விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை
அனைத்துமத மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு விவேகானந்தர் சிகாகோவுக்கு வருவதற்கு முதன்மைக் காரணம் யார்? உடனே நம்மில் பலரும் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி என்றுதான் சொல்லக் கற்றிருப்போம். எப்போதுமே வரலாறு அப்படித்தான் கொஞ்சம் சாய்வுகளுடன் மட்டுமே சமைக்கப்படுகிறது. விவேகானந்தர் இந்து மதத்தின் பிரதிநிதியாக அந்த மாநாட்டில் கலந்துகொள்ளலாம் என்னும் எண்ணம் முதன்முதலில் ஒரு தமிழர் மண்டைக்குள் தோன்றியது. உலகின் தொன்மையான வாழும் மதத்தின் பிரதிநிதியாக முப்பது வயதுகூட ஆகாத ஓர் இளைஞரை அனுப்பலாமென ஒருவருக்குத் தோன்றியது ஒரு வரலாற்றுத் திருப்புமுனைச் சந்தர்ப்பம்.
அந்த எண்ணம் தோன்றியது அளசிங்கப்பெருமாள் என்னும் தென்கலை வைணவரின் எண்ணத்தில். புகழ்பெற்ற மண்டையம் குடிமரபில் தோன்றியவர். இந்தியா இதழை நடத்திய மண்டயம் சகோதரர்களின் உறவினர். (அளசிங்கர் இல்லையென்றால் விவேகானந்தர் இல்லை. பிரபுத்தபாரதம் இதழ் இல்லை. அளசிங்கர் பற்றிய தமிழ்விக்கி பதிவுடன் விக்கிபீடியா பதிவுகளை ஒப்பிட்டுப்பார்க்கலாம். தமிழ்விக்கி போன்ற ஒரு தளம் ஏன் தேவை என்பது புரியும்). அளசிங்கர் விவேகானந்தருக்கு நிதி திரட்டி அளித்தார். விவேகானந்தர் அங்கே சென்றபின்னரும் நிதியளித்தார்.
விவேகானந்தர் சிகாகோ செல்ல இரண்டாவது காரணம், இஸ்லாமியரான ஹைதராபாத் நைஜாம். இதை இன்றைய மதவெறிச்சூழலில் சொல்லிக்கொண்டே இருந்தாக வேண்டும். அன்றைய ஆட்சியாளர்களை இன்றைய அரசியலை வைத்துப் புரிந்துகொள்ள முயல்வது அபத்தம். நைஜாம் இஸ்லாமியர்தான், ஆனால் அவர் தன் அரசின் கீழிருந்த இந்துக்களுக்கும் மன்னர்தான். ஆகவே ஓர் இந்துத்துறவிக்கு உதவிசெய்வது அவருக்கு தன் கடமை என்று பட்டது. அவருடைய நிதி இல்லையேல் விவேகானந்தர் சிகாகோ சென்றிருக்க மாட்டார். இந்திய வரலாற்றின் ஒளிமிக்க ஒரு பக்கம் தொடக்கம் கொண்டிருக்காது.
இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் ஒளிமிக்க முகம் விவேகானந்தர். இந்திய தேசிய இயக்கத்தின் தொடக்கப்புள்ளி அவரே. இன்றைய இந்தியாவின் கருத்தியல் விதை அவருள்ளத்தில் உருவானதே. அவரை உலகறியச் செய்தது சிகாகோ மாநாடு. அமெரிக்கா மதித்ததனால்தான் அவரை இந்தியா மதித்தது. இந்திய இளைஞர்களின் முகமாக, முன்னுதாரணமாக அவர் ஆனார். இந்தியா இளைஞர்களினூடாக தன் ஆயிரமாண்டுக்காலத் துயிலில் இருந்து விழித்தெழுந்தது. இந்தியாவின் மேல் உதித்த இளங்கதிரவன். நம் காலகட்டத்தில் மீண்டும் தோன்றிய சங்கரன். அவருக்கு அத்தொடக்கத்தை அளித்தவர்கள் அளசிங்காவும் நைஜாமும்தான்.
அளசிங்கர் முதலில் பாஸ்கரசேதுபதி உதவியையே நாடினார். அவர் 400 ரூபாய் அளிப்பதாக வாக்களித்தார். விவேகானந்தரை அமெரிக்கா அனுப்புவதற்கான நிதி மற்றும் பிற ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஒரு குழு அளசிங்கப்பெருமாளால் உருவாக்கப்பட்டது. அவர் அதன் தலைமைப்பொறுப்பை வகித்தார். அளசிங்கப்பெருமாள் வீடுவீடாகச் சென்று நிதி திரட்டி ரூ 500/- சேமித்தார். ஆனால் காயஸ்தரான விவேகனந்தருக்கு உதவுவது இந்துமதத்துக்கு மாறானது என அவருக்கு ஆலோசனை சொல்லப்பட்டது. ராமநாதபுரம் சேதுபதி அரசர் பின்வாங்கவே விவேகானந்தர் அமெரிக்கா செல்லமுடியாத நிலை உருவானது. திரட்டப்பட்ட நிதி திரும்ப அளிக்கப்பட்டது.
அதன்பின் விவேகானந்தர் ஹைதராபாத் சென்றார், ஹைதராபாத் நைஜாம் ரூ 1000/- அளிப்பதாக ஒப்புக்கொண்டார். விவேகானந்தர் அமெரிக்கா செல்லும் திட்டம் மீண்டும் உயிர்பெற்றது. அளசிங்கப்பெருமாளும் தோழர்களும் மீண்டும் நிதிதிரட்டி ரூ 4000/- சேமித்தனர். சேதுபதி மன்னர் அப்போது முன்பு வாக்களித்த தொகையை அளித்தார். அந்தத் தொகையுடன் விவேகானந்தர் மும்பையில் இருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில் பயணமானார். அவரை வழியனுப்பி வைக்கும்பொருட்டு அளசிங்கப்பெருமாள் விவேகானந்தரின் மாணவர் ஜக்மோகனுடன் மும்பை சென்றார். இதுதான் வரலாறு.
சிகாகோ அருங்காட்சியகத்துக்கு 2009 நண்பர் சிறில் அலெக்ஸுடன் வந்திருந்தேன். விவேகானந்தர் பேசிய கூடத்தை காண விழைந்தேன். ஆனால் அன்று அதை பழுதுபார்ப்பதற்காக பூட்டி வைத்திருந்தனர். பார்வையாளர் அனுமதி இல்லை என்றனர். சிறில் அலெக்ஸ் நான் இந்திய எழுத்தாளர் என அறிமுகம் செய்தார். அந்தச் சொல் வேலைசெய்தது- ஏனென்றால் அமெரிக்கா அடிப்படையில் அறிவின் நிலம். இதை திரும்பத் திரும்ப சொல்லி வந்துள்ளேன். தனி அனுமதி பெற்று எனக்கு அந்த கூடத்தை திறந்து காட்டினார்கள்.
இப்போது அந்தக் கூடம் செம்மை செய்யப்பட்டுள்ளது. ஆச்சரியமான விஷயம் அந்தக்கூடம் விவேகானந்தர் நினைவுக்கூடமாகவே அப்படியே மாற்றமின்றிப் பேணப்படுகிறது என்பது. (இந்தியாவில் எங்கும் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை) 1893ல் அன்று அந்த அரங்கிலே பேசியவர்களில் அவரே இளையவர். அவர் பிரதிநிதித்துவம் செய்த மதம் அன்று பரவலாக அறியப்படாததும்கூட. அந்த மேடையில் புகழ்மிக்கவர்கள், பெரும்பதவிகளில் இந்த மதகுருக்கள் இருந்தனர். ஆனால் இன்று வரலாறு அந்தமேடையை அவருடையது மட்டுமென ஆக்கியுள்ளது.
அமெரிக்க அந்நினைவைக் கொண்டாடுகிறது. சிகாகோவின் அந்த மிகத்தொன்மையான அருங்காட்சியகம் இருக்கும் அச்சாலைக்கே அவர் பெயர்தான் போடப்பட்டுள்ளது. அருங்காட்சியகப் படிகளில் அவருடைய அந்த புகழ்பெற்ற உரையை வண்ண எழுத்துக்களில் மின்னச் செய்துள்ளனர். அவருடைய அரங்கு இருக்கும் வழியில் அந்த அரங்கே அவருடையது என்று பதிவுசெய்துள்ளனர். அவருடையதென்றே அப்பகுதி அறியப்படுகிறது.
ஆம், வங்கத்துக்கு அடுத்தபடியாக அமெரிக்கா அவரை சொந்தம் கொண்டாடலாம். அவர் அமெரிக்காவின் உருவாக்கமும் கூட. மானுடசமத்துவ எண்ணங்கள் ஓங்கியிருந்த, உலகின் விடுதலைக்குரலாக ஒலித்த, எமர்ஸனின் மண்ணின் ஆதரவு இல்லையேல் விவேகானந்தர் இல்லை. அவருடைய மடங்கள் முழுக்க அமெரிக்காவின் கொடையால் உருவானவை. காந்தியைப் போல அமெரிக்க ஊடகங்களால் இந்தியாவுக்கு அடையாளம்காட்டப்பட்ட ஆளுமை விவேகானந்தர்.
விவேகானந்தரின் கூடத்தில் ஐந்து நிமிடம் அமைதியாக அமர்ந்திருந்தேன். இந்தியாவில் இருந்து அமெரிக்கா நோக்கி வந்துகொண்டே இருக்கிறார்கள். விவேகானந்தர் முதல் நித்ய சைதன்ய யதி வரை. நித்யாவின் குருகுலங்களும் அமெரிக்க உருவாக்கமே. அவருடைய ஆளுமையே ஒருபகுதி அமெரிக்காவின் சிருஷ்டிதான். நித்யா வாழ்ந்த போர்ட்லாந்த் பல்கலைக்கழக அறையிலும் இதே பேரமைதியை நான் உணர்ந்திருக்கிறேன்.
இன்று நானும் அமெரிக்கா நோக்கித்தான் வந்திருக்கிறேன். மிகமிக எளியவன். மிகச்சாதாரணமான குரல். இன்றைய அமெரிக்காவின் கலங்கிய அரசியலுக்குள் என் மெல்லிய குரலைக் கேட்கவும் சிலர் இருந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்பி சில செய்யமுடிகிறது. பூன் முகாமுக்கு எமர்சன் பெயரை சூட்டியபோது அந்த வினா எழுந்தது. ஏன் எமர்சன்? ஏனென்றால் அவர் உருவாக்கிய இலட்சியவாதத்தில் இன்றும் நிலைகொள்ளும் ஓர் அமெரிக்கா உள்ளது. வெளித்தெரியாதது, ஆனால் ஆழமானது. அதைநோக்கியே இந்தியா என்றும் பேசிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் வெளிவந்து அந்தப்படிகளில் ஒளிர்ந்த அவருடைய சொற்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்மேல் மனிதர்கள் ஏறிச்சென்றுகொண்டே இருந்தனர். அதுவே ஒரு குறியீடு போல் தோன்றியது. நண்பர்களிடம் அளசிங்கப்பெருமாள் பற்றி, விவேகானந்தரின் அமெரிக்க வருகை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.
இரண்டுநாட்கள் கழித்து சிகாகோவில் இருந்து மிஷிகன் சென்றிருந்தபோது ஒரு நண்பர் சந்திப்பில் ஒருவர் ‘விவேகானந்தரின் சாவில் மர்மம் உண்டு என்கிறார்களே சார்’ என்று ஒரு கேள்வி கேட்டார். அண்மையில் இந்துத்துவ அலை அதிகாரம் அடைந்தபின் விவேகானந்தருக்கு எதிரான காழ்ப்புகள் அந்தத்தரப்பில் இருந்தும் உருவாகி வந்து வாட்ஸப்பில் சுழல்கின்றன. இந்துத்துவ தரப்பு விவேகானந்தரை முகமென முன்னிறுத்தி வென்றது. ஆனால் இன்று அதற்குள்ளே ஒரு பிராமணிய உள்வட்டம் அவரை நிராகரிக்கும், அவமதிக்கும் குரலுடன் வலுவாக நிலைகொள்கிறது.
நான் சொன்னேன். விவேகானந்தர் சர்க்கரை நோய் கொண்டிருந்தார் என இன்று அவரை பற்றிய குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அவர் தன்னை சமூகப்பணியாளராக எண்ணியவர் அல்ல. அவர் சமூகப்பணி ஆற்றவந்தது கண்கூடாக இந்தியப் பெரும் பஞ்சங்களை கண்டதனால் மட்டுமே. புறப்பணிகள் ஒரு வகை வீழ்ச்சி என நினைக்கும் தூய அத்வைதிதான் அவர். தன்னை அவர் யோகி என்றே எண்ணினார். ஒரு கட்டத்தில் தன் புறப்பணிகள் முடிந்துவிட்டன என அவர் உணர்ந்தார். அதன் பின் தன்னுள் ஒடுங்கிக்கொண்டார். அதுதான் அவருடைய இறுதிக்காலம்.
விவேகானந்தருக்கு எதிரான பொதுவான எதிர்ப்புகள் அவருடைய உதிரிவரிகளை பிய்த்துப்போட்டு, விளக்கி உருவாக்கப்படும் காழ்ப்புகள். அவை பெரும்பாலும் மதக்காழ்ப்புகள்தான். அவர் இந்திய- இந்து மறுமலர்ச்சியின் ஊற்றுமுகம். ஆகவே அதற்கு எதிரான சக்திகளுக்கு அவர் என்றும் எதிரியே.
ஆனால் இன்னொரு வலுவான காழ்ப்புத்தரப்பு உண்டு. அது சாதி சார்ந்தது. இந்தியா- இந்துமதம் என்பதே பிராமணர்களின் உடைமை என்று எண்ணும் ஒரு பெரிய வட்டம் இங்குண்டு. ஆசாரவாதிகள், சாதியவாதிகள், பழமைவாதிகள். அவர்கள் விவேகானந்தரை அன்றும் இன்றும் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. ஒரு இடைநிலைச்சாதியினரான காயஸ்தர் இந்து மதத்தின் முகம் என ஆனதை அவர்களால் ஏற்கவே முடிந்ததில்லை. அத்துடன் விவேகானந்தர் ஆசாரங்களுக்கு எதிரானவர், அத்வைதி- ஒருவகையில் அனாசாரவாதி. வாழ்ந்தகாலத்திலேயே சாதியவாதிகள் அவரை நேருக்குநேர் அவமதித்துள்ளனர். அவரே அதையெல்லாம் எழுதியிருக்கிறார். நீண்டநாள் வாழ்ந்திருந்தால் காந்தியைப்போல அவரையும் அவர்கள் கொன்றிருக்கக்கூடும். ஆசாரவாதியான அளசிங்கா இல்லையென்றால் விவேகானந்தர் இல்லை என்பது எத்தனை உண்மையோ அதற்கிணையான உண்மை இது.
இன்று எல்லாப் பக்கமும் நாம் சிறுமைகளுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறோம். இன்றைய உலகமே அப்படித்தான் உள்ளது. சென்ற நூற்றாண்டில் மானுடமேன்மைகள் பேருருக்கொண்டெழுந்தன. மாமனிதர்கள் உருவானார்கள். இன்று அதேபோல மானுடச்சிறுமைகள் எங்கும் பல்லாயிரம் தலைதூக்கி நின்றுள்ளன. இன்று நாம் செய்யக்கூடுவது அந்த மாமனிதர்களின் நினைவைக் கொண்டு, ஒரு கைவிளக்கென அவர்களின் சொற்களை ஏந்திக்கொண்டு, இந்த காலகட்டத்தை கடந்துசெல்வதுதான். ஒரு தொடர்ச்சியை நிலைநாட்டுவது மட்டும்தான்.
அந்தக் கூடத்தில், அந்த குளிரின் அமைதியில் அமர்ந்து, வேண்டிக்கொண்டேன். ‘எளியவனாகிய என் சொற்களும் இங்கிருக்கட்டும்’
https://vivekanandaabroad.blogspot.com/2014/09/the-art-institute-of-chicago-1893.html
https://www.artic.edu/swami-vivekananda-and-his-1893-speech