அமெரிக்காவில் இந்தப் பயணம் மிகப்பெரும்பாலும் பூன்முகாம் நிகழ்வுகளுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாகச் சில சுற்றுப்பயணங்களும். ஆகவே சந்திப்புகள் அதிகமில்லை. மூன்றே நிகழ்வுகள் மட்டுமே. அதில் முதல்நிகழ்வு சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் வால்நட் கிரீக் பகுதியில் நடைபெற்றது. அடுத்த நிகழ்வு மிச்சிகனில் (மிச்சிகன் சந்திப்பு )
வால்நட் கிரீக் சந்திப்பில் நாற்பது வாசகர்கள் கலந்துகொண்டார்கள். வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதில் சொன்னேன். நண்பர் ஆர்வி (சிலிக்கான் ஷெல்ஃப்) ஃப்ரீமாண்ட் நகரில் இருந்து வந்து கலந்துகொண்டார். வாசகர்களின் கேள்விகள் சமகால இலக்கியக் கோட்பாடுகள், இன்றைய தத்துவம், இலக்கியவாசிப்பு, செயற்கை நுண்ணறிவு என பல தளங்களைச் சேர்ந்தவையாக இருந்தன. இனிய ஒரு மாலை வேளை.
அமெரிக்காவில் இப்படி பல சந்திப்புநிகழ்வுகளை நான் நடத்தியிருக்கிறேன். இப்படி ஒரு நிகழ்வுக்கு பலரும் நீண்டதூரம் பயணம் செய்து வந்துசேரவேண்டும். அமெரிக்காவின் வாழ்க்கை உலகியல்பொறுப்புகள் நிறைந்தது. அங்கே எல்லாவற்றையும் நாமேதான் செய்யவேண்டும். எல்லாவற்றையும் செய்தாகவேண்டும். குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்தபின் கல்லூரி செல்லும்வரை ஒவ்வொரு நாளையும் அவர்களுக்காகவே செலவிட்டாகவேண்டும் (படிப்படியாக இந்தியாவிலும் அச்சூழல் வந்துகொண்டிருக்கிறது.). அதை மீறி இத்தகைய நிகழ்வுகளுக்கு வருபவர்கள் அரிதானவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல வாசகர்களாகவும் நண்பர்களாகவும் வாழ்நாள் முழுக்க நீடிப்பவர்கள்.
அமெரிக்காவில் நாங்கள் ஒருங்கிணைக்கவிருக்கும் நிகழ்வுகள் பற்றியும் அன்று பேசினேன். எங்கள் எதிர்காலத் திட்டங்கள் விரிவானவை. ஆனால் அமெரிக்காவின் பெரும்பான்மை தமிழ்மக்களிடம் எங்களுக்குப் பேச ஏதுமில்லை. இந்தியாவை விட பலமடங்கு குறுகலான லௌகீக வாழ்க்கை கொண்டவர்கள் அவர்கள். வேலை, சாப்பாடு, சினிமா, பிள்ளைகளின் படிப்பு, சேமிப்பு அவ்வளவுதான் வாழ்க்கை. இந்தியாவுக்குரிய மனநோய்களை இங்கு வந்து பெருக்கிக்கொண்டவர்கள் அவர்கள்.
ஒருவர் சந்திக்கும்போது ஒருவர் தன் சம்பாத்தியம், தன் பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலை ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது அநாகரீகம். பிறரிடம் அவற்றைப்பற்றிக் கேட்பது உச்சகட்ட அநாகரீகம். ஆனால் அதைத்தான் பெரும்பாலானவர்கள் இங்கும் செய்கிறார்கள். சூழலின் அழுத்தம் ஒவ்வொருவரையும் வாழ்க்கை என்பது ஒரு வெறி கொண்ட ஓட்டப்போட்டியாக ஆக்கிவிட்டிருக்கிறது. அவர்கள் வாழும் உலகில் அறிவுக்கு இடமில்லை. அவர்களுக்கான கொண்டாட்டங்களும், அதற்குரிய அமைப்புகளும் இங்கே பல உள்ளன.
நாங்கள் எண்ணுவது கொஞ்சமேனும் வாசிக்கவும், அறிவியக்கத்தில் ஈடுபடவும் தயாரான சிறுபான்மையினர் பற்றி. அவர்களுடைய வாரிசுகள் பற்றி. அவர்களிடம் பேசுவதற்காகவே மீண்டும் மீண்டும் முயல்கிறோம். இந்த உரையாடலும் அதற்காகவே.