சுசித்ரா உரையாடல் – கடிதம்

ஜெ,

இன்று சுசித்ரா உடன் சந்திப்பு மிகச் சிறப்பாக நடந்தது. சுமார் 30 பேருக்கு மேல் வந்திருந்தனர், இடத்தை மாற்றி விட்டோம். மரு. கோவிந்தசாமி உதவினார். “மொழியாக்கமும் படைப்பாக்கமும்என்கிற தலைப்பில் ஒரு 45 நிமி செறிவான உரையை வழங்கினார்.

படைப்பாக்கம் என்பதே இயற்கையை மொழியாக்குதல் தான் என துவங்கி கீசகன் உயிர் விடும் போது மெல்ல மெல்ல அடங்கும் மூச்சையும் நாடியையும் அதைச் சொல்லும் ஒரு கதகளிக் கலைஞர் தன் விரல் ஓடுக்கத்திலும், ஒரு செண்டைக் கலைஞர் தன் தாள ஒடுக்கத்திலும் எப்படி அதை தன் கலையாக்குகிறாரோ அவ்வாறு தான் ஒரு மொழியாக்கம் செய்பவர் ஒரு பிரதியை தன் படைப்பாக்குகிறார் என்பது போன்ற அபாரமான உருவகங்கள் வழி சென்றுபிழைஎன்பது ஒரு படைப்பம்சம் தான் என முடித்தார். சீராக பிரித்து அடுக்கப்பட்ட உரை.

Translation என்பதில் டிரான்ஸ் என்பதே ஒரு இடை நிலைதான் ஆகவே அது ஒரு திருநங்கை போல தனி பிறவியாக தனி படைப்பாகத் தான் கொள்ள வேண்டும், தான் செய்வது மொழிபெயர்ப்பல்ல மொழியாக்கம் தான் எனக் கூறிய இடம் ஒரு உச்சம். இது போன்ற ஒரு அடர்த்தியான உரை மிக அரிது, அது இன்று ஈரோட்டில் நிகழ்ந்தது.

கேள்வி பதில் நிகழ்ச்சி ஒரு மணி நேரம். ஒரு அசல் படைப்பாளி ஒரு பெரும் படைப்பை மொழியாக்குவதால் பாதிப்புக்கு உள்ளாவார் ஆனால் தன் படைப்பு வெளிப்பாட்டில் எவ்வாறு அதை மறைக்கிறார் என்பதும் அவர் கலைதான் என்பது போன்ற தனி நோக்குள்ள பதில்களை வழங்கினார்.

தனி உரையாடலில் ஏழாம் உலகத்தில்.குறை பிறவியான முத்தம்மையை காவடி போல தூக்கிக் கொண்டு கோயில் படி ஏறும் காட்சியை மொழியாக்கம் செய்யும் போதுகாவடிஎனும் சொல்லை ஆங்கிலத்தில் விளக்கப் போக அச் செயல் எவ்வாறு ஒரு தெய்வாம்சம் கொண்டதாக முதல்முறை பொருள்படத் துவங்கியது எனக் கூறிய அனுபவம் அபாரம்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு நொடியும் மின்சாரம் பாய்ந்த மாலை. ஈரோடு விஷ்ணுபுரம் அமைப்புக்கு ஒரு புதிய துவக்கம், சுசித்திராவுக்கு நன்றி.

கிருஷ்ணன், ஈரோடு.

அன்புள்ள கிருஷ்ணன்,

சுசித்ராவின் அண்மைய பேட்டியும் (Suchitra Ramachandran – “Nobility and evil don’t come in segregated packs”) அற்புதமான ஒன்று. அவர் தனக்கென அகப்பயணம் கொண்டவர், கண்டடைதல்கள் கொண்டவர் என்பதற்கான சான்று அது.

தமிழின் குரலாக உலகம் நோக்கிப் பேசும் தகுதிகொண்ட சிலரில் ஒருவர். (இன்று அவ்வாறு நான் எண்ணும் எல்லாருமே பெண்கள் என்பதும் ஆச்சரியமளிக்கிறது)

ஜெ

முந்தைய கட்டுரைஊக்கத்தின் செயல்திட்டம்
அடுத்த கட்டுரைஎழுத்தாளன் (இதழ்)