இப்போது ஆண்டுக்கொருமுறை அமெரிக்கா வரநேர்கிறது. ஒருமாதகாலம் இருக்கிறேன். அப்படிப்பார்த்தால் பத்தில் ஒருபங்கு வாழ்க்கை இங்கே நிகழ்கிறது. 2009ல் நண்பர் திருமலைராஜனின் விருந்தினராக இங்கே வந்தேன். அதன்பின் தொடர்ச்சியாக பல முறை.
2019ல் நண்பர் ராஜன் சோமசுந்தரத்தின் அழைப்பின்பேரில் வந்து வெள்ளைமலை (வைட் மௌண்டெய்ன்) பகுதியில் இலைவீழ்ச்சி பார்க்கச் சென்றேன். அந்த வருகை அமெரிக்க வருகைகளை அடுத்த நிலைக்குக் கொண்டுசென்றது. இங்கே வெறுமே சுற்றுப்பயணம் செய்யாமல் ஏதேனும் செய்யவேண்டும் என்னும் எண்ணத்தை உருவாக்கியது. விஷ்ணுபுரம் அமைப்புக்கு அமெரிக்க நண்பர்குழு ஏற்கனவே இருந்தது. ஆனால் விஷ்ணுபுரம் அமைப்பை பதிவுசெய்யப்பட்ட அமெரிக்க அமைப்பாக ஆக்கினோம். (ஓர் அமெரிக்கக் கனவு)
2022ல் தமிழ்விக்கி வெளியீட்டுவிழா அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது எங்களுக்குச் செயல்படுவதற்கான களத்தை உருவாக்கியது. வாஷிங்டன் நிகழ்வு சிலருடைய முயற்சிகளால் இறுதிநாட்களில் முற்றிலும் தடைபட்டது. மேலும் ஊக்கத்துடன் அதை மேலும் சிறப்பாக நடத்தி முடித்தோம். அதன்பின் எங்கள் ஆற்றலை, எங்கள் மாபெரும் நட்புச்சுற்றத்தின் விரிவை நாங்களே உணர்ந்தோம். (தமிழ் விக்கி- விழா)
அவ்வாண்டே பூன் முகாம் நடைபெற்றது. சிறிய அளவில். ராஜன் சோமசுந்தரம் அவர் அறிந்த இடமென்பதனால் பூன் குன்றில் சந்திப்பை ஏற்பாடு செய்தார். பொதுவாக அறிவிக்கவுமில்லை. நட்புச்சுற்றத்திற்குள் மட்டுமே அறிவித்தோம். ஆனால் நாங்கள் எண்ணியதை விட மேலும் அதிகமான பங்கேற்பு இருந்தது. 2023ல் இன்னும் பெரிய இடத்தில் இன்னும் அதிக பங்கேற்பாளர்களுடன் நடத்தினோம். ( பூன் முகாம் )
2024ல் முன்னைவிட பெரிய சந்திப்பு. இம்முறை இரண்டு சந்திப்புகள். தத்துவத்துக்காக ஒன்று. இலக்கியத்துக்காக இன்னொன்று. இரு மடங்கு பங்கேற்பு. ஆகவே இன்னும் பெரிய இடம் பார்த்திருந்தோம். அந்த இடமே இன்னும் சில ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருக்கும் என்னும் எண்ணம் உருவானது. இந்த முகாமின் பெருவெற்றி மேலும் மேலும் பெரிய கனவுகளை நோக்கிச் செலுத்துகிறது.
அமெரிக்காவின் வாழ்க்கையை அணுகி அறிந்துகொண்டிருக்கிறேன். இங்கே அன்றாடம் மிகப்பெரிய ஆற்றல் கொண்டதாக உள்ளது. மூழ்கடிக்கக்கூடியதாக, மிச்சமே இல்லாமல் ஆக்கிவிடக்கூடியதாக அது பேருருக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் அமெரிக்கா ஒரு பிரம்மாண்டமான இயந்திரம். மாபெரும் உற்பத்தியைச் செய்வதும்கூட. பொருளிலும் அறிவிலும். அந்த இயந்திரத்தின் ஒரு பகுதியென ஆகும்போது நமக்கான பாதையே இல்லை, அதன் செயலில் ஒரு துளியென நாம் ஆகிவிடுகிறோம். அதை தவிர்க்கவே முடியாது.
அமெரிக்காவின் கேளிக்கைகள் கூட அந்த பொதுப்போக்கின் ஒரு துளியென நம்மை ஆக்கிவிடுபவை. குழந்தைகளுடன் சிறுபயணங்கள், விடுமுறைகள் என எல்லாமே இங்கே பொதுவாகவும் அனைவருக்கும் ஒரேமாதிரியாகவும் வரையறை செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள்கூட ஒரு மாபெரும் பொதுத்தன்மைக்குள் அழுத்திச் செலுத்தப்படுகின்றன. இம்முறைதான் இதை கவனிக்கிறேன். எல்லா குழந்தைகளுமே போக்கிமான் போல ஒன்றில் மூழ்கிக்கிடக்கின்றன.
எவர் ஒருவர் இந்த மாபெரும் பொதுப்பெருக்கில் ஒரு சிறு விரிசலை உருவாக்கி, தனக்கான உலகை சமைத்துக்கொள்கிறாரோ அவர் மட்டுமே வாழ்க்கையை உண்மையில் வாழமுடியும். ஆம், அனைவராலும் அது இயலாது. அனைவரும் அதைச் செய்யவேண்டும் என்பதுமில்லை. எளிய உலகியலே 90 சதவீதம் பேருக்குப் போதுமானது. அவர்களை கலைத்து அவர்களின் எளிய நிம்மதியை போக்கவும்கூடாது. ஆனால் சிலருக்குக் கூடுதலாக ஒரு அகவாழ்க்கை தேவைப்படலாம். அவர்களுக்காகவே எங்கள் நிகழ்வுகள்- அவர்களுக்காக மட்டுமே.
அந்த அகவாழ்க்கையை எல்லா கோணங்களில் இருந்தும் நிகழ்த்துவதற்கான முயற்சிகளை விரிவாக்கம் செய்யவேண்டும் என நினைக்கிறேன். முழுமையறிவு என்னும் பேரில் இந்தியாவில் அதையே செய்துகொண்டிருக்கிறோம். கலை, தத்துவம், இலக்கியம், மெய்யியல் மற்றும் அதற்கான பயிற்சிகள் ஆகியவற்றை அங்கே அளிக்கிறோம். ஒவ்வொரு நாளுமென பங்கேற்பு பெருகிக்கொண்டிருக்கிறது. அதை இங்கும் விரிவாக்கம் செய்யவேண்டும் என்னும் திட்டத்தை இந்த ஆண்டு பூன் முகாம் அளித்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் அமெரிக்க நண்பர்களை தொடர்புகொண்டு நட்புச்சுற்றத்தில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். நான் பார்த்தவரை இங்கே நுண்ணுணர்வுகொண்டவர்களில் பெரும்பாலானவர்களிடம் ஓரு விலக்கம், தனிமைப்படும் தன்மை உள்ளது. அந்த தனிமையை அவர்கள் தாங்களே விரும்பி உடைத்து அகற்றிக்கொண்டால்தான் உண்டு. எளிய தயக்கத்தால் தள்ளித்தள்ளி வைப்பவர்கள் பலர் உண்டு. இழப்பவர்கள் அவர்களே.
அத்துடன் இங்குள்ள உலகியல்சுழற்சியில் தங்களுக்கான சிறிய இடத்தைக்கூட உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களும் பலர் உண்டு. அவர்கள் சொல்லும் காரணங்கள் என்பவை அவர்களுக்கான கைகால்விலங்குகள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. உலகியல் கடமைகள் குறைவறச் செய்வதற்குரியவை -நான் எக்கடமையையும் கைவிட்டவன் அல்ல. ஆனால் உலகியல் கடமைகளுக்காக தனக்கான அகவாழ்க்கையைக் கைவிட்டவர்கள் என்றோ ஒருநாள் அதன்பொருட்டு எண்ணி வருந்தவும் நேரும்.
எங்கள் செயல்பாடுகளில் எவ்வகையிலும் எந்த அரசியலையும் கலந்துகொள்ளலாகாது என்பதில் தொடக்கம் முதலே தெளிவுடனிருக்கிறேன். அரசியல் நோக்கங்களுடன் இருப்பவர்கள் எங்கள் செயல்பாடுகளில் இருந்து மெல்ல விலகிச்செல்வதையே இதுநாள் வரை கண்டிருக்கிறேன். சமூகவலைத்தள அன்றாட வம்புகளில் சிக்கிக்கொண்டிருப்பவர்களுக்கும் இந்த செயல்பாடுகளில் இடமில்லை. அவர்களுக்கான மனநிலை இங்கே இல்லை. அவ்விரு களங்களுக்கும் அப்பால் ஏதேனும் அகத்தேடல் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியவை எங்கள் செயல்பாடுகள்.
ஓயாத விவாதம்- ஆனால் எந்த வகையான தர்க்கநெறிகளும் இல்லாமல், எந்த வகையான அறிவுப்பயிற்சியும் இல்லாமல், வெறு அரட்டையாகவே நிகழும் விவாதம்- நம்முடைய சமூகத்தின் பொதுவான மனநோய். அதில் இருந்து வெளியேறி ஆக்கபூர்வமாக சிந்திக்கவும் உரையாடவும் ஒரு சிறு வெளியை உருவாக்கவே முயல்கிறோம். ஆகவே எங்கள் நிகழ்வுகள் அனைத்திலுமே வெற்று விவாதங்களை, அதன் செயற்கையான பாவனையுணர்ச்சிகளையும் பொய்நிலைபாடுகளையும் முழுமையாக தவிர்க்க முயல்கிறோம்.
இந்தக்காரணத்தால்தான் எங்கள் செயல்பாடுகளை சமூகவலைத்தளங்களில் பகிர்வதையும் தவிர்க்கிறோம். நேர்நிலைச் செயல்பாடுகளுக்கே அங்கு இடமில்லை. மிகைப்பற்று,காழ்ப்பு, கசப்பு, சோர்வு ஆகியவையே அங்கே ஓங்கியுள்ளன. அங்கே செயல்படுவதற்கு நேர் எதிரான உலகம் எங்களுக்குரியது.
எங்களுடையது, தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டே இருக்கும் முறை. அறிஞர்களையும் கலைஞர்களையும் அணுகி, அவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு முறையான வகுப்புகள் வழியாக அனைத்தையும் கற்பது மட்டுமே பயனுள்ளது என்றும், கற்றல் நிகழாமல் நடைபெறும் ஒவ்வொரு சொல்லாடலும் மாபெரும் வாழ்க்கை வீணடிப்பு என்றும் நம்புகிறோம். அதுதான் நம் சூழலில் எங்கும் நிகழ்கிறது, நாங்கள் அதற்கு மாற்றாக ஒரு சிறு வட்டத்தை உருவாக்கவே முயல்கிறோம்.
இது எங்கள் வழிமுறை. இதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, இதில் நாங்கள் வெற்றியும் அடைந்துள்ளோம். இவ்வாறல்ல என உணர்பவர்கள் தங்களுக்கான களங்களை தாங்களே உருவாக்கிக்கொண்டு செயல்படலாம். (அவ்வாறு எங்கும் ஓர் ஆக்கபூர்வச் செயல்பாடு நிகழ்வதாக நான் அறிந்து இல்லை)
ஒரு சிறந்த செயலின் இலக்கணம் என்பது ஒன்றே, அது மகிழ்ச்சியாக இருக்கிறதா? அது சலிப்பூட்டுமென்றால், சோர்வூட்டும் என்றால் அது நீடிக்காது. நீடிக்காத செயலுக்கு எப்பயனும் இல்லை. மகிழ்ச்சியான செயலில் இரண்டு அம்சங்கள் உண்டு. அதில் எப்போதும் கற்றல் நிகழும். மனிதர்கள் கூடியிருப்பதன் களிப்பும் உண்டு. ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்’ ஆகவே எச்சந்திப்பும் இருக்கும்.
அதற்கேற்பவே எந்நிகழ்வையும் வகுத்துக்கொள்கிறோம். சலிப்பூட்டும் நீண்ட உரைகள் இல்லை. நிகழ்வுகள் நீண்டு நீண்டு நேரம் விரயமாக ஆவதில்லை. ஆகவே கறாரான நேரக்கணக்கை கடைக்கொள்கிறோம் (இதை ராணுவ ஒழுங்கு என குறைகூறுபவர்கள் உண்டு. ஒருவர் வீணடிக்கும் நேரம் இன்னொருவரின் சொத்து என்பதே எங்கள் புரிதல்). அரசியல், ஆதிக்க, குறுக்கல்வாத உள்நோக்கம் ஏதுமில்லாத கற்பித்தல் நிகழ்ந்தாலே சந்திப்புகள் கொண்டாட்டமாக ஆகிவிடும் என்பது எங்கள் அனுபவம்.
ஒருங்கிணைந்த செயல், முற்றிலும் நேர்நிலையான செயல், அன்றாடமென நிகழும் செயல் , தன்னிச்சையான செயல் – என நான் செயலை எப்போதும் வரையறை செய்கிறேன்.
- கூடுமானவரை பிறருடன் இணைந்து செயல்படவேண்டும். இணையான நண்பர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இணைந்திருப்பதன்பொருட்டு தேவையான எல்லா தனிப்பட்ட சமரசங்களையும் செய்துகொள்ளவேண்டும். பேச்சில், நடத்தையில்.
- எச்செயலும் எதற்கும், எவருக்கும் எதிரானதாக இருக்கலாகாது. ஒரு சமூகத்தீமைக்கு எதிரான செயல்கூட எதிர்மறைச் செயல்தான். அது காழ்ப்பை, கசப்பை, காலப்போக்கில் துயரையே எஞ்சவைக்கும். நம்பிக்கையுடன், கனவுடன் செய்யப்படும் நேர்நிலைச் செயல்பாடு மட்டுமே மெய்யான மகிழ்வை அளிப்பது.
- எச்செயலும், துளியேனும் அன்றாடத்தில் நிகழவேண்டும். ஒவ்வொரு நாளுமென செய்யப்படவேண்டும். இவற்றை கொள்கையெனச் சொல்லவில்லை, இவ்வண்ணமே நாற்பதாண்டுகளாகச் செயல்புரிந்த அனுபவத்தில் சொல்கிறேன்
- செயல் தன்னியல்பாக நிகழவேண்டும். அதற்கு சில வழிகாட்டல்கள், வழிமுறைகள் இருக்கலாம்,. உறுதியான அமைப்புகள் தேவையில்லை. அவை அதிகார அடுக்குகளை உருவாக்கி பூசல்களை ஏற்படுத்தக்கூடும். எங்கள் செயல்பாடுகள் அமைப்புசார்ந்தவை அல்ல. தன்னியல்பான நட்புக்கூட்டம்தான் நாங்கள். இங்கே தலைவர், செயலர் போன்ற பொறுப்புகள் இல்லை.
செயல் ஒன்றே விடுதலை. எச்செயலும் ஒரு பெருஞ்செயலின் சிறுபகுதியாக இருந்தாகவேண்டும். செயல் அளிக்கும் இன்பத்தை அறிந்துள்ளோம். அதை பரப்ப நினைக்கிறோம். அதன்பொருட்டே ஒன்றுகூடுகிறோம். மீண்டும் மீண்டும் நாங்கள் உணர்ந்ததையே கண்டடைகிறோம்.
தொடர்புக்கு : [email protected]