அனல் காற்று (குறுநாவல்) : 13

நான் ஆபீசில் இருந்து கிளம்பும்போது சந்திராவின் வீட்டுக்குப் போகவேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தேன். பகல் முழுக்க நான் சந்திராவை சந்திப்பது பற்றி நினைத்துக்கொண்டே நிலையற்று ஆபீஸில் அமர்ந்திருந்தேன். தி ஹிண்டுவை அர்த்தமில்லாமல் எல்லா பக்கங்களையும் படித்தேன். எழுந்து சாலையோரம் வந்து நின்று போகும் ஆள்கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதே சந்திராவைப் பார்க்க வேண்டுமென நினைத்து நேராக காரில் ஏறியபின் சாவியை திருப்பாமல் அங்கேயே அமர்ந்திருந்துவிட்டு திரும்பி வந்தேன். என் கன்னங்களின் மெல்லிய எரிச்சல் என்னை உன்னை நோக்கி திருப்பியது. சுசி, அப்போது நீ என்னுடன் இருந்து கொண்டே இருந்தாய். என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாய்.

அப்படியே முழுநாளும் போயிற்று ஆறுமணிக்கு செல்லப்பன் கண்ணாடிக்கு அப்பால் இருமுறை தலைகாட்டினான். அந்தக் கணம் வரை நான் எதையுமே முடிவெடுக்கவில்லை. ஆனால் எழுந்ததும் என் மனம் முடிவெடுத்தது — சந்திராவிடம்தான். படிகளில் இறங்கும்போது அம்முடிவு உறுதியாயிற்று. ஆனால் மீண்டும் காரில் ஏறி தலையைச் சரிசெய்கையில் கன்னங்களின் கீறல்கள் நினைவுக்கு வந்தன. நான் காரை ஜோவின் குடிலுக்கு ஓட்டிச்சென்றேன்

ஜோ அவன் அறைக்கு கீழே பெட்டிக்கடையில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். நான் மேலே செல்வதைப் பார்த்து ”டேய்” என்றான். நான் நின்றபோது ஓடிவந்து சேர்ந்துகொண்டான். ”என்னடா? மறுபடியும் பிரச்சினையா?”

”பிரச்சினை அதேதான்” என்றேன். ”என்ன கீழ வந்து சிகரெட் பிடிக்கறே? பாக்கெட் பாக்கெட்டா வாங்கி வச்சுக்குவியே?”

”குறைச்சிட்டேன்… விட்டுடலாம்னு இருக்கேண்டா”

”ஏன்?”

”ஏன் நாங்க மட்டும் சிகரெட் பிடிச்சு சாகணுமா? நீங்கள்லாம் எங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டே நூறுவயசு வரை இருப்பீங்களா?”

”அது சரி, கதை அப்டி போகுது…” என்றேன் புன்னகையுடன்

”ரொம்ப போரடிச்சுபோச்சுடா…” என்றான். ”வா வேற எங்காவது போலாம்”

”எனக்கு மூட் இல்லடா” என்றேன்

”எனக்கு இருக்கு, அதான் எனக்கு முக்கியம்…” என்றான். ”கமான்…”

”சரி வா” என்று காரில் ஏற்றிக்கொண்டேன். கார் சென்றபோது அவன் ”அருண் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான்.

”சொல்லு.”

”நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.”

நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. அவன் மீண்டும் சொன்னான் ”எனக்கு மேரேஜுடா”

”போடா…” என்றேன்.

”நிஜம்தாண்டா” என்றான்.

”அப்டியா? யார்ரா அந்த மக்கு?”

”பேரு மேகி. மார்கரெட் ஸ்டூலாண்ட். அமெரிக்காக்காரி…”

”மை குட்நெஸ்.. லவ்வா? எப்படா? ”

”ஆக்சுவலா லவ் ஆனது முந்தாநாள். நீ வந்துட்டு போனியே அதுக்கு மறுநாள்… இப்ப மோதிரத்தைக் குடுத்திட்டேன். அவளுக்கும் ஒரே பரவசம்… நான் அவகூட அமெரிக்கா போறேன்.”

”விஷ் யூ ஆல் த பெஸ்ட்.”

”அங்கபோய் மியூசிக்லே ஏதாவது பண்ணணும்டா”

”கண்டதும் காதல்னு கேள்விப் படிச்சிருக்கேன். இது கண்டதும் கல்யாணம். நல்லாத்தான் இருக்கு…”

”நைஸ் இல்ல….? ஆனா கண்டதும் முதலிரவுன்னு சொன்னாத்தான் கரெக்ட்”

நான் சிரித்துவிட்டேன். ”பல்லாண்டு வாழ்க…, இவளை எப்டி அறிமுகம் செஞ்சுகிட்டே”

”இவ ஒரு பியானோ ஆர்ட்டிஸ்ட். காஸ்பல் மியூசிக்லே எக்ஸ்பர்ட். பாத்தோம் பேசினோம். ஒரே டேஸ்ட். ஒரே மனசு. அவ டிவோர்ஸி… நான் பிரம்மசாரி… அப்றம் என்ன?”

”என்ன அப்றம்?”

”நாங்க செக்ஸ் வச்சுகிட்டோம். அப்பதான் எனக்கு அவதான் எனக்கு பொருத்தமான பொண்ணுண்ணு தெரிஞ்சது. பக்கா… மகாபலிபுரத்திலே ஒரு ரிஸார்ட். மறுநாளைக்கு காலையிலேயே நான் பிரபோஸ் செஞ்சுட்டேன்…”

”இந்தியாவிலே இருந்துட்டு நீ இப்டி இருக்கே… லண்டன்ல பொறந்து வளந்தவ அப்டி இருக்கா…”

”யாரு சுசியா? நைஸ் கேர்ல்…”

நான் அவனிடம் அவளைப் பற்றிச் சொன்னேன். காரை மகாபலிபுரம் சாலையில் ஒரு ரெஸ்டாரெண்டில் நிறுத்தினோம். பீருக்குச் சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டோம்

”ஷி இஸ் ஏன் ஏஞ்சல்… டேய், பாப் மார்லி மேலே சத்தியமா ஒண்ணு சொல்றேன்… அவளைவிட உனக்கு ஒரு ஜோடி கெடையாது. அவதான் உனக்கு…. அவகிட்ட உன்னை அப்டியே குடுத்திடு.. அவ சொல்றதைக்கேட்டு நடந்துக்கோ. அவளுக்கு சேவகம் பண்ணு… புள்ள குட்டி பெத்துக்கோ. உனக்கு இந்த ஜென்மத்திலேயே வீடுபேறு உண்டு”

”சந்திரா? அவளை என்ன பண்றது?”

”டேய் உன்னோட பிரச்சினை என்ன? ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ். எனக்குத் தெரிஞ்சு அதுக்கு கிளாஸிக் உதாரணமே நீதான். யாரு கண்டா உன்னைய வச்சு நானே ஒரு நல்ல நாவல்கூட எழுதினாலும் எழுதிருவேன்… உனக்கு எல்லாமே அம்மாதான். அம்மாவைத்தவிர வேற ஒண்ணுமே தெரியாது. டீன் ஏஜ்ல வழக்கமான செக்ஸ் ஆசை வந்தப்ப செக்ஸும் அம்மாமாதிரி ஒருபெண் கிட்ட வேணும்னு தோனிச்சு. இவ மாட்டினா… அவ்ளவுதான்”

”புல்ஷிட்…..” என்றேன் ”இதெல்லாம் வெஸ்டர்ன் தியரட்டிகல் கார்பேஜ்….”

”இது எல்லாரும் சொல்றதுதான்.”

”யாருமே தாங்க ஒரு சைக்காலஜிகல் ஸ்பெஸிமன் மட்டும்தான்னு சொல்றதை ஒத்துக்கமாட்டாங்க… மனுஷமனசு அந்தமாதிரி சிம்பிள் தியரிக்கெல்லாம் கட்டுப்பட்டதில்லை…”

”ஸோ… காம்ப்ளிகேட் ஆக்கியே தீருவேன்னு நிக்கிறே…” என்றான் ஜோ ”நீ அவளை விட்டுடா உனக்கு நல்லது. எனிவே நீ விட்டுத்தான் ஆகணும். விடவும்போறே. இப்ப விட்டா உனக்கு ஒரு தேவதை கிடைப்பா…”

”பட் ஐ லவ் ஹெர்… என்னால சந்திராவை அப்டி உதறிடமுடியலைடா… எனக்கு இப்பவும் அவ வேணும்னுதான் மனசுக்குள்ள தோணுது… அவளை இழந்தா நான் காலியாயிருவேன்னு தோணுதுடா…. உனக்குத்தெரியாது இதோ இப்பகூட அவ என்னை கூப்பிட்டுட்டே இருக்கா” என்று செல்போனை தூக்கி மேஜைமேல் போட்டேன். அது ஒளிவிட்டு அதிர்ந்தது. ”அவதான்… எப்டியும் நூறு மிஸ்டுகால் இருக்கும்…” என்றேன்

”ஸ்டிரேஞ்ச்” என்றான் ஜோ

”டேய் இந்த செல் போன் மாதிரித்தான் என் மூளையும்.. ராப்பகலா அவளோட பேரு மின்னி அதிர்ந்துகிட்டே இருக்கு. ஒரு செகன்ட் ரெஸ்ட் கெடையாது. விட்டுடுன்னு சொல்றது ஈஸி. அம்மா சொல்றா, சுசி சொல்றா… ஆனா என்னால முடியல்லை.. நீயாவது புரிஞ்சுகிடுவேன்னு உங்கிட்ட வந்தேன்..”

”அதெல்லாம் உண்மைதான். ஆனா நான் சொன்னேனே, சந்திரா கூட உள்ள உறவு இன்னும் கொஞ்ச நாளிலே முறிஞ்சிரும்… அது வேணாம்னு உனக்கு ஆயிடும்…”

”இல்லடா”

”டேய், டீன் ஏஜ்ல போட்ட சட்டைய இப்பப் போடுவியா? அது உனக்கு பொருந்தாதுடா. நீ வளந்துட்டே… அதை மாதிரித்தான். அப்ப உனக்கு அவ தேவைப்பட்டா… இனிமே கெடையாது. இப்ப நீ வளர்ந்தாச்சு. இனிமே உனக்கு தேவை அம்மா டைப் மனைவி கெடையாது. தோழி…. தேவையானா அம்மாவாகவும் ஆகக்கூடிய ஒரு நல்ல தோழி… அதான் சுசி…. சும்மா போட்டு குழப்பிக்காதே”

”சும்மா ஸ்யூடோ தியரியா பேசிட்டிருக்காதே….. என்னால அவளை மறக்க முடியும்னு தோணலை”

”இப்ப உன்கிட்ட மிச்சமிருக்கிறதெல்லாம் ஒரு குற்றவுணர்வு மட்டும்தான்… அவ மேலே ஆசைவச்சு அனுபவிச்சுட்டு தூக்கி எறிஞ்சிரக்கூடாதுன்னு நெனைக்கிறே.. அவ தாங்கமாட்டான்னு நெனைக்கிறே… ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கோ, உறவுகளிலே நாம விரும்பினாலும் விரும்பாட்டியும் ஒரு ‘யூஸ் ஆன் த்ரோ’ விஷயம் இருக்கு. நமக்கு தேவையான உறவுகள் மட்டும்தான் நிக்கும். மத்த உறவுகள் என்ன பண்ணினாலும் மெதுவா உதிர்ந்திரும்…. முயற்சி பண்ணினா கொஞ்சநாள் நீட்ட முடியும். அவ்ளவுதான்…”

அவன் சொல்வது முழுக்க உண்மை என்ற எண்ணம் ஏற்பட்டது. ”அப்ப என்ன சொல்றே?”

”பேசாம இரு… என்னைப் பொறுத்தவரை லைஃப்ல முக்கியமான தாரக மந்திரம் இதுதான். பேசாம இருக்கிறது. பொறுமையா என்ன நடக்கிறதுன்னு பாக்கிறது…. சும்மா இருந்தாலே போதும் காலப்போக்கில பெரும்பாலான பிரச்சினைகள் அதுவா அணைஞ்சிரும்….. மனுஷங்களுக்கெல்லாம் வயசாகுதுடா… எல்லா மனுஷங்களும் கொஞ்சம் கொஞ்சமா செத்திட்டிருக்காங்க… பூமியில உள்ள எல்லாமே மாறிட்டிருக்கு, அழிஞ்சிட்டிருக்கு… இதிலே அப்டியே இருந்திட்டிருக்கிற விஷயம்னு ஒண்ணும் இல்லை…. ஸோ நீ பாட்டுக்கு இரு. அவ கூப்பிட்டா பேசு… ஆனா தனியா போய் பாக்காதே… அப்டியே நாளடைவில அந்த உறவு இல்லாம ஆயிடும்”

நான் பெருமூச்சுவிட்டேன். செல் அதிர்ந்துகொண்டே இருந்தது.

”எனக்கு ஒரு அனுபவம் உண்டுடா…” என்றான் ஜோ ”உறவுகள் அப்டியே போய்ட்டிருக்கிறப்ப சட்டுன்னு ஒரு இடத்திலே மனசுக்குள்ள தோணிடும், ‘அவ்ளவுதான்– இதுக்குமேலே இந்த உறவு போகாது’ன்னு… ஸ்டிரா போட்டு உறிஞ்சி எளநீரைக் குடிக்கிறப்ப ஒரு புள்ளியிலே எளநீர் தீந்துபோச்சுன்னு தெரியற மாதிரி சட்டுன்னு தெரிஞ்சிரும்… அந்த செகண்ட் வாரது வரை ரெண்டுபேரும் கிடந்து துடிப்பீங்க போராடுவீங்க.. சட்டுன்னு ரெண்டுபேருக்குமே தெரியும்.. அப்ப உறவு அறுந்திரும்… அதுவரைக்கும் நீ காத்திருந்தா போரும்…”

”அறுந்திரும்னு எப்டி சொல்றே?”

”சுசி பத்தி சொன்னியே அதிலேருந்து…. அவ இப்ப அம்மாவாகவும் ஆயிட்டா… உனக்கு இனிமே அவளே போரும்… யாரு கண்டா நீ மிச்ச வாழ்நாள் முழுக்க ஒரு படிதாண்டா பதியா வாழ்ந்தாக்கூட ஆச்சரியமில்லை”

நான் பில்லை கொடுக்க ரிஜிஸ்டரை எடுத்தேன்.

”நான் குடுக்கிறேண்டா”

”ஏன்? பணம் துள்ளுது போல?”

”மாகியோட பணம்… அள்ளிக்குடுக்கிறா மகராசி… டாலர் மதிப்பு சரியாம இருக்கணும்னுதான் நான் இப்பல்லாம் சாமி கும்பிடுறது…” என்றவன் ”பில் குடுக்கிறது கூட ஒரு சந்தோஷமான விஷயம்தான் இல்லியா?” என்றான்.

நான் சிரித்தேன்.

சாலைக்கு வந்ததும் ஜோ ”என்னை நீ மவுண்ட் ரோட்டிலே விட்டிரு” என்றான் ”நான் அங்க ஒரு ஆசாமியைப் பாக்கணும்… பழைய மியூசிக் ·பிரண்ட்… பாவம் சாகக் கிடக்கான்”

”என்னது?” என்றேன்.

”குடி… ஈரல் அப்டியே வாட்டர்மெலோன் மாதிரி ஆயிட்டுது… இன்னும் ஒருமாசம்னு சொல்லியிருக்காங்க… அதுக்குள்ள போய் பாத்தா அவன்கூட உள்ள உறவு சுமுகமா முடிஞ்சிரும் பாரு…”

நான் அவனை இறக்கி விட்டுவிட்டு நேராக லேன்ட்மார்க் சென்றேன். சுசிக்காக சில ஆடியோ சிடிக்களும் ஒரு சில புத்தகங்களும் வாங்கினேன். பின்னர் மெல்ல காரை வீட்டை நோக்கிச் செலுத்தினேன். தனிமையாகவும் அதேசமயம் விடுபட்டவனாகவும் உணர்ந்தேன். ஜோ மாதிரி ஆட்கள் எல்லாவற்றையும் எளிமைப்படுத்துகிறார்கள். சிறிதாக ஆக்கிவிடுகிறார்கள். ஆனால் வாழ்க்கையின் முக்கியமான பல தருணங்களில் அதுதான் சிறந்த வழியாக இருக்கிறது.

காரை நிறுத்தி படி ஏறிய போது கதவை திறக்க வந்த சுபாவை நான் முதலில் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. புதிய சுடிதார் அணிந்திருந்தாள். ராணி டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருக்க நீ தோசை சுட்டு கொண்டுவந்து போட்டாய். என்னிடம் ”வந்தாச்சா?” என்றாய்.

”சாப்பிடறியாடா?” என்றாள் அம்மா. அவள் அதுவரை எப்போதும் இல்லாத நிதானத்துடன் இருப்பதாகத் தெரிந்தது.

”சாப்பிட்டுட்டேன்” என்றேன்.

”எங்க?”

”ஜோ கூட” என்றேன். ”சும்மாதான் அவனைப் பாக்கப் போனேன்…”

”எப்டி இருக்கான்? வேலைக்கு எதுக்காவது போறானாமா?”

”அவன் கல்யாணம் பண்ணிக்கப் போறான்.”

”அய்யோ அவரா?” என்றாய் நீ.

”ஏன் அவனைப் பாத்தா ஆம்பிளையா தெரியலையா?”

”அவர் தாடியையும் பேச்சையும் பாத்தா கல்யாணம் பண்ணிகிற கேஸ் மாதிரி தோணலை”

”பொண்ணு என்னடா பண்றா?” என்று அம்மா கேட்டாள் ”சாதியிலேயே பண்றானாமா?”

”மனுஷ ஜாதிதான். அமெரிக்கப்பொண்ணு. மேகினு பேரு.”

”மேகின்னா நூடுல்ஸ் பேருல்ல?” என்றாள் ராணி.

”எப்ப பாரு திங்கிறதிலேயே இரு” என்று நீ அவள் மண்டையை தட்டினாய்.

”அமெரிக்கா போறான்” என்றேன்.

”நல்லா இருந்தா சரி” அம்மா அவனைப் பற்றிய பேச்சை தவிர்க்க விரும்பினாள். ஜோவை அம்மாவுக்குப் பிடிப்பதில்லை. எனக்கும் மனநெருக்கடிகள் இல்லாத நேரத்தில் அவனைச் சந்திப்பது ஒருவகை தர்மசங்கடத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

நான் சுபாவிடம் மெல்ல ”சித்தி சாப்பிட்டாச்சா?” என்றேன்.

அம்மா நிதானமாக ”கற்பகமா? சாப்பிட்டாச்சு… தூக்கமாத்திரை ஒண்ணு குடுத்தேன். என் ரூமிலே தூங்கிட்டிருக்கா” என்றாள்

நான் ரகசியமாக உன் கண்களைப் பார்த்தேன். நீ புன்னகை செய்தாய்.

நான் என் அறைக்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டிருக்கும்போது வெளியே ஸ்கூட்டியின் ஒலி கேட்டது. என் விரல்களால் சட்டைப் பித்தான்களை பிடிக்க முடியவில்லை.

வெளியே சத்தங்கள் ,பேச்சுக்குரல்கள். நான் கட்டிலில் அமர்ந்துவிட்டேன். ராணி கதவைத் தட்டி மெல்ல திறந்து ”சந்திரா மாமி வந்திருக்கிறதா சொல்லச் சொன்னாங்க.”

”யாரு?” என்றேன்.

”பெரிம்மா.”

நான் எழுந்தபோது அறை படகு போல ஆடியது. மீண்டும் அமர்ந்துகொண்டேன். என்ன செய்வது? இங்கேயே அமர்ந்துவிடுவதா? ஆனால் இப்படி கோழையாக, பூஞ்சையாக இருப்பதைவிட அங்கே சென்று மூர்க்கனாகவும் தூர்த்தனாகவும் நின்று கொண்டிருக்கலாம். ஆமாம், அதுதான் அந்த முகம்தான் இப்போது எனக்குத்தேவை. அதுதான் எனக்குப் பலம்.

நான் முகத்தைக் கழுவிவிட்டு பூபோட்ட சட்டை ஒன்றை அணிந்துகொண்டு வெளியே வந்தேன். கூடத்தில் அம்மா சோஃபாவில் அமர்ந்திருக்க சந்திரா எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்தாள். டீபாயில் ஹெல்மெட். நீ மோடாவில் அமர்ந்திருந்தாய். நீ தலையை ஆட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாய்.

என்னைக் கண்டதும் நீ மிக உரிமையும், கண்டிப்பும் கலந்த குரலில் ”என்ன சட்டை இது, ஆப்ரிக்கன்ஸ் போடுற மாதிரி…” என்றபின் சந்திராவிடம் செல்லச் சலிப்புடன் ”எப்ப சின்னப் பையனா ஆகிடுவார்னு சொல்லவே முடியறதில்லை” என்றாய்.

எனக்கு அந்த மனைவித்தனம் சற்று மிகையாகத் தோன்றியது. ஆனால் அது என்னை அதுவரை இருந்த நிலைகொள்ளாமையில் இருந்து மீட்டது. இங்கே நாடகம்தான் நடக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. நான் சிரித்தபடி அமர்ந்து கொண்டேன்.

சந்திராவும் அந்தத்தருணத்தை கச்சிதமாகப் பிடித்துக் கொண்டாள். அவள் என்னை நோக்கி செல்லமாகச் சிரித்து ”’ஸ்டில் ஹி இஸ் எ பாய்” என்றாள். அங்கே அவள் தன்னை ஒரு அம்மாவாக உருவகித்துக் கொண்டு உன்னுடைய குதிரையை தன் ராணியைக் கொண்டு செக் வைத்தாள்.

”என்னமோ போ…. வரவர இவனை நெனைச்சாலே பயம்மா இருக்கு… பிஸினஸ் பண்றேன்னு இதுவரை போன தொகைக்கு ஒரு வீடே வாங்கியிருக்கலாம்…” என்றாள் அம்மா. அவள் லௌகீக வாழ்க்கையில் இருந்து மெல்ல ஒதுங்கிக் கொண்ட பாட்டியின் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டாள்.

அந்த சதுரங்க ஆட்டம் நுட்பமான சொற்கள் மூலமும் சொற்களுக்கு அப்பால் செல்லும் கண்கள் மூலமும் நீண்டு நீண்டு சென்றது. நான் அதில் ஒரே வேடத்தைத்தான் எடுக்க முடியும். பிறரால் கையாளப்படும் சின்னக்குழந்தை. சுசி, நான் கிட்டத்தட்ட மழலையே பேசினேன். நீங்கள் மூவரும் ஆடும் பூப்பந்தாட்டத்தின் பந்து. வானிலேயே இருந்தேன்.

பின்னர் எங்கோ அது சலித்தது. நால்வரும் மௌனமாக அமர்ந்திருந்தோம். நீ என்னிடம் ”சந்திரா ராணிக்கும் சுபாவுக்கும் கிஃப் கொண்டாந்திருக்காங்க அருண்” என்றாய்.

”அப்டியா?”

”ஏய் காட்டுடீ.”

ராணி வெட்கத்தில் வளைந்தபடி முன்னால் வந்து ஒரு சிறு நகைப்பெட்டியைக் காட்டினாள். அதனுள் இரு சிறு தங்கத் தொங்கட்டான்கள்.

”வாங்கினீங்களா?” என்றேன் சந்திராவிடம்

வன்மம் கொண்ட பார்வை ஒன்று எனக்கு மட்டுமே தெரிந்து மறைந்தது அவள் கண்களில். ”வர்ரப்பதான் வாங்கினேன்… எப்டீன்னாலும் தங்கம் வேணுமே”

நீ ”ராணிக்கு சந்தோஷம் தாங்கலை” என்றாய்.

”ஷி இஸ் வெரி கியூட்” என்றாள் சந்திரா. எழுந்தபடி ”ஓகே தென்…” என்றாய்.

”தனியா போய்டுவியாடீ? அருணை கூட அனுப்பவா?” என்றாள் அம்மா. அம்மாவின் பார்வையை சந்திராவின் பார்வை மிக நுட்பமாக சந்தித்துச் சென்றதை நான் கண்டேன். என் மனம் சிலிர்த்துக் கொண்டது.

”நோ… இப்ப எட்டுமணிதானே ஆச்சு… நோ பிராப்ளம் ஜிஎஸ்… வரேன் சுசி…ராணி சுபா ரெண்டு பேருக்கும் பை” சந்திரா ஹெல்மெட்டையும் சாவியையும் எடுத்துக் கொண்டாள். என்னிடம் திரும்பி ”வரேண்டா” என்றாள்.

நான் அரைக்கணத்தில் திரும்பி உன் முகத்தைப் பார்த்தேன். உன் முகம் குரோதத்தால் சுளித்திருந்தது. சந்திரா சுவரில் கையூன்றி குனிந்து நின்று செருப்பின் வாரைப் போட்டாள். என்னிடம் சிரித்தபடி ”என்னடா, பெரிய குடும்பஸ்தனா ஆயிட்டே போல இருக்கே” என்றாள்.

அம்மா வந்து என்னருகே நின்று என் தோளில் கையை போட்டு கிட்டத்தட்ட அணைத்து கொண்டு ”ஆமா… பொறுப்பு… நீதான் மெச்சிகிடணும்” என்றாள்.

சந்திராவின் கண்கள் அம்மா என்னை அணைத்திருப்பதை கவனித்து மெல்ல மாறுபட்டன. ”வரேன் ஜிஎஸ்… ஏகப்பட்ட பேப்பர் வேல்யுயேஷன் இருக்கு… பை அருண்”

அவள் ஸ்கூட்டியைக் கிளப்பிச் செல்வதை நான் பார்த்து நின்றேன். அம்மா என் கையை தன் கையில் பற்றியபடி ”பால் சாப்பிடுறியாடா?”என்றாள்

”வேணாம்…” என்றேன்

”தூக்கம் வருதுன்னா படுத்துக்கோ”

”இல்ல பரவால்ல”

அம்மா சோபாவில் அமர்ந்து டிவியை போட்டாள். வழக்கமான ஏதோ நிகழ்ச்சி. நீயும் சுபாவும் ராணியும் வந்து அமர்ந்து கொண்டீர்கள். நீ என்னிடம் ”இது டிவி கெடையாது சினிமான்னு ராணி சொல்றா” என்றாள்

நான் திரும்பி ராணியை நோக்கி புன்னகை செய்தேன் ”இது வேற மாதிரி டிவி” என்றேன் ”புடிச்சிருக்கா?”

”ம்ம்” என்றாள் ராணி.

மெல்ல மெல்ல டிவி எங்கள் இறுக்கங்களையும் பாவனைகளையும் இல்லாமலாக்கியது. அந்த தொடரின் கதையை நீ சொன்னாய். அதன் கதாபாத்திரங்களைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம். சிரித்தோம், வாதாடினோம். டிவி ஒரு குடும்ப ஊடகம் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அது குடும்பத்துக்குள் வந்துவிடுகிறது. வாழ்க்கையைப் பற்றி நம் இந்தியக் குடும்பங்களில் பேசிக்கொள்ளவே முடிவதில்லை. ஆனால் தொலைகாட்சித் தொடர்களை முன்வைத்து நாம் வாழ்க்கையைப் பற்றி எத்தனை வேண்டுமானாலும் விவாதிக்கலாம்.

பின்பு நான் எழுந்தேன். ”ஓகே… நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்று என் அறைக்குச் சென்று உடைகளைக் கழற்றிவிட்டு கட்டிலில் படுத்தேன். அப்போதே தூங்கிவிட்டேன். ஆனால் தூக்கத்துக்குள் என் தலைக்கருகே செல்போன் மின்னி மின்னி என்னை அழைத்துக் கொண்டே இருந்தது தெரிந்தது.

நான் விழித்துக் கொண்டபோது பின்னிரவு. மெல்ல எழுந்து அமர்ந்தேன். கண்களை திறந்தபடி இருட்டில் அமர்ந்திருந்தேன். செல் அப்போதுதான் அணைந்தது போல மெல்லிய புன்னகை ஒளியுடன் இருந்தது.

சட்டென்று தீ பற்றிக்கோண்டது போல செல் மீண்டும் மின்னியது. அதை எடுத்தேன். ”ஹலோ” என்றேன்

”அருண்…”

”சொல்லு”

”ஸாரி… எல்லாத்துக்கும் ஸாரி… ப்ளீஸ் என்னை மன்னிச்சிரு…. நான் உன்னை கஷ்டப்படுத்தணும்னு நெனைக்கல்லை. என்னால உன்னை விடமுடியல்லை அருண்… ஏன்னா நான் உன்னை அப்டி விரும்பறேன்… ஐ அம் மேட்லி இன் லவ் வித் யூ…என் மனசை நீ புரிஞ்சுகிடணும்”

”எனக்குத்தெரியும் சந்திரா…”

”நீ இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருந்தே அருண். ரொம்ப ஹோம்லியா… உன்னைப் பாக்கவே ஆசையா இருந்தது”

”ம்ம்”

”நீ எப்பவும் இப்பிடியே சந்தோஷமா இருக்கணும்”

”சரி… தூங்கு… நான் நாளைக்கு வரேன்”

”நோ… இனிமே நீ வரவேண்டாம்… குட்பை அருண்”

”சந்திரா”

செல்போனில் முத்தத்தின் ஒலிகள். ஒரு விம்மல்.. பின் மீண்டும் மெல்லியகுரல் மிக அந்தரங்கமாக– ”குட்பை அருண்” உறவின்போது சொல்வதைப் போன்ற அந்தரங்கம். செல்போனின் கவர்ச்சியே அதுதான் .அத்தனை அந்தரங்கமாக காதில் பேசுவது வேறு எப்படியும் சாத்தியமில்லை.

செல் அணைந்தது. என்ன சொன்னாள்? நான் ஐயத்துடன் அதை எடுத்து அவளை அழைத்தேன். ”தி மொபைல் நம்பர் யூ ஹேவ் டயல்ட் இஸ் சுவிட்ச் ஆ·ப். ப்ளீஸ் டிரை ஆ·ப்டர் சம் டைம்….. நீங்கள் டயல்செய்த எண் சுவிட்ச் ஆ·ப் செய்யப்பட்டுள்ளது”

மீண்டும் மீண்டும். நான் தரைவழி போனில் அழைத்தேன். அதுவும் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

எனக்குள் விம்ம்ம் என்று ரத்தம் மேலேறி மூளையை ஓர் அலைபோல தாக்கியது. வேகமாக எழுந்து சட்டையைப் போட்டுக் கொண்டேன். மெல்ல ஓசையில்லாமல் கதவைத் திறந்து வெளியே வந்தேன் இருளிலேயே நடந்து முன்வாசலை திறந்து மீண்டும் பூட்டிக் கொண்டு வேகமாக வெளியே ஓடினேன். காரை எடுக்கவில்லை. வெளியே ஓடி இருளில் சாலையில் விரைந்தேன்.

ஆளில்லாத சாலையில் ஒரே ஒரு கார் முகவிளக்குகள் சீற தாண்டிச் சென்றது. பாலிதீன் கவர்களும் தாள்கசங்கல்களும் காற்றில் அலைமோதி நிலையழிந்தன. தார்ச்சாலையில் பெட்றோல் சிந்திக் கிடந்த வாசனை… டாக்ஸி ஸ்டான்ட் வரை வேகமாக நடந்தேன். கால் வெளியே தெரிய டிரைவர் தூங்க ஒரு வெள்ளை அம்பாசிடர் டாக்ஸி மட்டும் நின்றது.

அந்தக்காலைத் தொட்டு டிரைவரை எழுப்பினேன். ”சாலிகிராம்” என்றேன். ஆளில்லாத சாலைகள். கைவிடப்பட மாநகரம். வெறுமை வானத்தில் இருந்து இறங்கி நகர் மீது பரவியிருந்தது. சோடியம் விளக்குகள் தரையில் வெறுமையின் வட்டங்களை உருவாக்கியிருந்தன. குற்றவுணர்வுடன் கம்பங்களும் கட்டிடங்களும் பின்னால் நகர்ந்தன.

டிரைவர் மிக மெல்ல ஓட்டுவதுபோல தெரிந்தது. ”கொஞ்சம் வேகமா போங்க” என்றேன்

”வேகமாத்தான் சார் போறேன்”

விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்… சாலிகிராம். தெருக்கள் எல்லாமே அந்த வேளையில் ஒன்றே போலிருந்தன. தெருநாய்கள் ஆட்டுமந்தைகள் போல சாலையில் நிச்சிந்தையாக அலைந்தன. அவள் ஃப்ளாட்டை அடைந்து இறங்கி டாக்ஸியை அனுப்பினேன்.

அபார்ட்மெண்ட்டுக்கு முன் வாட்ச்மேன் இல்லை. கேட் சும்மா சாத்தியிருந்தது. உள்ளே நுழைந்தேன். வாட்ச்மேனும் அவன் குடும்பமும் பார்க் செய்யப்பட்ட கார்கள் நடுவே கொசுவலை கட்டி தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

லிஃப்ட் வழியாக மேலேறினேன். லிஃப்டின் ஒலி அந்த இரவில் உரத்து ஒலிப்பதாகத் தோன்றியது. கதவைத் திறந்து வெளியே வந்தவன் ஒருகணம் சிந்தனை செய்தேன். நவீன் இருப்பான். சந்திராவை மீண்டும் ஒருமுறை அழைத்தேன். அழைப்பு நிராகரிக்கப்பட்டபோது ஒரு நிமிடத்தில் என் அட்ரினலின் உடம்பெங்கும் பதறிப் பரவியது.

மெல்ல காலெடுத்து வைத்து மாடிப்படி ஏறி மொட்டை மாடிக்குச் சென்றேன். ஏராளமான ஏஸி மெஷின்கள் வெம்மையை உமிழ்ந்து கொண்டு முனகிக் கொண்டிருந்தன. காற்றில் கம்பிக் கொடியில் சில ஆடைகள் படபடத்தன. பலவகையான உடைந்த தட்டுமுட்டுச் சாமான்கள். கைப்பிடிச்சுவர்களில் விளிம்பு வழியாகச் சுற்றிவந்தேன். கீழே ஆழத்தில் தெருவும் அங்கே ஒரு காரின் மேல்வளைவும் தெரிந்தது

மழைநீர் குழாயை பிடித்து மெல்ல இறங்க ஆரம்பித்தேன். அங்கிருந்து ஜன்னலின் சன் ஷேடில் குதித்தேன். அதைப்பற்றி தொங்கி மெல்ல ஆடி ஜன்னலில் கால் வைத்து இறங்கிக் கொண்டேன். சந்திராவின் படுக்கையறைச் சன்னல். ஒரு கதவு மூடியிருந்தது. இன்னொன்று விரிசலாக திறந்திருந்தது. அதன் வழியாகப் பார்த்தேன். சந்திரா படுக்கையில் ஒருக்களித்து தூங்கிக் கொண்டிருந்தாள். தலையணைமேல் அவள் கூந்தல் பரவியிருந்தது

நான் ”சந்திரா! சந்திரா!” என்று கிசுகிசுத்தேன். பின்பு மேலும் உரக்க அழைத்தேன். அவள் விழிக்கவில்லை. அந்த நிலையின் தீவிரத்தை என் மனம் உணர்ந்து கொண்டே இருந்தது. எதுவும் நிகழலாம். யார் வேண்டுமானாலும் கண்விழித்து என்னைப் பார்த்து அலறலாம். போலீஸ், அவமானம்….

ஆனால் அப்போது எனக்கு எதுவுமே பொருட்டாக தெரியவில்லை. அத்துடன் இன்னொன்றும் உள்ளது சுசி, நெருக்கடிகளில் திளைத்து மகிழும் ஒரு ஆழ்மனம் நமக்குள் உள்ளது அது இத்தருணங்களைக் கொண்டாடுகிறது.

நான் என் வாட்சை எடுத்து சந்திரா மேல் எறிந்தேன். அது படுக்கையில் தப் என்று விழுந்தது. பின்னர் என் பாக்கெட் டைரியை எடுத்து எறிந்தேன். பின்பு என் இரு ஷுக்களையும் எறிந்தேன். இரண்டாவது ஷு சந்திரா மேலேயே விழுந்தது. அவள் எழவில்லை.

எனக்குள் எழுந்த அச்சத்தை எப்படிச் சொல்வேன்? என் மீது உயர் அழுத்த மின்சாரம் ஓடிச்செல்வது போல ஓர் உணர்வு. சன்னல் கம்பிகளை வளைக்க முயன்றேன். மிக இறுக்கமாக இருந்தன. அசையவில்லை.

ஒப்புநோக்க பாத்ரூம் ஜன்னல் கம்பிகள் மென்மையானவை என்பது ஞாபகம் வந்தது. குடிநீர் குழாய் பதித்த தடம் வழியாக கால்களைப் பதித்து சுவர் விளிம்பை பிடித்துக் கொண்டு மெல்ல நகர்ந்தேன். பாத்ரூம் ஜன்னலில் சாய்வான கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றை மேல்நோக்கி ஒவ்வொன்றாக உருவி எடுத்தேன். அவற்றை வெளியே போட்டால் பெரிய சத்தம் கேட்கும் என்று எண்ணி உள்ளேயே தள்ளி விட்டேன்.

அந்தத் தருணத்தில் நான் மிகமிகக் கூர்மையாக இருந்தேன். என் மனவலிமையும் உடல்வலிமையும் பலமடங்கு அதிகரித்திருந்தன. கண்ணாடிகளை அகற்றியபின் கம்பிகளை பிடித்து வளைக்க முயன்றேன். கம்பிகள் மெல்லியவை என்றாலும் அவை என் பிடிக்கு நிற்கவில்லை. இடும்பு பெல்ட்டைக் கழற்றி அதை கம்பியில் கட்டி அதன் நுனியை காலால் தண்ணீர் குழாயுடன் சேர்த்து மிதித்துக் கொண்டேன். கம்பியை வளைத்ததும் அந்த வளவை பல்லால் இழுத்து பிடித்து அப்படியே நிறுத்திக் கொண்டு மேலும் வளைத்தேன்.

மெல்ல மெல்ல கம்பி நெக்குவிட்டது. பின்பு சன்னலில் இருந்து பெயர்ந்து வந்தது. பின் அடுத்த கம்பி. பின்பு அடுத்தது. உள்ளே செல்லும் வழி ஏற்பட்டதும் பற்றிக்கொண்டு எம்பி உள்ளே நுழைந்தேன். உள்ளே கிடந்த கண்ணாடிகள் மேலேயே குதித்தேன். சலாங் என்று சிதறி மொறுமொறுவென மிதிபட்டன. ஒருகணம் மூச்சுவிட்டேன்.நான் பெரிதாக மூச்சு இரைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

சந்திரா உள்ளே கட்டிலில் கிடந்தாள். சற்று கோணலாக அவள் கிடப்பது போலிருந்தது. கடுமையான வாந்தி வீச்சம். நான் ஓடிப்போய் விளக்கைப் போட்டேன். அறைக்கதவு உள்ளே மூடியிருந்தது. பதற்றத்துடன் அவளை அணுகி மூக்கில் தொட்டுப் பார்த்தேன். மூச்சு ஓடியது. அப்படியே தூக்கி புரட்ட முற்பட்டபோது என் கைகள் திடுக்கிடு வலக அவள் மீண்டும் கட்டிலிலேயே விழுந்தாள். தலையணை முழுக்க ரத்தம். அவள் கழுத்தும் மார்பும் முழுக்க சூடான பச்சை ரத்தம். அது ரத்தத்தின் வாசனைதான்.

[மேலும்]
முந்தைய கட்டுரைசேரன்:விமரிசன அரங்கு
அடுத்த கட்டுரைஅநங்கம் :நிகழ்ச்சி