நான் சமீபத்தில் வெண்முரசின் பதினொன்றாம் நூலான சொல்வளர்காடை வாசித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பத்தாம் நூல் பகடை ஆட்டத்துடன் முடிந்திருந்ததால் அடுத்து என்ன நடந்தது, எவ்வாறு பாண்டவர்கள் வனம் புகுந்தனர் என்ற ஆவல் எனக்கு இருந்தது. பகடை ஆட்டத்திற்கு பிறகு காந்தாரி அடையும் அறச்சீற்றமும் துரியோதனனை கைவிட்டு அவள் எடுக்கும் நிலைப்பாடும், அரசியல் கணக்குகளையே யோசிக்கும் குந்தியை விட மேலான பேரரசியாக காந்தாரியை காட்டியது. தன் மைந்தர் பற்றிற்கும் அறத்திற்கும் நடுவே ஊசலாடும் திருதிராஷ்டிரரின் நிலை வேதனைக்குரியதாக இருந்தது.
பகடை ஆட்டத்திற்கு பிறகு சகுனி அடையும் பற்றற்ற நிலையும், ஆனால் தான் தொடங்கிய செயலை செய்து முடிக்க அவர் கொள்ளும் தீவிரமும் அவரை ஒரு யோகி என எண்ண வைத்தது. ஒரு விதமான Ruthless Logic உடன் கணிகர் பாண்டவர்களின் கானேகலை முன்வைக்கும் போது அவரது காய் நகர்தல் வந்து முடியும் இடம் திகைக்கும் படி இருந்தது.
குந்தி, துரியோதனன் விதுரரை கொல்லக்கூடும் என எண்ண தருமன் சினந்து துரியோதனன் அவ்வாறு சிறியன எண்ணுபவனல்ல என்று கூறும் போது, இவ்வளவு நடந்தும் துரியோதனன் மேல் தருமன் கொண்ட மதிப்பை காட்டியது. அவ்வாறே துரியோதனன் காடு சென்று மீளும் விதுரரை தானே சென்று பணிந்து மீண்டும் அமைச்சர் ஆக்குகிறான்.
தன் தமையனை மீறி கௌரவர்களை எதிர்க்க முடியாது என்று கூறும் பீமனிடம், திரௌபதி அங்கரின் (கர்ணன் என்று கூறாமல்) தோள் வல்லமையை கூறி சீண்டுவதை புன்னகையுடன் ரசித்தேன். தன் இறுகிய மௌனத்தின் மூலமே தன் பேரிருப்பை உணர்த்திக்கொண்டிருந்த அவள் இறுதியாக கண்ணனிடம் உடைந்து அழும் போது கண்ணன் அவள் கூறிய வஞ்சத்தின் முழுவிளைவை கூறுகையில் இறுதி பேரழிவை மின்னல் ஒளியில் என காண முடிந்தது.
பகடை ஆட்டத்தின் போது தான் ஏன் தோன்றவில்லை என்று வினாவுக்கான விடையை கண்ணனே சந்தீபனி குருநிலையில் தருமனிடம் கூறுகிறார். அமைதியான காடுகளில் பல்வேறு மெய்வழிகளினுடாக சென்று கொண்டிருந்த நாவல் அந்த பகுதியல் ஒரு மாபெரும் அரசியில் சூழ்ச்சியும் குருதி பெருகும் போரும் நிகழும் களத்திற்கு சென்றது. பகையும் வஞ்சமும் சூழ கண்ணன் வீழ்ந்தே விடுவாரோ என எண்ணியிருந்த வேளையில் அவர் ஈவிரக்கமற்ற மூர்க்கத்துடன் அதிலிருந்து வெளிவருவது பதைப்பை அளித்தது. அதுவரை பார்த்திராத கண்ணனின் மறுமுகத்தை இங்கு காண முடிந்தது. பலராமரும் அவரிடமிருந்து விலகுவது ஏனென்பது அறியமுடியாததாகவே உள்ளது. ஆனால் தன்னுள் உள்ள விராட புருஷனை பற்றிக்கூறி தான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதையும் கண்ணன் கூறுகிறார்.
தன் ஆசிரியரின் மைந்தனை மீட்க கண்ணன் பஞ்சஜனத்திற்குள் அலை விழாவின் போது தோன்றுவதும் அவர்களின் சங்கை கைப்பற்றுவதும் ஒரு சாகச பயணம் போன்றிருந்தது.
பாண்டவர்கள் செல்லும் வனங்களின் வர்ணனைகள் நாமும் அங்கு செல்வது போன்ற உணர்வை அளித்தது. குறிப்பாக பிருஹதாரண்ய வேள்வி பற்றிய வர்ணனை ஒரு திருவிழாவை கண்டது போலிருந்தது. தருமனுக்கு ஒவ்வொரு காட்டிலும் கிடைக்கும் மெய்மை மெல்ல மெல்ல அவரை ஒரு உச்சம் நோக்கி நகர்த்துவதை உணர முடிந்தது. விழைவை பின்தொடர்தல் சரியே என்ற மெய்மையை முதலில் அடையும் அவருக்கு இறுதியாக விழைவை அறுக்காமல் விடுதலை இல்லை என சமணப்படிவர் கூறுவது, லீலை என்ற இன்னொரு மெய்மையை உணர்த்துவதாக இருந்தது. கண்ணன் செய்யவிருக்கும் தத்துவ சமன்வயத்தின் அடிப்படையை காடுகளில் நிகழும் தத்துவ கொந்தளிப்பு உணர்த்தியது.
“அஹம் ப்ரஹ்மாஸ்மி“, “தத்வமஸி” போன்ற பிரபலமான ஆப்தவாக்கியங்கள் அளிக்கும் திறப்பை இவை தோன்றிய கதைகளை வாசிக்கும் போது உணரமுடிந்தது. அதே போல ஏழை அந்தணரான உஷஸ்தி சக்ராயனரின், வேட்டுவ குடிபிறந்து மெய்மை அடைந்த சத்தியகாம ஜாபாலரின், தாயுமான யுவனாஸ்வானின், தன் முதல் மைந்தனை பலிகொடுத்து நூறு மைந்தரை பெற்ற சோமகனின் கதை என ஒவ்வொன்றும் ஒரு கருத்தை வாழ்ந்து அறிந்த உணர்வை அளித்தது. வருணனை வென்று இந்திரன் மேலெழுவதும் பின்னர் இந்திரனை கண்ணன் வெல்வதும் நம் மரபில் தெய்வங்கள் அடையும் பரிணாமத்தையும் அதனுடன் நிகழும் தத்துவ மாற்றத்தையும் உணர்த்தியது.
இறுதி இரண்டு காடுகளான யக்ஷவனமும் கந்தமாதனமும் கனவுலகம் போல் இருந்தது. பாண்டவர்களில் அர்ஜுனனையும் பீமனையுமே நான் பிரதானமானவர்களாக கருதி வந்தேன். ஆனால் தன் தம்பியர் நால்வரும் இறந்த பின்பு அதில் ஒருவனை மீட்கலாம் என்னும் நிலை வரும்போது தருமன் நகுலனை தேர்வு செய்வதும் அதற்கு அவர் கூறும் காரணமும் பிற நால்வரும் ஏன் அவருக்கு கட்டுப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்தியது. வாரணவத எரி நிகழ்விக்குப்பின் பாண்டவர்களின் ஒற்றுமையை இந்த நாவலில் குறிப்பாக கந்தமாதனம் சென்று மீளும் தருமனை அவர்கள் மீட்கும் விதத்தில் உணர முடிந்தது.
அன்புடன்
கார்த்திக்
கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்
பி.கு: என் மகள் இந்த நாவல் படித்துக்கொண்டிருக்கும் போதுதான் பிறந்தாள். அவளுக்கு மைத்ரேயி என பெயர் வைத்தோம்.