எமர்சன் முகாம், கடிதம்

பூன் முகாம், கடிதம்

அறிவுநிலம் பூன் குன்று

அமெரிக்கா: கனவுகள், திட்டங்கள்…

அன்புள்ள ஜெயமோகன்

நலமே விழைகிறேன். சென்ற வருடம் நீங்கள் அமெரிக்கா வந்தபொழுது ஒருநாள் முழுவதும் சான் ஆன்டோனியோ நகரில் உங்களுடன் சுற்றும் பெருவாய்ப்பு சௌந்தர் சாரால் கிடைத்தது. “சார், பயங்கரமா இளைச்சுடீங்களேஎன்றதற்கு பெரிய சிரிப்புடன்அப்படியாஎன்று பின் அருண்மொழி அக்காவிடம்பார்த்தியா, டல்லாஸ் மூர்த்தியும் சொல்றாருஎன்று வம்பிழுத்தீர்கள்.  “அது டல்லாஸ் இல்ல ஜெயன், டாலஸ்என்று உங்களிடம் நொடித்துவிட்டுஅது ஒண்ணுமில்ல, எட்டு கிலோ இளைச்ச பெருமைஎன்று பதிலுக்கு அக்காவும் கிண்டலடித்தது சுவாரசியம்

சொல்ல விழைவது, எனக்கு ஜெயமோகனின் குரல் உரை வழியாகவும் நேர்காணல்கள் வழியாகவும் ஒரு கறாரான ஆசிரியரின் தொனியிலேயே இருந்தது. நகைச்சுவை கட்டுரைகளின், விஷ்ணுபுர விருது விழாக்களின் வெடித்துச் சிரிக்கும் முகங்களுக்கிடையில் இருக்கும் அவரை எனக்குக் கிடைத்தது அன்றுதான். நதியோர நடையிலும், படகிலும், உண்ணும் போதும் என எல்லா நேரமும் நீங்களும் அக்காவும் ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டுமிருந்தது ஒரு இனிமையையும் நிறைவையும் அளித்தது. உங்களிடம் கேட்கவேண்டும் என வந்த இரு கேள்விகளை கேட்டால்  உங்களின் மனநிலையை மாற்றக்கூடுமோ என்றெண்ணி விட்டுவிட்டேன்.

மாலையில் விடைபெறுகையில் நீலத்தில் உங்கள் கையெழுத்து கேட்ட போது, “ஏன், நீங்க பூனுக்கு வரலையா?” என்ற கேட்டவாறே ட மட்டும் எழுதிவிட்டு அக்கா பார்ப்பதை உறுதி செய்து கொண்டு டல்லாஸ் மூர்த்திக்கு என்றெழுதி கையெழுத்திட்டீர்கள். பணிச்சூழல் மற்றும் இயல்பான தயக்கத்தாலும் தடுமாறிக்கொண்டிருந்த நான், இனி இவ்வினிமையை எப்போதும் இழக்கலாகாது என முடிவுசெய்து அடுத்த வருடம் கண்டிப்பாக வருவதாக வாக்களித்தேன். அதன்படியே தத்துவ வகுப்பிற்கு பதிவு செய்துவிட்டு காத்திருந்தேன்.

பூன் முகாம் எனக்கு முற்றிலும் ஒரு புதிய கற்றல் அனுபவத்தைத்  தந்தது

  • எதிரே நடந்து வரும் அந்நியர் கூட, கடக்கும்போது ஒரு சிறு தலையசைவையோ புன்னகையையோ அல்லது ஒரு சிறு முகமனையோ அளித்துச்செல்லும் இந்நாட்டில் முகத்தை திருப்பிக்கொண்டு செல்லும் இந்தியர்களையே கண்டுகொண்டிருக்கும் எனக்கு முதல் சந்திப்பிலேயே சிரித்து கைகுலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்ட நண்பர்கள் (பெண்கள் உட்பட) என் தயக்கங்களை உடைத்தனர்.  
  • ஒரு குழு வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்க, நீங்கள் உணவருந்தும் அறையில் இருப்பதாக அறிந்து ஓடிவந்தால் இங்கும் ஒரு சிறு குழுவுடன்உரையாற்றும் நீங்கள்புதிதாக வருபவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ள அழைத்தபோது தொடங்கிய சிரிப்புகள் முகாம் முழுதும் மூன்று நாட்களிலும் வகுப்பிற்கு வெளியேயான உரையாடல்களில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
  • முடியுமா என சந்தேகித்த சில இயல்பாக அமையப்பெற்றன
    • உடலசைவின்றி அமர்தல்  (அது கொடுக்கும் கவனம்குறித்து நீங்கள் கூறியதை முழுதும் உணர்ந்தது மூன்று நாட்களுக்குப்பின் வகுப்பின் குறிப்புகளை விரித்தெழும்போது உங்கள் வார்த்தைகள் நினைவில் அப்படியே எழுந்து வந்தபோதுதான்).
    • Negation fallacy இல்லாமல் கவனிப்பதுநண்பர்களோடு உரையாடும்போது கடினமாக உள்ளதெனினும் பயின்று அடையமுடியுமென்ற நம்பிக்கை
    • பொருத்தமான உவமைகளின் மூலம் விளக்கப்படும் கருத்துகள் சரியாகச் சென்று தைக்கின்றது. வேதமெனும் சேனைக்கிழங்கின்  இரு முளைக்கும் முனைகள் என பிரம்மம் & புருஷன் 
  •  Progressive rendering – ஒரு கருத்தை ஆசிரியர் அறிமுகப்படுத்தி, விளக்கிய பின் அதையே கற்போர் பிரதி செய்யும் போது அக்கருத்து கற்போர் உள்ளத்தில் இருமுறை ஓடுகிறது. மாறாக, முன்னரே தயார்படுத்தப்பட்ட ஸ்லைடுகள் அவற்றின் இருப்பாலேயே கற்போரின் கவனத்தை கலைப்பதையும் பல வேளைகளில் கவனிப்பதையே ஒரு option ஆக ஆக்குவதையும்  என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். பெரும்பாலான பயிற்சிக்குப்பின் தவறாமல் வரும் கேள்விஇந்த ப்ரெசென்ட்டேஷனை ஷேர் செய்வீர்களாஎன்பதாகவே இருக்கும்.
  • இந்திய ஞான மரபுக்கு நீங்கள் அளித்த வரைபடம் ஒரு அற்புதம். உங்கள் உரைகளின் மூலமாகவும் கட்டுரைகளின் மூலமாகவும் ஏற்கனவே அறிந்திருந்தவைகள் எல்லாம் இணைந்து ஒரு வடிவம் கொண்டது. அறிந்ததாக எண்ணியிருந்தது தனியான தூண்களையே, நீங்கள் காட்டியது கோயில்.
  • முதல்நாள் கடைசி அமர்வில் சிருஷ்டி  கீதத்தை நீங்கள் விளக்கியது இணைந்து கற்றலின் தாக்கத்திற்கு மற்றொரு அழகிய சான்று. பல நண்பர்களின் உணர்வெழுச்சியை நன்றாகவே உணர முடிந்ததது. ஏனெனில், அது என்னுடையதும் தான். அமர்வின் தொடக்கத்திலும் முடிவிலும் ஒலித்தது ஒரே சொற்கள். எனினும், தொடக்கத்தில் கேட்டது 100 காதுகள், முடிவில் கேட்டது ஒற்றை உள்ளம்

வகுப்பிற்கு வெளியேயும் சட்டம், நீதிமன்ற நடைமுறைகள், கேரள வரலாறு, கப்பை, கதகளி கலை & கலைஞர்கள், வெள்ளிமலை  என்று கற்றலும் சிரிப்பும் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. எம்.டி. வாசுதேவன் நாயர் குறித்த உங்கள் நினைவுமீட்டல் மிகுந்த நெகிழ்ச்சி தந்த அனுபவம். ராஜனிடம் வெண்முரசு பாடல் குறித்து சிலவார்த்தைகள்  கூற அவர் அதன் உருவாக்க நினைவுகளை பகிர்ந்துகொண்டார். நண்பர்களுடனான உரையாடல் என்னை கறாரான சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய தேவையை உணர்த்தியது. ஒருங்கிணைப்பு குழுவில் இருந்த நண்பர்களின் பணி குறிப்பிடப்படவேண்டியது. அவர்களுக்கு நன்றிமூன்று நாட்களும் இனிமையான நேர்நிலை எண்ணங்களே நிறைந்திருந்தது

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி 

டாலஸ் 

முந்தைய கட்டுரைசூஃபி தரிசனம்
அடுத்த கட்டுரைஅடிமை சாசனம், கடிதம்