ஓர் இடம் அமைவதென்பது ஒருவகை தற்செயல். நடராஜகுரு தன் மாணவர்களுடன் தெருவில் நின்று நன்கொடைகளை பெறுவதைக் கண்ட ஒரு தேயிலைத்தோட்ட உரிமையாளர் தன் நிலத்தில் ஒரு பகுதியை அவருக்கு இலவசமாக வழங்கினார், அங்கே இன்றைய நாராயண குருகுலம் அமைந்தது. அங்கே அது நிகழவேண்டும் என இருந்திருக்கிறது என்று இன்று படுகிறது. அப்படித்தான் அமெரிக்காவில் பூன் குன்று அமைந்தது. அங்கே இலக்கிய முகாம் 2022ல் தொடங்கியது. 2024ல் அதை தத்துவ முகாம் ஆக விரிவாக்கிக்கொண்டிருக்கிறோம்.
தத்துவ முகாமுக்குத்தான் அதிக எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்தது. அமெரிக்காவின் புலம்பெயர்ந்த மக்கள் நடுவே இருக்கும் தேடலின் அடையாளம் அது. இங்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் மிகச்சிறந்த மாணவர்கள். நான் அடிக்கடி சொல்வதுபோல இலக்கியம், மெய்யியல் முதல் பொருளியல் வரை பல்வேறு துறைகளில் திகழவேண்டிய அனைவரும் இன்றைய இந்தியச் சூழலில் தொழில்நுட்பர்களாக ஆக்கப்படுகிறார்கள். அங்குள்ள பொருளியல்நிலைமையில் வேறுவழியும் இல்லை. ஆனால் அவர்களில் பலர் தங்களை முழுமையாக தொழில்நுட்பவாழ்க்கைக்கு அளிக்கமுடியாதவர்களாகவும் எஞ்சுகிறார்கள்.
அவர்களுக்கு ஆழ்ந்த தனித்தேடல் ஒன்று உள்ளது. அதை அடையாளச்சிக்கல் என்றோ, கலாச்சாரத்தேடல் என்றோ நான் எண்ணவில்லை. அது தன்னை தன் ஆழத்துக்கு உகந்தபடி வகுத்துக்கொள்வதற்கான உந்துதல் மட்டுமே. தன் ஆளுமையை சமூகத்துக்காக வகுத்துக்கொண்ட ஒருவருக்குள் அப்படி இன்னொரு அந்தரங்கமான வரையறைக்கான தேடல் இருக்கும் என்றால் அதுவே மெய்மைநாட்டம் எனப்படுகிறது. இங்கே வெவ்வேறு அமைப்புகள் அந்த தேடல்கொண்டவர்களை ஈர்க்கின்றன. தியான நிறுவனங்கள் முதல் பல்வேறு துணைமத அமைப்புக்கள் வரை. அவற்றில் சென்று நிறைவுறுபவர்கள் உண்டு. சென்று மீண்டபடியே இருப்பவர்களும் உண்டு.
சென்றுமீள்பவர்கள் தேடுவது தங்களுக்கான விடையை .அந்த விடை நம்பிக்கை சார்ந்தது அல்ல. ஆகவே அதை இன்னொருவர் அளிக்க முடியாது. நம்பு என ஆற்றுப்படுத்தும் எந்த அமைப்பும் அதை அவர்களுக்கு அளிக்கமுடியாது. ஒருவரை, ஒரு கொள்கையை, ஒரு படிமத்தை அவர்களால் வெளியே இருந்து பெற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்குத் தேவை தங்களுக்கான தனிப்பயணம். தங்களுக்கான கண்டடைதல்.
ஆனால் அதைச்செய்யவேண்டும் என்றால் அவர்களுக்கு அதற்கான அறிவுக்கருவிகள் இருக்கவேண்டும். தத்துவம், கலைகள், இலக்கியம், அகப்பயிற்சி என்னும் நான்கு நிலைகளில் அதற்கான அறிவுக்கருவிகள் உள்ளன. அவற்றை தாங்களே நூல்கள் அல்லது இணையவகுப்புகள் வழி கற்றுக்கொள்ளலாம் என முயல்பவர்கள் பலர் உண்டு. அம்முயற்சியால் குழப்பங்களே மிகும். அவற்றில் தீவிரமாக ஈடுபடவும் முடிவதில்லை. ஆகவே ஒரு தத்தளிப்பிலேயே இருந்துகொண்டிருப்பார்கள்.
இரண்டாம் வகையினருக்கான நிகழ்வுகளே நாங்கள் நடத்துவது. இவை விடைகளை அளிப்பதில்லை. விளக்கங்களையும் அளிப்பதில்லை. விடைகளை நோக்கிச் செல்வதற்கான வழியை, வழிதேடும் முறையை மட்டுமே அளிக்கின்றன. தத்துவத்தின் வழிமுறைகள், வெவ்வேறு தத்துவப்பாதைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதன்பின் பயணம் அவரவர் கேள்விகளுக்கு ஏற்ப, அறிவுக்கு ஏற்ப அமைவது.
ஆகவே நம்பிக்கையின் வழியை தொடர்பவர்கள் இங்கே இணைந்துசெல்ல முடியாது. எளிய சிந்தனை கொண்டவர்கள் ஏமாற்றமும் அடையக்கூடும். ஆனால் ஒரு சிறு வட்டத்திலேனும் இத்தகைய தத்துவச்செயல்பாடுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தாகவேண்டும். அதற்காகவே இம்முறை பூன்முகாமில் தத்துவத்தையும் உள்ளடக்கினோம்.
பூன் முகாம் எங்களால் ஓர் எளிய இலக்கியச் சந்திப்பாகவே 2022ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இயல்பாக அது தீவிரம்கொண்டுவிட்டது. காரணம் பங்கேற்பாளர்களின் தேடல்தான். இந்தியாவில் எங்கள் வகுப்புகள் இயல்பாகவே ஒரு வடிவத்தை அடைந்துவிட்டிருக்கின்றன. ஒன்று நடைமுறை வழியாக அடையும் வடிவமென்பது மிக முக்கியமானது. அது பயன்பாட்டு வடிவம். அது உடனடியாகப் பயனளிப்பது. அப்படித்தான் இவ்வகுப்புகளின் வடிவமும். இவை கல்வித்துறை வகுப்புகள் போல சம்பிரதாயமான ‘கற்பித்தல்’ தன்மை அற்றவை. ஆசிரியர் மாணவர் உறவினூடாக பயிற்றுவித்தலை நிகழ்த்துபவை. கலையிலக்கியம் இரண்டும் இணைந்த தத்துவக் கல்வி என இவற்றை வகுக்கலாம்.
பூன் முகாம் வகுப்புகளுக்கு எமர்சனின் பெயரை முன்னரே சூட்டியிருந்தோம். இம்முறை தத்துவம் இணைந்துகொண்டாலும் எமர்சன் முகாம் என்றே அது நீடித்தது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நிலத்தில் எமர்சன் நினைவுகூரப்படவேண்டும் என நான் நினைக்கிறேன். அமெரிக்க இலட்சியவாதத்தின் ஒளிமிக்க முகம் அவர். அத்துடன் நாம் இங்கே ஓர் இந்தியவட்டத்தை உருவாக்கவில்லை, இந்தியாவுக்கு வெளியே ஓர் இந்திய மனநிலையை நீட்டித்துக்கொள்ள இதை நடத்தவில்லை என நமக்குநாமே சொல்லிக்கொள்ளவும் அவர் பெயர் தேவை. நாம் ஒரு மானுடசிந்தனைவட்டத்தையே இங்கே உருவாக்கவிருக்கிறோம்.
பூன்முகாம்கள் ஒரு கொண்டாட்டமாகவே சென்ற ஆண்டுகளில் நிகழ்ந்தன. இந்த ஆண்டும் அவ்வாறே. செப்டெம்பர் 30 முதல் அக்டோபர் 1 வரை தத்துவ அமர்வுகள். அதில் ஐம்பதுபேர் கலந்துகொண்டனர். இருபதுபேருக்குமேல் இடமில்லாத காரணத்தால் தவிர்க்கப்பட்டனர். அந்த இடத்தில் தங்கும் வசதிகள் இருந்தன. ஆனால் ஐம்பதுபேருக்குமேல் உணவு ஏற்பாடுகள் கடினம். முழுக்க மேலைநாட்டு உணவே போதும் என்றால் ஏற்பாடு செய்திருக்க முடியும். அடுத்தமுறை யோசிக்கவேண்டும்.
தத்துவமுகாம் ராஜன் சோமசுந்தரம், பழனிஜோதி பாடலுடனும் ஸ்கந்தநாராயணனின் தாளத்துடனும் தொடங்கியது. அதன்பின் நான் இந்திய (இந்து) தத்துவ அறிமுக வகுப்பை நடத்தினேன். எமர்சனையும், நித்யசைதன்ய யதியையும் நினைவுகூர்ந்து வகுப்புகள் தொடங்கின. அரைநூற்றாண்டு முன்னால் நித்யா இந்த மண்ணில் தத்துவ வகுப்புகளை நடத்தியிருக்கிறார். அந்த மரபு ஒருபோதும் அழியாது. தத்துவம் எந்நிலையிலும் பேரியக்கமாக ஆகாது- நம்பிக்கையே அவ்வாறு ஆகக்கூடியது. ஆனால் அது வற்றாத ஜீவ ஊற்றும்கூட.
இரண்டு நாட்களிலாக 15 மணிநேரம் வகுப்பு. ஆனால் இந்த தத்துவ வகுப்பு மேலைத்தத்துவம் போல தூய தர்க்கம் அல்ல. இதில் பெரும்பகுதி இலக்கியத்தன்மை உண்டு. படிமங்களும் கவித்துவமும் இணைந்ததாகவே இந்தியத்தத்துவக் கல்வி இருக்கமுடியும் (பௌத்த தர்க்கவியல் மட்டுமே அதன் உச்சநிலைகளில் தூயதத்துவம் நோக்கிச் செல்லும்).
இந்த தத்துவ அறிமுகம் என்பது இந்து மெய்யியல் மரபு பற்றிய ஓர் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிப்பது. ஒரு சிந்தனைவரைபடம். பின்னர் அதன் ஒவ்வொரு கூறையும் விரிவாக்கிக்கொள்ளலாம். அத்துடன் இந்திய மெய்யியலின் அடிப்படையான படிமங்கள், கருத்துநிலைகள், தரிசனங்களை அறிமுகம் செய்வது. அந்த உணர்வுநிலைக்குள் சென்றாலொழிய நம்மால் மெய்யான தத்துவக்கல்வியை அடைய முடியாது. அத்துடன் அடிப்படையான தரப்புகளையும் அறிமுகம்செய்துகொள்ள வேண்டும்.
தத்துவம் கவிதையென, தரிசனமென ஆகும் தருணம் என்றுமே உணர்ச்சிநிலைகளை உருவாக்கக்கூடியது. கற்பனைகளை தூண்டி வாழ்க்கையை பிறிதொரு கோணத்தில் பார்க்கச் செய்வது. நான் அத்வைதச் சார்புகொண்டவன் ஆயினும் இந்து தத்துவத்தின் எல்லா தளங்களையும் கற்பிப்பதே வழக்கம். பௌத்த, சமணவியல்களை கற்பிப்பதில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று, இந்து தத்துவத்தின் தொடர்ச்சியான உள்விவாதங்களை கற்பிக்கும்போது அவை உள்ளே வர முடியாது. இரண்டு, அவற்றில் என் கல்வி போதுமானதா என்னும் ஐயம் எனக்குண்டு. நம்பிக்கை, எதிர்மனநிலை இல்லாமல் அவற்றைக் கற்பிக்க எவர் உள்ளனர் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
தத்துவ முகாம் முடிந்து மூன்றுநாட்கள் இடைவேளை. பூன் முகாமிலேயே நாங்கள் தங்கியிருந்தோம். இலக்கிய முகாம் அடுத்த வெள்ளி, சனி (அக்டோபர் 4, 5) அதற்கும் சேர்த்துப் பெயர்கொடுத்திருந்தவர்கள் மட்டும் உடனிருந்தனர். எஞ்சியோர் கிளம்பிச் சென்றார்கள். மூன்றுநாட்கள் பூன் மலைப்பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம்.
நாங்கள் சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து ராலே கிளம்பியபோதே கேரலினா மாநிலத்தில் புயல் என்னும் செய்தி வந்துகொண்டிருந்தது. (ஹரிக்கேன் ஹெலென் ) விமானத்தை இறக்குவதற்கு முன் சற்றுநேரம் வானில் வட்டமிட வேண்டியிருந்தது. புயலுக்குப்பின் இறங்கிய முதல் விமானம் எங்களுடையதே என்று விமானி சொன்னார். ‘உங்களை சொற்கத்தில் கொண்டு இறக்கிவிடுவேனோ என நினைத்தேன்’ என்று ஜோக் வேறு அடித்தார். நிகழ்வு நடக்குமா என்று கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் நிகழ்வுக்கு ஒருநாள் முன்னரே சாலைகளைச் சரிசெய்துவிட்டனர். ஏராளமான இல்லங்கள் இடிந்துவிட்டன. பல இடங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. ஓரளவு சாவும் இருந்தது என தெரிந்தது.
நாங்கள் பூன் குன்றை ஒட்டிய ஏரிக்கரை, கோன் என்பவரின் பூர்விக இல்லம் ஆகியவற்றைச் சுற்றிப்பார்த்தோம். பூன் மலைக்கு பலமுறை வந்திருந்தபோதிலும் இப்போதுதான் இந்த மலைப்பகுதியை நான் முழுமையாகப் பார்க்கிறேன். ஆழமான மலைச்சரிவுகள் கொண்ட அழகான நிலம் இது. சூரிய உதயத்தைப் பார்ப்பதற்குரிய அழகிய மலைவிளிம்புகள் பல கொண்டது. கண்கூசும் வெளிவிளிம்பு வரை அடர்ந்திருந்த மரங்கள் இலையுதிர்வுக்கான வண்ணமாற்றங்களை அடைந்துகொண்டிருந்தன.
இலக்கிய முகாமுக்கான நண்பர்கள் வியாழன் இரவே வரத்தொடங்கினர். வெள்ளிக்கிழமை காலை முதல் நிகழ்வு. வழக்கம்போல இசையுடன். தமிழிலக்கியம் , மேலையிலக்கியம் சார்ந்த கவிதைகள் மற்றும் நாவல்கள் சார்ந்து ஓரு சிறு உரை. அதன்மீதான உரையாடல் என நிகழ்வு நீண்டது. தல்ஸ்தோயின் அன்னா கரினினா பற்றி மதுனிகா, கமலாதாஸ் கவிதைகள் பற்றி ரெமிதா, ஷெர்லி ஜாக்ஸன் கதைகள் பற்றி ஆர்.எஸ்.சஹா, மைக்கேல் கிரைட்டனின் டெர்மினல் மேன் பற்றி விஸ்வநாதன், கம்பராமாயணம் பற்றி பழனி ஜோதி, வால்ட் விட்மான் பற்றி போர்ட்லான்ட் பிரபு , சுனில்கிருஷ்ணன் அம்புப் படுக்கை பற்றி சாரதி என உரைகள் எல்லாமே கூர்மையாக அமைந்திருந்தன. சென்ற ஆண்டைவிட உரைகளில் இருந்த நேர்த்தி அபாரமாக இருந்தது. வெண்முரசு குறித்தும் உரையாடல் அமைந்திருந்தது.
பூன் முகாம் ஊட்டியில் நாங்கள் நிகழ்த்திவந்ததும், இப்போது ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் நடத்துவதுமான இலக்கிய முகாமின் இன்னொரு வடிவம்தான். இலக்கியம் பற்றிய அறிமுகம் இவ்வாறு ஒரு முகாம் வழியாக நிகழ்வதென்பது ஓர் அரிய விஷயம். சட்டென்று அது ஓர் ஒட்டுமொத்தத்தை அளித்துவிடுகிறது. இலக்கியம் பற்றிய தகவல்களாக அன்றி உணர்வுபூர்வமான ஒரு சித்திரமாக அது அமைகிறது. இலக்கியத்தின் அடிப்படையான அகவிசை தொடக்கத்திலேயே கிடைத்துவிடுகிறது. இம்முகாம்களின் முதன்மைநோக்கமே அதுதான்.
மாறாக இன்றைய சமூக ஊடகங்கள் வழியாக ஆணவ வெளிப்பாடுகளும், அரசியல்சார்ந்த எதிர்மறை உணர்வுகளும், சில்லறைப் பூசல்களுமாக இலக்கியம் அறிமுகமாவது என்பது ஒரு பெரிய இழப்பு. அதிலிருந்து நல்ல இலக்கியம் அளிக்கும் உளவிரிவுக்குள் வருவது பலசமயம் சாத்தியமாவதே இல்லை. இறுதிவரை அந்த வம்புகளே இலக்கியம் என நினைத்து அங்கே தேங்கிவிடுபவர்களும் ஏராளம். இதன்பொருட்டே இலக்கியக்கூட்டுநிகழ்வுகள் தொடர்ச்சியாக உலகமெங்கும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தமிழகத்தில் விஷ்ணுபுரம் அமைப்பின் நிகழ்வுகள் அன்றி அத்தகைய வேறு நிகழ்வுகள் இன்று இல்லை.
இலக்கியக்கூடுகைக்குப் பின் வழக்கம்போல சிரிப்பும் கொண்டாட்டமுமான ஓர் இரவு. ஒவ்வொருவராக விடைபெற்றனர். இலக்கியநிகழ்வுகள் கசப்பின்றி முடிந்தாலே அவை வெற்றிதான் என்பதே இன்றுள்ள நிலை. எங்கள் நிகழ்வுகளை இதுவரை அவ்வண்ணமே ஒருங்கிணைத்துள்ளோம். அவை அறிவுக்களியாட்டங்கள். வேறுவகையான களியாட்டங்கள் உடனிணையவேண்டியதில்லை. இலக்கியமே பெருங்களியாட்டமாக ஆகமுடியும்.
இத்தகைய ஓரு நிகழ்வுக்குப்பின் உருவாகும் எண்ணங்கள் பலவகையானவை. பேசப்பட்ட இலக்கியக்கருத்துக்கள் உருவாக்கும் அலைகள். ஒத்த சிந்தனைகொண்ட நண்பர்களுடன் நிகழும் உரையாடலின் இனிமை. உலகியலுக்கு வெளியே சில நாட்கள் வாழ்ந்தமையின் விடுதலை. நுண்ணுணர்வு கொண்ட ஒவ்வொருவரும் இத்தகைய தருணங்களை வாழ்க்கையில் ஈட்டிக்கொள்ளவேண்டும். சிலகாலம் கழிந்து திரும்பிப்பார்த்தால் நாம் வாழ்ந்த தருணங்கள் என தோன்றுவதே இவை மட்டும்தான் என நான் அறிந்திருக்கிறேன்.