இணையக்குப்பை
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ.,
வணக்கம்!
உங்கள் பதில் இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை கருத்தில் கொண்டு, சம்பிரதாய பதிலாக அல்லாமல் உண்மையான அக்கறையோடு திடமான அறிவுரைகளுடன் பதில் அளித்ததற்கு நன்றி. மிகுந்த மகிழ்ச்சி.
மூளைச்சுமை… எத்தனை சரியான வார்த்தை! உண்மையில் மூளைச்சுமைதான் உருப்படியான செயல்கள், வாசிப்புகளிலிருந்து பலரையும் விலக்கி வைக்கிறது. அந்தச் சுமையை மேலும் ஏற்றாமல் இருக்க நீங்கள் கூறியிருக்கும் வழிமுறைகளை பின்பற்றுகிறேன். என் நண்பர்களுக்கும் கூறுகிறேன்.
“எந்த மனிதனும் உலகை முழுக்க கவனிக்க முடியாது. எல்லா துறைகளையும் கவனிக்க முடியாது. எல்லாருடனும் விவாதிக்கமுடியாது.” மிகச் சரியாக என் நிலையை புரிந்துகொண்டு நீங்கள் கூறியிருப்பது போல இந்த வார்த்தைகள் இருக்கின்றன. நன்றி…
தங்களின் மதிப்புமிக்க வழிமுறைகளை நானும் பின்பற்ற நேர்மையாக முயல்கிறேன்.
நன்றி
வசந்த்
அன்புள்ள வசந்த்,
’இளமை என்பது மனதில்தான் உள்ளது’ ‘வயது என்பது வெறும் எண்தான்’ இப்படி ஒரு நூறு சொலவடைகள் நம் சூழலில் உண்டு. இவையெல்லாமே சென்ற ஐம்பதாண்டுகளில் உருவாகி வந்தவை. உண்மையில் நம் மரபில் முதுமை என்பது மதிக்கப்பட்டதாக இருந்தது. முதுமையை எவரும் அஞ்சவில்லை. கொஞ்சம் முன்னரே முதுமையை விரும்பினார்கள் என்றுகூட தோன்றுகிறது. முதுமையை மறுக்கும் இந்த மாற்றம் இரண்டு தலைமுறைக்குள் உருவானது.
சரி, முதுமைமறுப்பு மனநிலை ஐரோப்பாவில் இருந்து வந்ததா? இல்லை. அவர்களின் நாவல்களை வாசிக்கையில் முதுமை என்பது அங்கே ஓர் ஏற்புக்குரிய விஷயமாகவே இருந்தது என்றே தெரிகிறது. குறிப்பாக பழைய பிரிட்டனில் முதுமை கௌரவங்களுக்கான தகுதிகளில் ஒன்று.
அப்படியென்றால் அந்த மனநிலை எப்போது உருவானது? நுகர்வுக்காலகட்டம் உருவானபின்னர்தான். வாழ்க்கை என்பது நுகர்வின் களியாட்டம் மட்டுமே என இன்றைய நவமுதலாளித்துவம் கற்பிக்கிறது. வகைவகையான பொருட்களை வாங்கிக்குவிப்பதே வாழ்க்கை என அது கூறுகிறது. அப்படி வாங்கி நுகர்வதற்கு இளமை தேவை. வாங்குவதற்குரிய பொருளை ஈட்டும் உழைப்புக்கும் இளமை அவசியம். ஆகவே இளமையே வாழ்க்கை என அது கட்டமைக்கிறது.
இளமை அகன்றால் ஒருவர் நுகர்வுக்கு தகுதியற்றவர் ஆகிறார். உழைத்துச் செலவு செய்யும் நிலையை இழக்கிறார். ஆகவே நுகர்வுச்சமூகத்தில் முதியவர் ஒரு அதிகப்பற்று. பொருளற்ற ஓர் இருப்பு. அவருக்கு மதிப்பில்லை. ஆகவேதான் இன்று ஒவ்வொருவரும் இளமையாக இருக்க முயல்கிறார்கள். முதுமையை தள்ளிப்போடுகிறார்கள். முதுமை வந்தபின்னரும் ‘நான்லாம் இன்னும் யூத்து’ என்று பாவலா காட்டுகிறார்கள். இது நம் சமூகம் கட்டமைக்கும் மனநிலை.
கூடுதலாக இன்னொன்றும் உண்டு. இளமையில் வாழ்க்கையை இனிமையாக வாழாதவர்களே நம்மில் பலரும். மெய்யாக அவர்களின் அகம் விரும்பும் இன்பங்களை அடைந்ததில்லை. இளமைக்குரிய இன்பங்கள் அனைத்தையும் படிப்பு, வேலை, குடும்பம் என தவிர்த்துக்கொண்டே வந்திருப்பார்கள். எதிர்காலம் பற்றிய பதற்றம் என்பது இந்தியாவின் பொது மனநிலை. நமக்கு இன்று இல்லை, நாளை மட்டுமே சிந்தனையில் உள்ளது. நாளைக்கு நாளைக்கு என வாழ்ந்து வந்த ஒருவர் ஒரு கணத்தில் இனி அதிக நாள் இல்லை என உணர்கிறார், இளமையை இழந்துவிட்டதாக உணர்கிறார். அவர்தான் செயற்கை இளமையை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார்.
ஒவ்வொரு அகவைக்கும் அதற்குரிய இன்பங்கள் உண்டு. சிறுவர்களாக இருக்கையில் அதற்கான கொண்டாட்டங்கள் பல உள்ளன. ஆனால் இன்று நம் குழந்தைகளுக்கு அவற்றை மூர்க்கமாக மறுக்கிறோம். படிப்பு தவிர எதுவுமே அவர்களுக்கு இல்லை. அவர்களின் வாழ்க்கையே எதிர்காலத்துக்கான பயிற்சி மட்டும்தான். நான் இளைஞர்களிடம் பேசும்போது அவர்கள் வாழ்க்கையில் ஒரு திருவிழாவைக் கூட பார்த்ததில்லை என்று கண்டிருக்கிறேன். காட்டில் அலைந்ததில்லை. சுதந்திரமாக விளையாடியதில்லை. இனிய பயணங்கள் இல்லை. அந்த அகவையில் பெரும் உள எழுச்சியை அளிப்பது வாசிப்பு. நாமே நம் இலக்கிய ஆசிரியர்களைக் கண்டடைவது. அது அறவே இல்லை.
அப்படியே இளமைப்பருவம். இளமைப்பருவம் சாகசமும் கற்பனாவாதமும் கொப்பளிப்பது. பயணங்கள், நண்பர்களுடனான கொண்டாட்டங்கள், காதல் ஆகியவை இளமையின் இன்பங்கள். தன்னுடைய செயற்களத்தை கண்டடைதல், தனக்கான தளத்தில் தொடக்ககால வெற்றிகளை அடைதல், தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியவையே இளமையின் பேரின்பங்கள். நம் இளைஞர்களுக்கு இவை எதுவுமே இல்லை.
நம் இளைஞர்கள் அப்பருவத்தை இரண்டுவகையில் வீணடிக்கிறார்கள். ஒன்று, எதிர்காலம் பற்றிய மிதமிஞ்சிய பதற்றத்தால் படிப்பு, வேலை, சேமிப்பு என கட்டுப்பெட்டித்தனமாகவே இருந்துவிடுகிறார்கள். இதற்கு ஒரு அழகான சொல்லாட்சியை அண்மையில் ஒரு நண்பர் சொன்னார் – juvenile uncle. இன்னொரு சாரார் அந்தக் காலகட்டத்தை கொண்டாடுவதாக எண்ணிக்கொண்டு குடிபோன்றவற்றில் செலவிட்டு அழிக்கிறார்கள்.
உரிய முறையில் இளமையைக் கொண்டாடியவர்களுக்கு அடுத்த கட்டமான நடுவயது மேலும் இனியது. அவர்கள் நீடித்த அழகிய நட்புச்சுற்றம் கொண்டிருப்பார்கள். நல்ல உறவுகள் கொண்டிருப்பார்கள். அத்துடன், அவர்கள் தங்களுக்கான செயற்களத்தைக் கண்டடைந்திருப்பார்கள். அங்கே சாதனைகளைச் செய்திருப்பார்கள். மேலும் பெரிய கனவுகளை அங்கே அடைந்து அவற்றை நோக்கி முழுமூச்சாகச் சென்றுகொண்டிருப்பார்கள்.
அப்படி நடுவயதை அடைந்தவர்கள் தங்களை இளைஞர்கள் என ஒருபோதும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அதற்கான தேவை இல்லை, காரணம் அவர்கள் நடுவயதின் மகிழ்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறார்கள். அத்துடன் இளைஞர்கள் என தங்களைக் காட்டிக்கொள்வது என்பது தங்கள் அனுபவம் அளிக்கும் தகுதியை நிராகரிப்பதாகும்.
முதுமை பொருளில்லாதது அல்ல. நுகர்வுச்சமூகம் சொல்லும் அந்த வரையறையை நாம் ஏற்றாகவேண்டியதில்லை. முதுமைக்கு அதற்குரிய இன்பங்கள் உண்டு. முதுமையில் ஒருவருக்கு நீண்டகால நல்லுறவுகளும், நல்ல குடும்பமும் இருந்தால் அவர் இளமையையும் நடுவயதையும் நன்கு வாழ்ந்திருக்கிறார் என்று பொருள். இன்று மானுட ஆயுள் நீளமானது. அறுபது வயதில் பணி ஓய்வு பெறுபவர் மேலும் இருபதாண்டுகளாவது ஆரோக்கியத்துடன் வாழ்கிறார். ஆகவே அதன்பின் தனக்கான அடுத்த செயற்களத்தை ஒருவர் கண்டடையவேண்டும். முந்தைய செயற்களத்தில் ஒரு புதிய நகர்வாக அது இருக்கலாம். அல்லது முற்றிலும் புதிய ஒன்றாக இருக்கலாம்.
உண்மையில் முதுமையில் செயலுக்கான புதிய வாய்ப்புகள் மிகுதி. பொருளியல் சார்ந்த பதற்றங்கள் இல்லாமல் விரும்பியதைச் செய்ய அப்போது வாய்ப்பு அதிகம். முந்தைய காலகட்டங்களில் இருந்த குடும்பச் சுமை, சமூகப்பார்வையின் அழுத்தம் போன்றவற்றை முற்றாக உதறிவிடலாம். அதுவரை ஒத்திவைத்தவற்றை எல்லாம் செய்யலாம்.
வாழ்க்கை ஒவ்வொரு பருவத்திலும் அதற்கான இனிமைகளை வைத்துள்ளது. அந்தந்தப் பருவத்தில் அவற்றை அடைவதே சரியான வாழ்க்கைமுறை. இழந்தவற்றை திரும்பச் சென்று அடைய முடியாது. இளமையை பாவனை செய்பவர் பரிதாபத்துக்குரியவர். அவர் ஒவ்வொரு கணமும் நடிக்கிறார், மெய்யான எதையும் அடைவதில்லை.
ஜெ