விண்ணுயர் மரங்களின் கீழ்

அமெரிக்கா என்றால் என் அகத்தில் அதன் பெருநகரங்கள் அல்ல. அதன் நீண்ட நெடுஞ்சாலைகளும் அல்ல. அதன் விரிநிலம்தான். நான் திரும்பத்திரும்ப அலைந்துகொண்டிருக்கும் களமாக இது மாறும் என இளமையில் எண்ணியதில்லை. இன்று ஆண்டுதோறும் வருகிறேன். பன்னிரண்டு மாதங்களில் ஒன்றில் இந்நிலத்தில் வாழ்கிறேன். உண்மையில் இந்தியாவில் அலையும் அளவுக்கே.

ஆனால் இளமையிலேயே இந்நிலம் பற்றிய மோகம் என்னுள் இருந்திருக்கிறது. அன்று பார்க்கக்கிடைத்த மெக்கன்னாஸ் கோல்ட் போன்ற படங்கள் வழியாக வன்மேற்கு அறிமுகமாகியது. அன்று முதல் இன்றுவரை நான் வன்மேற்கின் கதைகளின் ரசிகன். படக்கதைகளாகவும் சினிமாக்களாகவும். அமெரிக்காவின் சினிமாக்களை விட இலக்கியமே என்னை பெரிதும் ஆட்கொண்டிருக்கிறது. உறவுச்சிக்கல்களைப் பேசும் அமெரிக்க நவீனக்கதைகளில் எனக்கு உவப்பில்லை. அமெரிக்க சாகசக்கதைகள். அல்லது அமெரிக்க பண்ணைவாழ்க்கையைச் சொல்லும் கதைகள். இரண்டிலுமே இந்நிலம் உள்ளது.

அமெரிக்காவில் எனக்குப் பிடித்தமான இடங்கள் என முதன்மையாக மௌண்ட் சாஸ்தாவையே சொல்வேன். அது அமெரிக்க கைலாசம். அதன்பின் கிராண்ட் கேன்யன், கிரேட்டர் லேக், டெத் வேலி, யோசிமிட்டி, வைட் மௌண்டைன் என பல இடங்கள்…

யோசிமிட்டி தேசியப்பூங்காவில்தான் முதல்முறையாக ரெட்வுட் எனப்படும் மாபெரும் மரங்களைப் பார்த்தேன். அமெரிக்காவின் குறியீடாகவே அது என் உள்ளத்தில் தங்கிவிட்டிருக்கிறது. இந்தியாவில், மேற்குமலைக்காடுகளில், மாபெரும் தேக்குமரங்களும் அயனி மரங்களும் உண்டு. வடக்கே தேவதாரு பெரிய கோபுரம் போன்றது. ஆனால் எவையும் இந்த விஸ்வரூப விருட்சங்களுக்கு இணையானவை அல்ல. இவை மரங்களின் கனவு நனவானதுபோல ஒரு விசித்திர நிகழ்வுகள்.

“In America, everything is big; to refer to small, they say peanuts, and their peanuts are too big” என்று பழைய வன்மேற்குக் கதைகளில் ஒன்றில், அங்கே வரும் பிரிட்டிஷ் கற்பனாவாத எழுத்தாளர் சொல்வார். அமெரிக்க நிலத்தின் பிரம்மாண்டம் அங்குள்ள எல்லாவற்றிலும் எப்படியோ பிரதிபலிக்கும். அந்தப் பிரம்மாண்டத்தின் உருவகம் என ரெட்வுட் மரங்களைச் சொல்லமுடியும்.

இந்தியாவில் யானைடாக்டர் கே பற்றிச் சொல்லும்போது ‘யானைகளின் காவலர்’ என்பார்கள். கேலிக்குரிய ஒரு சொல்லாட்சிதான் அது. யானைக்கு என்ன மானுடக்காவல்? ஆனால் உண்மையில் அது தேவையாகிறது. அதைப்போல இந்த தாவரங்களின் பேரரசர்களுக்கும் ஒரு காவலர் இருந்தார். ஜான் மூர்.

இன்று ஜான் மூர் ஒரு குழந்தைக்கதைகளின் நாயகனாக ஆக்கப்பட்டுள்ளார். ஏராளமான படக்கதைகள் வழியாக அவர் ஆரம்பப்பள்ளி குழந்தைகளிடம் கொண்டுசேர்க்கப்பட்டிருக்கிறார். இணையத்தில் தேடிப்பார்த்தேன், ஏராளமான படக்கதைகள் காணக்கிடைத்தன.

ஏறத்தாழ அதேபோல யானைடாக்டரை நான் எழுதிய ஒரே ஒரு கதை கொண்டுசென்று சேர்த்திருக்கிறது என்பது மிகுந்த ஊக்கமளிக்கும் ஒரு நினைவாக உள்ளது. தமிழகத்தை விட கேரளத்தில் என் கதைக்கு அற்புதமான குழந்தைக்கதை வடிவங்கள் உருவாகியுள்ளன. ஜான் மூர் காடுகளில் அலைவதும், தனியே காடுகளில் வாழ்வதும் அமெரிக்கக் குழந்தைகளின் கனவுக்குள் புகுந்துவிட்டிருக்கின்றன. அப்படி நம் காடும், யானையும் நம் குழந்தைகளின் கனவுக்குள் செல்லவேண்டும்.

ஜான்மூர் அவர்களின் வீடு அவர் நினைவாக ஒரு அருங்காட்சியகமாகவும் நினைவிடமாகவும் பராமரிக்கப்படுகிறது. (கலிபோர்னியா மார்ட்டினிஸ் என்னும் ஊரில் ) நானும் அருண்மொழியும்ம் விஸ்வநாதனும், பிரமோதினியும் அங்கே ஒரு பகல்நேர பார்வைக்குச் சென்றோம். நாங்கள் தவிர அங்கே இரண்டு வயதான வெள்ளைக்காரர்கள் தவிர அவ்வேளையில் வருகையாளர் எவரும் இல்லை.

ஜான் மூரின் இல்லம் மிகப்பெரிய பழங்காலக் கட்டிடம், அரண்மனை என்றுதான் சொல்லவேண்டும். ஜான் மூர் ஸ்காட்லாந்தில் பிறந்தவர்.1849ல் அவர் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது. ஒரு பொறியாளர் ஆக முயன்றிருக்கிறார், விபத்து ஒன்றால் பார்வையில் சிறு குறைபாடு உருவானபின் அவர் இயற்கையில் தோய ஆரம்பித்தார். அவருடைய பார்வையில் பார்வையை கிட்டத்தட்ட இழந்து திரும்பப்பெற்ற காலகட்டம் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை.

இயற்கையில் ஈடுபட்டு, ஒரு நாடோடியாக நீண்டநாள் அலைந்திருக்கிறார். யோசிமிட்டி தேசியப்பூங்காவில் அவர் சில ஆண்டுகள் குடிசை அமைத்து தங்கியிருக்கிறார். அதன்பின் அவர் ஒரு பணக்கார நிலப்பிரபுவின் மகளை மணந்தார். சிறந்த தோட்ட உரிமையாளராக ஆனார். அவருடைய வாழ்க்கையின் ஒரு தீவிரமான காலகட்டம். அங்கே அவர் தொடர்ச்சியாக இயற்கை பற்றி எழுதலானார்

மூர் ஒரு கற்பனாவாதி, அவருடைய ஆதர்சம் எமர்சன். இயற்கையே கடவுளின் கண்கண்ட வடிவம் என நம்பியவர் அவர். அவருடைய எழுத்துக்கள் அமெரிக்க இளம் உள்ளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கின. அவரால் தியோடர் ரூஸ்வெல்ட் போன்ற செல்வாக்கு மிக்க அமெரிக்க அரசியல்வாதிகளை ஈர்க்க முடிந்தது. விளைவாக அமெரிக்காவின் இயற்கைச்செல்வங்களைக் காக்கவேண்டும் என்னும் எண்ணம் அங்கே உருவானது. அமெரிக்கக் காடுகள் தேசியப்பூங்காக்களாக, பாதுகாக்கப்பட்ட வனங்களாக அறிவிக்கப்பட்டன. மூர் தேசியப்பூங்காக்கங்களின் தந்தை என்னும் பெயர் பெற்றது அவ்வாறுதான்.

மூர் வாழ்ந்த மாளிகையில் அவருடைய படுக்கையறை, அவருடைய எழுத்தறை ஆகியவற்றைக் கண்டோம். அவர் எழுதிய அறையை ஏறத்தாழ அன்றிருந்த அதேவகையில் பாதுகாத்திருக்கிறார்கள். இத்தகைய இல்லங்களில் சென்று மறைந்த ஒரு காலகட்டமும் இருக்கிறது. கறுப்புவெள்ளை புகைப்படங்கள்.பழைய கடிதங்களின் நகல்கள். அங்கே சிறுகுழந்தைகளாக இருப்பவர்கள் வாழ்ந்து முதிர்ந்து மறைந்துவிட்டிருக்கின்றனர்.

மூர் நடத்தியது ஒரு போராட்டம். அமெரிக்காவின் தொடரும் அகப்போராட்டத்தின் ஒரு தரப்பு அவர். அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள் இரண்டு வகையினர். அமெரிக்காவை நுகர்வதற்காகக் கடவுள் அளித்த மாபெரும் புதையல் என எண்ணியவர்கள் ஒரு தரப்பு. அவர்கள் சூறையாடினார்கள், கொள்ளையடித்தார்கள், அழித்தார்கள், அள்ளிக்குவித்தார்கள், மூர்க்கமாக நுகர்ந்தார்கள், ஆடம்பரங்களில் ஆணவங்களில் திளைத்தார்கள். ஆக்ரமிப்பாளர்களான அவர்களுக்கு எதிரான ஒரு தரப்பும் அமெரிக்காவுக்கு வந்தது. அவர்கள் அந்தப் புதிய நிலத்தை புதிய வாய்ப்புகளுக்கான இடமாகக் கண்டவர்கள்.  அங்கே புதிய ஓர் உலகை உருவாக்கக் கனவு கண்டவர்கள். மதச்சிறுகுழுவினர், பல்வேறுவகையான மாற்றுச்சிந்தனையாளர்கள்…

எமர்சன் அந்த கனவுவாதிகளின் முகம். அமெரிக்காவின் இலட்சியவாதம் அதுவே. எனக்கு பிடித்த அமெரிக்கா அதுதான்.அந்த அமெரிக்கா இன்று உலகைச்சூறையாட விழையும் அமெரிக்காவுக்கு எதிரான நிரந்தரமான சமரில் உள்ளது. அமெரிக்காவை இந்த இரண்டு விசைகளின் முரணியக்கமாகவே புரிந்துகொள்ள முடியும்.

மூர் அமெரிக்காவை வெட்டி அழிக்கவேண்டிய மாபெரும் காடுகளாக, அகழ்ந்தெடுக்கவேண்டிய கனிவளங்களின் நிலமாக மட்டுமே பார்த்தவர்களுக்கு எதிராக சலிக்காமல் போராடினார். அமெரிக்கா நம்முடைய கொள்ளைச்செல்வம் அல்ல, நம் குழந்தைகளுக்கு விட்டுச்செல்லவேண்டிய சொத்து என்று திரும்பத் திரும்ப அவர் எழுதினார். அன்று பலமுனைகளில் அவர் தோல்வி அடைந்தாலும் மெல்ல மெல்ல அவர் குரலுக்கு அமெரிக்காவில் ஓர் இடம் உருவாகியது. அதன் விளைவாகவே அமெரிக்கக்காடுகள் பேணப்பட்டன.

ஜான் மூர் நினைவகம்

ஜான் மூர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த ரெட்வுட் சோலைக்குச் சென்று பார்த்தோம். (ஜான் மூர் நினைவுக்காடு கலிஃபோர்னியா) பிரம்மாண்டமான அந்த மரங்களின் அடியில் உலவுவது வானுயர எழுந்த தூபிகளின் நடுவே செல்வதுபோல் ஒருகணம், பேரருள் கொண்ட பறவைத் தெய்வங்களின் காலடிகள் வழியாகச் செல்வதுபோல் மறுகணமும் தோன்றச்செய்தது. பல மரங்கள் மூவாயிரமாண்டு தொன்மை கொண்டவை. நாம் இந்தியாவில் காணும் எந்த மரத்தைக்கொண்டும் இந்த மரங்களின் பேருருவைக் கற்பனைசெய்துகொள்ள முடியாது. அண்ணாந்து நோக்கினால் விண்ணை நோக்கி பாய்ந்து எழுந்து சென்றுகொண்டே இருப்பவை என உளமயக்கு அளிப்பவை.

அந்த மரங்களின் அடியில் ஒருநாளை கழித்தோம். கலிஃபோர்னியாவில் நாங்கள் சந்தித்த நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள். உரையாடல்கள், சிரிப்புகள் என உளம் நிறைந்தோம்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: சித்ரன்
அடுத்த கட்டுரைஅஞ்சலி – பொன். சின்னத்தம்பி முருகேசன்