இரு கடல், ஒரு நிலம் – அருண்மொழி நங்கை

Buy Hardcopy

Buy Ebook

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது முதன்முதலாக என் மாமா ஒரு விலையுயர்ந்த பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தார். அதில் அழகிய இமய மலை பல அடுக்குகளாக விரிந்து விரிந்து இருந்தது. என் கண்ணை நிறைத்து பின் கனவுகளையும் வெகுநாள் நிறைத்து இருந்தது அக்காட்சி. தஞ்சையில் மலைகளையே பார்த்திராத ஒரு குழந்தைக்கு அது கொடுக்கும் அனுபவமே வேறு. வெகுநாள் என் சேகரிப்பில் இருந்த அந்த வாழ்த்து அட்டையை பிறகு சுவரில் ஒட்டி வைத்தேன். காலை எழுந்ததும் முதல்வேலையாக ஓடி அதைப் பார்ப்பேன். ஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் அதன்முன் அமர்ந்திருப்பேன். மெல்ல அப்படம் என்னுள் விரிந்து இமயத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்ததெல்லாம் வெகு காலம் கழித்துத்தான். எனக்கு அப்போது அந்தப் படமே போதுமானதாக இருந்திருக்கிறது. மாய எதார்த்த உலகையே யதார்த்த உலகாக நினைக்கும் அந்தக் குழந்தைக்கு அந்த இடத்தில் வாழ்ந்துவிட்டு வருவது எளிதாக இருந்தது

என் கல்லூரியின் கடைசி வருட சுற்றுலாவின் போது தான் இமய மலையை நான் நேரில் பார்த்தேன். காசியிலிருந்து டேராடூனுக்கு போய்க் கொண்டிருந்தோம். எங்கள் சுற்றுலா பேருந்து மெல்ல சென்று கொண்டிருந்தது. இருள்பிரிகிற அதிகாலை. சிரமப்பட்டு முக்கி முனகி ஏறுகிற முதியவர் போல பேருந்தின் வேகக் குறைவும் எஞ்சினின் உறுமல் ஒலியின் மாற்றத்திலும் தான் கண்விழித்தேன். பேருந்தில் எல்லோரும் நல்ல உறக்கம். தூக்கக் கலக்கத்துடன் பேருந்தின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். ஒரு கணம் என் சொல், சிந்தனை, மூச்சு எல்லாம் நின்றது போலத் தோன்றியது. ஆம், இமயம் பல அடுக்குகளாக விரிந்து என் முன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.   வாழ்த்து அட்டை அப்படியே அலாவூதீனின் அற்புதவிளக்கால் நிஜமாக கண்முன் வந்து நின்றது. அக்காட்சியை கண் நிறைத்து கண்டுகொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் கண்ணீர் பெருகி, பெருகி கொட்டிக்கொண்டிருந்தது. அது ஒரு உக்கிரமான அனுபவம். காட்சி படிமமாக என்னுள் அதுவரை இருந்த இமயம் உண்மையான விஸ்வரூபமாக தன்னை காட்டிக் கொண்டிருந்தது. அப்போது நான் அதன் ஒரு பகுதியாக மாறியிருந்தேன். அதில் வாழ்ந்துகொண்டிருந்தேன்

 

பயணம்  நமக்கு தருவது இதைத்தான்உலகியல் விஷயங்களுக்காக செய்யப்படும் பயணத்தை நான் குறிப்பிடவில்லை. பயணம் மட்டுமேயான பயணம். முதன்மையாக அது தருவது மகிழ்ச்சியையா? புது அனுபவங்களையா? காட்சி இன்பங்களையா? இயற்கை நுகர்வையா? இவை எல்லாவற்றையும் தான்.

மனிதனின் அகம் கால இட உணர்வால் பிணைக்கப்பட்டது. பயணம் அகத்தை அவ்வுணர்விலிருந்து சிறிது விடுவிக்கிறது. நாம் ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சியை, எடையின்மையை உணர்வது அதனால்தான்

பயணத்தின் தூரமும் காலமும் அதிகமானால் நம் மனநிலையில், பிரக்ஞையில்  குறிப்படத்தகுந்த மாற்றத்தை நிகழ்த்துகிறதுநாம் அதிகம் அறியாத ஒரு தேசத்தில்,   நிலப்பரப்பில்  போகும் ஒரு பயணம் நம் அகத்தின் ,பிரக்ஞையின் திசைகாட்டி முள்ளில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. நமது ஆளுமையில் ஒரு விரும்பத்தகுந்த  மாற்றம் நிகழ்ந்திருப்பதை நாம் கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

பொதுவாக எனது வாழிடம் சாரதா நகர், பார்வதிபுரம் நாகர்கோவில் பிறகு நான் அடிக்கடி சுற்றும் என் கன்யாகுமரி மாவட்டம், திருவாரூர், தஞ்சை, சென்னை, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, திருவனந்தபுரம் இவைதான். என் புற உலகம் என்பது எத்தனை விரித்தாலும் இவ்வளவுதான்அடுத்து நான் பயணம் செய்த தென்னிந்தியா, வட இந்தியா என மெல்ல விரித்துக் கொள்ள முடிந்தது. பின்னர் எனக்கு கிடைத்த ஐரோப்பிய, அமெரிக்க பயணங்களால் என் புற உலகம் மேலும் பரந்து விரிந்தது. புற உலகம் விரிவதென்பது நம் அக உலகம் விரிவதுதான். நமது சிறிய அகத்தை இத்தனை நிலப் பகுதிகளுக்குமாக விரிக்கிறோம். இப்போது நான் சென்ற அமெரிக்காவின் அப்பகுதி எனது அமெரிக்காவாக மாறிவிடுகிறது. அந்த அனுபவமே பயணத்தின் பயன்மதிப்பென்பதாகும்.

அமெரிக்கா  நிலப்பரப்பளவில் உலகின் நான்காவது பெரிய தேசம். பல்வேறு நில அமைப்புகளை தன்னுள் கொண்ட நாடு. பனி மலைகளும் பாலை நிலங்களும் புல்வெளிகளும், பள்ளத்தாக்குகளும், பீடபூமிகளும், மலைகளும் கொண்ட நாடு. ஆகையால் அதன் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை ஒரு பயணம் என்பது நிலக்காட்சிகளின் ஊடே செல்லும் ஒரு கனவுப் பயணம்தான். உண்மையில் அங்குள்ள பலருக்கும் அது ஓர் நிறைவேற்றக் கடினமான கனவுப் பயணம் தான்.

மே மாதம் 2022 ல் நாங்கள் மேற்கொண்ட இப்பயணம் 15 நாட்கள், 13 மாகாணங்கள், 5000 மைல்களை கடந்த சாலைவழிப் பயணம். நான், ஜெயமோகன், ராஜன் சோமசுந்தரம், விஸ்வநாதன் , பிரமோதினி, ஸ்ரீராம் ஆறுபேரும்  ஒன்றாக ஒரே காரில் பயணம் செய்தோம். அப்பயணத்தை குறித்து விஸ்வநாதன் எழுதிய நூல் இது.

விஸ்வநாதன் 2008 ல் அமெரிக்காவில் முதுகலை படிக்கவந்து படித்து முடித்து அங்கேயே கலிஃபோர்னியாவில் மென்பொருள்துறையில்  வேலைக்கு சேர்ந்தவர். அதனால் அமெரிக்காவின் பழைய வரலாறும், கடந்த 15 வருடங்களில் மென்பொருள் துறையில் நடந்த மாற்றங்களின் வழியே அது கடந்துவந்த நவீன வரலாறும் அறிந்தவர். உலகின் தொழில் நுட்பத்தின் மையமென அறியப்படும் சிலிகன் பள்ளத்தாக்கான பே ஏரியாவில் வாழ்பவர்.

பயண அனுபவத்தை எழுதும்போது சாதாரணமாக நிகழும் எந்தவொரு தேய் எழுத்துக்கள் போல இல்லாமல் தனக்கென ஒரு பிரத்யேக வடிவமும், மொழிநடையும் இவருக்கு கைவந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் தேதி வாரியாக, எந்த மாகாணத்தில் இருந்து அந்த நாளின் பயணத்தை தொடங்கினோம் என்று துல்லியமாக ஆரம்பிக்கிறது

எல்லா அத்யாயமும் பெரும்பாலும்  அவருடைய ஒரு தனி அனுபவத்திலிருந்து ஆரம்பித்து ஒரு பொது அனுபவத்திற்கு செல்வது கூடுதல் நம்பகத்தன்மையையும் ஒரு அணுக்கத்தையும் வாசகரில் நிகழ்த்தி விடுகிறது. அவர் பார்வையில் நாம் காணும் அமெரிக்கா, அதன் புதிய வரலாறு, மாற்றங்கள், பண்பாடு, மக்களின் பழக்க வழக்கங்கள் முற்றிலும் புதிதாக உள்ளது. ஒரு பயண இலக்கியம் நிலக் காட்சிகள், உணவு, தங்குமிடம், ஊர் சார்ந்தது மட்டுமல்ல. நாம் அனைத்தையும் நுணுகி அறிய விரும்புகிறோம். அதற்கு பொதுப் படையான அவதானங்கள் எவ்வகையிலும் நம்மை கவர்வதில்லை. நாம் படிக்கும் போதே அவை பற்றிய உண்மையின்மையை உணர்ந்து விடுவோம்.

விஸ்வநாதன் தனிப்பட்ட முறையில் என் நண்பர் என்பதால் எந்த முன் தீர்மானங்களும் இல்லாமல் அவர் புதிய நபர்களிடம் குறிப்பாக அமெரிக்கர்களிடம் பழகியிருந்ததை, இருப்பதை என்னால் உணரமுடிந்தது. ஒரு முறை கூட தப்பித் தவறியும் அவர்களை சிறுமைப் படுத்தி நம்மை உயர்த்திப் பேசும் ஒரு குணத்தை நான் அவரிடம் கண்டதில்லை

வேறு ஒரு நாட்டின் பயண இலக்கியத்தில் நாம் அடைவது ஆசிரியர் காணும் காட்சிகளும், இடங்களும் மட்டுமல்ல, ஒரு பண்பாட்டின், அம்மக்களின் வாழ்வின், மனநிலையின் ஒரு குறுக்குவெட்டு சித்திரமும் கூடத்தான்.

முதலில் நாங்கள் தொடங்கிய இடத்தில் இருந்தே அப்பயணத்தின் உற்சாகம் அவர் எழுத்தில் தொடங்கிவிடுகிறதுமிஸிஸிப்பி ஆற்றின் கரையில் உள்ள மெம்ஃபிஸ் மிகச் சிறிய நகரம். ஆனால் அது உலகப்புகழ் பெறக் காரணம் ஒருவர். அவர்தான்  மிகச் சிறிய இசைக்குழு நடத்திராக் அண்ட் ரோல்என்ற வகைமையை உலகிற்கு அறிமுகம்  செய்த எல்விஸ் ப்ரெஸ்லி. உண்மையில் மேற்கத்திய செவ்வியல் இசையில் லய[தாள] வெளிப்பாடுகள் குறைவு. அப்போதெல்லாம் அமெரிக்க பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்த கருப்பர்களின் இசையில் மேம்பட்ட தாள லயம் இருந்ததுஇரண்டையும் சரி விகிதத்தில் கலந்து உருவானதுதான் ஜாஸ் [இது ராஜன் பூன் முகாமில் அவருடைய இசை குறித்த உரையில் பகிர்ந்தது]. 

கருப்பர்களின் ராக் அண்ட் ரோல் இசையை அமெரிக்கா முழுமைக்கும் பிரபலமடையச் செய்ய ஒரு வெள்ளை முகம் தேவைப்பட்டிருக்கிறது என்ற எல்விஸின் கதையை  அந்த ஸ்டுடியோவைப் பார்க்கப் போகும் முன்பே சொல்லி அதைக் காண வாசகர்களை தயார்படுத்தி விடுகிறார். பின் ஸ்டுடியோவைப்  பற்றிய துல்லிய வர்ணனை அந்த அனுபவத்தை நமக்கு கடத்தி விடுகிறது. ப்ரெஸ்லி இசைக் குழுவினரின் உலகப் புகழ்பெற்ற அழகிய புகைப் படம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

அமெரிக்க நாட்டுப் புற இசையின் தலைநகரமான நாஷ்வில் பின்னர் எப்படி அமெரிக்க இசையின் மையமானது என்ற ஒரு சிறிய அழகிய கோட்டு சித்திரம் தரப்பட்டுள்ளது. இதுதான் ஒரு நாட்டின் , நகரின் நவீன வரலாறு உருவாகி வரும் சித்திரம். இவை போல பல சுவாரஸ்ய வரலாறுகள் , பின்னணிகள்

அமெரிக்க நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய மென்பொருள் தேவைக்காக பெங்களூரை முகாந்திரமாகக் கொள்ள ஆரம்பித்த வரலாறும் அழகாக சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய புள்ளிவிவரத்தின்படி செயற்கை நுண்ணறிவு குறித்து அதிக ஆய்வுகள் நிகழும் சான் ஃப்ரான்சிஸ்கோவிற்கு அடுத்த இடத்தை நோக்கி பெங்களூரு அடி எடுத்து வைத்து கொண்டுள்ளது. இதையும் இணைத்து பார்க்கும் வாசகரின் மனம் ஒரு முழு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளும்.

அமெரிக்க சுதந்திரத்திற்கு முன்  ஃப்ரெஞ்ச் குடியேற்றங்களுக்கும், இங்கிலாந்துக் குடியேற்றங்களுக்கும் இடையே எப்போதும் இருந்த போட்டியில் புதிதாக உருவாகி வந்த சுதந்திர அமெரிக்க குடியரசுக்கு நெப்போலியன் விற்ற நிலமே அர்கண்சா என்ற மாகாணத்தை பெருமளவில் உள்ளடக்கிய லூசியானா என்ற பழைய ஃப்ரெஞ்ச் பெயருள்ள பிரதேசம். அமெரிக்காவின் அதிகம் அரிசி உற்பத்தி மாகாணமாக அது தற்போது உள்ளது என்பதும் அங்கிருந்த பூர்வகுடிகள் வறண்ட மேற்கை நோக்கி[ வைல்ட் வெஸ்ட்] விரட்டப் பட்டார்கள் என்பதும் வாசகர் இணைத்து புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

பிறகு நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் ஆல்பெகெர்கீ எவ்வாறு மைக்ரோ சாஃப்ட் தொடங்கிய இடமாக ஆனது , [பிறகுதான் அது சியாட்டிலுக்கு மாற்றப்பட்டது] பில் கேட்ஸும், அவரது நண்பர் பால் ஆலனும் தொடக்கத்தில் அலைந்து திரிந்த கதையும் வருகிறது

இடங்களைக் குறித்த அவரது பிரக்ஞை, திசை, தூரம் குறித்த அவரது போதம் மிக இயல்பாக இக்கட்டுரைகளில் வெளிப்படுவது நாமும் அப்பயணத்தின் ஊடாக சென்று கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. வர்ணனைகள் பெரும்பாலும் துல்லியமாக குறைந்த வார்த்தைகளில் கச்சிதமாக சொல்லப் பட்டிருப்பது இப்புத்தகத்தின் பிரதான கவர்ச்சி எனலாம்..ம் மேலே வடிவ ஒழுங்கற்ற மேகத்திறல். கீழே ஏதோ ஒரு வடிவ ஒழுங்குடன் கூடிய மலை மடிப்புகள். சாம்பல் நிறத்தின் அத்தனை வண்ண வேறுபாடுகளிலும் மேகங்கள். பச்சையின் வண்ண வேறுபாடுகளில் மலைச்சரிவுகள். மேகமும், மலைச்சரிவும் தொலை தூரத்தில் ஒன்றை ஒன்று தொடும்போது, சாம்பலும் பச்சையும் கலந்து நீலமாக மாறியது. மலையில் இருந்து மேகப்புகை கிளம்பியபடி இருந்தது. புகைக்கும் மலை. ஸ்மோக்கி மவுண்டன்

வன்மேற்கில் அதிகம் நிரம்பியிருக்கும் சேஜ் ஃப்ரெஷ் எனும் குற்றுச் செடி வகை குறுமரங்களும், பீச், பைன், செடார், ரெட் வுட் போன்ற அமெரிக்காவின் தென் பகுதியில் அதிகம் காணப்படும்  மரங்களின் வர்ணனைகளும் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளன

பயணத்தின் மிகச் சுவாரஸ்ய அம்சங்களான முற்றிலும் எதிர்பாராத சம்பவங்கள் , இனிய ஆச்சரியங்கள், நம் திட்டத்தில் இல்லாத ஒரு இடமோ விஷயமோ நடப்பது, அந்தந்த மாகாணங்களின் பிராந்திய சுவை கொண்ட உணவுகள், உணவகங்கள், அழகிய தங்குமிடங்கள், சுவாரஸ்யமான மனிதர்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் விவரித்திருக்கிறார்.

ஒரு காரில் ஆறு பேர் 15 நாட்கள் பயணிப்பது, ஒன்றாக ஒரு குடும்பம் போல் தங்குவது இவையெல்லாம் மிகுந்த அணுக்கத்தையும், பிரியத்தையும் உருவாக்கிவிடும். அவர்களுக்குள் நிகழும் நகைச்சுவை கலந்த உரையாடல், அவ்வப்போது நிகழும் ஜெயமோகனின் தீவிர உரையாடல், கருத்து பரிமாற்றம், சுவையான சம்பவங்களை சுவைபட கூறுவது, போரடிக்கும் போது பாடல்களைப் பாடுவது எல்லா நிகழ்ச்சிகளையும் ஒன்று விடாமல் விரிவாக எழுதியுள்ளார். எல்லாவற்றையும் பயணத்தின் போதே விஸ்வநாதனும், அவர் மனைவி பிரமோதினியும் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். அப்போது நான் உணரவில்லை அவை இப்படி ஒரு அழகிய பயண நூலாக உருவெடுக்கும் என்று.

சாப்பிட்ட வித்யாசமான உணவகங்கள், துல்லியமான உணவுப் பட்டியல் மற்றும் விவரணைகளுடன் தரப்பட்டுள்ளது. ம் எங்கள் பண்ணை களில் வளரும் மாடுகளில்தான் ஃபிரஷ்ஷாக இங்கே ஸ்டேக் செய்கிறோம்என்றார் ஜெகோபி. ஜெ ஸ்டேக் ஆர்டர் செய்தார். முட்டையை உடைத்து, டீ ஆற்றுவது போல, மஞ்சள் கருவை ஒரு பாதியில் இருந்து இன்னொருரு பாதியில் ஊற்றியபடி வெள்ளை கருவை பிரித்தெடுத்து உணவு தயாரித்து கொண்டிருந்தார்கள். பான் கேக், பிரஞ்ச் டோஸ்ட், ஸ்டேக், ஆம்லட் என கலவையாக ஆர்டர் செய்து பகிர்ந்து உண்டோம். சுவையான, திருப்தியான காலை உணவு.

இதுவரை சென்ற உணவங்கள் எல்லாம் சங்கிலி தொடர் உணவகங்கள். இது ஜெகோபியின் குடும்பம் நடத்துவது. உணவின் தரத்திலும் பிரதிபலித்தது. மெக்ஸிகன் உணவு வகைகளிலே பலதரப்பட்டவை உண்டு என்று புத்தகத்தை படிக்கும் போதே எனக்கு உறைத்தது.

நியூ மெக்ஸிகோவின் அல்பக்யூர்கியூ நகரம் பூர்வகுடிகளின் கட்டிடக் கலையில் உருவான சிமோயோ பாணி கட்டிடக் கலையால் ஆனவை. ரிஸ்தராஸ் எனப்படும் சிவப்பு மிளகாய் மாலைகளை கட்டிட முகப்பில் கட்டித் தொங்க விடுவது அவர்கள் வழக்கம். களிமண்ணை எடுத்து பூசியது போன்ற, கூர்ந்த விளிம்புகள் இன்றி மழுங்கலான பூச்சுகளுடன் காணப்படும் அக்கட்டிட கலை மிகவும் பிரத்யேகமானது. அதை மிக அழகுற விவரித்திருக்கிறார் விஸ்வநாதன்

மிசிசிபி, அனிமஸ், டுராங்கோ, கொலராடோ இன்னும் பல நதிகள் எங்கள் பயணத்தில் வந்து கொண்டேயிருந்தன. நதியின் வர்ணனையும், அதன் சிறப்பம்சமும் எழுத்தின் ஊடே வந்து நம்மை குளிர்விக்கிறது

இதைத் தவிர மேசா வெர்தே தேசியப் பூங்காவின் முக்கிய கவர்ச்சியான செங்குத்து மலைச் சரிவில் இயற்கையான பாறை விளிம்புகளில் பாப்லோ பழங்குடியினரின் கூட்டு குடியிருப்புகளான [க்லிஃப் ட்வெல்லிங்ஸ்] யுனெஸ்கோவால் பாதுகாக்கப் படும் நினைவுச் சின்னங்கள்ஒரே இடத்தில் நூறு பேர் தங்கும் குடிருப்புகள் .. கழுகின் கூடுகள் போல, பாறை விளிம்பில் தொங்கும் தேன் கூடுகள் போல என்கிறார். அது பற்றிய வர்ணனையின் போதே அக்காலகட்டதில்[கி.பி. 1100] நாம் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிவிட்டோம், அதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே கீசா பிரமிடை எகிப்தியர்கள் கட்டி விட்டனரென்கிறார். வரலாற்றில் இப்படி கோடிழுத்து பார்ப்பது ஒரு வகையில் மனித அறிவின் பரிணாம வளர்ச்சியை அனுமானிப்பதுதான்

ஆனால் எனக்கு அப்போது அப்படி தோன்றவில்லை. கட்டிட கலையில் அவர்கள் பின் தங்கியிருந்தாலும் செவ்விந்தியர்கள் தான் மக்காசோளத்தை அமெரிக்கர்கள் இப்போது சாப்பிடும் பண்பட்டரகமாக மாற்றியவர்கள். எங்கெல்ஸ் தனது குடும்பம் தனிச்சொத்து நூலில் ஐரோப்பா மக்காசோளம் இல்லையேல் பட்டினியால் அழிந்திருக்கும் எனக் குறிப்பிடுகிறார். மக்காச்சோளமும், உருளைக்கிழங்கும், பீன்ஸும் தான் ஐரோப்பா, அமெரிக்காவின் வளர்ச்சிக்கு காரணம் என்கிறார்.

சிறுவர்களுக்கான படக்கதைகளில் வரையபட்ட அட்டகாசமான ஓவியம் ஒன்றில் கார் ஓட்டிப் போவது போல தோன்றியது. மலை சிகரங்கள், குதிரைகள் மேயும் புல்வெளிகள், சுழித்தோடும் ஆறு, பொன் மஞ்சள் வானம், கடல் மறையும் கலம் போல செஞ்சூரியன். மேக விளிம்புகளை ஒளிகொள்ள செய்தபடி சூரியன் கீழே இறங்கியது. … இப்படியாக நாங்கள் பார்த்த அஸ்தமனங்களில் ஒன்று விவரிக்கப்பட்டுள்ளது.

வைல்ட் வெஸ்ட் என்று சொல்லப்படும் வன்மேற்கில் நுழைந்ததுமே கௌபாய் படங்களின் மனநிலை எல்லோருக்கும் அமைந்துவிடுகிறது. மானசீகமாக நாங்கள் அனைவருமே குதிரைகளில் அமர்ந்து அதை மென்னடையில் நடக்கவிட்டுப் பின் குதித்து துப்பாக்கியை ஸ்டைலாக சுழற்றி சுடும் உலகில் இருந்தோம். மற்றவர்கள் எப்படியோ நான் அம்மனநிலையில் இருந்தேன். அதற்கான பின்னணியாக விஸ்வநாதன் குறிப்பிடுவது அப்பகுதியின் தங்கம், வெள்ளிக்காக சுரங்கங்கள் தோண்டப்பட்டு ஒரு சிறு குடியிருப்பு பகுதி உருவாகிறது.அங்கு துப்பாக்கியும் குதிரையும் வைத்திருப்பவர்கள் வலியவர்கள்சுரங்கத்தின் கனிம வளம் தீர்ந்ததும் அவ்வூர் கைவிடப் படுகிறது.. பாறைகளின் அமைப்பினால் சில சமயம் அவை சுற்றுலாத் தளமாக நீடிக்கின்றன. இப்பகுதியின் 3 , 4 மாகாணங்கள் பைபிள் பெல்ட் என்று அழைக்கப் படுகின்றன. யூடா மாகாணத்தில் மார்மோன்கள் எனப்படும் ஒரு புதிய கிறிஸ்தவ கல்ட் உருவாகி அது குறிப்பிட்ட காலம் நீடித்ததை சொல்கிறார்.

கேன்யான் லாண்ட்ஸ் [புதிர் நிலம்], மெக்ஸிகன் தொப்பி பாறை [மாண்டிசெல்லோ}, பூமிக்கடியில் நதியின் அரிப்பினால் உருவான ஆண்டிலோப் கேன்யன்ஹார்ஸ் ஷூ பெண்ட் [கொலராடோ நதியின் அரிப்பினால் உருவானது], பிறகு உலகப் புகழ் பெற்ற க்ராண்ட் கேன்யன், ரெட் கேன்யான் எல்லா அனுபவங்களையும் வர்ணனையுடன் எழுதியுள்ளார். புகைப்படங்களும் இணைக்கப் பட்டுள்ளதால் அங்கே பயணம் செய்த அனுபவத்தை படிக்கும் ஒவ்வொருவரும் உணரலாம்.

ஆனால் கிராண்ட் கேன்யான் உலகின் மிகப்பழமையான நிலப்பகுதிகளில் ஒன்று. அதன் ஆழத்தில் கொலராடோ  நதிப்படுகையில் உள்ள பாறைகள் நூற்றென்பது கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை. அப்போது பலசெல் உயிரணங்களே (multicellular) உருவாகவில்லை. பாக்டீரியா, பாசி போன்ற ஒற்றை செல் உயிரணங்களே இருந்தன. இப்படி அறிவியல் தகவல்களை கொடுத்தாலும் கிராண்ட் கேன்யானைப் பார்த்தபொழுது ஒவ்வொருவர் அடைந்த உணர்வெழுச்சியும், மனநிலையும் சொல்லப்பட்டுள்ளது.

பயணத்தில் நாங்கள் பேசிக் கொண்ட எங்கள் உரையாடல்  கூட சுவை மாறாமல் விவரிக்கப் பட்டுள்ளது. நண்பர்களின் இல்ல சந்திப்புகள், ஜெயமோகன் கலந்து கொண்ட இலக்கிய கூட்டங்கள், இவை எல்லாமாகச் சேர்ந்து ஒரு இனிய வாசிப்பனுபவத்தை நல்கி விடுகிறார். நான் இதை படிக்கும் போது திரும்பவும் அந்த பயணத்தை மானசீகமாக நிகழ்த்திக் கொண்டேன்.  

இவ்வளவு சிரத்தையும், உழைப்பும், முன் தயாரிப்பும் கொண்டு எழுதப் பட்ட இந்நூல் ஒரு இனிய, சுவாரஸ்யமான வாசிப்பின்பத்தையும் நமக்கு அளிக்கிறது. முதல் புத்தகத்திற்கான தடுமாற்றங்கள், முதிர்ச்சியின்மை எதையுமே விஸ்வநாதனின் இவ்வெழுத்தில் நான் உணரவில்லை. அவருக்கு என் வாழ்த்துக்கள். அவருக்கு இப்பயணத்தில் குறிப்பெடுத்து கொடுத்து உதவிய பிரமோதினிக்கு என் அன்பு. இப்பயணத்தை சாத்தியமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் அன்பும், நன்றியும்.

நாகர்கோவில்

8, ஆகஸ்ட் 2024

 

தொடர்புக்கு : [email protected] 
Phone 9080283887) 
முந்தைய கட்டுரைதமிழ்விக்கி, வெள்ளைவாரணனார்- கடிதம்
அடுத்த கட்டுரைடி. பிருந்தா