முகநூலில் வாழ்தல், தமிழ்ப்பணிகள்…

ஜெ,

வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் பற்றி கூகிளில் தேடினேன். ஓர் ஆய்வுக்காகத் தேவைப்பட்டது. (நான் சைவம் சார்ந்த ஆய்வுகளைச் செய்து வருகிறேன்)  கூகிள் முதலில் தமிழ்விக்கியை காட்டியது. அந்த பதிவின் முழுமை என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் காணாத படங்களுடன் மிக விரிவான பதிவு. அவருடைய முழு வரலாறே அதில் இருந்தது. அவருடைய பங்களிப்பு மிக அற்புதமாக வரையறை செய்யப்பட்டிருந்தது. அவர் கால்நடை சார்ந்த எழுத்துக்கும் தமிழில் முன்னோடி என்பது எனக்குப் புதிய செய்தி.

அந்த பதிவிலுள்ள அவருடன் சம்பந்தப்பட்ட பல்வேறு அறிஞர்களுக்கு இணைப்புகள் இருந்தன. அதன் வழியாக அந்தக் காலகட்டத்தையே முழுமையாக அறிய முடிந்தது. அந்த பதிவின்கீழ் உள்ள இணைய இணைப்புகள் வழியாக நான் இணையத்திலுள்ள மூலநூல்களை வாசித்தேன். கிட்டத்தட்ட முழு ஆய்வையே தமிழ்விக்கி வழியாகச் செய்ய முடிந்தது. தமிழ்விக்கி ஆசிரியர்கள் ஒரு முழுமையான ஆய்வைச் செய்துள்ளனர் என்று அறிந்தேன். என் மனமார்நத வாழ்த்துக்கள்.

இந்தப்பெருமுயற்சி தொடங்கியபோது இதை கேலியும் கிண்டலும் செய்து பேசியவர்களில் நானும் ஒருவன். அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரவே இக்கடிதம். உண்மையில் இப்படி ஒரு பெரிய நோக்கமும், திட்டமும் உள்ளது என்று எனக்கெல்லாம் தெரியாது. எங்கள் மூளை அவ்வளவு விரியவில்லை. அன்று என்னுடன் சேர்ந்து கிண்டலடித்து, வசைபாடி எழுதிய பலர் இன்றைக்கு தமிழ்விக்கியை நம்பியே பாதி ஆய்வுகளைச் செய்கிறார்கள். ஆனால் அதே கிண்டலையும் தொடர்கிறார்கள். தமிழ் விக்கி பற்றி எவரெல்லாம் வசைபாடினார்களோ அவர்களை எல்லாம் பதிவுசெய்திருக்கிறீர்கள். அவர்கள் தமிழ் விக்கியை வசைபாடினர் என்பதையும் பதிவுசெய்யவேண்டும். வரலாறு அடுத்த தலைமுறைக்கும் தெரியட்டும்.

சிவராஜ் கோமதிநாயகம்

*

அன்புள்ள சிவராலஜ்,

எந்த ஒரு திட்டமும் முதலில் எதிர்ப்பை சந்திப்பது இந்திய வழக்கம்- தமிழகத்தில் இன்னும் அதிகம். காரணம் தீவிரமாகச் செய்யப்படும் ஒரு செயல் தீவிரம் அற்ற பலரை சாதாரணமானவர்களாக காட்டிவிடுகிறது. அத்துடன் தமிழ்ச்சூழலில் அரசியல் சார்ந்து ஒருங்கிணைந்துள்ள ஒரு அல்லக்கைக்கூட்டம் உண்டு. அவர்களின் நிரந்தரக் காழ்ப்புகளை எவரானாலும் சந்தித்தே ஆகவேண்டும்.

என்னுடைய வருத்தம் வேறு. இரவுபகலாக முகநூலில் வம்பளந்துகொண்டே இருப்பவர்களில் கொஞ்சம் வாசிக்கக்கூடியவர்களும் சிலர் உண்டு. அவர்கள் இப்படி ஏதேனும் ஒரு சிறு தொடர்செயல்பாட்டையாவது செய்யலாமே ? இந்த வம்புகளால் அவர்கள் தங்களைத்தாங்களே அவமதிக்கிறார்கள் என்பது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை?

இரண்டு காரணங்களை அவர்கள் சொல்வார்கள். ஒன்று, தாங்கள் நம்பும் அரசியலுக்காக, அல்லது சமூகக்காரணங்களுக்காக அங்கே கருத்துப்போர் செய்கிறார்கள். இது எவ்வளவு பொய் என அவரவர் அகத்துக்கே தெரியும். அரசியலுக்கும் இங்கே பேசப்படும் கருத்துக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதன் கணக்கும் வழியும் வேறு. சமூகக்காரணங்களுக்காக ஒருவரோடொருவர் பூசலிடுவதில் எந்த பொருளும் இல்லை. அதைச் செய்வதற்கான களமே வேறு.

இரண்டாவது காரணம், பொழுதுபோகிறது என்பது. உண்மையில் இந்த வகையான வெட்டிப்பொழுதுபோக்கு என்பது நம்மைப்பற்றி நமக்கே எரிச்சலைத்தான் உருவாக்கும். ஒவ்வொரு முறையும் நாம் எரிச்சலுடன் மட்டுமே எஞ்சுவோம். ஆக்கபூர்வமான செயல் அளிக்கும் நிறைவுபோல உண்மையான ‘கேளிக்கை’ வேறில்லை.

மிகச்சிறிய அளவிலேனும் எதையாவது செய்யலாமே. தமிழ்விக்கி பதிவு போடும் நண்பர்களும் அலுவலகம் செல்பவர்கள்தான். சிலர் மிகக்கடுமையான பணிச்சூழலில் இருப்பவர்கள். சுயதொழில் செய்பவர்கள். அவர்கள் தங்கள் பணிக்கு நடுவே இந்த ஆய்வையும் எழுத்தையும் செய்கிறார்கள். அவர்களின் மனநிறைவை அதிலிருந்தே அடைகிறார்கள்.

தமிழ்விக்கியை வசைபாடியவர்கள் மேல் அன்றுமின்றும் எனக்கு பரிதாபம்தான். எதையாவது செய்யுங்கள் என்றுதான் அவர்களிடமும் சொல்ல விரும்புகிறேன். அப்படி ஏதாவது நீடிப்பதாகச் செய்தால்தான் மெய்யாகவே வாழ்வதன் மனநிறைவை அடைவார்கள். முகநூல் வம்புகள் வழியாக அவர்கள் ஈட்டிக்கொள்வது தங்களைப் பற்றிய தங்களுடைய இழிமதிப்பைத்தான்.

ஜெ

 

 

முந்தைய கட்டுரைசிவானந்தஜோதி
அடுத்த கட்டுரைகீதையை அறிதல்-5