மிஷிகன் மாநிலத்திற்கு மீண்டும் ஒரு வருகை. இங்கே முன்பு நண்பர் சிவா சக்திவேல் இல்லத்தில் தங்கி அருகே கொலம்பஸ் நகரில் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறேன். அடர்காடொன்றுக்குள் சிவா சக்திவேல் குடும்பத்துடன் சென்று அருவி ஒன்றைப் பார்த்திருக்கிறேன். அது கோடைகாலம். இவ்வாண்டு இலையுதிர்வின்போது. இம்முறை நண்பர் மதுனிகாவின் இல்லத்தில் தங்கியிருந்தேன்.
சிகாகோவில் நண்பர் மணிவாசகம் இல்லத்தில் தங்கியிருந்தேன். அங்கிருந்து மாடிஸனில் நண்பர் பாலா இல்லத்தில் தங்கினேன். மிஷிகனுக்கு சிகாகோர் ஏரியை ஒரு பெரும்படகில் சென்றோம். பாலா உடன்வந்தார். நாங்கள் ஃபின்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்கு ஓர் ஆடம்பரக்கப்பலில் சென்றதுபோலவே இருந்தது. அடித்தளத்தில் கார்கள். மேலே உணவுக்கூடம். வெளியே அமர்வதற்கான இருக்கைகள். இரண்டரை மணிநேரம் ஒளிவிரிந்த நீர்வெளிமேல் நோவியை சென்றோம்.
நோவியில் மதுனிகாவும் கணவர் சுரேஷும் நண்பர் சங்கரும் காத்திருந்தார்கள். மதுனிகா நல்ல வாசகர். விஷ்ணுபுரம் நண்பர்களின் வாசிப்புக் குழுக்களில் நூல்களைப் பற்றி உரையாடுபவர். சங்கர் பாடகர், ஓவியர். மதுனிகா இல்லத்துக்கு ஃப்ளோரிடாவிலிருந்து நண்பர் லட்சுமணன் வந்திருந்தார். லட்சுமணனை நான் கோவையில் பார்த்திருந்தேன். நான் இடங்களுடன் மனிதர்களை நினைவில் வைத்திருப்பவன். அவரைப் பார்த்ததும் ஒரு குழப்பம். கேட்டே விட்டேன்.
“எனக்கு ஃப்ளோரிடாவில் லட்சுமணன் என்று ஒரு நண்பர் உண்டு…உங்களுக்கு அவரை தெரியுமா?” அவர் “சார், அது நானேதான்…” என்றார். ஒரே சமயம் பல ஊர்களில் மர்மமாக நடமாடும் வில்லனாக அவரைச் சித்தரித்து கௌதம் மேனன் குரலில் “அவனுக்கு பல முகங்கள்… ஒரே சமயம் கோவை, மயாமி எல்லா இடத்திலேயும் இருப்பான். மிஷிகன் பக்கம் அவன் நடமாட்டம் இருந்ததுக்கு சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கு” என்று பேசி ‘கலாய்த்து’க்கொண்டிருந்தேன்.
நண்பர்கள் மதுனிகா இல்லத்துக்கு வந்துகொண்டிருந்தனர். நண்பரும் புகைப்படக்காரருமான பிரேம் வந்திருந்தார். அவர் மனைவி ரம்யா நல்ல வாசகி, தொடக்கநிலை எழுத்தாளர். அவர் இந்தியாவில் ‘சிக்கிக்கொண்டதனால்’ வரமுடியவில்லை. நண்பர்கள் ராம், கலை, பிரவீனா என ஒரு பெரிய குழுவாக இலையுதிர்வைப் பார்க்க லேக் மிஷிகன் சென்றோம்.
செல்லும் வழி முழுக்க காடு பற்றி எரிவதுபோல் இலையுதிர்வு. 2001ல் முதல்முறையாக இலையுதிர்வைப் பார்க்க அ.முத்துலிங்கம் என்னை அழைத்துச்சென்றார். இதே அக்டோபர் , அனேகமாக இந்தக் காட்டின் மறுபக்கம். நான் காணும் முதல் அயல்நிலமும் கனடாதான். அன்று பித்துப்பிடித்த நிலையில் கண்களே பிரக்ஞை என இருந்தேன். அதன்பின் 2019ல் ராலே ராஜனுடன் வடக்கேம் வைட் மௌண்டெயினில் இலையுதிர்வைப் பார்க்கவேன்றே ஒரு நீண்ட பயண. சென்ற ஆண்டும் நீண்ட இலையுதிர்வுப்பயணங்கள்
முதல்முறை இந்த மலைச்செம்மை மலர்வைப் பார்த்தபோது எழுந்தது கபிலரின் குறுந்தொகைப்பாடல். அது ஒவ்வொரு முறையும் நினைவில் எழுகிறது. இலையுதிர்வு பார்க்கும் அனுபவத்தை சங்கப்பாடலுடன் இணைத்து சங்கசித்திரங்களிலும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறே.
செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பிற் செங்கோட்டுயானைக் கழல்தொடிச் சோய் குன்றம் குருதிப்பூவின் குலைக்காந்தட்டே
உண்மையில் குரூரமான பாடல் இது. போர்க்களம் குருதிமூடிக்கிடப்பதும், ரத்தம்பூசிய மருப்புகொண்ட யானையுமெல்லாம் சாமானியமான உவமைகள் அல்ல. ஆனால் மலர்வெளியென பொலிந்த இந்த செவ்விலைக்காடுக்கு அந்த வரி எப்படியோ இணைந்துகொள்கிறது. கலை எந்தக் குரூரத்தையும் அழகியலாக ஆக்கிவிடுகிறது. குருதிப்பூவின் குலைக்காந்தட்டே என்ற வரியெனவே விரிந்திருந்தது அனல்வண்ணப்பெருங்காடு
ஏரியின் கரையில் ஒரு சிறு உணவகம். அங்கே கொதிக்கும் சாக்லேட் அருந்தினேன். மறுபக்கம் கனடா. அந்த ஏரி ஒரு நன்னீர்க்கடல். கனடாவிலும் அமெரிக்காவிலுமுள்ள இந்த மாபெரும் நன்னீர் ஏரிகள் எந்த தமிழரையும் வயிறெரியச்செய்பவை. நல்ல குளிர்.
சிகாகோவில் ஹெமிங்வே தன் இளமையைக் கழித்திருக்கிறார். இங்கிருந்து 1929 வாக்கில் கிளம்பி பாரீஸ் சென்று அங்கே சுதந்திர இதழாளராக ஆங்கில இதழ்களுக்கு எழுதி வாழ்ந்தார். ‘பசி ஒரு நல்ல பயிற்சி’ என தன் அக்கால வாழ்க்கை பற்றி எழுதினார். பசியில்லாமல் எழுதப்பயிலமுடியாது என்பது அவர் கொள்கை. அந்த வரியை நானும் ஒரு காலத்தில் நம்பியிருந்தேன்.
ஹெமிங்வே பெரும்பாலும் வாழ்ந்ததும், அவருடன் இணைந்து நினைவுகூரப்படுவதும் ஃப்ளோரிடாவின் நிலமுனைதான். கியூபாவுக்கு அருகே. அவர் ஒரு படகில் நினைத்ததும் கியூபா சென்று வரமுடியும். அவருடைய அந்த இல்லத்துக்குச் சென்ற ஆண்டு சென்றோம். ஆனால் அவருடைய தொடக்ககாலக் கதைகளில் அதிகம் இடம்பெறும் இடம் மிஷிகன். ஹெமிங்வெ தன் சிறுகதைகளில் சாகசமும் குழப்பமும் கொண்ட இளஞ்சிறுவர்களை நிறைய எழுதியுள்ளார், பலர் வாசித்திருக்க மாட்டார்கள்.
மிஷிகன் பல்கலைக்கழகக் கல்லூரியின் நூலகத்துக்குச் சென்றோம். (ஆன்ஆர்பர் Hatcher Graduate நூலகம்) இந்த நூலகங்கள் மிக விரிவானவை. இதைவிடப்பெரிய நூலகங்களுக்கும் சென்றதுண்டு. ஆனால் இந்த பல்கலைக்கழக நூலகங்களில் உலகின் எல்லா மொழியின் நூல்களும் இருக்கும். உலகஞானத்தையே நேரில் பார்ப்பதுபோல. அது அளிக்கும் உள எழுச்சி அபாரமானது.
அங்கே ஏராளமான தமிழ் நூல்கள் இருந்தன. இந்நூலகங்களில் எவர் கண்ணுக்கும்படாத அரிய ஆய்வுநூல்கள், மலர்கள், தொகைநூல்கள் ‘உறைந்து’ இருப்பதுண்டு. இங்கும் அரிய நூல்களும் சில இருந்தன. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் பற்றிய ஒரு நூலைக் கண்டு அதன் அரிய படங்களை நகல்செய்துகொண்டேன். புலவர் குழந்தை பற்றிய ஒரு மலர் இருப்பதைக் கண்டேன்.
மிஷிகன் மாநிலத்தின் மையமான நகரம் டெட்ராய்ட். ஹென்றி ஃபோர்டின் நகரம். நான் 2009ல் அங்கே வந்திருக்கிறேன். அன்றே அது கைவிடப்பட்ட நகர் போலிருந்தது. எங்கு பார்த்தாலும் வீடிலிகள். ஃபோர்ட் நிறுவனம் தவிர ஜெனரல் மோட்டார் உட்பட பல முக்கியமான கார்நிறுவனங்கள் இங்கு உள்ளன. ஆனால் அமெரிக்க பொதுவான கார்த்தொழில் சரிவில் இருக்கிறது. ஜப்பானியக் கார்களின் புயல். அதன்பின் டெஸ்லாவின் அடி விழுந்து பல நிறுவனங்கள் தள்ளாடுகின்றன. கோவிட்டுக்குப் பின் டெட்ராய்ட் இன்னும் கீழிறங்கிவிட்டது என்றனர்.
போர்ட் கார்த்தொழிற்சாலையை மேலே ஒரு நடைபாதை வழியாகச் சென்று கீழே கார்கள் உருவாவதைப் பார்க்கலாம். அஸெம்ப்ளி லைன் எனப்படும் தயாரிப்பு முறையை ஃபோர்டுதான் உருவாக்கினார் என்பார்கள். அதை நேரில் காணலாம். ஆனால் முன்பு பார்த்தபோது இருந்த ஊக்கம் இப்போதில்லை. அது பார்வையாளர்களுக்காக நிகழ்த்தப்படுவது, மெய்யான கார் தயாரிப்பு வேறெங்கோ என தெரிந்துவிட்டது. இங்கே ஊழியர்கள் மிக நிதானமாக இயல்பாக ஏதோ செய்துகொண்டிருந்தார்கள். இப்படி ஒரு தொழிற்சாலை இயங்க முடியாது. அதிலும் சவுக்கடி தொழிலதிபரான ஃபோர்டின் ஆலை!
மிஷிகனில் ஒரு சந்திப்பு. 85 பேர் வந்திருந்தார்கள். நான் ஒன்றரை மணிநேரம் நீண்ட ஓர் உரை நிகழ்த்தினேன். அதன்பின் ஒரு சிறு கேள்விபதில் ( உரை ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளியாகும்) அந்த ஊரில் உரைக்கு அவ்வளவுபேர் வந்திருந்தது மகிழ்ச்சியளித்தது. அது இலக்கியத்தால் மட்டும் வரும் கூட்டம் அல்ல. அண்மைக்கால காணொளிகளும் அந்த ஈர்ப்பை உருவாக்கியிருக்கின்றன என நினைக்கிறேன்.
சங்கர் இல்லத்தில் உணவுக்குச் சென்றோம். அவர் அம்மா வெண்முரசு வாசகர். சிறப்பான வடதமிழகச் சமையல் செய்திருந்தார். மாலையில் ஓர் இசைநிகழ்வு. மதுனிகா இல்லத்தில் சங்கர் ஒருங்கிணைத்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு தொழில்முறை இசைக்குழு போலவே மிருதங்கம் புல்லாங்குழல் இசையுடன் பாடினார்கள். நான் அந்நிலத்தின் இலைப்பொலிவுடன் அப்பாடல்களை எவ்வண்ணமோ இணைத்துக்கொண்டிருந்தேன்.