. இங்கே மாணவர்கள் மிக ஒழுங்காக அமர்ந்து கேட்பார்கள். அமெரிக்க மாணவர்களிடம் அந்த ‘பணிவு’ இல்லை. ஆனால் தன்னியல்பான ஆர்வம் உண்டு. இந்தியாவில் இல்லாமலிருப்பது முதலில் அந்த அறிவார்ந்த ஆர்வம்தான். ஆர்வமுள்ள மிகச்சிலருக்குக் கூட தத்துவம், அறிவுத்துறைகள் சார்ந்த அடிப்படை அறிவு இருப்பதில்லை. கல்விநிலையங்கள் அவற்றை அளிப்பதில்லை. மாணவர்களிடம் எந்தவகையிலும் வாசிப்புப் பழக்கம் என்பதே இல்லை. ஆகவே ஒருவகையான தொழில்நுட்பப் பாமரர்களாகவே நம் மாணவர்கள் இருக்கிறார்கள். நான் இங்குள்ள கல்விநிலையங்களை அஞ்சுவதும் தவிர்ப்பதும் அதனாலேயே. எழுந்து நின்றதுமே, முகங்களைப் பார்த்ததுமே, மொத்த ஊக்கமும் அணைந்துவிடுகிறது. எனக்கு நல்ல அரங்கு இல்லையென்றால் பேச்சே வருவதில்லை.
உரைமுடிந்தபின் மாணவர்கள் வந்து தனித்தனியாக அவர்களுக்கு உரை மிகப்பிடித்திருந்ததைச் சொன்னார்கள். ஓர் ஆசிரியை ‘நெகிழ்ந்து கண்கலங்கிவிட்டேன்’ என்றார். ‘மிகப்பெரிய தொடக்கம்’ என்றும் ‘முற்றிலும் புதிய பார்வை’ என்றும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். வழக்கமான சம்பிரதாயச் சொல் ஒன்றுகூட இல்லை. அதற்குக் காரணம் நான் வெறுமே தத்துவக் கொள்கைகளைச் சொல்லவில்லை. தரவுகளையும் சொல்லவில்லை. நான் என்ன எண்ணுகிறேனோ அது இயல்பாக வெளிப்பட்டது. அத்துடன் என் உரை நீண்ட மரபுள்ள இந்தியச் சிந்தனைமுறையில் இருந்து எழுந்த நவீனச்சிந்தனையும்கூட. ஆகவே அரங்கில் இருந்த இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு பெருமிதம் இருப்பதை என்னிடம் வந்து சொல்லிச் சென்றனர்.
உணவுக்குப் பின் திருமதி ஃப்ரான்ஸெஸ் என்னை ஓர் வானொலிப் பேட்டி எடுத்தார். என் உரை பதிவுசெய்யப்பட்டு அப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அளிக்கப்படும், அதன் எழுத்துவடிவமும் அளிக்கப்படும் என்றார்கள். வானொலிப்பேட்டி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அளிக்கப்படும். வானொலிப் பேட்டியில் என் அம்மாவைப் பற்றிச் சொன்னேன். அவர்களின் கனவிலிருந்து நான் எப்படி உருவானேன் என்று. பதினான்காயிரம் கிலோமீட்டர்களுக்கு இப்பால், இந்த அன்னிய நிலத்தில் காளிவிளாகத்துவிட்டு விசாலாட்சியம்மாவின் பெயரைச் சொல்லியிருக்கிறேன். அது ஒரு கடன்திருப்பும் செயல். இப்பிறவி முழுக்க நான் செய்துகொண்டே இருக்கவேண்டிய ஒன்று.