அசல்கள்

கனடாவில் ராயல் ஒண்டேரியோ அருங்காட்சியகத்தில், 2001 அக்டோபரில் நான் முதல்முறையாக வின்செண்ட் வான்காவின் புகழ்பெற்ற இரவு ஓவியத்தின் அசலை பார்த்தேன். அதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதை என்னையே நம்பவைக்க முயன்றுகொண்டிருந்தேன். அது அசல் என்பதுதான் உண்மையில் என்னை பெருங்கிளர்ச்சியடையச் செய்தது.

அந்த ஓவியத்தை பல வடிவங்களில் மிகுந்த கவனத்துடன் ஏற்கனவே பார்த்திருந்தேன். ஏனென்றால் எனக்கு மிக உவப்பானவராக வின்செண்ட் வான்கா அன்று இருந்தார். மலையாளக் கவிதைகள் வழியாக அவரை அறிமுகம்செய்துகொண்டிருந்தேன். பின்னர் திருவனந்தபுரம், சென்னை நூலகங்கள் வழியாக. சுந்தர ராமசாமிக்கு வான்கா மிகப்பிடித்தமானவர். நித்ய சைதன்ய யதிக்கு வான்காவையும் அவரைவிட செகாலையும் பிடிக்கும்.

அதை நான் என்றாவது நேரில்பார்ப்பேன் என எண்ணியிருந்ததே இல்லை. நான் அன்று குறைந்த ஊதியம்பெறும் அரசூழியன். என் கனவுகளும் எல்லைக்குட்பட்டவை. என்னை கனடாவுக்கு அழைத்தவர் முத்துலிங்கம். அப்போது என்னால் அப்படி ஒரு கனவையே காணமுடியவில்லை. முத்துலிங்கம்தான் என்னிடம் சொன்னார். ‘உலகத்தைப் பாருங்க…உலகம் பின்னாடி உங்களையும் பார்க்கும்’

மிகுந்த போராட்டத்திற்குப் பின்னரே எனக்கு கடவுச்சீட்டு கிடைத்தது. அதைவிடப்பெரிய போராட்டத்தின் விளைவாக பயணத்துக்கான அரசு அனுமதியைப் பெற்றேன். அருந்தவம் செய்தே விஸா அமைந்தது. டெல்லி சென்று, வரிசையில் பலமணி நேரம் நின்று விஸா அதிகாரியை சந்தித்தேன். விஸா அதிகாரியான பஞ்சாபிப் பெண்மணி என்னை சுஜாதா மொழியில் ‘நாய்கொண்டுபோட்ட வஸ்துவை’ பார்ப்பதுபோல பார்த்து, “இத்தனை குறைவான ஊத்தியத்தில் எப்படி வாழ்கிறாய்?” என்று கேட்டார். “வாழ்கிறேன், அதனால்தான் உன் முன் நிற்கிறேன்” என்றேன். விஸா மறுக்கப்பட்டது.

ஆனால் அப்படி தோற்றுவிடுவது என் இயல்பல்ல. நான் என்னை எப்போதுமே ஓர் இலக்கியப்படைப்பாளி என, இந்த உலகில் இன்றுவாழும் மனிதர்களில் முக்கியமான மிகச்சிலரில் ஒருவர் என உருவகம் செய்துகொள்பவன். ஆணவம் என்றே சொல்லலாம். அதுவே என் பலம். நான் சீண்டப்பட்டேன்.

என் நண்பர் மு.கி.சந்தானம் அன்று தேசிய புத்தக நிறுவன உயர் அதிகாரி. கணையாழியில் கதைகளெல்லாம் எழுதியவர் .அவர் வழியாக இந்திய வெளியுறவுத்துறை உயரதிகாரி விஸ்வநாதன் என்பவரைச் சந்தித்து அவருடைய பரிந்துரையால் மறுநாளே மீண்டும் விண்ணப்பித்து விஸாவை துணைத்தூதர் கையில் இருந்தே வாங்கிவிட்டு அந்த பஞ்சாபிப் பெண்மணியிடம் “தோற்பது என் வழக்கம் அல்ல” என்று சொல்லிவிட்டே வந்தேன்.

ஆனால் சில நாட்களில் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்டது. விமானநிலையங்கள் மூடப்பட்டன. கனடா வருகையை அனுமதித்தது. ஆகவே நான் தனியாகக் கிளம்பி டொரெண்டோ வந்தேன். எனக்கிணையான பிடிவாதம் என்னை அழைத்த அ.முத்துலிங்கத்திடமும் இருந்தது. அவ்வாறாக நான் என் முதல் வெளிநாட்டுப் பயணத்தை நடத்தி வான்காவின் ஓவியம் முன் நின்றேன். உலகப்பெருமேதை ஒருவனின் கைதொட்ட வண்ணங்களை நேரில்கண்டேன். அது ஒரு தவநிறைவு.

அசல் ஓவியங்களை முதலில் பார்ப்பதில் உள்ள பிரச்சினை அவை முதற்கணத்தில் நமக்கு ஏற்படுத்தும் அதிருப்திதான். ஏனென்றால் நாம் அவற்றை பலமுறை, பல கோணங்களில் நுணுக்கமாகப் பார்த்துப்பார்த்து நம் கற்பனையில் அவை மிகப்பெரியதாக ஆகியிருக்கும். நேரில் பார்க்கையில் அவை மிகச்சிறியவை என்னும் எண்ணம் உருவாகும். உலகப்புகழ்பெற்ற லியனர்டோ டாவின்ஸியின் மோனாலிஸா மிகச்சிறிய ஒரு பலகை ஓவியம்தான். (ஏறத்தாழ இந்த அனுபவம் நடிகர்களைப் பார்க்கையிலும் உருவாகும். நாம் மிகப்பெரிய திரையில் அவர்களை மிகப்பெரியதாக பார்த்துக் கண்பழகிவிட்டிருப்போம். அவர்கள் காட்சியளவில் சிறியவர்களாகத் தெரிவார்கள்)

ஆனால் அசல் ஓவியங்கள் நம் கண்முன் விரிந்துகொண்டே இருக்கும். எத்தனை சிறந்த நகல்களாகப் பார்த்தாலும் அசல் மெல்லிய, அழுத்தமான வேறுபாடு கொண்டிருக்கும். அசலின் வண்ணங்கள் வேறுபட்டிருக்கும். சிலசமயம் அவை பழையனவாக இருக்கும். மங்கலாக தெரியும். அவற்றில் திருத்தங்கள் இருக்கக்கூடும்- பழைய ஓவியங்களில் வெண்ணிறப்பூச்சுக்குமேல் மீண்டும் வரைந்திருப்பார்கள். நான் லியனாடோ டாவின்ஸி வரைந்து முடிக்காமல் விட்ட ஓர் அசலைக்கூட பார்த்திருக்கிறேன்.

அசல்கள் ஓவியர்களுக்கு அந்த ஓவியம் வரையப்பட்டதன் சித்திரத்தை அளித்துவிடுகின்றன என்கிறார்கள். நம்மைப்போன்றவர்களுக்கு அவற்றின் முன் நிற்பதன் இன்பங்கள் மூன்று. ஒன்று நாம் வரலாற்றில் இருக்கிறோம் என்னும் பேருணர்வு. இரண்டு, அந்த ஓவியனின் கைத்தொட்ட கான்வாஸை பார்க்கிறோம் என்னும் நெகிழ்வு. அவன் கையெழுத்தை நம்மால் பார்க்க முடிகிறது என்னும் பரவசம். கடைசியாக ஒரே இடத்தில் அத்தனை மேதைகளையும் காண்பதன் மெய்மறத்தல்.

ஓவியங்கள் மிக அரிதாக இருந்த காலமொன்று இருந்தது. நான் டெல்லி, கல்கத்தா, மும்பை, பரோடா என ஓவியங்களைப் பார்ப்பதற்கென்றே அருங்காட்சியகப் பயணங்கள் செய்தது உண்டு. என் குறைந்த வருமானத்தில் ஓவியநூல்களை வாங்கிக்குவித்த்ததும் உண்டு. (பின்னர் பலவற்றை சுந்தர ராமசாமிக்கும் பிற நண்பர்களுக்கும் விற்றுவிட்டேன் – பணமுடையால்). இணையம் வந்ததும் நான் செய்தது படங்களை தரவிறக்கம் செய்து ஃப்ளாப்பிகளில் சேமிப்பதைத்தான்.

நானும் அஜிதனும் சேர்ந்து நாள்முழுக்க அதைச் செய்வோம். அந்த ஃப்ளாப்பிகள் ஓரிரு ஆண்டுகளில் அழிந்துவிட்டன. ஆனால் அச்செயல் ஓவியங்கள் பற்றிய ஒட்டுமொத்தப் புரிதலை உருவாக்கியது. என்கார்ட்டா என்னும் கலைக்களஞ்சியம் சிடி ராம் எங்களிடமிருந்தது. அதை பார்த்து அந்த ஓவியம் பற்றிய செய்திகளை சேகரிப்பேன். அதை அஜிதனிடம் விவாதிப்பேன். அன்று அவன் 8 வயதான சிறுவன். ஆனால் அவன் காட்சியுலகம் விரிந்தது. இன்று அவன் ஜப்பானிய ஓவியங்களில் திளைப்பதைக் காண்கையில் மகிழ்வுடன் அந்நாட்களை நினைவுகூர்கிறேன்.

அத்தனை பார்த்துப் பழகினாலும் அசல் ஓவியங்களைப் பார்ப்பதென்பது பேரனுபவமே. நான் அசல் ஓவியங்களை பின்னர் அமெரிக்காவிலும் பின்னர் பிரிட்டனிலும் பார்த்தேன். பாரீஸ், ம்யூனிச், ரோம் என அசல் கலைப்படைப்புகளை நேரில் பார்ப்பது இன்றுவரை தொடர்கிறது. அந்த முதல் அனுபவத்தின் கிளர்ச்சி நீடிக்கிறது.

அக்டோபர் 7 ,2024 ஆம் தேதி சிகாகோவின் கலைக்காட்சியகம் சென்றோம். நண்பர்கள் மணிவாசகம், பிரேம், பாலா நாச்சிமுத்து, மீனாட்சிசங்கர், கீர்த்திவாசன் ஆகியோர் உடன் வந்தனர்.  அது ஓரு முதன்மையான அருங்காட்சியகம். அத்தகைய அருங்காட்சியகங்களில் ஓவியங்கள் வழியாகவே ஓவியக்கலையின் நுண்ணிய வளர்ச்சியைக் கண்ணால் பார்க்க முடியும். செவ்வியல் ஓவியத்தில் மறுமலர்ச்சிக்கால அழகியல் தொடங்குவதை, மறுமலர்ச்சிக்கால ஓவியத்தில் இம்ப்ரஷனிச ஓவியச்சாயல் மெல்ல ஆரம்பிப்பதைக் கண்ணால் பார்க்கமுடியும். அது ஓர் அரிய அனுபவம்.

ஓவியங்கள் வழியாகச் சென்றுகொண்டே இருப்பது ஓர் அகநிகழ்வு. ஓர் ஓவியம் முன்னால் நின்றிருப்பது இன்னொருவகை அகவிரிவு. அந்த அசல் வான்காவின் கையால் தீண்டப்பட்டது. ரென்வாரால் நேரடியாகவே வரையப்பட்டது. கிளாட் மோனே அதை அவரே பலமுறை சீரமைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். அந்த உணர்வு அளிக்கும் தொடர்ச்சி சாமானியமானது அல்ல. நாம் ஒரு மாபெரும் கலைத்தொடர்ச்சிக்குள் செல்கிறோம்.

என்னைப்  பொறுத்தவரை இப்புவியில் உள்ள எதுவுமே மெய்யான மானுடத் தொடர்ச்சி அல்ல. உயிர்த்தொடர்ச்சிக்கும் இயற்கைத் தொடர்ச்சிக்கும் அப்பாலுள்ள அகத்தொடர்ச்சி என்பது அறிவும் கலையும் கொண்டிருக்கும் தொடர்ச்சி மட்டுமே. ஓர் ஓவியம் என்னை அந்த பெரும் வலைத்தொடரில் இணைக்கிறது. நான் இங்குவாழ்வது பொருளுடையதாக ஆகிறது.

முன்பெல்லாம் அசல்கள் முன் நான் நின்றிருக்கையில் என்னை முழுதாக அளிக்கவேண்டும் என நினைப்பேன். நினைவுகளை அகற்றி வெற்று அகம் கொள்வேன். புகைப்படங்கள் எடுப்பதை எல்லாம் ஓர் அவமதிப்பாக எண்ணுவேன். ஆனால் இன்று என் உள்ளம் மாறிவிட்டது. அசல்கள் முன் நான் கொள்ளும் அதே அனுபவத்தை பின்னர் நான் அவற்றுடனிருக்கும் புகைப்படங்களும் எனக்கு அளிக்கின்றன என உணர்கிறேன். சற்றே சோர்வுறும் கணங்களில அவை என்னை ஒருவகையான இனிய புயல்காற்றென சூழ்கின்றன. என்னைப்பற்றி எனக்கு நம்பிக்கையை, என் இயல்பான ஆணவத்தை மீட்டளிக்கின்றன.

சோர்வென்பது தனிமை. இங்கு வாழ்ந்துசாகும் எளிய மக்களில் ஒருவனாக நான் என்னை உணர்வது அது. அது உண்மையின் ஒரு பக்கம். நான் உண்மையின் மறுபக்கம் நோக்கி என்னை தள்ளிக்கொள்ள இந்த ஓவியங்கள் உதவுகின்றன. நான் கலையென இலக்கியமென இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் மாபெரும் நிகழ்வொன்றின் பகுதி. இக்கம்பளத்தை நெய்யும் சிறுவிரல்களில் ஒன்று. நான் காலாதீதன். அதை என்னிடம் சொல்கின்றன இந்த ஓவியங்கள். ஆகவே இன்று எனக்கு இப்புகைப்படங்கள் அந்தரங்கமாக மிக முக்கியமானவை.

ஆகவே தயங்காமல்  இன்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறேன். இந்த ஓவியங்கள் அளவுக்கே எனக்கு நித்ய சைதன்ய யதியுடனும் அ.முத்துலிங்கத்துடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் முக்கியமானவை. புகைப்படம் எடுத்துக்கொள்வது கொஞ்சம் செயற்கையாகத் தெரிந்தமையால் பலருடன் புகைப்படங்களே எடுத்துக்கொண்டதில்லை. ஆற்றூர் ரவிவர்மாவுடனும் சுந்தர ராமசாமியுடனும் அசோகமித்திரனுடனும் ஓரிரு படங்கள்கூட இல்லை என்பது எவ்வளவு பெரிய இழப்பு என மெய்யாகவே உணர்கிறேன்..

ஆனால் ஓவியக்காட்சியகங்களில் ஓவியங்களுக்கு மிகமிகச் சரியாக வெளிச்சம் போட்டிருப்பார்கள். நாம் அருகே நின்றால் தலைக்குமேல் ஒளி இருப்பதனால் ஒரு விந்தையான தோற்றம் உருவாகும். சரியாக எடுத்தால் ஓரளவு பரவாயில்லாமல் இருக்கும். இம்முறை வான்காவின் முகத்துடன் ஒரு படம் எடுத்துக்கொண்டேன். அது எனக்கு என்றும் அரியதாக இருக்குமென நினைக்கிறேன்.

சிகாகோ அருங்காட்சியகம் அமெரிக்காவின் முதன்மை அருங்காட்சியகம் அல்ல. ஆனால் இங்கே நவீன ஓவியர்களில் ஏறத்தாழ அனைவருடைய ஓவியங்களிலும் ஒன்றேனும் உள்ளது. முன்னர் ராலே நகரின் அருங்காட்சியகத்திலும் இந்த வகையில் அனைவருடைய ஓவியங்களிலும் ஒன்றையேனும் வைத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். குளோட் மோனே முதல் பிகாஸோ வரை நூறடி தொலைவுக்குள் பார்த்துவிடமுடியும்.

அருண்மொழிக்கு குளோட் மோனே வரைந்த இம்ப்ரஷனிஸ ஓவியங்கள் மேல் பெரும்பித்து உண்டு. ஊரிலும் அடிக்கடி ஓவிய நூல்களை எடுத்துப்பார்த்து மெய்மறப்பது உண்டு. அவளுக்கு அது ‘கனவிலே இருக்கும் தோட்டம்’. கனவின் மங்கல். கனவின் வண்ணங்கள். அத்தனை ஓவியங்கள் முன்னாலும் சலிக்காமல் நின்று நின்று படம் எடுத்துக்கொள்வாள். அந்த ஓவியரையே சந்தித்ததுபோல துள்ளிக்கொள்வாள். குளொட் மோனே, ரென்வார் என்று கிரீச்சிடுவாள்.இம்முறை அவளுடைய அதே உணர்ச்சியை நானும் ஓரளவு அடைந்தேன்.

அசல்களின் முன் நான் அடைவது என் அகத்தே நான் நிகழ்த்திக்கொள்ளும் அனுபவமா? ஆனால் இமையமலையின் பெருவிரிவின்முன் நான் அடைவதும் அத்தகைய அகநிகழ்வுதானே? அவை ‘வெறும்’ மலையடுக்குகளாக இன்னொருவருக்குத் தோன்றக்கூடும் அல்லவா? இருக்கலாம்.  எனக்கு இவை மெய்நிகழ்வுகளே.

இப்படிச் சொல்லிக்கொள்கிறேன். இமையம் என்னை சிறியவனாக்குகிறது. துளியென அணுவென ஆக்குகிறது. இந்த ஓவியங்கள் என்னை பேருருக்கொள்ளச் செய்கின்றன, இமையத்தொடர்களில் ஒரு மலையென ஆக்குகின்றன. இரண்டுமே பேரனுபவங்கள்தான். ஒன்று அணிமா. அணுவாதல். இன்னொன்று மகிமா. அண்டமென ஆதல்.

முந்தைய கட்டுரைகி.ரா.கோபாலன்
அடுத்த கட்டுரைஉளக்குவிப்பின் நாட்கள்