சைவ சித்தாந்தம் பற்றிய கல்வியை நீங்கள் அளிப்பதைப்பற்றி படித்தேன். ஒரு நவீன சிந்தனை அறிமுகம் செய்யும் இடத்தில் மதக்கல்வி அளிப்பது என்பது பிற்போக்கான சிந்தனைகளுக்கு இடமளிக்கும் என நீங்கள் உணரவில்லையா? இது பெருவாரியான மக்களை கவரும் ஜனரஞ்சக செயல்பாடு அல்லவா?
சந்திரகுமார்
அன்புள்ள சந்திரகுமார்,
ஒன்று, இது ஜனரஞ்சக நிகழ்வு அல்ல. மிகக்குறைவானவர்களே இதில் பங்குகொள்கின்றனர். 10 கோடி தமிழர்களில் இருந்து 30 பேர். அவர்கள் அப்படிக் கற்பதனால் மிச்சமிருப்பவர்கள் பிற்போக்காக ஆகிவிடமாட்டார்கள் என நம்புகிறேன்.
இரண்டு, இது மதக்கல்வி அல்ல. மத ஆசாரங்கள், நம்பிக்கைகள் கற்பிக்கப்படுவதில்லை. வலியுறுத்தப்படுவதுமில்லை. சைவ சித்தாந்தமெனும் தத்துவமே கற்பிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உருவானது சைவ சித்தாந்தம். உலகளவில் முக்கியமான தத்துவக்கொள்கை. ஐரோப்பாவில் பிறந்த ஒருவர் சாக்ரடீஸை தெரியாது என்பதுபோலத்தான் தமிழகத்தில் பிறந்த ஒருவர் மெய்கண்டாரை அறியமாட்டார் என்பது. பேதமையின் உச்சம்.
சைவசித்தாந்தம் மதக்கல்வியாக அளிக்கப்படுவதுண்டு. அதன் தத்துவம் மட்டும் அனைவருக்குமாகக் கற்பிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதை மதம் என , ஆன்மிகம் என எண்ணி ஒழுகுபவர்கள் அக்கல்வியில் இருந்து மேலே செல்லலாம். தமிழ் நிலம் உருவாக்கிய மானுட தத்துவம் என கற்பவர்கள் அவ்வாறு அதைக் கற்கலாம்.
கற்பிப்பவர் என் நோக்கில் இன்று தமிழகத்தில் இதைக் கற்பிக்கும் முதன்மைத் தகுதிகொண்ட பேராளுமை. சாந்திகுமார அடிகள் இலவசமாகவே இதைக் கற்பிக்கிறார். இதன்பொருட்டு வந்து அமர்ந்து கற்பிக்கிறார். அவருடைய வகுப்புகளை ‘மின் அதிர்வு’ என பங்குபெற்றோர் கூறினர். மிகவிரிவான முழுமையான சித்திரத்தை மிகமிகச் சுவாரசியமாக கற்பித்தார். நவீன இலக்கியம், சிந்தனைகளில் படிப்பு கொண்ட ஒருவரின் வகுப்பு இது.
(சாந்திகுமார அடிகள் நடத்தும் இரண்டாவது சைவசித்தாந்த வகுப்பு.நாள் அக்டோபர் 25, 26 மற்றும் 27 (வெள்ளி சனி ஞாயிறு) ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் தொடர்புக்கு [email protected] )
இந்த வகுப்பு ஒரு நாநூறு பக்க நூலுக்கு நிகர். ஓர் ஆசிரியரின் அருகமர்ந்து, ஐயம்களைந்து கற்கும் போதன்றி தத்துவம் புரிவதில்லை. அதற்கான வாய்ப்பு இன்று தமிழகத்தில் வேறில்லை. அப்படி ஒரு வகுப்பு இல்லை என ஆகக்கூடாது என்றே இதை தொடங்கினேன்.
நான் இதை தொடங்கியபோது ஓரளவு ஆதரவு இருக்குமென எண்ணினேன். ஆனால் மரபான சைவநம்பிக்கையாளர்களுக்கு தோஷம், பரிகாரம், சாமிகும்பிடுதல் ஆகியவற்றிலன்றி தத்துவத்தில் ஆர்வமில்லை. நம்மவர் வீண்பேச்சுக்கு, உதிரிச்செய்திகளுக்கு அளிக்கும் இடத்தை முறையான கல்விக்கு அளிப்பதில்லை. வெறும் பக்தி- அது கடவுளோ மனிதனோ ஏதோ ஒன்றின்மேல்- நம்மவருக்கு பிடித்தமானது. மிகமிக எளிமையான அறிவாக இருக்கவேண்டும். அதுவும் இலவசமாக இல்லம்தேடி வந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் நாம்.
தத்துவம் கற்கும் இளைஞர்கள், வாசிக்கும் வழக்கம்கொண்டவர்கள், எழுத முற்படுவோர் வந்து கற்பார்கள் என எண்ணினேன். அனேகமாக எந்த எழுத்தாளரும் ஆர்வம் காட்டவில்லை. இளைஞர்களின் ஆர்வமும் குறைவே. நிதியிழப்பிலேயே இவ்வகுப்புகள் இன்று நிகழ்கின்றன.
இது எண்ணியதும்கூடத்தான். இன்றைய நம் மனநிலையில் முறையான அறிவுக்கு இடமில்லை. கற்றலுக்கு ஆர்வமுடையோர் மிக அரியோர். வள்ளலாரே ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என வருந்திய நாடு இது.
நடுவே உங்களைப்போன்றவர்களின் கடிதங்கள். ஆனால் சோர்வுறுவது என் இயல்பல்ல. எடுத்ததை தொடர்வதே என் வழக்கம். எச்செயலுக்கும் அதன் தீவிரமே அளவு. அச்செயல் வீணாவதில்லை.
ஜெ